Wednesday, October 31, 2012

நூல் பொம்மை (தொடர்ச்சி 1)


ஆதரவற்ற
அடுத்தவன் தோட்டத்து
மல்லிகை
வாசம் வற்றி
சுவாசம் இன்றி
மயங்கி விழுந்த நேரம்
தானாகத் தாங்கி நின்ற
ஐவிரல் முற்றம்
மோதிரவிரல் சார்ந்து
சேர்ந்து விட்ட பந்தம்!
..
“தோட்டத்து சொந்தக்காரனுக்குப்
பிறந்தவளா?
இல்லை
இப்போதைய
மல்லிகையின் மணாளனுக்குப்
பிறந்தவளா?
ஆளாளுக்கு இப்படி
ஆராய்ச்சி
செய்து கிடக்க
இந்தப் பூமியில்
புதிதாய் ஒரு
பத்தினி
வந்து பிறந்தாள் ...
பெயர் ‘தாமரை!’
...
வானுயரக் கட்டிடங்களின்
ஏணிப்படிகளில்
இவள் தந்தை
ஏர் பாய்ச்சிக் கொண்டிருக்க
மறுவாழ்வு கிடைத்த
மல்லிகைக்கு
மாற்றான் நீர் பாய்ச்ச
மறுவாசம் கிடைத்தது!
மோப்பம் பிடித்து
முகவரி தேடி
மையல் கொள்ள
சில மைனர்கள்!
முதலில் மறுத்துப் பார்த்தாள் ..
தொட்டிலில் கதறும்
தாமரையின் பசியோ!
இல்லை
வண்டுகள் உறிஞ்சக்
காத்துக் கிடக்கும்
மல்லிகையின் பசியோ!
காற்றின் திசையில்
பாய்மரம்
பாய் விரித்தது!
...
கண்டவர் கூறும்
கருத்துகளைக்
கண்டுகொள்ளாமல்
களங்கமின்றி
கலங்கி நின்றான்
கலியுகத்துக் கணவன்!
..
‘தாமரை’
இதழ் விரித்துப்
பேசத்தொடங்கிய காலம்
திடீர் மழையின்
தாண்டவத்தால்
ஆடையெல்லாம்
சேறு தாங்கி
அரை நாள்
விடுமுறையில்
வீடு வந்தாள் ...
பாலூட்டும் வேளையில்
பிள்ளையின்
பிஞ்சு முகத்தில்
பட்டுவிடக் கூடாதே
என
முதுகுப் பக்கமாக
பதுக்கி வைத்த தாலி
இன்று
தகர டப்பாவில்
தொங்கிக் கொண்டிருந்தது!
தாமரையின்
தாகம்
தயக்கத்தோடு
தாயைத் தேடியது
தாழ்திறந்து
பார்த்த போது
தனைப் பெற்ற
தேகம் கொண்டு
தந்தையல்லாத
ஒருவனுக்கு
தாகம்
தீர்த்துக் கொண்டிருந்தாள் ..
...
அறியாத வயசிலேயும்
அறிவு ஜீவி
தாமரை!
தான் கண்ட காட்சி
தந்தையிடம் சொல்லுவதா?
இல்லை
தனக்குள்ளே கொல்லுவதா?
தேம்பி அழுதாள்
தாமரை...
தேற்றும் தகுதியின்றித்
தலை குனிந்த தாய் ...
தராதரம் அற்றவன்
தந்துவிட்டுப் போன
பால் மிட்டாய்
தாமரையின்
பிஞ்சுக் கைகளில்
திணிக்கப் பட்டிருந்தது ..
எழுத்துகளைப்
படிக்க வேண்டிய வயதில்
தலை எழுத்தைத்
தழுவி நின்றாள்
தாமரை..
..
தாமரைக்குத்
தனியாக
யோசிக்கப் பிடிக்கும்
தன் வயதுப் பிள்ளைகள்
தலைகீழாய்
பூமியைப்
புரட்டிப் போட்டு
பந்து விளையாடும்போது
தான் மட்டும்
தலை குனிந்து
தன்னிலை வருந்தி
“தீயில் கொண்டு போக
பூமித்தாய் வருவாளா?” என
எதிர்பார்த்து
ஏங்கி நிற்பாள்...
மாதவிக்கும்
மனிமேகலைக்குமான
மானசீக உறவை
இந்தத்
தாசிக்குப் பிறந்த துளசி
யோசித்துக் கொண்டிருக்கும்!
...
பூமி சுழலுவதை
எப்போதும்
இவள் உணர்ந்திருந்தாள் ...
தொட்டில் தாலாட்டு முதல்
