(குறிப்பு : பச்சைமரத்தின் முந்தைய பகுதிகளைப் படித்து விட்டுத் தொடர்க ..)
உனக்குப் பக்கமாக
புதைந்து போன
மர்மங்களும்
அவற்றின் எஜமானர்களும்
அமைதியாகத் தூங்கும்
மயான பூமி!
..
‘போகும்போது
என்னத்த கொண்டு போவோம் ‘ என
வசனம் பேசுவோரும்
போகும்போது
போலியாகவே
புதைந்து போகிறார்கள் ..
மாண்டு போய்
தீயில் வேகும்
பிணங்கள் கூட
மீண்டு வர
பாதியிலேயே எழுமாம் ..
பயமில்லையா உனக்கு?
..
மற்ற பொழுதுகளில்
வெட்டி ஆனவன்
மரணம் உற்ற பொழுதுகளில்
வெட்டியானாகிறான் ..
அவனுடைய
மரத்த செல்கள்
ஒவ்வொன்றும்
உனக்குத் தெரியும் !
அவன் அழும்போது
ஆறுதல் சொல்லும்
யோக்கியம்
உனக்கு மட்டுமே - இது
சத்தியம்!
..
போராடி வென்றவர்
வரிசையில்
உனக்கே முதலிடம்!
நினைவிருக்கிறதா உன் பிறப்பு ?
குண்டு வெடித்து
பட்டுப்போன
குட்டைப் பூமியிலிருந்து
ஆண்டு பல கடந்து
கடல் பல கடந்து
பறந்து வந்த
ஒரு புறா!
சமாதானப் புறா
அதன் வாய் தவறி
இப்பூமியில்
வந்து விழுந்தாய்!
போயும்போயும்
இந்தப் பூமியா
கிடைத்தது உனக்கு ?
கடலுக்குள் விழுந்து
பாசியாக வளர்ந்து
மீன்களை நேசித்திருக்கலாமே !
கதை கதையாய்
சதைகள்
வதைக்கப்படுவதைப் பார்த்தும்
எதற்கு உதித்தாய் ?
விதையாகவே இருந்திருக்கலாமே ?
ஒரு வேளை
நீ அழுவதை
கேட்கும் சக்தி இருந்திருந்தால்
இந்தச் சாத்திரம் பேசும்
ஆத்திரக்காரர்கள்
சாக்கிரதையாக
இருந்திருப்பார்களோ?
...
தூணிலும் துரும்பிலும்
இருக்கிறாராம் கடவுள்
உன்னில் மட்டும்
இல்லையா என்ன ?
கர்ணனுக்கு மாத்திரம்
கவசம் கொடுத்தவன்
உன்னை நோக்கி
கோடரி வீசும்
காட்டேரிகளை எதிர்க்க
உனக்கொரு
கவசம் கொடுத்திருக்கலாமே?
‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்’
அதில் பிறந்த நீ மட்டும்
எதிர்த்துப் பேசவா போகிறாய்?
பொறுத்துப் பொறுத்தே
வெறுத்துப் போகவில்லையா உனக்கு?
சவப்பெட்டிகளில் மாத்திரம்
சஞ்சலமின்றி சிரிக்கிறாயே எப்படி?
‘தொட்டில் பழக்கம்
சுடுகாடு மட்டும்’
உன் மொழி தானோ?
...
காப்பியங்களிலும்
இவள் கலந்திருக்கிறாள் ..
ஏகபத்தினி விரதன்
பிறன் மனை நோக்கிய
வானர புத்திரனை
ஒளிந்திருந்து அழித்தது
இவள் பின்னால் தான் ..
..
புருசனும் அரசனும்
நெறி தவறிப்போக
கற்புக்கரசியின்
கண் பொறிந்த தீ
மண்ணோடு மண்ணாக
மாநகர் எரித்து
இறுதியில் தணிந்தது
இவள் காலடியில் தான்!
‘இவ்வுலகு வேண்டாம்
விண்ணுலகு வா ‘ என
புஷ்பத்தை
புஷ்பக விமானத்தில்
புனிதப் பிறவிகள்
ஏற்றிச்செல்ல
கடைசித் தாயையும்
தாரை வார்த்து
கையசைத்தவள் இவள் தான்!
...
மங்கை கண்டு
மதி மயங்கி
கற்பனைக்கெட்டாத
காதல் செய்து
தோல்வி கண்டு
துவண்டு போய்
மோதல் செய்து – பின்
சாதல் நோக்கி
சாகா காதல்
தன்னை சதித்து விட
ஜதி சொல்லும் பலரின்
ரதி நாடி
மது நாடி
மரணத்தை தேவன் தழுவ
அவனைத் தழுவியது
இவள் வெற்றுக்கரங்கள் தான் ...
...
மாடு மேய்த்த மாயனும்
ஆடு மேய்த்த
தேவ மேய்ப்பனும்
பாடுபட்டுப் பயிர்செய்த
ஞானக்கனிகள்
இவள் மார்பில்
மருகிக் கிடக்கின்றன ..
கதிரவனையே எதிர்கொள்ள
கதியற்ற பதர்கள்
மதிதரும் மார்புக் காம்புகளைச்
சேர்வதற்குள்
திளைத்து நிற்கும்
இவள் இளமை
இளைத்துப் போகும்
விட்டு விடு
இந்த விலங்குப் பிறவிகளை ..
