Wednesday, July 24, 2013

பாவிமகன் நல்லாருக்கட்டும்

எப்படா என்ன
எல்லாத்துக்கும் காட்டுவ?
எப்படா உன் கைபிடிச்சு
ஊரெல்லாம் நடப்பேன்?
...
நமக்குன்னு மாத்தின மோதிரமும்
ஆத்தா கோயில் தாலியும்
எப்படா வெளிய காட்ட?
...
யோசிச்சு பேரு வச்சு
இன்னும் பொறக்காமையே
இருக்காளே உம்பொண்ணு!
...
சாதி சனம் சுத்திநின்னு
சடங்கெல்லாம் செஞ்சுவச்சு
உத்தரவா உரிமையோட
கூட்டிக்கிட்டு போவியா?
இல்ல
எப்பவுமே இப்படியே
என்ன கவிதைக்குள்ள
முடக்கிடுவியா?
...
முத நாள் தொட்டு
நேத்தைய நிலா வரைக்கும்
உன்னையும் என்னையும்
சேத்து வச்சுப் பாத்தது
ஊருக்கு வெளிய
ஒத்தயடிப் பாதையில
சாமியா நிக்குற – அந்த
ஒத்தப் பனமரந்தான்
இன்னிக்குப் போனாலும்
எங்க ஆத்தா போலப்
பாசமாப் பாக்குது
கூட்டிக்கிட்டுப் போனவன்
நல்லாப் பாத்துக்குறானான்னு
கேக்காமக் கேக்குது..
என்னத்த நானுஞ்சொல்ல?
அவனப் பாக்கவே முடியல,
அவன் எங்க என்னப்பாக்கன்னு!
..
அப்பப்போ வானத்தையும்
சும்மாப்போற மேகத்தையும்
பேருக்காச்சும் தூதுவிட்டு
காதலக் காட்டுறானாம்..
கள்ளப்பய அவன்,
கையில சிக்குனா
வசமா தூக்கியாந்து
சிறவச்சு சொகமா
சித்ரவத பண்ணியாச்சும்
குடும்பம் நடத்தப்போறேன் ..
..
மரியாத ரொம்ப உண்டு
பாசத்த சொல்ல வேணா
என்ன கொஞ்சம் கோவக்காரன்
பொசுக்குன்னு அடிச்சுட்டு
பேசாமப் போயிடுவான்
பின்ன கொஞ்சம் நேரம்போயி
அவனாவே வந்துநின்னு
ஆகாசத்தப் பாத்துக்கிட்டே
என் ஆத்தா நீ தாண்டி
தங்கக்கொடமே வாடீன்னு
தெரியாம செல்லங்கொஞ்ச
மானங்கெட்டு நானும்போயி
மாரோட சாஞ்சுக்குவேன்
...
இப்போதைக்கு என்ன செய்ய
ராத்திரிக்கு அவன் நெனப்பும்
காலையில எம்பொழப்பும்
போகிறவர போகட்டும்
பாவிமகன் ,
எங்கிருந்தாலும்
நல்லா இருக்கட்டும்...
...

