Monday, December 31, 2012

கண்ணம்மாவின் புத்தாண்டு முத்தம்

வீசிப்போன புயலில்
தொலைந்து போன கட்டுமரம்
நான்!
தொலை தூர வானில்
வெளிச்சத்தை மெல்ல
வாரி வழங்கி வந்து
எனைக் கரை சேர்த்தாய்
நீ!
தேவதையா?
மாயையா?
கடவுளின் பிரதிநிதியா?
நீ!
செத்துப் போக நினைத்த
எத்தனையோ தருணங்களை
நான் தாண்டி வந்திருப்பது
உன்னுடனான
இந்தத் துயிலில்
தளிர்க்கத்தானா?
உயிர் வாழ்வதற்கும்
உயிர்ப்பித்து வாழ்வதற்குமான
வித்தியாசம் அறியா
வேடிக்கை மனிதனாக
வீழ்ந்து போயிருப்பேன்!
உன் ஒரு துளி
எச்சில் முத்தத்தில்
முழுதாக முற்றுப்பெறுதல்
சாத்தியமாயிற்று..
அது தொடர்ந்த
அத்தனை நொடிகளும்
என் வெளிவராத
உச்சகட்டங்களை
உந்தித் தள்ளின!
...
புகையாகிப் போயிருக்க வேண்டிய
பழுதுபட்ட பரிசு நான்!
இப்போது
பலருக்கும்
தீ மூட்டும் கவி!
இது
உன் ஒரு நொடி
ஸ்பரிசத்தில் விளைந்தது!
பாரதியின் பாதிப்பில்
பேசி மட்டுமே
திரிந்த பதர்
இன்று
புரட்சி பாடித் திரிகிறது...
..
நீடித்தல் தான்
வாழ்க்கை..
முடிந்துபோதல் அன்று!
இது
எனக்காக நீ
வடித்த முதல் வரி!
நான் நீடித்திருப்பதின்
மூலம், முடிவு
நீ!
..
அக்னிக்குஞ்சை
அடக்கி வைத்து
அடக்கமாக
இனிமேலும் நான்
அடிமை இல்லை !
எனக்குள் நீ
ஊற்றிச்சென்ற உயிர்
உணர்வற்ற உயிர்களை
உயிர் உணரச்செய்யும் !
உணர்ந்த உயிர்களை
உன்னதம் நோக்கி
மேலும் உயர்த்திச் செல்லும் !
...
கண்ணம்மா !
காணாமல் போவதற்கு
அலைகின்ற
கரைந்து போவதற்கு
விரைகின்ற மனங்கள்
ஏராளம்,
எத்தனை பேருக்கு
கண்ணம்மா கிடைக்க முடியும்
உயிர் ஊற்றிச்செல்ல?
..
நம் இந்த படைப்பும்
இதில் விளையும்
கவிகளும்
இனி வருகின்ற
அத்தனை உயிர்களும்
ஊறித்திளைக்கும்
உயிர்த் தொழிற்சாலையாக
இருக்கட்டும்..
...
தீயும்
தீ சார்ந்த வெக்கையும்
நோய் நீக்கி
வாய் கொடுத்து
இந்த வதைப்புகளுக்கு
வன்மம் சேர்க்கட்டும்..
சூழ்ச்சி உணரச் செய்யட்டும்
எதிர்த்து நிற்றல்
சாத்தியம் ஆகட்டும்
சாதனைகள்
சத்தியம் ஆகட்டும்
சாத்திரங்கள்
சாய்ந்து கொடுக்கட்டும்
தடைக்கற்கள்
நொறுங்கிப் போகட்டும்
இவர்களை
கட்டி வைத்திருந்த
கடிவாளங்கள்
இவர்கள் உருவாக்கும்
வெற்றிக்கு மேளம் கொட்டட்டும்
இனி வருகின்ற வாழ்க்கை
நீ எனக்குத் தந்த
அந்த நாள் ஸ்பரிசத்தின்
தொடர்ச்சியாகி
உயிர் பரப்பட்டும்...
