Monday, March 25, 2013

கண்ணம்மாவிற்கான ஓவியம்...

கண்ணம்மாவிற்காக
நீண்ட நாள் கழித்து
ஒரு ஓவியம்
...
தொலை தூர காற்றின்
வருகை கண்டு
வாசம் பரப்ப
தயாரான ஒவ்வொரு மலரும்
இதழ்களின் ஓரத்தில்
சிந்தியும் சிந்தாமல்
தாக்கி வைத்திருந்த
வெட்கத்தையும் ,
நீண்ட நாளைய
அலைக்களித்தலை
பொழுது விடியா உறக்கத்தில்
தொலைத்துவிடத் துடிக்கும்
துறவியின்  தவிப்பையும்
ஒரு சேர
பின்னிப் பிணைத்து
அங்கங்கே
வண்ணமற்ற வெறுமை கூட்டி
அவளுக்கே பிடித்த
அடுத்த நொடி அறியா
திருப்பு முனையை
எனக்குத் தெரிந்த
தூரிகைக் கிறுக்கலில்
படைத்து
சாமிக்கு
முதல் நெல் சாத்தும்
ஏழை விவசாயி போல
பக்குவமாய் பரிசளித்தேன்..
பார்த்து
ஒரு துளி ஈரம் தாங்கி
அவள் பார்த்த நொடி
என் கடந்த காலம்
அனைத்தையும்
சலவை செய்து
எங்கோ தொலைதூர
சிகரத்தில்
உதிரக் காத்திருக்கும்
ஒற்றைப் பனித்துளியாக
எனை ஏனோ
மாற்றிச்சென்றது
...
இவள் விரல் பிடித்து தான்
நான் கவிதை எழுதியிருக்கிறேன்
பெரும்பாலும்..
என் எழுத்துப்பிழைகளும்
உலகம் தாண்டிய உவமைகளும்
இவளின் என்னோடிருத்தல்
காரணமாகத்தான்
...
எதார்த்தமாக
எத்தனையோ முறை
இவளது இமைகளை
ஈரமாக்கி
கல்லாய் இருந்தாலும்
அடுத்த நொடி
எனக்குள்
பெரும் அணுச்சிதறல் தான்..
கூடவே வந்து
விழுகின்ற கவிதைகள்
நானின்றி - என்
இதயமே எழுதுவதை
எவரும் ஒத்துக்கொள்ளப்
போவதில்லை தான்
...
பல நாட்கள்
எனைச் சுற்றி
என்ன நடக்கிறது
என்பதைக் கூட அறியாமல்
திணறியிருக்கிறேன் ,
பின் மெதுவாய் - அவள்
பின் வாசல் தட்டி
கூந்தல் இழுத்து
விழிகள் குறுக்கி
நான் பார்க்கின்ற
ஒவ்வொரு முறையும்
ஒரே தாவலில்
எனை முழுதும்
தழுவியிருப்பாள்..
...
எதற்காக
என் உயிர் தாங்கி
இன்னொரு உடலை
இந்தக் கடவுள்
படைத்திருப்பான்?
..
பேசுதல் தொடங்கி
சுவை, கோவம்,
சுட்டித்தனம்,
பிடித்தன பிடிக்காதன - என
அனைத்திலும் - எனை
உள்ளடக்கி
இந்த உயிர்ப்பு
எப்படிச் சாத்தியமாயிற்று?
..
எல்லா நொடிகளிலும்
நினைத்தலும்  மரத்தலும்
தாண்டி
ஏதுமற்ற வெளியில்
எல்லாமுமாய்
இந்த அழகிக்கான
என் பரிசினை
சுவாசத்தில் கலந்து
பக்குவமாய் விடுகிறேன்
..
இது
ஒவ்வொரு நொடியும்
அவள் இதயம்
தொட்டுத் திரும்பும் ..
..
திரும்பும் ஒவ்வொரு
சுவாச இழையையும்
எனக்குள் பின்னித்தான்
இங்கு
தமிழாய்ப் படைக்கிறேன்..
இன்றைய ஓவியம் கூட
ஏதோ ஒரு நொடியில்
அவள் அதிகமாய்
திருப்பி அனுப்பிய
சுவாசத்தின்
சின்ன பிரதிபலிப்பு தான்..
..
இன்னும்
சுவாசித்திருத்தல்
சாத்தியம் எனில்
இவள் மற்றும்
இவளது படைப்பு
சார்ந்த - ஒரு
குறுக்கு விசாரணை
ஏகாந்தத்தில் சுகித்திருக்கும் - அந்த
ஒரே கடவுளிடம்
நடத்தித் தீருவதாய்
இந்தப் புலவனின் புலம்பல்
எனக்குள்
எங்கோ கேட்கிறது
...


No comments:

Post a Comment