Tuesday, March 26, 2013

விரல் தொட்டுப் பிரிந்த சாதல்..

வெந்து தணியும் காடும்
பால் சுரந்து படர்ந்திருக்கும்
கள்ளியும் - அதன் பின் பதுங்கி
அழுது தீர்க்கும் அவளும்
சற்று தொலைவில்
வீராப்பாய் திமிறி நடக்கும்
கவிஞனும் - அவன்
கையில் கிழிந்த
காகிதக் கட்டும்
காற்றில் பரந்த
கண்ணீர்க் கவிதைகளும்
ஏதோ
நடக்கக் கூடாதது
நடந்ததை ஊர்ஜிதம் செய்ய,
எழுந்து வர மனமின்றி
ஒளிந்து கொள்வதிலேயே
நிலைத்திருந்த கண்ணம்மா..
அவள் சிணுங்கலின் கூர்மை
அவன் பாதத்தில்
நறுக்கென முள்ளாய்த் தைக்க
"கண்ணம்மா" என
அவனையறியாது
கதறிக் குனிந்தான்..
முன்ஜென்ம முதல் காதலும்
விரல்நுனி
தொட்டுப்பிரிந்த சாதலும்
இன்று வரை தொடரும்
அத்தனை நிகழ்வும்
அவன் கண்முன் விரிய
சரிந்து விழுந்தான் ..
உயிரையும்
உடன் தொடரும்
சோகச் சுமையையும்
வலிந்து இழுத்து
துடிக்கும் தன் இதயம் தேடி
விரைந்தாள் கண்ணம்மா..
அவன் விடுகின்ற
அத்தனையும் தாங்கிப்பிடிக்க
இத்தனை நாள்
தனியாய்த் தவமிருந்த
வேதனை தாங்கி
கல்நெஞ்சக் கவிஞன்
காலடி தேடி
காதல் தேடி
இப்போதும் தனியாய்
தன்னிலை மறந்த கண்ணம்மா..
..
கூட இருத்தல் சாத்தியமா
என்ற ஒரே கேள்விக்கு
பதில் சொல்லத் துணிவிலா
தனிமை வேண்டும் கவிஞனுக்கு
கண்ணம்மாவின் காதல்
நச்சரிப்பாய்த் தானே தோன்றும்!
இதுகாறும் காத்திருந்து
தான்பட்ட வேதனை
இந்தக் கவிஞனின்
எந்த வார்த்தையாலும்
சுகம் பெறாது - என்பது
தெரிந்தும் , இன்னும்
கூடவே இருந்து - மனம்
வதைப்புற்று
கவிஞனின் கடைசி நொடி
கண்ணிமைத்தல் வரை
காதலித்தல் - இவளுக்கு
மட்டுமே சாத்தியம்..
..
தூரத்தில் இருந்தாலும்
அப்போதைக்கு அருகிலிருக்கும்
ஒவ்வொரு செடியும்
பூக்கும் ஒவ்வொரு மலரும்
அவளுக்கு கவிஞனின்
சிருஷ்டி தான்..
ஏன்?
கவிஞனே தான்..
இது புரிந்தும் புரியாததாய்
புதுப்புது அர்த்தம்
படைத்துக் களைத்து
காதலை கண்டுகொள்ளாமல்
இருத்தலாய் நடித்தல்
இவனுக்கேனோ
இயல்பாய்த் தோன்றுகிறது?
...
இன்றைய சந்திப்பிற்காக
இவள் காத்திருந்த நொடிகள்
ஒவ்வொன்றும்
ஒரு காவிய நிகழ்வு தானே?
..
இவன் என்னமோ
புறந்தள்ளிப் போகிறானே!
கவிதையில் ஊறிப்போய்
காதல் மறந்துவிட்டதா என்ன?
..
இவன் இனி
நிமிர்ந்து பார்த்தல்
இவளது
கரிய கூந்தலின்
கருணையில்தான்
நிகழக் கடவது என்பது
இவனால் இவனுக்கே
கிடைத்த
தூர தேசத்துக் கடவுளின்
பாசச் சாபம்..
..



No comments:

Post a Comment