...





கண்ணம்மாவுடன் புத்தாண்டு

வேண்டா வெறுப்பாய்
வீசிப்போன தென்றலில் - ஆடும்
உனக்கான ஜன்னலின் தாவணி ..
எனக்கான உன்
அத்தனை ஏக்கங்களையும்
எத்தனையோ விதமாய்
எனக்குள் வீசிப் பார்க்கிறது...
சோகத்தை மறைக்க
சுகங்களைப் பற்றிய நினைவில்
முகம் புதைத்திருக்கும் - நான்
வேகத்தில் தோன்றும் முடிவுகளையும்
விதண்டாவாதங்களையும்
விட்டு விலகி ,
விலக்கி நிற்கிறேன்...
விளக்கம் கேட்டு
தாங்கி நிற்கும்
பெற்ற பாசமும்
உற்ற நேசமும்
அசைவிலா மௌனத்தை
மட்டுமே - என்னில்
விடையாகப் பெற்றுச் செல்ல ..
நீயும் இதைத்தானே
முடிந்தும் முடியாமல்
செய்கிறாய் ..
..
நினைவிருக்கிறதா?
நீயும் நானும்
ஏதோவொரு புத்தாண்டின்
வருகைக்காக
யாருமற்ற நிலவொளியில்
நொடிகளை எண்ணி
கடந்துவிட்ட நொடிகளை எண்ணி
நினைவில் நனைந்து
நீண்ட சுவாசத்துடன்
மௌனத்தைக் கலந்து
கவிதை செய்து கொண்டிருக்க...
எங்கேயோ கேட்ட
குழந்தையின் அழுகைக் குரல்
அது கேட்டு
எனைப்பார்த்த உன் கண்கள்
நீண்டு கொண்டே சென்ற
அந்த நொடி..
...
மௌனத்தைக் கலைக்க
நீயும் நானும்
ஒரே நேரத்தில்
"துளசி" என்றோம்...
நீ
உன்னால் மட்டுமே முடிந்த
அதே முதல் புன்னகையை
உதிர்த்தாய்...
...
புனிதம்
தூய்மை
தெய்வீகம்
பண்பு
வாசம்
சுவாசம்
இசை
நடனம்
ஆனந்தம்
அற்புதம்
இன்னும் பல
இணைந்த "துளசி"
நமக்கான
நம் குழந்தை
காமம் கடந்த
நம் கனவு ...
..
கன நொடிப்பொழுதில்
கண்ணில்
கர்ப்பம் கொண்டோம்
நீயும் நானும் ..
..
அவளது பிறப்பு
அத்தனையும் தாங்கி
வரும் என்றோம்
அதுவே அழகின் இறுதி என்றோம் ..
அதுவே நிதர்சனத்தின் உறுதி என்றோம்  ..
...
இப்படி
ஒவ்வொரு நொடியும்
கடந்த காலத்தில்
எதிர்காலத்தை
வாழ்ந்து முடித்திருந்தோம்...
...
இன்றைய புத்தாண்டு
இரக்கமின்றி
நீயின்றி
நானுமின்றி
சுவாசமின்றி
வாசமின்றி
வறண்டு பிறக்கிறது..
..
எப்பவும்
இலேசாக
விட்டுவிடாத நான்
இதை மட்டும்
விட்டுவிடவா போகிறேன்?
..
எனக்கான
உன் மௌனத்தையும்
உனக்கான
என் மௌனத்தையும்
ஏதோவொரு
அதிசய நிகழ்வு வந்து
கலைத்து விடாதா?
...
நமக்குள்ளான
இந்த
விடைதெரியா விலக்கம்
விளக்கம் பெற்று
நமக்குள்
விதைந்துபோவது எப்போது ?
..
எதைக் காப்பாற்ற
ஏதுமற்ற இந்த
தலைக்கனம்
உனக்கும் எனக்கும் ?
