Thursday, March 14, 2013

தணல் மணலில் ...

விருப்பமின்றி வைத்த
முதல் அடியில்
ஆரம்பித்தது
என் முடிவிலா
கேள்விகளின் சோகம்..
நினைவின்றி சுகத்தில்
திளைத்துக் கிடக்க
வாய்த்திருந்தும்
வசமாக
எனைச் சுற்றிப் பின்னிய
தந்திர வலையில்
எளிதாய் சிக்கிப் போனேன்..
ஏதுமற்ற பொழுதுகளை
மட்டுமே விரும்பி
என்னோடு வைத்துக் கொண்ட
சூழ்ச்சி அறியா மனம்
சபலமடைந்து
சடுதியில்
அடிமட்டம் நோக்கி
வீழ்ந்துபட
நடப்பதை
அறிந்தும் அறியாமல்
அடுத்தடுத்த அடிகளுக்காக
ஏங்கியிருக்க
தொடர்ந்து
விளைவு ஆராயா
அவசரங்களை
வருத்தி சமைத்து
இதோ இந்த நொடியில்
இவ்விடத்தில்
பேதலித்து புலம்பத் தயாராகிறேன்..
..
எனக்குக் கிடைத்த
எப்போதைக்குமான
சாப விமோசனம்
என் கவி சார்ந்து
வாழ்வு கற்றுக்கொள்ளும்
கண்ணம்மா..
..
வேண்டுமென்றே
வாழ்க்கையை
விளையாட்டாய் வாழும்
எனை
உணர்ச்சிகளின்
ஒட்டுமொத்த பரிணாமத்தையும்
உள்கொண்ட
அந்த இளந்தளிர்
லேசாக தீண்டிப் போனதில்
மீண்டு வாரா
வேறு உலகில்
ஒரு நொடியில்
ஜன்மித்து மரணித்தேன் நான்..
...
அது தொடர்ந்து
அக்கனவில்
நிலைத்து - அவள்
நிழல் தொட்டுப்
போயிருந்தால்
இன்று
இந்த நிலை
எனக்கேது?
..
போ போ
என - அழுதும்
அழுத்தியும்
அடித்தும்  - அவள்
எனக்கான எதிர்காலத்தை
கணித்து
கனம் தோறும்
கண் கலங்கிய போதும்
விடாப்பிடியாக
அவள் கூந்தல் நோக்கி
நீண்ட என் கைகள்
இன்று
எவரும் தீண்டா தூரத்தில்
ஈரமற்ற
தணல் மணலில்
புதைந்து பட
இன்னும் - அவள்
கடைசியாய்க்
கருக்கொண்ட - எனக்கான
கவிதையை - என்
உதடுகள்
முணுமுணுத்து
வறண்டு போகின்றன..
..
மீண்டு வருதல்
சாத்தியமோ இல்லையோ
எனக்கான அவளின்
அந்தக் கடைசிக்
கவியின் மிச்சம்
என் புதைதலின் மீது
எழுதப்படும்..
..
அதற்கு
இசை சேர்க்க
எனைப் பிடித்து
என் உயிர் தாங்கிப்
பிடித்து இத்தனை தூரம்
என்னோடு
வாசித்து வசித்து வரும்
என் முதல் வாசகியின்
மௌனம் வந்து சேரும்..
அவளின் இந்த நொடி
வாசிப்பில்
கண்ணம்மாவும்
இக்கவியும்
உயிர் வாழ்ந்திருக்க
எனக்கென்ன பயம்..
போய் வந்து
இன்னும் தொடர்வேன்..
...
இம்சை தாங்கி
இன்னொரு யுகம் படைக்க
நீயும்
வந்து சேர் கண்ணம்மா..
..





No comments:

Post a Comment