உனை விட்டுக் கவியாயிருத்தல்

நீ நினைப்பதையெல்லாம்
எழுதி நான்
கவியாகியிருத்தல்
என்ன பெரிய விஷயம்?
நீ நினைக்கப் போவதையும்
நெடுநாள் முன்பே
எழுதி முடித்து
உன் வாழ்வையும்
அது சார்ந்த வனப்பையும்
நமக்குத் தெரிந்த,
நமக்கு மட்டுமே தெரிந்த
ஓர் தனி இடத்தில்
ஒளித்து வைத்திருக்கிறேன்!
..
அதை நீ
தேடிக் கண்டு
மகிழ்ச்சி மிகுதியில்
எனை முத்தமிடத் துடிப்பாய்!
மூவுலகத் தொலைவில் நான்
உனக்கான
எதிர்காலக் கவிதைகளுக்கான
வார்த்தைகளை
நட்சத்திரங்களுக்கிடையே
விதைத்துக் கொண்டிருப்பேன்
...
எனைக் காணாது
நீ தேடித் தவித்து
துக்கித்துப் போய்
விடுகின்ற பெருமூச்சில்
கடலலையும்
இளந்தென்றலும்
ஒரு கணம்
நின்று, யோசித்து
எனக்குச் சேதி அனுப்பும்
...
வேண்டுமென்றே கண்டு கொள்ளாது
காதலைக் கட்டுப்படுத்தி
தொலைவு பல
இன்னும் கடந்திருப்பேன் நான்..
..
நான் கொடுத்த
முக்குளித்த முத்தையும்
மழை நேரத்து
மயிலிறகையும்
மார்பில் அணைத்து
வான் பார்த்து
ஏதேதோ புலம்பி
உறவு தவிர்த்து
அங்குமிங்கும்
புரண்டிருப்பாய் நீ..
..
பசி ஏது ?
தாகம் ஏது?
பகல் ஏது?
இரவேது?
நேற்று ஏது?
இன்று ஏது?
நாளைதான் ஏது?
ஏதுமற்ற ஏதோ ஒன்றில்
கண் பதித்து
நிலை குத்தி
தானாகக் காலாட்டி
விரல் பிசைந்து
சீரற்ற உடை விலக்கி
உள்ளும் புறமுமற்று
உனக்கான என்
முதல் கவிதையின்
முதல் வார்த்தையை
முணகிக் காத்திருப்பாய் நீ!..
...
உன் வலி
என்னில் உணர்ந்து
ஏகாந்தம் வெறுத்துப் போய்
ஏதும் ஓடாமல்
எனையறியாமல்
ஏதோ ஒன்று
உந்தித்தள்ள
விருப்பு வெறுப்பு தாண்டிய
ஓர் உன்னத ஏக்கத்தில்
எனது உயிர்
உனது உயிர் நோக்கி
என் உடல் விட்டுப் புறப்பட்டு
பறந்து போக
பின் தொடர்கிறேன் நான்...
...
எப்போது நம்
அடுத்த சந்திப்பு என்பதை
நமைப் பற்றி
ஏதும் புரியாத
எவனோ ஒருவனோ
இல்லை
எவளோ ஒருத்தியோ
கனாக் காணட்டும்...
...

கண்ணம்மாவின் காகித முத்தம்

தொலைதூரப் பூக்களின் வாசத்தையும்
வரப் போகும் வானவில்லின் வனப்பையும்
வசதியாய் கவியிருத்தி,
உறக்கமற்ற வேளைகளின்
அலைக்களிப்பையும் - இன்னும்
இடையறாது துரத்தும்
இயல்பான சிரிப்புகளையும்
ஏற்ற இறக்கங்களையும்
இம்சித்திருக்கும்
இஷ்ட தெய்வங்களையும்
மறந்திருந்து ,
இருத்தலை மெய்ப்பிக்க வேண்டி
கண்ணம்மாவின்
கடிதம் தேடி
காத்திருக்கும் கவி!
..
இடையிடையே வந்து போகும்
உன் லேசான புன்னகையும்
குறும்புப் பார்வையும்
அன்றைய இரவின்
அயில மீன் கொழம்பும்
நிலா வெளிச்சக் கண் சிமிட்டலும்
கை கோர்த்த கண நேரமும்
நமக்குப் பின்னால்
ஒளிந்துகொண்ட வெட்கமும்
ஏதோ நான் உளறப் போய்
வருத்தி நீ
வெளிப்படுத்திய
வேண்டாக் கோபமும்
தொடர்ந்த விவாதமும்
முடிவாய் வந்து நின்ற
மௌனமும் - அதைச் சார்ந்த
இஷ்டமில்லா இடைவெளியும் ,
இப்போதைய
கண்ணம்மாவின் இல்லாதிருத்தலும்
கவியின் காத்திருத்தலை
கடினமாக்கி நிற்க,
கலங்கியிருத்தலை
கடந்திருக்க வேண்டி
கண் மூடி நொடிதோறும்
வடக்கிருந்தான் கவி!
...
கடிதம் வராது
கனவு வந்தது
...
நேற்றைய பொழுதின்
நிறைவேறா ஆசையாய்
ஆதங்கமாய்
கண்ணம்மா மனதில்
ஏதோ ஒன்று..
அவள் இமையில்
ஒளிந்திருந்த சோகத்தை
சுலபமாய் உணர்ந்து
சுண்டு விரல் பிடித்திழுத்து
"என்ன ஆச்சு?" என்றான் கவி.
...
வழக்கமான "ஒண்ணுமில்ல"
தவிர்த்து தந்திரமாய்
தலை குனிந்து கண்ணம்மா!
...
கவியும் நமுட்டுச் சிரிப்புடன்
"என்னன்னு சொன்னா,
இன்னொன்னு தாரேன்"
என்று வழிய,
"போ! உனக்கென்ன
என்னப்பத்தி !" என்றாள் ..
"சரி போறேன், விடு!" என்று
கடைசி யுத்தியை
கச்சிதமாய் வீச,
"நேத்து பூவாகிப் போனியாமே?
யாரோ சொன்னாங்க " என்றாள்

