Sunday, February 26, 2012

அம்மு (தொடக்கம்)


காதல்!
ஒரு நீண்ட பயணத்தின் 
சிறிய தொடக்கம்...
காதல்!
ஒரு நீண்ட இரவின் 
சிறிய மெழுகுவர்த்தி ...
காதல்!
காவியம் படைத்த 
எழுத்தாணி...
காதல்!
கவிதை படைத்த 
கற்பனை...
காதல்!
மொட்டைமாடி 
ஒற்றை ரோஜா...
காதல்!
பிறந்த குழந்தையின் 
முதல் புன்னகை..
காதல்!
தேனீக்கள் சேகரித்த 
முதல் சொட்டு தேன்...
காதல்!
நெரிசலில் கிடைத்த 
பேருந்து இருக்கை...
காதல்!
தூரத்து நிலா வெளிச்சம்...
காதல்!
ஆலமரத்தடி தாலாட்டு..
காதல்!
ஓட்டப் பந்தயத்து 
ஆறுதல் பரிசு...
காதல்!
பொய்த்து பெய்த 
முதல் சொட்டு மழை...
காதல்!
புது மனைவியின் 
முதல் சொட்டு கண்ணீர்...
காதல்!
இரயில் வண்டி 
படிக்கட்டுப் பயணம்...
காதல்!
கடைசி நிலக்கடலை ...
காதல்!
புரிந்து பிரிந்த 
கை குலுக்கல்...
காதல்!
போராடி வென்ற 
சுதந்திரம்...
காதல்!
சிதறல் தேங்காய் துண்டு...
காதல்!
ஒற்றை நரைமுடி..
காதல்!
மழை நேரத்து 
மல்லிகைப்பூ...
காதல்!
முதல் இரவின் 
வளையோசை...
காதல்!
அதிகாலை சுப்ரபாதம்...
காதல்!
தினம் திறக்கும் 
சொர்க்கவாசல்...
காதல்!
புறவாசல் இயற்கைக்காட்சி...
காதல்!
சுவரொட்டிய 
தாத்தா பாட்டி நிழற்படம்...
காதல்!
வெற்றி தந்த பாராட்டு...
காதல்!
முதல் தோல்வி தந்த 
விமர்சனம்...
காதல்!
வருடங்களை கடந்த 
வாழ்த்து அட்டை...
காதல்!
காட்சி தந்த 
ஒரே கடவுள்...
காதல்!
கடற்கரை பாதச்சுவடு...
காதல்!
எதிர்பார்த்து கிடைத்த 
முதல் முத்தம்...
காதல்!
எதிர்பாராமல் கிடைத்த 
அவசர முத்தம்...
காதல்!
கிழிக்க விரும்பாத 
நாள்காட்டி...
காதல்!
இக்கவிதைக்குத் தாய்...
...
...
...
இந்த 
இதமான உணர்வு 
தொடாத வரை 
நானும் 
கல்லாகத்தான் 
இருந்தேன்...
பலவருடத் திட்டம் 
போட்டு..
சூழ்ச்சி செய்து – எனைச் 
சுற்றி வளைத்து 
மாற்றிப் போனது 
இந்தக் காதல்!

1 comment: