Tuesday, October 23, 2012

கண்ணம்மா .. உன் நன்றியறிதல் ...

கண்ணம்மா
உன்னை வார்த்தைகளில்
மறைத்துவைக்க
இந்தக்கவி முயன்றிருக்க
என் வாசகர்களின்
கண்முன்
நீ ஏன் உருக் கொள்கிறாய் ?
எத்தனையோ வருடங்களை
என்னுடன் ஏகாந்தத்தில்
களித்த உனக்கு
இப்போது என்ன
வெளி உலக மோகம் ?
என் காகிதத்தை தாண்டி
நம் காதல்
சாத்தியமாவது
வெகு தூரத்தில்...
இது தெரிந்தும்
ஏனிந்த பதற்றம் ?
என் வார்த்தைகளில்
கருக்கொண்டு
உவமைகளில்
உருக்கொண்டு
நளினத்தின் வெளிப்பாடாய்
உலகத்தின் ஒட்டுமொத்த
வெட்கத்தையும் - உன்னுள்
ஒளித்து
மிளிரும் என்
எழுத்தின் நகை நீ!
எனை விட்டு
தூரத்தில் - என்
வாசகன் வீட்டில்
ஒய்யாரமாய் ஓய்வெடுக்க
எப்படித் துணிந்தாய் ?
உனக்கென்ன
குறை வைத்தேன் கண்ணம்மா ?
நீயில்லாத பொழுதுகளில்
நான் பொய்த்துப் போகிறேன் ..
என் கவிதை
நீர்த்துப் போகிறது ..
என் உயிர்
உள்ளும் வெளியும்
ஊசலாடித் தவிக்கிறது..
உனக்கான வருணிப்பை
வேண்டுமென்றே
விலைக்கு விற்க
நான் என்ன
வியாபாரக் கவிஞனா?
இந்த உயிர்
உன்னைப் பிறப்பிக்கப் பிறந்தது ..
இதன் உறுதி
உன் இதழ்களின் இறுமாப்பில் ..
இதன் இறுதி
உன் இருத்தலின் மறதியில் ..
இது தெரிந்தும் நீ
ஏன் இன்னும் தாமதிக்கிறாய் ?
எனக்காக இல்லாவிடினும்
உனக்காக வந்து சேர்..
உன் நன்றியறிதலை
நாளைய உலகம்
காதல் தினமாகக்
கொண்டாடட்டும் ....

No comments:

Post a Comment