"ஏன் உனக்குத் தெரியாமலா?"

"யாருக்கோ தான எழுதின,
எனக்கென்ன?" என்று
கண்ணால் கண் ஊடுருவி
கேள்வியாய் மாறி நின்றாள் ..
..
மூக்கு நுனி கோவத்தில்
"என் கவிதைய
கேவலப் படுத்துறியா ?"
சிவந்து நின்றான்
கவி,
காதலில்!
..
"எனக்கு எழுதுனா
கவிதைல எங்க என் பேரு ?"
என்று தாவணி நுனியால்
விழுவதற்கு முன்
கண்ணீர் தாங்கி
கச்சிதமாய்
கனம் கூட்டினாள்
...
பதிலற்ற நேரங்களில்
பாவம்!
என்ன செய்வான் கவி!
இடைவெளி குறைத்து
உயரம் தாழ்த்தி
அவள் தலை நிமிர்த்தி
கண் ஈரம் உலர
லேசாய் ஊதி
பின்
இறுக்க அணைத்து
"அட பைத்தியமே!
நீ வேற, என் கவிதை வேறயா?
நீ என் கூட இரு,
நான் எதுக்கு
கவிதை எழுதப்போறேன்?
நீ அப்பப்போ விட்டுப் போற,
நான் உன்ன எழுதி
என்னுள் இருத்திப் பாக்கிறேன்!
அவ்ளோதான் என் கவிதையெல்லாம்..."
என்று
அவனுக்கே தெரியாத
உன்னத உண்மையெல்லாம் சொல்லி
இன்றைய பொழுதின்
இதமான உறக்கத்திற்கு
கண்ணம்மாவை
அழைத்துச் சென்றான்
அசட்டுக் கவி!
...
கனாக் கலைந்து
கடிதத்தின் வாசம் பிடித்து
பிரித்துப் பார்க்க
"என்னடா?
மறுபடியும் ஏமாத்துறியா ?"
என்று இரண்டே வரி!
..
கீழே
காகித முத்தத்துடன்
கண்ணம்மா!
....



