Thursday, August 30, 2012

கவிதையின் இருத்தல்....


உடைந்து போன
நொடிகளுக்குள்
உள்ளதைத்தேடி ஒரு பயணம்...
வினாக்களின் மத்தியில்
வீற்றிருக்கும்
விந்தையான விடைகள்...
கனாக்களை நெருங்கவிடாத
கற்பனை கணங்கள்..
எத்தனை என்றோ
எப்படி என்றோ
ஏன் என்றோ
தெரியாமல் நிகழும்
அடுத்தடுத்த ஆச்சர்யங்கள்...
அடிமனதின் அடுக்குகளுக்குள்
பதிந்துபோன அகராதி..
தொடர்ந்து போக
ஆளில்லா முற்றுப்புள்ளி...
வேடிக்கையாகிப்போன
வாடிக்கைகள்..
வாடிக்கையாகிப் போகும்
வேடிக்கைகள்..
இலக்கணம் இசைந்து
இயல்பாய் நிற்கும்
இஷ்டமற்ற கவிதை...
வரையறைக்குட்பட்ட வாசகன்...
வரம்பற்று திமிரிநிர்க்கும்
வார்த்தைகள்..
நினைத்தன முடிக்கும்
முடிவிலா மூர்க்கம்
வேகத்தடை போட
வழக்கமான வர்க்கம் ...
முன்னேறிச் செல்வது
மட்டுமே தெரிந்த தலைக்கனம்..
முட்டுக்கட்டையாக
அட்டைக்கத்திகள்...
நட்பு பாராட்டும் நளினம்...
எப்பொருள் கேட்பினும்
ஏற்றுக்கொள்ளா ஏளனம்..
எவர் வரினும்
எதிர்கொள்ளும் எண்ணம்...
விளைவு பாரா முகம்..
விழைந்து பார்க்கும் அகம்...
ஒவ்வொரு கவிதையின் பிறப்பும்
இத்தனை தாண்டியே நிகழ
இன்னும் இருக்கிறது உலகம்..
கூடவே நானும்...

Wednesday, August 29, 2012

விட்டு விட்டு ...

நீண்ட தீண்டல்கள்
ஓய்ந்தபோது
ஓசையின்றி
தழுவிப் போகும்
ஈரக்கூந்தல்  ..
மீண்டும் வருவதற்கான
அறிகுறிகளை
விட்டுச் செல்லாத
விரல்கள்...
காய்ந்த பிரதேசங்களை
பயிர்ப்பிக்கும்
பாச சுவாசங்கள் ...
தொடத் தவறிய
தருணங்களை
நினைவுகூரும்
நெஞ்சு நித்திரை...
கொஞ்சிப் பார்த்தலும்
மிஞ்சிப் போதலும்
கலந்திருந்த
காலகட்டத்தின்
விட்டுவைத்த மிச்சங்கள்...
கடின வார்த்தைகளும்
அவை பிறப்பித்த
மௌனங்களும்
இப்போதைய சிணுங்கலில்
கட்டுக்கடங்காத
கண்ணீர்த் துளிகளாய்...
முதல் பரிசும்
முதல் ஸ்பரிசமும்
மூச்சுமுட்டிய முத்தங்களும்
முழுதாய் நனைந்த மழையும்
முந்தானையின் ஓரமாய்...
முதல் கவிதையின்
மூலப் பொருளாய்
நீ ஆகிப்போன தருணம்
நினைவிருக்கிறதா ?
ஒய்யாரக் கனவுகளை
ஒதுக்கி வைத்து
நான்
ஓய்ந்திருந்த நேரம்
ஓசையற்ற உன் கொலுசுகள்
பட்டும் படாமல்
என் காதுமடல்களில்
கவிதை பேசிச்சென்றன...
அன்று முதல்
விழித்திருத்தலும்
தனித்திருத்தலும்
இயலாது போக
கவிதை பேசுகிறேன் ..
விட்டு விட்டு....





Tuesday, August 28, 2012

விட்டத்தை நோக்கி...


உதிர்ந்து போகாத
பூக்களை
நினைத்துத் தேற்றிக்கொள்ளும்
வேர்...
எழுத முடியாத
கவிதையை
நினைத்துத் தோற்றுப்போகும்
பேனா...
நின்றுபோன மழையை
நன்றியோடு பார்க்கும்
நனைந்த கதிர்...
நெற்றி வேர்வை
ஒற்றி எடுத்த
ஒற்றைச்சேலை
வாசம் பார்க்கும்
கயிற்றுக்கட்டில்...
தொட்டுக்கொள்ள
ஏங்கும்
பட்டுக்கன்னமும்
ஒட்டுமாங்காய் ஊறுகாயும்..
விட்டுப்பிரியத் துடிக்கும்
விடை தெரியா
வினா...
வசந்தத்தை மறந்துபோன
வறண்ட வருடங்கள்...
விட்டுவிட்டு வந்துபோகும்
விடுமுறை விருந்துகள்...
வேறுபாடுகள்..
விசித்திரங்கள்...
வர்ணனைகள்..
வாக்குவாதங்கள்...
வசை...
இவையடக்கிய வம்சங்கள்...
நளினங்கள்
குறும்புகள்
வெட்கம்
மோகம்
இவையடக்கிய இத்யாதிகள்...
அக்கரைப் பச்சைகள்
இக்கரைக் கொச்சைகள்...
இவை எல்லாவற்றிற்கும் இடையில்
விட்டத்தை நோக்கி
நான்...

