Thursday, March 14, 2013

உதிரக் காத்திருக்கும் இலை ....

உதிர்ந்து விழும்
ஒவ்வொரு இலையும்
யாருமற்ற எனக்கேயான
வெளியிலிருந்து - எனை
உள்நோக்கி
விசையுடன் இழுக்க
வேண்டா வெறுப்புடன்
வாழ்வு நோக்கி
வந்து விழுகிறேன் நான்..
அசைவிலா புள்ளிகளில்
அதிகபட்ச அசைவுடன்
சிந்தனை செலுத்தி
செயலற்று இருத்தல்
என் சமீபத்திய
பெரும் சாதனை..
இதை பிதற்றிச் சொல்ல
என்ன இருக்கிறது
என
வான் பார்த்து
சிந்தித்து
வசை பொழியத்
தயாராய்
கவிதைத் தீ
தீண்டத் தகாதவர்கள் ..
வெறும் பிழைப்பா?
இல்லை
வேத வாழ்வா?
என்ற
விமர்சனங்களுக்கு அஞ்சி
குனிந்து செல்லா
மனப்பிறழ்வு எனக்கு - இது
சிலர் கவனித்து
அளித்த விருது..
சாலையோரம்
சற்று முன்பு
துவங்கிய இந்த
நடையில் கூட
ஏதுமற்ற ஒன்றை
ஒளித்துதான்
கொண்டு வந்திருக்கிறேன்..
அதைத் தேடித்தேடி
நான் தளர்ந்து போய்
தரையமரும் நேரம்
புல்லாய் எனைத் தீண்டி
புதிய பொருள்
தேடச் சொல்லும்
அந்த ஏதுமற்ற
ஏதோவொன்று..
குழப்பத்தில் வான் நோக்கி
சுற்றுமுற்றும் நோக்கி
பின்
விடாமல் முயன்று
குடைந்து மரத்தில்
தனக்கான - உலகின்
மிக அழகான வீடு கட்டி
ரீங்காரமிட்டு
எனக்கான
தாலாட்டோ
ஒப்பாரியோ
பாடும் இந்தச் சில் வண்டு..
அதன் இசை தொடர்ந்து
நினைவுகளில் தோய்ந்து
ஏதோவொரு
மரத்தூளியில்
தேன்மிட்டாய் சப்பிக்கொண்டே
தமிழற்ற கவிதை பாடி
எனை நான்
கடவுளாக்கிக் கொண்ட தருணம்
பின்
அக்கடவுள் மீதே
கோவம் கொண்டு
அம்மரக் கிளை ஒடித்து
எனை நானே
அடித்துக் கொண்ட
கேவல நொடிகளும்..
தனை விரும்பா
தறுதலையாய்
தற்கொலை தேடி
தொலைத்த கனங்களும்
மேலும் கீழும்
அசையும்
இவ்விலைக் கூட்டத்தில்
என் முகம் மறைந்து
இல்லாமல்
கரைந்து போக
தவித்து
தொடர்ந்து
இந்த நித்திரையில்
மூழ்கிப் போகிறேன்...
முடிந்தால்
மீண்டு வருகிறேன்...
...

No comments:

Post a Comment