Wednesday, October 5, 2011

தேவதைக்கு தந்த முத்தம் (தொடர்ச்சி 3 )

குடும்பத்துடன் கோவில் சுற்றுலா

கூடவே நானும்..

நிலா

பூமியை விட்டு

கோவிலை சுற்றியது...

இரவுப் பயணம்

இருக்கைகள் அனைத்தும்

இமை மூட

இவள் மட்டும்

கண்களால்

கவிதை எழுதினாள்!

எதிரே நானும் ..

முழு இரவும்

கண் திறந்தே தூங்கினாள்..

இன்றைய பயணங்களில் - என்

இமைமூட - அவள்

இமை திறக்கிறது .

இறுதியற்ற பயணம்

இந்தக் காதல்..

அவள் வீடு

செடிகளற்ற நந்தவனம் !

ஓர் நாள்

யாருமற்று இருந்தது .

என்னுடைய கட்டளைப்படி

தேக்கு மரக்கட்டில் - அவளை

தாலாட்டிக் கொண்டிருந்தது

நமக்குப் பிடித்தவர்கள்

இமை மூடி தூங்குவதை

கண் கொட்டாமல் பார்ப்பது

சுகம்!

வியர்வை - அவள்

அழகைக் கரைக்க முயற்ச்சிக்க

நிலா நடுக்கம் கண்டது!

நிலைகுலைந்து நானும்

நிலவின் நெற்றியில்

நாலு விரல் வைத்து

முதன்முறை தொட்டேன் !

சிலிர்த்தெழுந்து - உடல்

சுருக்கிக் கொண்டாள்!

கை பிடித்து

"காய்ச்சல் சரியாகி விடும்" என்றேன் ..

கண் கலங்கி

அவள் விட்ட

ஒரு சொட்டு கண்ணீர்

இன்றும் - என்

உள்ளங்கையில்

உஷ்ணம் கூட்டுகிறது!

"வசியக்காரா வசியக்காரா" - என

வளைந்து நெளிந்து

தன்னிலை மறந்து

தேவதை ஆடினாள்..

தற்செயலாய்

நான் நுழைய

தொட்டால் சிணுங்கியாக

தாவணிக்குள்

காணாமல் போனாள்..

பச்சைத் தாவணி

வெட்கத்தில்

சிவந்து தான் போனது..

..

அதிகாலை நாலறை

வேதியியற் புத்தகத்திலும்

நண்பகல் சமையலறைச் சுவரிலும்

சாயுங்காலம்

குத்து விளக்குத் திரியிலும்

நடுநிசி

மொட்டை மாடி நிலவிலும்

என் முகம் தெரிந்ததாம் !

லேசாகச் சொல்லிப் போனாள்

இருபத்து நான்கு

மணி நேரமும் - என்னோடு

இருப்பதாகவும்

என் பெயரை மட்டுமே

சுவாசிப்பதாகவும்

கவிதை பேசிப் போனாள் ...

பொய்யாகத் தெரியவில்லை - சிறிது

பயமாகத்தான் இருந்தது.

பாசத்தில் பைத்தியமாகி விடுவாளோ ?

என்று!

பாட்டியுடன் பேசினாலும்

பேத்தியைக் கொஞ்சினாலும்

ஓரப்பார்வை முழுவதும்

எனைச் சுற்றியே இருக்கும் ..

No comments:

Post a Comment