..
விண்ணைத்தாண்டி
வருவதற்கும்
பொன் வசந்தமாகிப் போவதற்கும்
நாமென்ன
கதாபாத்திரங்களா?
..
வா என் கண்ணம்மா..
இன்னும் இருக்கின்ற
ஓரிரு மணித்துளிகள்
நமக்காக மட்டுமே
பிறக்கட்டும் ..
..
வா என் கண்ணம்மா
வராத கவிதையில்
ஒளிந்திருக்கும்
எனையும்
துளசியையும்
மீட்டுப்போ...
...


Friday, November 2, 2012

எனக்கான கடவுளே ..கண்ணம்மாவைக் காப்பாற்று ..

எனக்கான கடவுளே
நீண்ட நாட்களின்
உன் மௌனம்
எனக்குப் பிடித்துப்
போகும் போலும்..
உனைக் கண்டுகொள்ளாது
நடிப்பதில்
என் மௌனம்
எனக்கே விசித்திரமாகிறது..
என் இப்போதைய
கேள்விகள் முற்றிலும்
முரணாகவே இருக்கின்றன..
எதிர்பார்த்திரா பதில்களை
எதார்த்தமாக
ஏற்றுக்கொள்கிறேன்...
எது வேண்டுமோ
அதை விட்டுவிட்டு
விட்டுவிடக்கூடியன பின்
வேண்டா வெறுப்புடன்
அலைந்து திரிகிறேன்..
என் கவியும் கூட
எனை வதைக்கிறது
எனக்கான வார்த்தைகள்
வராமல் போக
வசதிக்காக எதையெதையோ
எழுதித்தள்ளுகிறேன்..
என் வாசகனும்
எனக்காக என்
எழுத்தை ஏற்றுக்கொள்கிறான்..
இயல்பாக என்னோடிருந்த
எனக்கேயான இயல்பு
எங்கே போயிற்று?
எனைச் சோதிப்பது
இன்னும் உனக்குப்
பிடித்தமான விளையாட்டா?
உன் இந்த
எல்லையற்ற ஆட்டத்தில்
நான் கரைந்து போவதை
நீ அறிந்தே இருக்கிறாய்..
நான் இல்லாமல் போகத்தான்
எனை இங்கு
இருக்கச் செய்தாயா?
என்னோடு சேர்ந்து
என் கண்ணம்மாவையும்
எதற்கு அலைக்களிக்கிறாய் ?
எங்கோ பஞ்சணையில்
பாவையர் பாதம் வருட
பக்குவமாய் படுத்திருக்கப்
பிறந்தவள் அவள் ..
இன்று என்
பக்குவமற்ற வரிகளைப்
பாரமாகத் தாங்கி
பிறவிக்கடன் தீர்த்துக்
கிடக்கிறாள்..
அவள் பங்குக்கு
அவளுக்கே உரித்தான
அநாயாச கேள்விகளை
அடுக்கி விட்டு விழிக்கிறாள் ..
அவளை அரவணைத்தலைத்
தவிர வேறு
என்ன பதில்
கூறி விட முடியும்?
எதிர்காலம் குறித்த
எத்தனையோ கேள்விகள் ..
ஏமாற்றத்தைத் தவிர
அவளுக்கு நான்
என்ன தந்துவிட முடியும்?
எனக்குப் பிறகு
அவளைக் காப்பாற்று
ஏகாந்தத்திலிருந்து காப்பாற்று
என் வெறுமையிலிருந்து காப்பாற்று
என் மீளமுடியா
துயரின் வன்மை
அவளைத்
தீண்டாமல் காப்பாற்று..
வேண்டுமானால் - உன்
வதைத்தலின் அரசியாக
அவளை
எனைத் தொடர்ந்து
நரகத்திற்கு அனுப்பு...
என் காதல் செய்த
கொடூர சந்தோசங்களுக்கு
அவள்
பழி தீர்த்துக்கொள்ளட்டும் ..
