Wednesday, March 20, 2013

விழுந்து கிடப்பதாய் நடிக்கிறேன்...

கடைசியாய் எனக்குத்
துணையிருந்த கால் செருப்பும்
அறுந்து போக,
கானல் நீர் பாலையில்
அலை தேடித் தோற்று
மனம் மிக அலைவுற்று
சுவாசிக்க இஷ்டமின்றி
வெறுத்து விழுந்துவிட்டேன்..
...
இதுவரை நடந்த தொலைவு
என்னென்ன சொல்லி
எனை இயல்பாய்
கடந்து போயிருக்கிறது..
ரசித்த சோலைகளும்
சாய்ந்து கொண்ட மரங்களும்
இதமான நிழலும்
என்னுடன்
நேற்றைய இரவு வரை
வந்தவனும் கூட
நானறியா எந்த
ரகசியத்தையும் - எனக்கு
சொல்லிப் போகவில்லையே..
..
கடைசியாய் என்
பாவங்களின் அடையாளமாய்
என்னோடு ஒட்டிக்கொண்டிருந்த
ஒரே கந்தலாடையும்
அந்த மதிப்பற்ற
ஒற்றை நாணயமும்
வேண்டுமென்றே
கூட வைத்து நடந்த
கண்ணம்மாவின் கிறுக்கல்களும்
மலையுயர நீர்வீழ்ச்சியின்
அடி ஆழத்தில்
அவளுக்காய் கண்டெடுத்த
கூழாங்கல்லும்
அவள் தாங்கிய
பல்வேறு செல்லப் பெயர்களை
செதுக்கிய சிரட்டை ஓடுகளும்
எனக்காய் அவள்
பரிசளித்த கை வளையமும்
இவை யாவும் தாங்கிய
சாக்குப்பையும்
அவள் இஷ்டப்படி
எல்லையில்லா நிலப்பரப்பில்
எல்லை எனத்தோன்றிய
எதோ ஒரு இடத்தில்
விட்டுத் தொடர்ந்தேன்..
இன்னும் ஏதோ
எனை விட்டுப் போகாமல்
தொட்டுத் தொடர்வதாய்
உணர்ந்து துடிக்கிறேன்...
...
நேற்றைய இரவில்
உறக்கம் கொள்ளாது
புலம்பித் தவித்த அவனும்
கடைசியாய்
"கவனம் வேணும் !" என
அறிந்தோ அறியாமலோ
சொல்லிச் சரிந்தான்..
எனக்காகத்தான்
அவன்
தேர்ந்தெடுத்த
அந்த வார்த்தைகளை
சொல்லிப் போனானா?
மனதறிந்து யாருக்கு - நான்
என்ன கொடுமை
இழைத்திருக்கிறேன்?
...
ஒருவேளை
கண்ணம்மா அவ்வப்போது
"நல்லா நடிக்கிற!" என்பதுபோல
நிஜமாகவே நான்
எனைமறந்து நடிக்கிறேனோ?
எது
இந்த மாயையின்
நிறுத்தற்குறி?
...
எனைச் சூழ்ந்திருக்கும்
எல்லாரும்
எனைவிட நல்லவராய்
எனைச் செதுக்கி
அடங்கியிருக்க
நான் மட்டும் எப்படி
இப்படி வந்து மாட்டிக்கொண்டேன்?
...
நட்புத் துரோகங்களையும்
நேர்கொண்ட பகைகளையும்
நெடு நேர நச்சரிப்புகளையும்
நிலைத்திருந்த
நச்சுப் பேச்சுகளையும்
இன்னும்
எத்தனையோ
உச்சகட்ட தடுமாற்றங்களையும்
அசராது அமைதியாய்
எனக்குள்ளே
அடக்கியிருந்தேனே ..
...
எனை மறந்திருந்த
சிற்சில வேளைகளில் கூட
நிச்சயமாய்
நிலைத்திருந்தேனே...
கடந்த காலத்தை
கலைத்து போட்டவனுக்கு
எடுத்துக்காட்டி வாழ்தல்
இகழ்ச்சி தானே..
..
இயல்பாய் இருத்தல்
இந்த உலகிற்கு
ஏற்புடையது இல்லையோ?
உதாரணம் கேட்டு
உயிரை மதிப்பதில்லையே !
மானத்திற்கும்
சுய மரியாதைக்கும்
எங்குபோய்
ஓட்டு  சேகரிக்க?
..
இந்த நொடியின்
அவசரமற்ற - இந்த
வீழ்ந்து கிடத்தல்
மிகவும் சுகமாக
எனை நான் துவங்கிய
சலனமற்ற இடம் நோக்கி
சத்தமின்றி இழுத்துப்போகிறது..
எழுந்துகொள்ள
ஏதோ உள்ளிருந்து உந்தியும்
தொடர்ந்து விழுந்தே கிடந்து
தூங்குவதாய் நடிக்கிறேன்...
..
நிஜமாய் நித்திரை
என் நிழலாகிப் போகும்போது
எனை விட்டு
என் சுவாசம்
எங்கோ
போய்த்தொலையட்டும்...
...


No comments:

Post a Comment