அன்பு வைத்த ஒருவர்
அழுது நோகும் நேரம்
கண்ணின் ஓரம் ஈரம்- உன்
கண்ணின் ஓரம் ஈரம்!
உரைத்துச் சொன்னது எனக்கு!
நீ உணரத் தெரிந்தவள்
நட்பையும் அதன் கற்பையும்
உணரத் தெரிந்தவள்!
இனிவரும் ஓர்நாள்
உன் வாழ்வின் திருநாள்
மேளதாளம் முழங்க
மெட்டுடன் பட்டும் ஜொலிக்க
அதே சிரிப்புடன் நீ – தொலைவில்
அதே சிரிப்புடன் நான்!
தலைமேல் கைவைத்து
என் பாசம் உன்னில் சேர்த்து
வாழ்த்தி முடித்து பின் சிதறி
சிறு கண்ணீர் துளி சிதறி
வாழ்வோம் இன்னும் காலம்
இன்னும் இருக்கிறது உலகம்!
விதியா ? மதியா ?
வீண் வாதம் எதற்கு ? – நீ
நினைத்தால் அதை விதி – நீ
நினைத்தால் அதை மதி!
இருப்பேன் என்றும்
இதயத்தில் , இரத்தத்தில் – ஏன்
உயிரிலும்...
இது நட்பு...இது நட்பு...
சொர்க்கம் நமக்குப் பக்கம்- அதன்
வாசல் நமக்குப் பழக்கம்
இறந்து போக வேண்டாம்
புண்ணியங்களும் வேண்டாம்
சொர்க்கம் நமக்குப் பக்கம் – இது
நட்பால் விளைந்த வழக்கம்
இன்னும் இருக்கிறது உலகம்!
காடு தாண்டி கடல் தாண்டி
மலை தாண்டி மாட கோபுரங்கள் தாண்டி
சூரிய சந்திர நட்சத்திரங்களையும் தாண்டி
காற்றும் மரிக்கும் ஓர் இடம் – அங்கும்
சுவாசம் செய்யும் நம் மனம் – இணைந்து
வாசம் செய்யும் நம் மனம்!
காதல் செய்யின் கவிதை வரும்
நட்பு செய்யினும் கவிதை வரும்– சற்று
சிறந்து பின் வியந்து ...
சொல்லிப் போனான் நம் பாரதி
உங்களுக்குத் தொழில் என்னவென்று
சொல்வோம் நாம் அவன் சாரதி
உங்களுக்குத் தொழில்- இங்கே
நட்பு செய்தல் கண்டீர்!
எழுத எழுதத் தீரும் மையும்
பழகப் பழகப் புளிக்கும் பாலும்
நெருங்க நெருங்க விரியும் உறவும்
சொல்லித் தரும் பாடம்
“எதற்கும் எல்லையுண்டு !”
நாமும்தான் சொல்வோம்
பழகப் பழகப் பிறக்கும்
நெருங்க நெருங்க சிறக்கும் – பின்
பிரியப் பிரியப் பார்க்கும்
பிரிந்து போயின் ஈர்க்கும்
“நட்புக்கு எல்லையில்லை !”
என்னுடைய பக்கங்கள் – அவை
உனக்குப் பக்கம் – என்
கறுப்புப் பக்கங்கள் கூட !
வெறுக்கும் உலகம் எனை அறியின் – நீ
பொருத்தாய் ..பின் உரைத்தாய் ...
நண்பா! நீ நட..இன்னும் நட..என்று
அதிர்ந்து போய் கேட்டேன் – நான்
தவறி விட்டேனா ? என்று
உரைத்தாய் என் தோழி – நீ
கரைத்தாய் என் பாவம் !
உன்னுடைய இடத்தில் நான்
இருந்தால் முடியாது உனைப்போல் !
மன்னிக்கத் தெரிந்தும் மதித்தாய் – என்
மனப்பேயை அறிந்து மதித்தாய் – கண்டேன்
உன்னுள் ஓர் தாய் – ஆம்
கண்டேன் உன்னுள் ஓர் தாய்!
அடுத்த ஜென்மமாம் – அதில்
குழந்தையாம் நீ எனக்கு ..
என்ன ஓர் வரம் தோழி
எவர் தரக் கூடும் – நான்
என்னதான் செய்தேன் ? – வெறும்
வார்த்தை ஜாலம் தவிர
இதையும் மறுப்பாய் – என்
அதையும் இதையும் கூறி
அங்கு நிற்கிறாய் நீ – என்
வாழ்வில் விளக்கம் நீ
கலங்கரை விளக்கம் நீ!
தட்டுத் தடுமாறிய நொடிகள் – அவை
கற்றுத்தந்த பாடங்கள் – பின்
பெற்றுக்கொண்ட அடிகள் – அவை
யாவும் உன் காலடியில் ...
எதையும் மறைத்ததில்லை நான்
நீயும் கூடத்தான் !
எதுவும் தடுக்கவில்லை நம்மை
கடவுளும் ஏன் மனிதனும் கூட
முடியாது எவராலும் – ஏனெனில்
இது சதிக்க முடியா விதி
இது நட்பு..இது நட்பு...
No comments:
Post a Comment