உன் வதைத்தலில்
நொந்து போவதற்குப் பதில்
அவள் காலடியில்
கழிந்து போகிறேன்..
அவள் காரி உமிழும்
எச்சில்
என் பாவங்களைக்
கழுவித் தீர்க்கட்டும்..
உன் இரக்கத்தின்
எடுத்துக்காட்டாக
இந்த ஒரு வரம் மட்டும்
எனக்குக் கொடு..
இன்று  என்னோடு
என் கவியும்
மடிந்து போகட்டும்...
...






Thursday, November 1, 2012

நான் ..பொய்...நீ...கண்ணம்மா


உன் இதயத் துடிப்பை
தொட்டுப் பார்க்க
விரைந்த என் விரல்களை
உன் விரல்கள்
தடுத்து நிறுத்திய இடம்..
அதில் உனக்கான என் முத்தம்..
அடக்கி வைத்த
அத்தனை காதலையும்
மொத்தமாய் முத்தமாய்
எடுத்துப் போ ...
மீண்டு வா..
உன் பங்கிற்கு - என்
உயிரை மீட்டு எடுத்து வா...
....
ஏன் இந்த தூரம்
உனக்கும் உன் உயிருக்கும் இடையில்..
இந்த நொடி ..
உனக்கான என் சுவாசம்
எனை விட்டு
தூரமாக செல்கிறது..
எங்கோ கேட்ட உன் குரல் தேடி..
தேடிக் கொணர்ந்த
ஏழாம் கடலின் முத்து
உனக்கான
என் முத்தத்தின் முன்
மரித்துப் போயிற்று..
...
நீ மரித்துப் போக நேரின்
என் கவிதை நீர்த்துப் போகும்..
என் சுவையும்
என் கவியின் சுவையும்
நீ தானே..
நீ கூறும் ம்ம்ம்-ன் அர்த்தம்
எனக்கு மட்டும் எப்படிப் புரிகிறது?
இல்லை எனக்கு மட்டுமே
நீ ம்ம்ம் பிறப்பிக்கிறாயா ?
என் அத்தனை கவிதைகளையும்
அது விஞ்சி நிற்கிறதே...
...
என் காதல்
ஞானம் அடைந்தது
உன் கண்ணசைவில்..
பாடல் விளையாட்டின்
வேதியல் மாற்றத்தில்...
இன்னும் இனிக்கிறது
அப்போது பார்த்த- உன்
கழுத்தின் சுவாசம்.
நீ பார்க்காமல்
நான் பார்த்த
நம் கவிதை அது..
...
வீட்டுப் போனது நீ இல்லை..
என் வாழ்தலின் மிச்சம்..
விட்டுப் போனதால்
இன்று தொட்டுத் தொடர்கிறேன்..
..
பிறப்பின் வாசத்தை -என்
காதல் மறக்குமா?
மறந்து விட்டாயா என்கிறாயே?
என் காதலின் தாய் நீ..
நினைவில் கொள்..
உன் முதல் முத்தம்
என் முதல் வார்த்தை..
உன் முதல் முத்தத்தில்
நம் காதல் குழந்தை
முதல் வார்த்தை பேசியது..
தமிழில் என் அபிமான வார்த்தை அது..
...
நீ எனைப் பிரிந்ததை -ஒரு
கடிதமாக எழுதுகிறாய் - நான்
உனைப் பிரிந்ததை - ஒரு
புத்தகமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்..
ஆனாலும்
உன் கடிதமே ஜெயிக்கிறது..
புரிந்து கொள்ளுதலைத்
தாண்டிய எழுத்து அது..
நம் காதலுக்கு - மட்டுமே
அது புரியும்..
ஒரு வேளை
நம் குழந்தைக்கும் கூட....
...
உன் கண்ணீர்த்துளி ஏன்
என் முத்தத்துடன் போட்டி போடுகிறது ?
முத்தத்தின் முடிவிலும் கண்ணீர் விடுகிறாய்..
