Friday, March 22, 2013

நடைபாதை...நீ...நான்...

காரணமின்றி பயணித்தல்
உனக்குப் பிடிக்குமா?
அதுவும்
கால் கடுக்க காத்திருந்து
எதிர்பார்த்த நிகழ்வு
நிகழாது போய் - பின்
வேறு வழியின்றி
தென்பட்ட திசைகளில்
ஏதோ ஒன்றை
திருப்பு முனையாய்க் கொண்டு
அடுத்த அடி
எடுத்து வைக்க
அத்தனை யோசித்து
ஒரு வழியாய்
எடுத்து வைத்து
முன் பார்க்க
எதிர் திசையில்
எதிர் பார்த்தது
நிதானமாய்
நிகழ்ந்து போக ,
என்ன செய்வாய்?
சுய மரியாதை தாங்கி
முன்னோக்கி முழு மனதாய்
போவாயா?
இல்லை
துணிவின்றி திரும்பி
விட்டுவிட்ட
கடந்த கால நிகழ்வின் பின்
உயிரின் வலியறிந்து ஓடுவாயா?
..
கொஞ்சம் பின்னோக்கி பார்..
எத்தனை நொடிகள்
உன் இஷ்டப்படி
கடத்தியிருக்கிறாய்?
உன் வாழ்க்கை
உனதாக
எத்தனை நிமிடங்கள்
வாழ்ந்திருக்கிறாய்?
..
உனைப் பிறப்பிக்க
உனக்குத் தெரியாத யாரோ
உயிர்விடுதலின் உச்சத்தில்
விரும்பியோ வெறுத்தோ
முகம் பார்க்கா இருளில்
கலந்துபட்ட - அந்த
ஒரு குறிப்பிட்ட நொடி
உன்கையில் ஏதுமில்லை தான்..
..
பின்
எடுப்பார் தோள்தொட்டு
தேற்றுதல் வேண்டி
விரும்பி அழுது
வருடிக்கொடுக்க
நீ ஏங்கிய கைகள்
எத்தனை எத்தனை?
எதுவும் இல்லாது
எல்லாமும் இருந்ததாய்
இயல்பாய் இருந்திருக்கிறாய் தானே?
...
இசையும் நடனமும்
உனைப் போல
எவருக்கும் வாய்க்கவில்லை தானே?
கையேந்தி
கண்ணோடு கண் பார்க்கும்
தீர்க்கமும் துணிவும்
எதுவாயினும் ஏற்றுக் கொள்ளும்
பக்குவப் பிடிப்பும்
யார் கற்றுத் தந்தது உனக்கு ?
..
சிதறிப் போன சில்லுகளுக்காக
எவ்வளவு வியர்வை?
திகட்டிப் போகா
தேங்காய்த் துண்டுகள் !!!
உனைப் பார்த்துதானே
இந்த உயர் சமூகம்
நாய் வளர்க்க கற்றுக் கொண்டது..
பலரது முகவரி
இப்போதெல்லாம்
நாய்களை வைத்தே
அடையாளம் காட்டப்படுகிறது...
...
"நாய்கள் ஜாக்கிரதை"
பலகைக்கும்
பதவி கல்வி தாங்கிய
பலகைக்கும்
என்ன பெரிய வித்தியாசம்?
உனக்கு எல்லாம் ஒன்றுதானே?
...
திருமண போஸ்டர்களைப்
பார்த்து அப்படி என்ன
பல்லிளிப்பு உனக்கு?
வேண்டுமென சிரிக்கிறாயா ?
இல்லை
வேண்டாமென சிரிக்கிறாயா?
எப்படியோ ,
போஸ்டர் பார்த்து
பதமாகப் போய் விடுகிறாய்
விருந்து சுவைக்க...
ஆமா,
நிஜமாகவே
சாக்கடையிலிருந்து ஆப்பிள்
கிடைக்குமா என்ன?
..
காவல் தேவையின்றி
கற்பு பயமின்றி
களவு பயமின்றி
காற்றோடு காற்றாக
கண்ட இடத்தில்
கண்ணுறங்கி
கலர் கலராய்
கனவும் கண்டு
கடைசி வரைக்கும்
என்ன அழகாய்
கழித்து விடுகிறாய்?
இதற்கு மேல்
என்ன பெரிய
மேலாண்மை வேண்டுமாம்?
...
அது சரி,
சாவு பத்தி
என்ன நெனைக்கிற?
உனக்கும் அது
இருக்கு தெரியுமா?
நீ என்ன அத
உன் கூடவே
கூட்டிகிட்டா சுத்துற?
அலட்டிக்கவே மாட்டேங்கிற!
அந்த ரகசியம் தான் என்ன?
கொஞ்சமா சொல்லிப் போயேன்
உனக்காக எவ்ளோ
எழுதுறேன் பாரு..
எனக்கும் பெருசா பயமில்ல
இத எழுதும்போதே
போனாலும் சரிதான்..
என்ன ,
உன்னையும் என்னையும்
நம்பித்தான்
ரொம்ப பேரு
யோசிக்காம சுத்துறான்...
...
இப்படித்தான்
போன வாரம்,
கண்ணம்மா பத்தி
வழக்கம்போல
கவிதையும் காதலுமா
கற்பனைல இருந்தப்ப ,
தாடி வேற வச்சிருந்தனா ,
போறவன் வாரவன்லாம்
ஒரு மாதிரியா பாத்தாங்க..
ஒரு தாத்தா
பக்கம் வந்து
ஒரு ரூபா
போட்டுட்டே போயிட்டாரு...
பத்திரமா எடுத்து
உன்கிட்ட
காமிக்க வச்சிருக்கேன்..
..
நெஜமா சொல்லுறேன்
உன்னையும் என்னையும் தவிர
எல்லாப்பயலும்
நல்லாத்தான் இருக்கானுங்க..
கெளம்பு ,
நீ போய் கானா பாடு
ஓரமா
நான் உக்காந்து
பேனா புடிக்கேன்...
...







No comments:

Post a Comment