இது
இலக்கணத்தில் அடங்காத
கவிதைகளின் கதை !
அந்தரத்தில் தொங்கும்
கசங்கிய
பட்டுப்புடவைகளின் கதை!
காற்றில் பறந்து
கண்ணைக் கெடுக்கும்
வைக்கோல்களின் கதை !
இருட்டில்
மயங்கிக் கிடக்கும்
விளக்குத்திரிகளின் கதை !
கெட்டிமேளம் கொடுத்த
மத்தள மாடுகளின் கதை!
நறுமணம் கொடுத்து
நலிந்துபோன
கருவேப்பிலைக் கொத்துகளின் கதை!
கண்ணீர் குளம்
காத்து நிற்கும்
கண்ணியமான இமைகளின் கதை!
பூவுக்கும் பொட்டுக்கும்
பூநூல் போடும்
பூஜைகளின் கதை!
மௌனத்தின் ஆழத்தில்
மறைந்திருக்கும்
உண்மைகளின் கதை!
திறந்த வாய்களுக்கும்
மூடிய இதயங்களுக்குமான
தொடர்புகளின் கதை!
பிறக்கும் முன்னே
கரைந்துவிடக்
காத்திருக்கும்
கருக்களின் கதை!
சுவையான உணவிருந்தும்
உமிழ்நீர் சுரக்காத
நாக்குகளின் கதை!
கடைசி மூச்சுக்காக
முணகியிருக்கும்
மூக்குத்திகளின் கதை!
உணர்வுகள் உறைந்துபோன
உன்னத உடல்களின் கதை!
சொர்க்கத்தில் இருந்து
தவறி விழுந்ததில்
சோர்ந்தவர்களின் கதை!
அலையடித்து ஓய்ந்திருக்கும்
அன்றாடக் கரைகளின் கதை!
முரண்பாடுகளை
முற்றத்தில் வைத்து
முக்தி தேடும்
முக்காடுகளின் கதை!
முடியாக்கதை!
இது
ஒரு தொடர்கதை!
....
இத்தனை சொல்லி
இந்தக் கதையெழுதும்
கவிஞனின் பேனா
அவ்வப்போது
முட்டிநின்ற போது
தட்டிவிட்டு
மையூற்றி
‘வெற்றி கொள்’ என
வீரத் திலகமிட்டு
இன்று
காலியிடத்தை மட்டுமே
தன் கனவுகளில்
பார்த்திருக்கும்
ஒரு பாவையின்
பரிதாபக் கதை
இது !
...
(தொடரும்)
No comments:
Post a Comment