Thursday, October 18, 2012

நீயும் நானும் ...(தொடக்கம்)


ஜன்னலோர காற்றில்
பிறந்த நம் நட்பு – இன்று
உறவுகளையும் தாண்டி
உன்னதமாய் ...
எண்ணிப்பார்க்கும் தருணங்கள்
மண்ணில் கொணரும்
இன்னுமோர் சொர்க்கம் ...
இப்படி எழுத ஆரம்பித்தால்
எழுதலாம் ஆயிரம் கவிதைகள்...
...
கண்ணாடி பிடிக்கும் எனக்கு – அதுவும்
எனக்குப் பிடித்த முகங்களில்
சமீபத்தில் பார்த்த திரைப்படம் கூட
சொல்லிற்று தெளிவாக...
நாம் நினைப்பது நன்றாயின்
நடக்கும்...
நம்மால் , அல்லது
நம் நினைவால் ....
இப்படித்தான் ஓடிவிட்டன வருடங்கள்
...
சுமைகளை இறக்கிவிட்டு
சுகங்களை சிறக்கவிட்டு
உள்ளும்புறமும் எதுவுமின்றி
மறைப்பதற்கோ திறப்பதற்கோ ...
அறுபது வருடங்கள் இணைந்து
இருபதுகளை நினைத்து நிற்கும்
இறுக்கமான பந்தங்கள் கூட
நமக்குப் பின்னால்தான் ...
...
சிலர் சலித்துக்கொள்வர்
என்னடா வாழ்க்கையென்று !
இன்னும் சிலர்,
குறைகளின் குத்தகைக்காரர்களாய் !
எடுத்துச் சொல்வோம் அவர்களுக்கு
இன்னும் இருக்கிறது உலகம் !
...
முன்னும் பின்னும் பார்த்து
செய்வனவெல்லாம் செய்து
தளர்ந்து சோர்ந்து பின் வீழ்ந்து
வேறு வழியின்றி சாகும்
சாதாரண வர்க்கம்
கற்றுக்கொள்ளும் நம்மைப்பார்த்து ...
இன்னும் இருக்கிறது உலகம்...
...
தோல்விகளில் துவண்டு
கேள்விகளுக்குப் பயந்து
நம்மில் அழுத நாட்கள் ...
பின் தோள்களில் சாய்ந்து
தட்டிக் கொடுத்து அதட்டி
சிரிக்கச் செய்த நொடிகள்...
இன்னும் சொல்வோம் பல
இன்னும் இருக்கிறது உலகம்!
...
வெற்றி கண்டு வியந்து
பற்றிக் கொண்ட கைகள்
அதைப் பற்றிக் கொண்டு நானும்
சொல்ல நினைத்த நன்றி !
கற்றுக்கொண்டேன் ஒன்று
அது பரமசுகம் என்று!
...
ஓர் நாள் இரவு
பேச நினைத்த பொழுது
முரண் செய்த நான்
உடன் கண்கள் அழுது
முகம் சிவந்து கதறி
கொட்டி முடித்த செய்தி
உரைத்தது எனக்கு உனை
உணர்ந்தேன் உன்னுள் எனை
இதை நாளும் நீ நினை!
...
காதல் அன்று இது
மோகமும் அன்று இது – அன்றி
சோகத்தில் விளைந்த பாசமும் அன்று !
உரைக்கச் சொல்வோம் உலகிற்கு
இது நட்பு..இது நட்பு...
...
வடக்கிருந்து சாகவில்லை – இன்னும்
வடக்கிருக்க வாய்ப்புமில்லை !
பிரித்து வைத்த தூரம்
சொல்லி மாளாப் பாரம்
இருந்தும் பெற்றோம் வரம் – விதி
நமக்கு மட்டுமே தரும் ...
...
மற்றோர் நாள்
நீ சிரித்துப் பார்த்தேன்
என் நினைவில்
பேச நினைத்தேன்
இணைந்தன இயந்திரங்கள்..
நீ பேசிய விதம்
சொற்களின் பதம்
உரைக்கும் கேள் நிதம் – இவை
விதிக்கப்பட்ட இதம்!
...
மஞ்சள் பிடிக்கும் எனக்கு
காலைக் கதரின் முகத்தில்
சோலை மலரின் அகத்தில்
இன்னும் பல விதத்தில் – ஆனால்
நீலம் பிடிக்கும் உனக்கு
வானவெளியில் கடலலையில்
தலைசூடும் மலரின் அழகில்
இன்னும் பல நிலையில்
இருப்பினும் இணைந்தன நிறங்கள்!
வானவில் தேவையில்லை தோழி
நம் வாழ்க்கை போதும் !
...
மழைக்கு முன்னும் – சில
நேரங்களில் பின்னும்
பரவும் ஓர் வாசம்
கூறும் நம் நேசம்!
உரைக்கச் சொல்வோம் உலகிற்கு
இன்னும் இருக்கிறது உலகம்!
...
இசை பிடிக்கும் எனக்கு
அதுவும் தனிமையில் – என்
நினைவுகள் நனைக்க
மறுபடியும் ஜன்னலோரம்
மடியில் தலையணையும்
நாற்காலியில் கால்களும்!
..
அவ்வப்போது நீ அனுப்பும்
செய்தித்துணுக்கு
‘கண்ணா’ என்றும் ‘நண்பா’ என்றும்
எதிரொலிக்கும் உன் குரல்!
நானும் அனுப்புகிறேன்
‘செல்லம்’ என்றும் ‘கண்ணே’ என்றும்
சொல்லித்தான் புரியும் – நமக்கு
சொல்லித்தான் புரியும்!
சொன்னாலும் புரியாது – உலகம்
சொன்னாலும் புரியாது!
...
வேண்டாம் நண்பா
விரைந்துரைக்க வேண்டாம்
விதிப்படி நடக்கும்
முறைப்படி சந்திப்போம் – என்று
அழுத்திச் சொன்ன உன் தைரியம்
இழுத்துச் சென்றது உனை உயரம்!
மதிக்கிறேன் உனை
இப்பொழுதெல்லாம் !
துதிக்கிறேன் சமயங்களில்!
...
பெண்மை காக்கும் மனம் – அதில்
உண்மை நோக்கும் திறம்
பன்மை ஓர்க்கும் அறம் – அதில்
மேன்மை உனது திறம்!
இதை ஏற்றுக்கொள்!
புகழ்ச்சி இல்லை
மகிழ்ச்சி – அதில் விளைந்த
உணர்ச்சி- ஆம்
உரைக்கச் சொல்வேன் உலகிற்கு
இன்னும் இருக்கிறது உலகம் – அதில்
நீயும் இருப்பாய் என்னோடு!
...
காலம் வைக்கும் கேள்வி
இது சாத்தியமா என்று – அதே
காலம் சொல்லும் பதில்!
சில நேரம் பிரிவோம்
மீண்டும் வருவோம்
கதையன்று ...கற்பனையும் அன்று..
இது நட்பு ..இது நட்பு...




No comments:

Post a Comment