Tuesday, October 18, 2011

பச்சை மரம் (தொடர்ச்சி 2)

மீசை முறுக்கும்
ஆசை மாமனுக்கு
ஓசையின்றி
கஞ்சிக் கலயம்
சுமந்து வரும்
கருவாச்சி!
கேழ்வரகுக் கஞ்சியும்
கேப்பைக் கிழங்கும்
இடையிடையே தொட்டுக்க
இடையாம்புளியும்
" ஏய் புள்ள
கொஞ்சூண்டு
குடி புள்ள !"
"வேணாம் மாமா
நீ குடி !"
"இந்தா,
அப்புறம் உனக்கு
தாலி கட்ட மாட்டேன் !"
"அச்சச்சோ !
வேற யாரு
பொறந்திருக்கா
என் மாமனை
கட்டிக்க !"
...
"வெத்தல
கொண்டாந்தியா புள்ள ?"
"அய்யய்யோ
மறந்துட்டேனே !"
"அதோ
வச்சிருக்கியே .."
"எங்க மாமா ?"
"அதோ
வச்சிருக்கியே...."
....
"விடு மாமா
வூட்டுக்குப் போனும்
ஆத்தா வையும் !
...

இதையெல்லாம் பார்த்து
பருவப் பூ பூத்து
காத்துக் கிடக்கிறாள்
பச்சை மரக் கன்னி!
வந்து விட்டான்
வருணன் !
பசலை சுரந்த
உன் மார்பு - இனி
பால் சுரக்கட்டும்
வந்து விட்டான்
வருணன் !
...
..
முன்பொரு நாள்
வாயும் வயிறுமாய்
ஒரு நாய் !
ஒரே பிரசவத்தில்
எட்டு குட்டிகள்
எட்டும் சேர்ந்து
மெட்டுப் போட்டு
ஏழு ஸ்வரத்தில்
'வீல்! வீல் ! என
சாம்பல் நிறம்
சாந்து நிறம்
என்றில்லாது
தாய் நிறத்திலேயே
சேய்கள்!
மடி தேடி
படிப்படியாய்
அடியெடுக்கும்
பொடிகள் !
நொடிப் பொழுதில்
மடிந்து வீழ்ந்தது
கடைக்குட்டி!
கரு செய்து
உரு செய்த
கருப்பை
இரைப்பை ஆனது!
தாயின் வாயில்
சொர்க்க வாயில்!
அடுத்த நொடி
சிதறிய
ஒரு துளி கண்ணீர்!
அதன் சோகம்
இவளுக்குத் தெரியும் !
'கருவில் பிறந்த
கற்பக விருட்சம் தானே
இவளும்!'
பெண் மனது
பெண்ணுக்குத்தானே தெரியும்!
மிச்சமுள்ள
சப்த நாடிகளையும்
ருசி பார்க்க
பசியோடு காத்திருக்கும்
பருந்து!
கிளையோடு கிளையாக
உரசி
காட்டுத் தீயாக
உருமாறி
ஏழு ஸ்வரங்களை
காப்பாற்ற
முயன்றாள் - இப்
பச்சை மரக்கன்னி!
புல்லாங்குழலாக மாறி
ஏழு ஸ்வரம் காத்த
இவளுக்கு
விறகாக மாறி
ஏழு ஸ்வரம் காப்பது
பெருசா என்ன ?
...
காதலி
கண்ணகியாக
மாறக்கண்டு
வந்துவிட்டான் வருணன்!
கண்ணீர் தேசத்தை
தண்ணீர் தேசமாக
மாற்ற
வந்துவிட்டான் வருணன்!
பருந்தின் பசியும்
குட்டிகளின் நிசியும் - உணர்ச்சிப்
புயலுக்குப் பின்
அமைதியாக
அடங்கிப் போயின!
...
முன்பொரு நாள்
உன்
மஞ்சள் பூசிய பூக்கள்
வெட்கம் பூசி
சிவந்து போயிருந்தன!
வருடங்களைத் தொலைத்து
சோதிடம் பார்த்தே
சொத்துக்களைத் தொலைத்து
ஊர் வாய் அடைக்க
ஓர் வாய் சாப்பாடு போட
திருமண சாப்பாடு போட
காத்திருந்தே களைத்த
கண்ணம்மா!
உன்னைச்சுற்றி வந்து
அவள் சிந்திய
ஓர் துளி கண்ணீர் !
சிவந்து போன பூக்கள்
கருத்துப் போயின !
பெண் மனம்
பெண்ணுக்குத்தானே தெரியும் !
என்ன செய்வாய் நீ?
உனக்காக
வந்துவிட்டான் வருணன்!
சோகத்தோடு - அவன்
காமத்தைக் காப்பாற்று !
வந்துவிட்டான் வருணன்!
....