கண்ணீரின் முடிவிலும் முத்தம் கேட்கிறாய்?
இது தான் உன் விழி ஈர்ப்பு விசையா??
என் கவிதையின் முடிவில்
கண்ணீர் விடாதே..
கவிதையை முடிப்பதா?
இல்லை உன் கண்ணீரை முடிப்பதா?
என் கவிதை
உன்னைக் காதலிக்கிறது...
எனக்குத் தெரியாமல்..
...
பொய்யாக நீ சொல்லும்
ஒவ்வொரு பொய்யும்
என் சிரிப்பின் விதை..
என் உயிர்ப்பின் விதை..
என் கவிதையின் அலங்காரம்..
நம் குழந்தையின் திருஷ்டிப் பொட்டு ..
என் கவிதையின் பொய்..
உன் கள்ளக் கோவத்தின் விதை..
உன் கடைசி முறைத்தலின் விதை.
..
அடிக்கடி
இப்படி என் கவிதையை
முடிக்கவிடாமல்
பாதியிலேயே போய்விடுகிறாய்
கண்ணம்மா..
அடுத்த கவிதையின்
ஆரம்பத்தில் சந்திக்கிறேன்.
...



Wednesday, October 31, 2012

நூல் பொம்மை (முடிவு)


தாமரை
ஓய்வு பெறுவதற்கு முன்
பிரம்மா செய்த
ஒப்பற்ற காவியம்...
இவளுக்குப் பிறகு
இவ்வுலகில்
அழகு இருக்காது!
தாமரையை தரிசித்தவர்களுக்கு
அமாவாசை கிடையாது!
நிலவிலிருந்து பார்த்தால்
தாமரை
இன்னுமோர் நிலவு!
தாமரை பிறந்தபோது
அவள் அழகோடு
தானும் சேர்ந்துவிட
துடியாய் துடித்தாள்
தாமரைக்காரி!
இன்றும்
நாவில் ஏறி
நல்லவை பேச
நாளும் காத்திருக்கிறாள்
தாமரைக்காரி!
..
தாமரைத் திருக்கரங்களைத்
தழுவப் பாற்கடலில்
திருமாலுடன்
தவம் இருக்கிறாள்
இன்னொருத்தி!
...
தாமரைப் பாதம்
படுகின்ற போதெல்லாம்
பூமித்தாய் கொஞ்சம்
புல்லரித்துப் போகிறாள் ..
பொறுமையில்
தன்னை மிஞ்சியவளைப்
பார்த்து
பொறாமையும் கொள்கிறாள்...
...
கமலம்
கனவுகளுடன்
கல்லூரியில்
காலெடுத்து வைத்தாள்
காத்திருந்தன
காதல் கடிதங்கள் ..
“கண்மணி அன்போடு,
கண்ணே கலைமானே..”
என
வகை வகையாய்
வாலிபர்கள் வலைவீச
எவனையும் கண்டுக்காம
கருமமேனு கடந்துபோனா ..
தலைசாய்த்து அழுவதற்கு
தரமான தோளும் இல்ல ..
கைப்பிடித்து கடைத்தேற்ற
கண்ணியமா யாரும் வல்ல..
பொதச்சி வச்ச ரகசியத்த
பொலம்பித் தீக்க வேணுமுன்னு
பக்கத்து வீட்டு
குழந்தை கிட்ட
பாட்டி போல
பேசி நிப்பா!
வழித்துணைக்கு யாருமில்ல
வாய்த்துணைக்கும் வசதியில்ல ...
வாழ்க்கை பூரா
இப்படியானு
வருத்தத்தோட வாடி நிப்பா !
...
வாய் நீண்ட அம்மாக்காரி
கைநீட்டி காசுவாங்கி
ஊரெல்லாம் மலைபோல
கடனத்தான் ஏத்தி வச்சா!
