Tuesday, March 19, 2013

வேறு வழியின்றி நிராகரிக்கிறாயா?

உன் ஒரு நொடி
தீர்க்கப் பார்வையில்
மோட்சமடையக்  காத்திருந்த
நீண்ட நாள் காத்திருத்தலில்
எனக்கும்
என் காதலுக்குமான
இணக்கம் இலேசாக
விட்டுப் போனது...
அதை மீட்டெடுக்க
நீ எடுத்த
எத்தனையோ முயற்சிகள்
தோற்றுப் போக
நீயும் எனைவிட்டு
நீங்கிப் போவது
எவ்விதத்தில் நியாயம்?
...
முந்தைய கவிதையில் தானே
நிராகரிப்பைச் சாடியிருந்தேன் ..
இப்போது எனக்குள்ளாக
உன் இந்த நிராகரிப்பு
என்னவெல்லாம் செய்யும் கண்ணம்மா?
...
நீ இருந்த தைரியத்தில்தானே
என் கவனம்
கவிதையில் ஊறியிருந்தது..
இப்போது
நீ போவதாய் கூறி
என் கவிக்கு கல்லறை
கணக்கு வழக்கு முடிக்கிறாயா?
...
மிக எளிதாக
காரணம் சொல்லிப்போகிறாயா?
நீ கூறும் எதுவும்
வெறும் வார்த்தையில்லை கண்ணம்மா..
என் இதயத்தையும்
ஒட்டிக்கொண்டுள்ள உயிரையும்
பிணைத்து வைப்பதே
உன் குரல் தானே..
...
மணி நேரங்களை
எளிதாக என்னுடன்
பேசாமல் போக்கியிருக்கிறாயே!
இங்கே ஒவ்வொரு நொடியும்
உறைந்து கொண்டு
அசையாது பிடிவாதம் செய்ய
நான் எப்படி
சுவாசித்திருப்பது?
...
மீண்டு வருதல்
குறித்த எண்ணமே
இல்லைதானே உனக்கு?
...
நினைவிருக்கிறதா?
முந்தைய எத்தனையோ
தடுமாற்றங்களில்
துணிந்து வந்து
எனை மீட்டெடுத்து
முழுதாய் முத்தமிட்டாயே!
பின்
யாருமற்ற நிலவில்
எனக்கான
எதிர்கால ரகசியங்களை
உன் கூந்தல் சுருளில்
நான் முயங்கிக் கிடந்தபோது
முணுமுணுத்து
மீளா மயக்கத்தில்
எனை மூழ்கடித்தாயே !
நீ தானா
இப்போது இலகுவாக
விலகிப் போகிறாய்?
நான் வேறு என்ன
செய்ய முடியும்?
காத்திருத்தலைத் தவிர?
என்ன,
இந்த உயிரைப்
பிடித்து வைத்தல் மட்டும்
எனக்கு பிடித்தமானதாக இல்லை..
நான் வாழ்ந்து முடித்தபோது
வந்தவள் நீ..
மீண்டும் பிறக்கச் செய்து
இப்போது
துணிந்து சாகச் சொல்கிறாய்...
ம் ..ம்..ம்...



No comments:

Post a Comment