Monday, August 27, 2012

நினைத்த பொழுதுகளின் மிச்சம் ...



காற்று நின்று போன தருணம்
நேற்று இன்று நாளை
அற்ற சூன்யம்
ஈரம் தேடி
களைத்துப் போன
கனவுகளின் அடிவாரம்
நித்திய நித்திரையை தொலைத்து
நான் ...
நிதர்சனங்களும்
நிராசைகளும்
மாறிமாறி
எனைப்பார்த்து
கேலி செய்வதாய்த் தோன்ற
காட்சிப் பிழையா என
கண்மூடி
நம்பிக்கையுடன் நான்...
தோற்றுப்போன தருணங்களை
தொலைவிலேயே வைத்து
இதமான இதயங்களை
இம்சித்து இரசித்து
இலகுவாக நடித்து
இருந்துவந்தவன் நான்..
இறந்துவந்தவன் நான்...
இனியும் இருக்குமா என்ற
எதிர்பார்ப்புகளிலேயே
ஏகாந்தத்தை
இரசித்துக் கிடந்தவன் நான்...
நான்
நான் மட்டுமன்று..
நீயும்தான் ...
நீ நினைத்த பொழுதுகளின் மிச்சம்
நான்...

Sunday, August 26, 2012

வா கொன்று போ ...

உள்ளூர உறைந்திருக்கும்
உணர்ச்சிகளை உதிர்ப்பதும்
வெள்ளாவி வைத்து
மீண்டும் விதைப்பதும்
என் ஆவி
உயிர்ப்பிப்பதும்
உன் மேனி சிலிர்த்து பின்
மறைப்பதும்
சாதாரணம் அன்று கண்ணம்மா
சாகும் தருணம்..
பிறந்திருக்க வேண்டிய
எத்தனையோ புனிதங்களை
மறந்திருக்கிறாயா ?
இல்லை விரும்பி
மறைத்திருக்கிறாயா ?
உனக்குள்
தோண்டிப்பார்க்கும் என்
ஒரே ஆயுதம்
இன்று அடுத்த பதத்திற்காக
பதுங்கியிருக்கிறது ..
உன் உடைபடாத கண்ணாடி
என் கவிதை
என்பதை மறந்துவிடாதே ...
நேற்றைய மாலை
நமக்கான
முதல் மாலையை
நினைவூட்டிச் சென்றது...
யாருமற்ற புல்வெளியும்
ஈரப்பூங்காற்றும்
மஞ்சள் மாங்கல்யமும்
மயங்கிய உன் கண்களும்
இனியொரு முறை
சாத்தியமன்று....
படைப்பில் களைத்த
இறைவனின் இடைவேளையில்
உனை நான்
செதுக்கிய தருணம் அது...
என் ஜீவன்
உன்னுள் இறந்துபட
எத்தனை முறை
முயன்றிருந்தது...
இன்னும் ஒரு
வாய்ப்பு கொடு
என்னை
உன்னுள்
கொன்றுகொள்கிறேன் ...
வா ...

வா கொன்று போ ...

என்ன சொல்ல ?
எனைத் தேடி வந்த
வார்த்தைகள்
எனைக் கண்டுகொள்ளாமல்
எங்கேயோ சிதறிப்போக
நான் மட்டும் தொலை தூர
வருகைகளை எண்ணி
வருந்தியிருக்கிறேன் ...
முற்றுப்பெறாமல் போன
முந்தைய கவிதைகளை
முடித்து வைக்க
முடிந்தால் வந்து போ...
பாதி இறந்து போன பார்வைகளும்
மீதி மிச்சங்களும்
உன் ஒரு நொடி
தலை குனிதலையும்
ஈரமிக்க கண்ணீர் துளியையும்
கண்டு பின்
மாய்ந்து போகும்...
எனக்கான உன் ஓர் நொடி
எண்ணம் கூடவா
இல்லாமல் போயிற்று ?
இல்லை
தவிர்க்க எண்ணி
எண்ணாமலேயே  இருக்கிறாயா ?
உன் ஒவ்வொரு தவிர்த்தலிலும்
என் உயிர்
உதிர்ந்து போய்த் தீரும்...
இது தெரிந்தும்
நீடிக்கும் உன் மௌனமும்
திமிறும்
மென்மையின் சான்றான
உன் பெண்மையை
கொச்சைப்படுத்தும் ...
ஒன்று
என் கவிதையை முடித்து வை..
இல்லை
என்னை முடித்து வை..
உனக்கான காத்திருத்தல்
ஒவ்வொரு நொடி
சிலுவையறைதல்....
வா...