Tuesday, July 23, 2013

நான் பூவாகிப் போகிறேன்

நீ கொடுத்து நானும்
நான் கொடுத்து நீயுமாய்
வாழ்வதால் இந்த வாழ்வு
நமைத் தாண்டி
எங்கோ நிகழ்கிறது...
விரல் பிடித்து சாவதாய் நீயும்
மடி சாய்ந்து முழுதாய்
உறங்கிப் போவதாய் நானும்
கண்ட காட்சிகள்
இன்னும் இந்த
வாழ்தலை புனிதமாக்க ,
தொலைத்த மூச்சை மீட்டெடுக்க
உன் கானத்தில் கரைகிறேன் நான்
நெடுநாளாய் ..
..
நீ கேட்கும் கேள்விகளில் ஒளிந்திருக்கும்
எனக்கான காதலில் – நான்
பதிலற்றுப் போகிறேன்
நீயோ
காதல் முத்தி
கோவித்துப் போகிறாய் ..
..
ஒரு வழியாய்
நினைவு திரும்பி நான்
உனக்கான பதிலை – என்
காதலில் பொதிந்து அனுப்ப
பாவம் உன்
பாசாங்கு கோவத்தில்
அது பொசுங்கி
புகையாய் மாறி – உன்
கூந்தலிடையே மறைகிறது..
உன் வாசம் கூடிப்போன கதை
இது தானோ?
..
வியந்து கேட்கும்போது
வெட்கப்படுகிறாய்
அதில் விழுந்து – நான்
என் வார்த்தைகளை இழந்து
இப்போது உனை
வரைய இயலாது தவிக்கிறேன்..
வாயோரம் எனை
லேசாக வசை பாடேன்
என் வரிகள் உயிர்பெற்று
வெட்கம் கொண்டு – பின்
சுரனை உணர்த்தட்டும் ..
..
வசை பாடச் சொன்னால்
காதல் சொல்கிறாய்..
இப்படி என் உயிரை
அவ்வப்போது
ருசித்துப் பார்க்கிறாயோ?
உன் வார்த்தைகள்
இப்படித்தான் என் இதயத்தின்
கல்வெட்டுகளாகிப் போகின்றனவோ?
..
காதல் கூறி பின்
தலை மேல் கை
வைக்கக் கேட்பாய்
தலை கோதி – உன்
விதி படித்து
நான் மீள்கையில்
மீண்டும் கை பிடித்து
கண் ஒற்றி – எனை
கலங்கச் செய்வாய்..
உன் உச்சி முகர்ந்து
என் உள்ளங்கை ரேகை
உன்னில் பதிக்கின்ற
ஒவ்வொரு நொடியும்
முடியாது தொடர்கின்றது..
..
சிற்சில கோவங்களின் போது
முறைத்து முனகி – பின்
சிரிக்கும் நொடி ஒவ்வொன்றிலும்
என் இதயம் நின்று
பின் துடிக்கின்றது...
நீயோ
இதை அறியாது
அதையே தொடர்கிறாய்..
இப்படி என்னால்
இந்த இதயத்தை
நீண்டநாள்
பொத்தி வைக்க முடியாது
வா, வந்து எடுத்துப் போ ..
..
உனை நான்
உனக்கு உணர்த்த
என் கண்களும்
கவிதையும் இருக்க
என் கைகளுக்குள்
இருந்தால் மட்டுமே
போதும் என்கிறாய்
கை பிடித்து நீ விடாவிடின்
நான் என்ன
இதழிலா கவியெழுத ?
..
“எனை விட கவிதை முக்கியமா?”
எனக்கேட்டு
சிணுங்குகிறாய் !!!
..
ஒவ்வொரு நொடியும்
நமக்குப் பிறக்கும்
குழந்தைதானே
என் கவிதை...
ஆயினும்,
நீ எனக்கு
உயிரும் தமிழுமாய் இருப்பதால்
நம் குழந்தை
உன் காதலின்முன்
தோற்றே போகிறது..
..
எனை
வெளியிலும் உள்ளும் சுமந்து
தள்ளாடி நீ நடக்கையில்
உன் நிழலுக்கு விடுமுறை
..
கவிதையின் உச்சம்தொட்டால்
நீ அழுது அழகு சேர்க்கிறாய்..
உன் ஒவ்வொரு துளி கண்ணீரும்
என் பிரசவ வலி
பாத்து அழு..
..
உன் கண்ணீர் தேற்ற
உன்னருகில் வந்தாலே
என் உடல் முழுதும்
இதழ்களாய் மாறி – உன்
வாசத்தை உறிஞ்சி
நான் பூவாகிறேன்..
நீ எனை முகர்ந்து முத்தமிட்டு
உன் காதல் மொட்டினை
மலரச் செய்துகொள்..
..