Friday, October 14, 2011

தேவதைக்கு தந்த முத்தம் (தொடர்ச்சி 6)

பின்
சில வருடங்கள்
முழு நிலவில் மட்டும்
முகங்களைப் பார்த்து
தொலைந்திருந்தோம் ..
வாழ்க்கை தரும்
வரங்களையும்
சாபங்களையும்
சப்தமின்றி சுவைத்திருந்தோம் ..

ஆணின் நாட்கள்
அசைவின்றி போகும் !
பெண்ணின் நாட்களோ
இசைவின்றி போகும்!
ஆணின் வருடங்கள்
அனுபவம் கூட்டும்
பெண்ணின் வருடங்களோ
வயது கூட்டும் ..
சரியோ தவறோ
விருப்போ வெறுப்போ
விழ வேண்டும்
கழுத்தில் தாலி !
அறுதியிட்டுச் சொல்வேன்
பெரும்பாலான திருமணங்கள்
பொம்மலாட்டம் தான் ..

நிலவை
விலைபேசும் கூட்டம்
போட்டி போட்டுக்கொண்டு
வியாபாரிகள் ..
நான்கு லட்சம்
நாற்பது பவுன்
விற்பவர் வாங்குபவர்க்கு
கொடுக்க வேண்டுமாம் !
நிச்சயதார்த்தமும்
நிகழ்ந்தது ..
தொலைபேசியில்
தொலைந்துபோன
அவள் குரல்
கேட்டபோது ..
அவள் அழக்கூடாது -என்றே
வேண்டியிருந்தேன் !
அளவாய் பேசி
அதிகம் அழுதாள்..
அவள் குரலை மட்டும்
அணைத்துக்கொண்டேன் ..

எனக்குத் தெரிந்து
இன்றுவரை -அந்த
நான்கு லட்சம்
கடனாகத்தான் இருக்கிறது..
அழகைப் பெற்றதற்கு
அனுபவிக்கிறாள்
அவள் அம்மா!

..

'எனக்கான இடம்
எனக்கேதானாம்' !
திருமணத்திற்கு
சில நாட்கள் முன்பு
சந்தித்த போது
வரப்போறவனைப் பற்றியும்
வாழப்போவதைப் பற்றியும்
ஹைக்கூ சொல்லிப்போனாள் ..
எங்கள்
இறுதி கைகுலுக்கல்
அப்போதுதான் நிகழ்ந்தது !
இனி
அவள்முகம்
நிலவில் மட்டுமே!
..
கோவிலில் நான்
வேண்டுவதில்லை பொதுவாக
சிலகாலம்
வேண்டியிருந்தேன் -அவளுக்காக
'நிலவை இரசிப்பவனாக
பகலும் இரவும்
பாதுகாப்பவனாக
பத்தரை மாத்துத் தங்கமாக
ஒருவன்
வர வேண்டுமே..
...
திருமண நாள் !
அவசர அவசரமாய்
அன்றுதான்
வந்து சேர்ந்தேன்
கையில் - ஒரு
நாய்க்குட்டி பொம்மை !
காதல் பரிசு !
கல்யாணப் பரிசு !
சமச்சீரற்ற
அந்தக் கண்கள்
என்னைச்
சரியாகக் கண்டுகொண்டன!
எனக்குப் பிடித்த
நீலத்தில் புடவை!
மணவறையில் மாலையுடன்
அழகாய் இருந்தாள்
நீல நிலா !
பக்கத்தில் ஆண்மகன்
அம்சமாகவே இருந்தான் !
அப்போதும் - அவள்
வியர்வை போக்க -மின்
விசிறி இல்லையா -என
சுற்றும் முற்றும் பார்த்தேன்!
முகூர்த்த நேரம் !
தாலி கட்ட
தலை குனியுமுன்பு
தலை நிமிர்ந்து
விழி விரித்து முழுதாய்
எனைப் பார்த்தாள்...
ஆயிரம் வார்த்தைகள்
அவளுக்கும் எனக்குமிடையில்
அலைந்து ஓய்ந்தன ...
தாலி ஏறும்போது
அவள்மேல் விழுந்த
அதிகபட்ச பூக்கள்
என்னவைதான் ..
பார்வையிலேயே ஆசிர்வாதம் ..
..
நிலவுக்கும்
நிலாக் காவலனுக்கும்
பந்தியில் விளம்பியது
நிறைவு!
நலுங்கு
உருட்டும்போதும்
பூப்பந்து எறியும்போதும்
பப்படம் உடைக்கும்போதும்
பால் பழம் உண்ணும்போதும்
பார்வையில் ரசித்திருந்தேன் ...
காமம் கடந்த காதல்
சாத்தியம் !
உதாரணம்
என்
தேவதைக்கு தந்த முத்தம்..
...
...
...
போன பக்கத்துடன்
நிறுத்தியிருந்தால்
கவிதைக்கு நியாயம் செய்திருப்பேன் ..
நிலவிற்கு நியாயம்
செய்யவேண்டி தொடர்கிறேன்...
....

No comments:

Post a Comment