Tuesday, October 23, 2012

ஏன் இப்படிச் சோதிக்கிறாய் கண்ணம்மா?

என் கண்கள்
ஓய்வெடுக்கும் போது
உன் கண்கள்
ஓய்வதில்லை ஏன் கண்ணம்மா?
உள்ளூர உறைந்திருக்கும்
ஒட்டுமொத்த காதலையும்
உன் ஓர விழிப்பார்வையில்
உறிஞ்சிக்கொள்ளப் பார்க்கிறாயா?
என் பேனாவின் மௌனத்தில்
நீ ஊஞ்சலாடிக் களைக்கிறாய்
ஏன் கண்ணம்மா ?
எனக்காக தென்றலையும்
நீரோடையையும்
கூட்டிவரச் சென்றாயா?
இல்லை
நம் கவிதையை
இல்லந்தோறும் இலவசமாக
எடுத்தியம்பச் சென்றாயா?
என் பசியற்ற வேளைகளில்
நீ விரதித்திருக்கிறாய்
ஏன் கண்ணம்மா?
கணவன் பின் மனைவி  போல
கவிஞன் பின் கண்ணம்மா வா?
எவர் சொல்லியும் புரியாத
உன் விழிகளின் அழகு
இந்தக் கவி சொல்லித்தான்
உனக்குப் புரிந்ததா கண்ணம்மா?
கண்ணாடி முன் நின்று
கண்ணில் கவிதை தீட்டுகிறாயா ?

என்னுடன் மட்டும்
எந்த விவாதத்திலும்
இயல்பாக விட்டுக்கொடுக்கிறாய்

எவரிடமும் இல்லாத பொறுமை
என்னிடம் மட்டும்
ஏன் கண்ணம்மா?
எவருக்காகவும் யோசிக்காத
உன் திமிரும் பணிவும்
எனக்காக யோசிக்கிறது
ஏன் கண்ணம்மா ?
..
ஒரு வேளை
மீண்டும் காதலில் விழுகிறாயோ ?
இல்லையில்லை
மீண்டும் காதலில் பிறக்கிறாயோ ?
..
உன் ஒரு பிறவியின்
காதலைப் படம்பிடிக்க
ஏன் கவிதை திணறியிருக்க
எனை நீ இப்படிச் சோதிக்கிறாய்
ஏன் கண்ணம்மா ?
...

No comments:

Post a Comment