Tuesday, October 23, 2012

நீயும் நானும் (முடிவு)


சோம்பல் முறிக்கும் காலையும்
சோர்ந்து படுக்கும் மாலையும்
இடையே இடைவேளையின்றி
சொல்லித்தரும் எனக்கு
ஓராயிரம் கணக்கு!
உடனே தேடுவேன் உனை
‘ஆற்றல் பரிமாற்றம் ‘
நற்செய்தியா?
சொல் அவளிடம்
சோகமா அல்லது பாவமா?
சொல் அவளிடம்
சொல்கிறது என் மனம்
இது நட்பு...இது நட்பு....
..
உனக்குப் பிடித்த பாடல் – அது
எனக்கும் பிடிக்கும் – அதைப்
பாடப் பிடிக்கும்
நீ பாடும் ‘ஜகஜனனி’
இன்னும் பிடிக்கும்
..
யார் சொன்னது
குழந்தைகள் தான் மழலை பேசுமா?
என் தோழியும் பேசுகிறாள் ..
எப்படி முடிகிறது உன்னால் ?
சிலநேரம் சிறுமி ஆகிறாய்
பலநேரம் பெரிய மனுஷி ஆகிறாய் ..
...
ஓர் நாள்
சமையல் நேரம்
வானொலியில் இசைகேட்டு
வாணலியில் தண்ணீர் போட்டு
அது தெறிக்க நீ தெறித்து
காயம் ஆனது – பெரும்
காயம் ஆனது ...
அழுதாய் சிணுங்கி சிணுங்கி
ஆற்றினேன் முணங்கி முணங்கி
‘தொலைதூர மருத்துவம் ‘
நமக்கு மட்டுமே சாத்தியம் !
இது நட்பு..இது நட்பு...
...
வாழ்த்துக்கள் பல சொல்லி
நீ அனுப்பும் அட்டைகள்
எழுத்துக்களை மட்டுமின்றி
அதையும் தாண்டிப் புனிதமாய்
சேர்த்து வைக்கிறேன் தோழி !
பிற்காலத்தில்
அமைதியாக சாய்ந்து
ஒவ்வொன்றாக எடுத்துப் படித்து – அதன்
நினைவுகளில் தோய்ந்து
சிரித்துக் கொள்வேன் நானும்
நினைத்துக்கொள் நீயும்...
...
ஓர் நாள் இரவு
நிலவும் கூட தூங்கிற்று
தொலைபேசி முனைகளில்
நீயும் நானும்!
என்ன பேசினோம் தெரியுமா?
நான் ஆசானாக
நீ சிஷ்யையாக
நடந்தேறியது பாடம்
உளவியல் பாடம்
வியந்து படித்தாய் நீ – அதை
ஆய்ந்து படித்தாய் நீ!
..
பல இரவுகள் – நீ
தூங்கும்போது – உனை
வலிய எழச்செய்து – பின்
வேடிக்கையாகச் சீண்டி – உன்
தூக்கம் கலைத்து
சிரிக்கச் செய்து – மீண்டும்
தூங்கச் சொல்வேன் – நீயும்
தூங்கிப்போவாய் ...
அன்புத் தொல்லைதான் நான்
அப்படித்தான் இருப்பேன் காண் !
இது நட்பு..இது நட்பு...
...
எண்ணங்களை வண்ணங்களில் தோய்த்து
சின்னங்களைப் பிறப்பிக்கும்
ஓவியம் பிடிக்கும் எனக்கு
வரைவேன் நானும் கூட
வந்து பார் என் அறைக்கு
அது ஓர் தியானமாக – மனம்
முழுதும் மெளனமாக
வரைவேன் நானும் கூட !
அப்போதும்...
இலேசாகக் கதவு தட்டி – என்
இதயக் கதவு தட்டி
நுழைந்து விடுகிறாய் உள்ளே
விளைவு ?
ஓவியம் கூட காவியமாகிறது
இது நட்பு..இது நட்பு...
...
மாலைக் கதிரின் மயக்கத்தில்
ஏழை உழவன் தூக்கத்தில்
தோன்றிப் போகும் கனவாக
இனிக்கிறது உன் முகம் !
தினமும் வேண்டுமென
அடம் பிடிக்கும் மனம் !
காலைக் கதிரின் தூக்கத்திலும்