வருந்த வேண்டிய
நேரமெல்லாம்
வறண்ட பாலையின்
கள்ளியையும்
கரிசல் காட்டு
சுள்ளியையும்
நினைத்து
தேற்றிக்கொள்கிறாள்..
இவள் !
கள்ளியையும்
சுள்ளியையும்
உயிர்ப்பிக்க
ஆயுள் முழுதும்
மழை யாகம்
செய்யும்
பச்சைத் துறவி
இவள்!
.....
தேர் கொடுத்தவனை
விட்டுவிட்டு
உன்னைச் சுற்றி
படர்கிறதே
இந்தக்கொடி !
போன ஜென்மத்துப்
பாசமோ என்னவோ !
...
சமயத்தில் நீ
கலப்புத் திருமணமும்
செய்கிறாயே!
ஆலும் வேலும்
உன்னில்
ஐக்கியமாவது ஏனோ?
...
உன்னைத் தொடமுடியாமல்
தொலைந்து போன
மேகங்கள்
கருத்துப் போய்
கோபத்தில்
மின்னல் தெறிக்க
உனைச் சூழ்கின்றன பார்!
பாவம்
அவைகளுக்கு
எப்படித் தெரியும்!
உன்
வருணக் காதலனின்
வாடகை வாகனங்கள் தானே!
அவைகளுக்கு
எப்படித் தெரியும்!
உங்கள்
காதல் சுழற்சியில்தான்
பூமியே
சுழல்கிறது என்று!
...
உன்னுடைய
மகரந்தத் துகள்களை
நிலவிற்கு
அனுப்பி வையேன்!
மனிதன் போய்க்
குடியேற
கொஞ்சமாக
பச்சைப் பிரதேசங்களை
உருவாக்கு!
நிழலும் நீரும்
கொடுத்தவளுக்கு
நிலமும் நிஜமும்
கொடுக்கத் தெரியாதா
என்ன?
....
பசித்திருட்டையும்
பச்சைத் துரோகத்தையும்
பாகப் பிரிவினையையும்
பஞ்சாயத்து செய்யும்
நீதி தேவதை
நீ தானே!
...
பள்ளிக்கு அஞ்சும்
பால் மனம் மாறாப் பிஞ்சு!
உன்னிடம் மட்டும் தஞ்சம்!
பொன்வண்டு பிடித்தும்
புளியங்காய் கடித்தும்
ஊஞ்சல் கட்டி
வானத்தைப் பிடித்தும்
ஓரமாய் ஒதுங்கும்
வழுக்கைத்தலையில்
கிட்டிப்புல் அடித்தும்
"நீ அப்பா
நான் அம்மா" - என
கூட்டாக
கூட்டாஞ்சோறு வடித்தும்
சாமி சிலை
சாணியில் பிடித்து
பல்லக்கு எடுத்தும்
இடுப்பில் நிற்காத
வேட்டியும்
மார்பில் தங்காத
சேலையுமாய்
வேடம் பல தரித்தும்
'தத்தோம் தத்தோம்
தளாங்கு தக தத்தோம்' - என
பரத நாட்டியமும்
'தொந்தனத்தோம் என்று சொல்லியே '
வில்லுப் பாட்டும்
வளராத மீசையை
தளராத ஆசையுடன்
இங்கும் அங்குமாய்
முறுக்கி விட்டும்
'ஓ' வென்று அலறி
நாக்கை வளைத்து கடித்து
'நான்தான்டா மாடன் வந்துருக்கேன் !'
எனச்
சாராய பாட்டில்
பிடித்து நடித்தும்
பத்து பைசா
பிளிச்ச முட்டாய்க்கு
பாயும் புலியாகி
பல்லை உடைத்தும்
மழை பெய்து
சாயம் வெளுத்து
சிவப்புச் சூரியனாய்
விறைத்து நிற்கும்
அப்பா!
தினமும் இரவு
தூங்கிப் போன கன்னத்தில்
போதை முத்தம் வைக்கும்
அப்பா!
கோபத்தில் தருகின்ற
முதல் அடிக்கு
மாத்திரம் அழுது
குளத்தில் மூழ்கி - கண்ணீர்
குளத்தில் மூழ்கடித்த
ஆருயிர் தோழனுக்கு
அஞ்சலி செலுத்தி
ஓடி விட்ட நாட்கள்!
நீ
இழந்து விட்ட இலைகளாக!
மீண்டு வராமலே போகும்!
உனக்கென்ன
வந்துவிட்டான் வருணன்!
....

No comments:

Post a Comment