தாவணிக் காலம் வரை
இவள்
தயங்கித் தயங்கித்தான்
சுவாசித்திருக்கக் கூடும் ..
..
தவணை முறையில்
தந்தை வந்து போக
தாயின் தாலி
தினசரி மாறுவதை
இவள் மனம்
தரிசிக்கத் தயங்கியது!
“தூக்கிப் போய்
தத்தெடுக்கத்
தேவதை வருவாளா?”
என
தாகமெல்லாம்
தவிர்த்து வைத்து
தேகம் மட்டும்
வளர்த்து வைத்தாள் ..
..
தேநீர் தட்டு ஏந்தி
“மாமாக்கு குடுமா “ என
தாய் கூற,
மாசந்தோறும் மாறிப்போகும்
மாமாவுக்கு
மருமக
மரியாதை செய்வா !
மானங்கெட்ட மாமாங்க
மயிரெல்லாம்
மறைஞ்சு போயும்
மருமக மார்பத்தான்
முறைப்பாங்க..
“கத்தி ஒண்ண
குடுத்துப்பாரு
குத்தி ஒன்ன
கொன்னுடுவேன்னு”
கண்ணால சேதி சொல்லி
கண்ணம்மா கலங்கி நிப்பா..
கன்னத்துல
கைய வச்சி
கிள்ளிப் போகும்
கொள்ளிக்கைய
கொல்லையில
கொண்டுபோயி
குலசாமிக்கு
பலி குடுக்க
முல்லைப் பூ
பல்லுக்காரி
முழுசாக முணகி நிப்பா...
...
தம்புருஷன் தலை எடுத்த
தலைவன் கிட்ட
தணலா தெறிச்சு
தரணிக்குத்தான்
தீய வச்சா
தீரமுள்ள எம்பாட்டி..
நீயுந்தான் பொறந்திருக்க
எந்தாயே நெசமாச் சொல்லு ..
உனக்குத்தான்
பொறந்தேனா? – குப்ப
தொட்டியில கிடந்தேனா?
தவிட்டுக்கு வாங்கினியோ ?
இல்ல
தங்கத்துக்கு வாங்கினியோ ?
தாமரையா நானிருக்க
தாசியா ஏன்
நீயிருக்க?
பெத்ததுமே ரெண்டு சொட்டு
கள்ளிப்பால குடுக்காம
இரத்தத்துல கலந்துட்டியே
இப்ப விஷம்
உடம்பெல்லாம் எரியுதடி ...
வயசுக்கு வந்ததுக்கே
நான் இப்ப
வருத்தத்தோட
வாடி நிக்கேன்!
பொறுத்துக்க
முடியலடீ ..
எந்தாயே
உறுப்ப
அறுத்தெறிந்து
போட்டுடவா?
...
“எந்தகப்பன் ராமனடி
மண்ணுல
எவனுக்கும் குறச்சலில்ல!
உனக்குப் போயா
தாலி தந்தான் ?
உருப்படாமப் போய்ட்டான்டீ!
வஞ்சமொன்னு செய்யும்போது
கொஞ்சமாச்சும் நெனச்சியாடீ?
வாய்க்கரிசி உனக்கு இல்ல
வந்த வழி
ஓடிப்போடி !
..
தங்கச்சிய எங்கையில
தாலாட்டத் தந்துப்புட்டு
தன்மானந்தான் இழந்து
தறுதலையா போயிட்டியே!
இந்தப் பிஞ்சுப்புள்ள
வளர்ந்துவந்து
விவரந்தான் கேட்டுச்சுன்னா
என்னன்னு நானுஞ்சொல்ல ?
சொல்லிப்புட்டு போடீ கொஞ்சம்!
...
எஞ்சோகத்த எறக்கிவச்சு
பள்ளிக்குத்தான் படிக்கப்போனா
வாத்தியாரு
‘வாரியா’ னு
வாய் கூசாம
கேக்குறாரு!
..
‘ஏ பி சி டி ‘ எத வேணா
இனிஷியலா போட்டுக்கன்னு
ஏளனமாப் பேசுறாங்க
என்ன செய்ய
நானுஞ்சொல்லு?
மனசு ரொம்ப
வலிக்குதடி
மாறி நாம போயிடலாம்
இல்லையினா இப்ப சொல்லு
நானாச்சும் தொலஞ்சுபோறேன் ..
...
வருஷம் பல
ஓடிப்போச்சு
வாய்ப்புகளும்
கொறஞ்சுபோச்சு ..
திராணியத்த
தாயத் தன்
தலை மேல
தூக்கிகிட்டு
தங்கச்சியும்
தகப்பனுமா – தாமரை
தரைவிட்டுத் தரை போனா!
...

No comments:

Post a Comment