தோன்றிப் போகும் கனவாக
மீண்டும் உன் முகம் – அது
வேண்டும் வேண்டும் தினம்!
..
...
.....
தொலைந்து போன நொடிகள்
தொலைவில் போன நீ!
அலைந்து தேடும் நான்
மலைத்துப் போனேன் தோழி
நீயும் கூட எனைப்போல்
அலைந்து தேடுகிறாய் என அறிந்து!
கலைந்து போகா காட்சி
விழைந்து காண் தோழி !
நானும் நீயும்
நதிக்கரை நிலவொளியில்
காகிதக் கப்பல் செய்து – அதில்
நம் பெயரெழுதி
தொலை தூரப் பயணம்
மூழ்காப் பயணம்
இனிதாகக் கேட்டாய்
நண்பா கை கொடு
நம்பி கை கொடு
நம்பிக்கை கொடு !!
இது நட்பு..இது நட்பு...
..
சொல்ல முடியா விஷயம்
சொல்லக் கூடா விஷயம் – இவை
யாவும் சொன்னாய் தோழி
என்னதான் செய்வேன் தோழி
புனிதமாகிறாய் நீ
ரசிகனாகிறேன் நான் – உன்
ரசிகனாகிறேன் நான்
காலம் கடந்தும் நிற்கும்
உன் புனிதமும் என் ரசனையும் !
இது நட்பு..இது நட்பு...
...
எனக்கும் ஓர் கனவு
கடற்கரைச் சாலையில்
அந்தி மாலை வேளையில்
சத்தமில்லாத காலடிகள்
உனதும் எனதும்
மெதுவாக மிகவும் மெதுவாக
கைகோர்த்துச் செல்ல
கேட்டாய் என் தோழி
‘இன்னும் எவ்வளவு தூரம் ?’
எப்படிச் சொல்வேன் தோழி ?
காலம் பதில் சொல்லும் – எதிர்
காலம் பதில் சொல்லும்!
உரைத்துச் சொல்லும் தோழி
இன்னும் இருக்கிறது உலகம் – அதில்
நீயும் இருப்பாய் என்னோடு!
...
கால்மேல் கால்போட்டு
கட்டளையிடும் வேளையிலும்
தோள்மேல் சாய்ந்த கணம்
என் நினைவில் வரும் !
ஊர் உலகம் வியந்து
பாராட்டும் வேளையிலும்
உச்சியில் கொட்டிய கணம்
என் நினைவில் வரும் !
லட்சியம் எல்லாம் அடைந்து – பல
லட்சங்களையும் படைத்து
ஓய்ந்து போகும் வேளையிலும்
உன் ஒற்றை ரூபாய் நாணயம்
என் நினைவில் வரும்!
...
சாய்ந்து விழும்போதும் – மூச்சு
தேய்ந்து போகும்போதும் – எமன்
ஏய்த்துச் செல்லும்போதும்
உயிர் பிடித்துவைத்துக் கிடப்பேன் தோழி!
உந்தன் முகம்கண்டு பின் இறப்பேன்!
இது நட்பு..இது நட்பு..
உரைத்துச் சொல்வோம் உலகிற்கு
இன்னும் இருக்கிறது உலகம் – அதில்
நீயும் இருப்பாய் என்னோடு!
....
...      
(இக்கவிதை முழுக்க முழுக்க எனக்கும் என் உயிர்த் தோழிக்கும் இடையே நடந்த, நடந்துகொண்டிருக்கும் ஓர் உன்னத வாழ்வியலின் பிரதி...அவளுக்குச் சமர்ப்பணம்!!! -27-10-2007)

1 comment:

  1. தொலைந்து போன நொடிகள்
    தொலைவில் போன நீ!
    அலைந்து தேடும் நான்
    மலைத்துப் போனேன் தோழி
    நீயும் கூட எனைப்போல்
    அலைந்து தேடுகிறாய் என அறிந்து!
    கலைந்து போகா காட்சி
    விழைந்து காண் தோழி !

    Sema line Sushil. It brings my old memories too. Vijay From Skic

    ReplyDelete