வட்டி வாங்க வந்தவனெல்லாம்
“குட்டி என்ன பண்ணுது” னு
வெத்தல மாத்த
வெல வச்சான்
ஆட்டம் போட்ட அம்மாக்காரி
அடங்கி நிக்க மாட்டானு
அப்பாகிட்ட போயி நின்னா
அவருங்கூட அசையவில்ல..
...
பக்கத்து தெரு பண்ணையாரு
பெத்ததெல்லாம் ஒண்ணே ஒண்ணு
பாதை மாறிப் போச்சுதேன்னு
பரிதவிச்சு நின்னாரு..
படியேறி உள்ளே வந்து
பல்லிளிச்சு பந்திபோட
பக்குவமா பதுங்கினாரு ..
“பொத்தி பொத்தி வளத்தேம்மா
புத்தி கெட்டுப் போயிட்டான்,
பெருசா ஒண்ணும்
குடிக்கமாட்டான்
மாசத்துக்கு ரெண்டுவாட்டி
மத்தபடி நல்லபையன்
சேர்ந்ததுதான் கொஞ்சம் மோசம்!
பத்மத்தை கொடுத்தியின்னா
பொறுப்பு வந்து பாத்துக்குவான்..
பத்து வீடு வச்சிருக்கேன்
புஞ்ச நஞ்ச எக்கச்சக்கம்
விளக்கேத்த அனுப்பி வையி
மகாராணி நல்லாருப்பா!
..
..
கல்லூரி கவிதைப்போட்டி
முதல் பரிசு தாமரைக்கு !
என்னத்த எழுதியிருப்பா?
தன் எண்ணத்த எழுதியிருப்பா..
வாழ்கையில முதல்முறையா
வெற்றிபெற்று வீடுவந்தா
“வாடி என் மகராசி !
வாழ்க்கையொண்ணு வந்திருக்கு
வேணாமுன்னு சொல்லாதடி
வசதியான குடும்பமடி!
கைதட்டுனா வேலைக்காரன்
கால் அமுக்க வேலைக்காரி
நீ ஏதும் செய்யவேணாம்
கழுத்தமட்டும் நீட்டு தாயி!
கண்டவன கட்டிக்கிட்டு
காணாதேசம் போறதுக்கு
கிணத்துத் தவள வந்திருக்கான்
கூடவே நானிருக்கேன்!
...
சம்மதம் ஏதும் கேக்காம
சமயம் பாத்து சாச்சுப்புட்டா ..
நாளைக்கே நிச்சயமுன்னு
நாள்குறிச்சும் வச்சுப்புட்டா..
வாயிருந்தும் ஊமையானா
வசந்தமுல்லை வாடி நின்னா !
...
ராப்பகலா அழுதுபாத்தா
ராட்சசியோ இரங்கவில்ல
பணத்தாச புடிச்ச பேய்
பாசத்தையே பணயம் வச்சா
“புருசனாச்சும் புடிச்சமாரி
அமையணும்னு அம்மனுக்கு
விரதமெல்லாம் இருந்தேனே
வீணாகப் போயிடுச்சே
விளக்கேத்த நானும் போனா
என் வாழ்க்கை இருண்டிடுமே !
பையன்
பொறுக்கியின்னு கேள்விப்பட்டேன்
பொறுத்துக்கிட்டு எங்க போக?
கூண்டுக்கிளி என்னைக்கொண்டு
குரங்குகிட்ட குடுக்கிறியே
குலச்சாமி கோயிலுக்கு
என்னை
பலியாகக் குடுத்திருடீ ...
..
தெருவெல்லாம் தம்பட்டம்
திருமணமோ அடுத்த வாரம்
ஒண்ணுஞ்செய்ய முடியாம
ஒடஞ்சிபோனா தாமரையும்
பொறாமைல பல பேரும்
பரிதாபத்தோட சில பேரும்
புரளி பேசி திரிஞ்சிருக்க
பொட்டப்புள்ள பட்டுப்போனா..
...
