Monday, October 22, 2012

நீயும் நானும் (தொடர்ச்சி 3 )


தனிமை பிடிக்காது எனக்கு – அதுவும்
இனிமை என்பாய் நீ!
முரண்பாடு பிடிக்கும் எனக்கு
தொடர்ந்து வரும் வாதங்களும் கூட
பெருமை பிடிக்கும் புகழ் பிடிக்கும் – அவை
பேசும் மனிதர்களைப் பிடிக்காது !
நேர்முகப் பேச்சு பிடிக்கும் உனக்கு
அதனால் எனையும் பிடிக்கும் !
அழுகைக்குப் பிடிக்கும் உனை – அது
சீண்டியதில்லை எனை!
பெரும்பாலும் நீ
அழுகிறாய் – நான்
தேற்றுகிறேன் ஏதோ
பெரிய இவன் போல !
சமாதானம் கொள்கிறாய்
நான் சொல்வதற்காக
நன்றாகத்தான் இருக்கிறது
இது கூட
இது நட்பு ... இது நட்பு..
...
ஆங்கிலம் மிகப் பிடிக்கும் எனக்கு
அதில் எழுதப் பிடிக்கும் – நீ
கண்டுகொள்வதில்லை அதை...
உன் இஷ்டம்...ஆயினும்
என் கதை ஆங்கிலத்தில் – அதன்
முதல் வாசகி நீ!
என் பாக்யம் ..
விமர்சனம் பிடிக்கும் எனக்கு
செய்வது நான் எனில் – எனை
விமர்சனம் செய்வது பிடிக்கும்
செய்வது நீ எனில் ..
குறைகள் பிடிக்காது எனக்கு
இருப்பினும் இல்லாவிடினும்
குறைநிறை கொள்ளாது – மறை
படைக்கப் பிடிக்கும் எனக்கு...
‘செல்லா’ பிடிக்கும் உனக்கு – அப்படி
ஓர் ‘செல்லா’ இல்லை எனும்
ஏக்கம் உண்டு எனக்கு !
தங்கை சில நேரம் தன் கை...
....
நோக்கம் பல குறிக்கோள் பல
வாழ்க்கைப்பாதை இதோ...
பகுத்துப் படி
புரிந்து நட – பின்
புரியச் செய் – இன்னும்
விரைந்து செல்
விவேகம் கொள்
இல்லறம் புகு – அதை
நல்லறம் செய் – பின்
நன்மை செய் – பிறர் வாழ
இனிமை செய்
எழுது நிறைய எழுது – பிறர்
படிக்கக் கொடு
கடவுளை நம்பு – அது
கடந்தும் ஓம்பு
பெற்றோர் மகிழச் செய்
குழந்தைகள் மிளிரச் செய்
சமூகம் வளரச் செய்
இவை யாவும் செய்தும்
உயரச் செய் – உன் பண்பு
உயரச் செய்
அடக்கம் கொள் – தன்
முனைப்பும் கொள்
முயன்று பார் – மேலும்
முயன்று பார்
உலகம் உன் வசப்படும் – பின்
படை
இன்னுமோர் உலகம் – அது
கடைபிடிக்கும் மேற்கண்ட
நமது ஆத்திசூடி !
நட்பை விளைந்த கவிதை
புரட்சியும் செய்கிறது பார்
நம் சக்தி
விண்ணையும் மண்ணில் வருத்தும்
விண்ணிற்கு மண்ணை உயர்த்தும்
இது நட்பு..இது நட்பு...
...
ஒரு துளி கண்ணீர் – அது
உருக்குலைக்கும் விஷம்!
அறவே பிடிக்காது எனக்கு
பலர் உண்டு என் வாழ்வில்
அழுது அழுது பழுதானவர்கள் !
என் வேலை பல நேரம்
சமாதானப்படுத்துவதும் சார்ந்திருத்தலும்
உனக்குத் தெரியும் – அவை
யாவும் தெரியும் !
...
நீயும் எழுதுவாய்
கவிதை – நன்று
தொடர்ந்து எழுது – உனைத்
தொடர்ந்து எழுது
வார்த்தைகள் இல்லையா?
வாழ்க்கையைப் பார்
வார்த்தைகள் கிடைக்கும்
கவிதையும் பிறக்கும்
நானும் தயார் – உன்
மிகச்சிறந்த ரசிகன் !
..
எனக்குப் பல பெயர்கள்
நண்பா, குரு, அண்ணா, தம்பி
டேய், செல்லம், கண்ணா என்றும்
இன்னும் மேல்போய்
அம்மா என்றும் !
அனைத்தும் பிடிக்கும் – உன்
அன்புச் சொல்லில்!
எனக்குப் பிடிக்கும் – அது
மிகவும் பிடிக்கும்
முடிக்கத் தெரியவில்லை
இந்தக் கவிதையை
முடிக்கவும் முடியாது
என்னதான் செய்வது ?
நம் நட்பு வலியது
முடிக்க முடியாதது !
உரைத்துச் சொல் மீண்டும்
இன்னும் இருக்கிறது உலகம் – அதில்
நீயும் இருப்பாய் என்னோடு !

No comments:

Post a Comment