Wednesday, August 29, 2012

விட்டு விட்டு ...

நீண்ட தீண்டல்கள்
ஓய்ந்தபோது
ஓசையின்றி
தழுவிப் போகும்
ஈரக்கூந்தல்  ..
மீண்டும் வருவதற்கான
அறிகுறிகளை
விட்டுச் செல்லாத
விரல்கள்...
காய்ந்த பிரதேசங்களை
பயிர்ப்பிக்கும்
பாச சுவாசங்கள் ...
தொடத் தவறிய
தருணங்களை
நினைவுகூரும்
நெஞ்சு நித்திரை...
கொஞ்சிப் பார்த்தலும்
மிஞ்சிப் போதலும்
கலந்திருந்த
காலகட்டத்தின்
விட்டுவைத்த மிச்சங்கள்...
கடின வார்த்தைகளும்
அவை பிறப்பித்த
மௌனங்களும்
இப்போதைய சிணுங்கலில்
கட்டுக்கடங்காத
கண்ணீர்த் துளிகளாய்...
முதல் பரிசும்
முதல் ஸ்பரிசமும்
மூச்சுமுட்டிய முத்தங்களும்
முழுதாய் நனைந்த மழையும்
முந்தானையின் ஓரமாய்...
முதல் கவிதையின்
மூலப் பொருளாய்
நீ ஆகிப்போன தருணம்
நினைவிருக்கிறதா ?
ஒய்யாரக் கனவுகளை
ஒதுக்கி வைத்து
நான்
ஓய்ந்திருந்த நேரம்
ஓசையற்ற உன் கொலுசுகள்
பட்டும் படாமல்
என் காதுமடல்களில்
கவிதை பேசிச்சென்றன...
அன்று முதல்
விழித்திருத்தலும்
தனித்திருத்தலும்
இயலாது போக
கவிதை பேசுகிறேன் ..
விட்டு விட்டு....





No comments:

Post a Comment