வந்துவிட்டான் வருணன்!
...
எவ்வளவு உயரம் நீ!
இருந்தாலும்
அடிவேரின்
ஆழமான ஈரத்தின்
அருமை தெரிந்திருக்கிறது உனக்கு!
உன் காலடியில்
காலங்காலமாய்
சலித்துக் கொள்ளும்
புற்களுக்கு கொஞ்சம்
வளரக் கற்றுக்கொடு !
அவை உன்னை
நிமிர்ந்து கூட பார்ப்பதில்லை ...
வசந்தத்தில்
வெளியாகச் சிரித்து
வருத்தத்தில்
உள்ளாகச் சிரிக்கும்
வரம் கொடு!
பிழைத்துக் கொள்ளும்
இந்தப் புல்லினம்...
...
உங்கள் முதற்சந்திப்பு
நினைவிருக்கிறதா உனக்கு ?
நீ சமைந்த சில தினங்களில்
சூரியனின்
கடைக்கண் பார்வையில்
நீ சமைத்த சில தருணங்களில்
வருணன்
வசமாக எட்டிப் பார்த்தான் ..
கோவத்தில் சிவந்த
சூரியனும் – உன்
பாவத்தில் விழுந்த வருணனும்
வீரப்போர் செய்ய
கரிய மேகப் படையனுப்பி
கதிரவனையே விழுங்கி
அதிர வைக்கும்
இடி மேளதாளத்துடன்
அவன் வைத்த
முதல் முத்தம்
அதன் சத்தம் – இன்றும்
உன்னுடைய
இடைப்பொந்துகளில்
எதிரொலிக்கிறது!
எத்தனையோ முறை
முறையாக
மின்னல் தாலி கொண்டு
உந்தன் தண்டுக் கழுத்தில்
கட்டித் தழுவ
வந்தபோதும்
மறுத்து விட்டாய் ..
பூமித்தாயைப் பிரிந்து செல்ல
மனமில்லையா உனக்கு ?
நினைவில் வைத்துக் கொள் !
உன் பூமித்தாயும்
மழைக்கடலில் தான்
மிதந்து கொண்டிருக்கிறாள் !
உன் அன்புக்காதலன்
வானக்கோட்டை வாலிபன்
வருணன்,
வருடாந்திர வருகை
தந்திரா விட்டால்
உன் தாயும்
வெளிறிப்போய்
வெள்ளைப்புடவை
கட்டியிருப்பாள் ...
இப்போது ஒன்றும்
கெட்டுப் போகவில்லை !
சுழன்று கொண்டிருக்கும்
காலச் சக்கரம்
கழன்று போவதற்குள்
சம்மதம் சொல்!
வருடங்களாய்
வராத வருணன்
வந்துவிட்டான் ..
சம்மதம் சொல்!
..
சில்லறைக் காசுகளை
கல்லறை வரை
அள்ளிச் செல்லும்
கள்ளத்தனம்
வேண்டாம் உனக்கு..
கள்ளுக்கு மயங்கி
சொல்லை மறக்கும்
பல்லுடைய பாம்புகள்
வேண்டாம் உனக்கு...
சாமி சிலைக்கு
வெளிச்சம் காட்டிவிட்டு
இருட்டுக்குள்
திருட்டுத்தனம் செய்யும்
குருட்டு முகமூடிகள்
வேண்டாம் உனக்கு..
சோகத்தால்
தேகத்தை விற்கும்
விலைமகள்கள்
வேண்டாம் உனக்கு ...
அவர்களைப்
புறத்தில் புறம் பேசி
ஒதுக்குப்புறத்தில்
விலைபேசும் – வேசத்
தலைமகன்கள்
வேண்டாம் உனக்கு...
உன்
பூமித்தாயின்
பாசப்பிணைப்பில்
பகற்கனவு காணும்
உன் பாத வேர்களைப்
பெயர்த்துக் கொண்டு
புறப்படு !
...
போவதற்கு முன்
ஒரு நிமிடம் ...
..
இனி
பிறக்கவிருக்கும்
எல்லா
மனிதச் சூல்களையும்
உன்னுடைய
கருப்பையில் எடுத்துச் செல்!
உன்னுடைய அரவணைப்பில்
வருணன்
வளர்க்கட்டும் அவர்களை!
முத்த மழையில்
ஈரம் பாய்ச்சி
உத்தமர்களாக
வளர்க்கட்டும்!
..
இதுவரை செய்த பாவங்களுக்காக
இந்தப்பூமி
சாபம் பெறட்டும் ..
‘மனிதனற்றுப் போகட்டும் !’
..
‘போ’வென சொல்லக்கூடாது
போய் வா!
கூடிய விரைவில்
உன்னுடன் கூடிக்களிக்க
நானும் வருவேன்!
இப்பொழுது போய் வா!
என் கவி – உன்
பாத மலர்களில்
முத்த மலர்களாக
பொழியட்டும் ...
அடக்கி வைத்த
அத்தனை காதலையும்
மொத்தமாய் – மழை
முத்தமாய்
தூதுவிட்டிருக்கிறான் ..
வருடங்களாய்
வராத வருணன்
வந்துவிட்டான் ..
போய் வா!!!.
...
..
(16-08-2008)
No comments:
Post a Comment