கல்யாண போட்டோவுல
கொஞ்சங்கூட சிரிக்கவில்ல
கழுத்துத்தாலி ஏறும்போது
அறியாம அழுதுப்புட்டா ..
“அம்மாவப் பிரியணும்னு
அழாதேம்மா பாத்துக்கலாம் !”
சும்மாவாச்சும் சொல்லிவச்சான்
அசடு வழிஞ்சு அப்பாக்காரன்...
...
“பொம்பளையா பொறந்ததுக்கு
பொதிமாடா பொறந்திருப்பேன்
பொத்திப்பொத்தி
நான் வளர்த்த
பெருங்கனவு பொசுங்கிப்போச்சே ...
பஞ்சுமிட்டாய் வாங்கித்தாம்மா ,
பல்லெல்லாம் பாழாப்போகும் !
பட்டுப்பாவாட வாங்கித்தாம்மா,
பழசானா விட்டுப்போகும்,
படுத்துக்க கூட வாம்மா,
புருசன்காரன் வருவான் போடி!
பூச்சாண்டி போலிருக்கான்
பயமாத்தான் இருக்குதும்மா!
கண்ணமூடி சகிச்சுக்கோடி
‘கள்ளா’னாலும் கணவனாக்கும்
பக்கம் வந்தா கள்ளு வாடை
பொறுத்துக்க முடியலம்மா
பத்தி கொழுத்தி வச்சுக்கோடி
புல்லானாலும் புருசனாக்கும் !
பச்சையாப் பேசுறாம்மா
பல்லெல்லாம் கூசுதும்மா
பதில் பேச வேணாண்டி
படிக்காத பயதாண்டி !
நடுவீட்ல உக்காந்து
நீலப்படம் பாக்குறாம்மா
நானும்போயி இருக்கணுமாம்
நா கூசாம கூப்பிடுறான்..
எதுக்கும்மா என்ன பெத்த ?
இத்தனையும் பாக்கதுக்கா?
கரைச்சிருக்கக் கூடாதா
கருவாக இருக்கும்போதே ?
...
மகன் செய்யும் தப்பையெல்லாம்
மாமியாரு மன்னிக்கிறா!
மனைவியா நான் மட்டும்
மூச்சுமுட்டி முயங்கிக்கெடக்கேன்...
பத்துப்பாத்திரம் பூசிவச்சு
பல வகையா சமைச்சுவச்சு
ஒட்டுமொத்த அழுக்கையும்
ஓயாது துவைச்சுவச்சு
மாமியாரு கால் அமுக்கி
மத்தியானம் தூங்கவைப்பேன் ...
மாமனாரு நல்லவரு
“மருமகளே சாப்டியா”னு  
ஆறுதலா கேட்பாரு
அப்பா நெனப்பு
வந்துநிக்கும்...
பகலெல்லாம் வேலைக்காரி
படுத்துக்க வீட்டுக்காரி
இதுதாம்மா எம்பொழப்பு ..
வேறென்ன நானுஞ்சொல்ல?
...
ஒரு நாளு இப்படித்தான்
ஊருறங்கும் வேளையில
போதையில காளை வந்தான்..
பொத்திவச்ச பூவப்போல
தூங்கிப்போன தாமரைய
தூக்கிப்போட்டு மிதிச்சுப்புட்டான் ...
“வாய் தொறந்தா
கொன்னுருவேன்”னு
வந்ததெல்லாம் உளறி நின்னான்
வாங்கிவந்த பாட்டிலத்தான்
வயிறுமுட்ட ஊத்திக்கிட்டு
ஆடையின்றி வாடியின்னு
அருவறுப்பா ஆடி நின்னான்..
சொன்னதெல்லாம் செஞ்சுப்புட்டு
சிவனேன்னு படுத்திருந்தா...
பத்துப் பதினஞ்சு சிகரெட்டு
அத்தனையும் பத்தவச்சு
பூமேல பொட்டுவச்சான்
பொக்களமா பொத்துவச்சான்
புள்ளிமான் மேனியில
கொள்ளியால புள்ளிவச்சான் ..
