Tuesday, March 19, 2013

நிராகரிப்பின் மிச்சம்

நீட்டிய கைகளை
கோர்த்துக் கொள்ளாவிட்டாலும்
நொடிப் பொழுதில்
தட்டி விட்டு
நிராகரித்து
நேர் நோக்கிய பார்வை
தரை நோக்கச் செய்யாது
அடுத்த நொடி
தரை தொடும்
ஒரு துளி கண்ணீரின்
ஆழம் உணர்ந்து
அடி வயிற்றின் வலி
அறிந்து - அது சார்ந்த
மூலம் மதித்து
மேல் நோக்கி
தூக்கி விட
இன்னும் இந்த
உன்னத உலகில்
யாரும் உளரோ என
எத்தனை முறைதான்
நானும்
ஏங்கி ஏங்கி
பார்த்து களைப்பது ?
...
ஒவ்வொரு முறை
நிமிர்ந்து பார்த்தலும்
உள்ளூர ஏன்
எனைத் தாழ்த்துகிறது?
....
எனக்கு மிக அருகில்
ஒவ்வொரு நாளும்
இயல்பாய் இசைந்து
கடந்து போகும்
பழகிய முகங்கள்
நான்
கண்ணோடு கண் நோக்கி
கூர்ந்து பார்க்கும்போது மட்டும்
யாருமறியா பதற்றத்தை
எனக்கு மட்டும்
காட்டிப் போவதேன்?
...
எனைப் பார்த்து
இவர்கள் ஏன்
ஒதுங்கிப் போகிறார்கள்?
எது என்னை
சோகத்தில் சுகமாகவும்
இவர்களை
சுகத்தில் சோகமாகவும்
இருத்தி வைக்கிறது?
...
இவர்கள்
கண்ணாடி பார்க்கிறார்களா?
இல்லையா?
ஒருவேளை
நான் பார்க்காததால் தான்
இப்படி இருக்கிறேனோ?
...
எதுவாக இருந்தாலும்
வீண் செய்வதுதான்
இவர்களுக்குப்
பிடிக்கிறதா?
பிறர் வீண் செய்வதில்தானே
என் வாழ்க்கை
தினசரி ஓடுகிறது..
...
வேகத்தில் சுகித்து
விவேகத்தை மறந்து
அழகியலிலிருந்து தொலைவில்
அவசர கதியிலேயே
அலைந்து திரிகிறார்களே...
எங்கு போய் தான்
முடியும்
இவர்களின்
வீரிய ஓட்டம்?
..
வெறும் நடத்தலில்
நான் பெறும் சுகம்
இவர்களுக்கு ஏன்
கிடைக்கப் பெறுவதில்லை?
..
பாதையோர சுவர்களைச் சார்ந்து
என்றேனும் இவர்கள்
பொழுது போக்கியிருப்பார்களா?
இல்லை
சாலையோர நடைபாதையின்
அகலம், அமைப்பு ,
அங்கங்கே
உயிர் வாங்கக் காத்திருக்கும்
பாதாள சாக்கடை உடைப்புகள் ,
அதன் நாற்றம்,
நீண்டு கொண்டே செல்லும்
அதன் முடிவு வேண்டா முதிர்ச்சி,
இவை ஏதேனும்
இவர்கள் உணர்ந்தது தான் உண்டா?
...
சுட்டெரிக்கும் வெயிலின்
காட்டமும் - அதன்
பிந்தைய கந்தல் துணியின்
விசுவாச துடைப்பும் ,
அதில் சாயும்போது
எனை தனதாக்கிக் கொள்ளும்
துயிலின் தீர்க்கமான தீண்டலும்
கனவற்ற கண் மூடலும்
எனக்கேயான தியானமும்
இயல்பாய் பின் எழுதலும்
உடன் கிடைக்கும்
எச்சில் டீ யும்
ஒரு ரூவா பன்னும்
மூத்திர சந்தின்
மௌனமும் ,
நாற்றம் தாண்டிய நிலையும்,
சில இரவுகளின்
சில்லரைப் பரிமாற்றங்களும்
ஓரிரவு உறவு முறைகளும்
பகை மறந்த புகைத்தலும்
தெரு விளக்குகளுடன் மட்டுமேயான
நடுநிசி நியாயப் பேச்சுகளும்
நானும் பாடும் கானாக்களும்
இவை எல்லாவற்றிலும்
நான் என்னை
ஆழமாய் கண்டெடுக்க
இவர்கள் மட்டும்
எனை விட்டு விலகி
ஏன் எங்கோ இருக்கிறார்கள் ?
..
நான் வேண்டா இடைவெளி
இவர்களுக்கு மட்டும்
அத்தனை ஆறுதல்
தருமா என்ன?
விடுப்பு எடுத்தால்தான்
இவர்கள்
வாழ முடியுமா என்ன?
இவர்களை சுழற்றி விட்ட சாட்டை
திரும்பத் தேவையே இல்லையோ?
காலம் கடந்த இந்தச் சுழற்சியில்
இவர்கள்
அச்சாணி மறந்து
தரை நிலைத்தல் தோணாது
ஒருவரோடு ஒருவர்
மோதி விழத்தானே முடியும்?
...
இவர்கள் விட்டுப்போகும்
தடயம்
அழிக்க முடியாததாய் இருக்கிறதே!
தொற்றுநோயாகக்  கூட
சில சமயம்
மாறிப் பிறப்பெடுக்கிறதே!
..
ஒரு நொடி
இவர்கள்
நாதியற்ற என்
நேற்றைய குப்பைத்தொட்டி
தத்தெடுப்பை
வந்து பார்க்கட்டும்..
அதன் கண்களை
ஒரு சில கணங்கள்
தரிசித்து மோட்சம் பெறட்டும்..
...




No comments:

Post a Comment