‘அம்மா’னு கத்தக்கூட
அவமானமா இருந்துச்சு!
ஆண்டவன வேண்டிக்கிட்டு
அலுங்காம படுத்திருந்தா!
மோகத்தையும் தீத்துக்க
மிருகமா பாய்ஞ்சு வந்தான்
அடிமையாகி அழுதுகிடந்தா
அத்தனையும் தாங்கிக்கிடந்தா ..
உச்சக்கட்ட வேளையில
உயிர்போறத உணரும்போது
தாரத்த மறந்துப்புட்டு
வேறொருத்தி பேரச்சொன்னான்
தூக்கிவாரிப் போட்டுச்சு
தலை கெறங்கி இருட்டிச்சு!
..
“ஏகபத்தினி விரதன்னு
எல்லாத்தையும் ஏத்துக்கிட்டேன் ..
ஏமாந்து போயிட்டேனோ ?
என்ன செய்வேன்?
ஏது செய்வேன்?
புயலடிச்சு போயிடுச்சே
பொதஞ்சிபோன பூவானேன்!
கரைசேர நாம்புடிச்ச
கட்டுமரம் ஓட்டையாச்சே
இதுக்கு மேல தாங்காது
என்னுசிர எடு சாமி
தாலியத்தான் கழத்திப்புட்டு  
தூக்குலதான் தொங்கப்போறேன் ..
...
..
புருஷன்காரன் தூங்கினதும்
புதுப்பொண்ணா அலங்கரிச்ச
முகூர்த்தப்பட்ட மூணாக்கி
உத்திரத்தில முடிச்சுபோட்டா
மூணுமுடிச்ச மாரியம்மன்
போட்டோவுல மாட்டிப்புட்டு
கடைசியா ஒரு முடிச்ச
கழுத்துலதான் மாட்டிக்கிட்டா...
...
கால் இடறித் தொங்கும் முன்னே
கண்ணமூடி ஒரு நிமிஷம்
கடவுளத்தான் நெனச்சுகிட்டு
கடந்ததெல்லாம் ஓட்டிப்பார்த்தா ..
..
அப்போ...
...
அதர்மத்த அழிச்சிட்டு
தருமத்த நிலைநாட்ட
கலியுகத்துக் கண்ணபிரான்
காகிதமாப் பொறந்துவந்தான் ..
எங்கிருந்தோ
எப்படியோ
பறந்து வந்த
பேப்பர் துண்டு
கமலத்துக் கண்ணுலதான்
முத்தமிட்டு நின்னுச்சு..
..
கடைசி தியானத்த
கலச்சிட்டு கண்திறந்து
காகிதத்த கையிலெடுத்தா..
கருப்பு மையில கவிதை ஒண்ணு...
..
“ஏழு முறை தோத்துப்போன
எட்டுக்கால் பூச்சி ஒண்ணு
எட்டாவதா கூடுகட்டி
எசமானன் ஆகிடுச்சி ...
..
ஏழையா இருந்தாலும்
ஏணியா நானிருக்கேன்
ஏறிப்போடி என் தாயி
ஊருலகம் ஏத்துக்கிடும் ..
..
பாடையில போறதுக்கா
புள்ளையின்னு நீ பொறந்த?
படிச்சுக்குடு என் தாயி – உனக்காக
பாரெல்லாம் காத்துக்கிடக்கு...
..
வழித்துணைக்கு வேணுமுன்னா
‘பாரதி’ய கூப்புட்டுக்கோ
புதுப்பொண்ணா நீயும் போடி
புரட்சி ஒண்ணு காத்துக்கிடக்கு..”
...
..
..
தாமரை தரையிறங்கி
தாழ்திறந்து தனியே போனா!
திரும்பிக்கூட பாக்காம
தீயாகத் திமிரா போனா!
...
...

சுஷில் குமார் பாரதி 27-03-2009