Monday, March 18, 2013

இறகின் இரகசிய ஓவியம் ...

சற்று முன்பு 
இலகுவாக உதிர்ந்து போன 
இறகின் மீது 
எப்போதும் தவித்து 
எதையோ தேடி அலையும் 
காற்றிற்கு என்ன பாசம்?
தொடக்கம் முடிவின்றி 
தாங்குதலும் 
நீடித்து உடன் இருத்தலுமாக 
இந்தப் பயணம் 
எதை நோக்கி தொடர்கிறது?
அடுத்த ஏதோ ஒரு 
திடப் பொருளின் ஸ்பரிசம் 
தேடித்தான் இந்த 
ஆட்டமும் அலைக்களிப்புமா?
இல்லை 
இல்லாத ஒரு உறவை 
தங்களுக்குள்ளாக ஊர்ஜிதம் செய்யவா?
நேர்நோக்கி 
நிமிர்ந்த நடைபோடும் 
ஆணவத்தில் அடங்காத 
ஒவ்வொரு தலையும் 
இந்த இறகின் 
இதமான மிதத்தலை 
ரசித்தே செல்கின்றன..
எத்தனை கைகளுக்கு 
இதனைத் தொட்டுப் பார்க்க 
துடிப்பும் துள்ளலும் 
இருக்கின்றது?
உயரம் பார்த்து
உண்மை விட்டுவிடத்தான் 
இந்த மனிதப் பிறவியா என்ன ?
பிரிந்து போன 
தாய்ப்பறவையின் 
தற்போதைய பரிதவிப்பு 
இந்த இறகிற்கு 
தெரியுமா என்ன ?
அது சரி,
நிஜமான தவிப்பு 
என்றொன்று இருக்கிறதா?
நேற்றைய சிணுங்கலில் 
துவங்கிய திடீர் பிரிவு 
எனக்குள் ஏன் 
இத்தனை சோகத்தை 
விதைத்து நிற்கிறது?
நிரந்தரமாய் 
இருந்துவிடப் போகிறதா
இந்தப் பிரிவும் 
பிரிவு சார்ந்த வலியும்?
உலகின் ஒவ்வொரு பிரிவும் 
மறத்தலை மருந்தாக 
பூசிக் கொண்டுதானே 
மங்கிப் போகின்றது..
அழகியல் தேடுபவனுக்கு 
அழகாகவும் 
விரும்பி 
அழிவைத் தேடி 
தனித்திருப்பவனுக்கு 
கடைசி மூச்சின் மர்மத்தையும் 
இயல்பாய் சொல்லிப் போகிறதே 
இந்த எடையற்ற இறகு...
தேற்றிக்கொள்வதில் தான் 
வாழ்தலின் அருமை 
புரியுமா என்ன?
இறகாய் இருந்துவிட 
முடியாதா என்ன?
ஒரு வேளை,
என் கவி புனைய 
மை தேடி 
இந்த இறகு 
எனைச் சுற்றி 
வருகிறதா என்ன ?
..
சோகத்தில் சுகித்திருக்க 
எனக்கு நானே 
போட்டுக் கொள்ளும் 
உவமைகளைப் பார் கண்ணம்மா..
மிதந்து வரும் இறகாம் 
காற்றாம், உறவாம்,
இன்னும் போனால் 
முன் ஜென்மத்து தொடர்பு 
என்று கூட எழுதுவேன் போலும்...
..
நேர்நின்று 
எனக்கே எனக்காக 
வாய்த்திருக்கும் 
இந்த நொடி சோகத்தை 
ஏற்றுக் கொள்வதுதானே 
நான் உயிர்த்திருத்தலின் அழகு?
...
அதைவிட்டு 
கவிதைக்குள் ஒளிந்து 
வார்த்தைகளின் வழியே 
எத்தனை நாள்தான் 
கண்ணீர் வடிப்பது?
..
மிதந்து போகும் 
இந்த இறகும் 
விழுந்து படும்..
முன்னர் விழுந்துபட்ட 
இறகுகளின் வழித்தோன்றலாய் 
எனக்குள் தோன்றிய 
எத்தனையோ கவிதைகளில் 
ஒன்றாய் - இக்கவிதையும் 
இறந்துபடும்...
..
நீடித்திருத்தலின் 
மர்மப் புன்னகை தாங்கி 
எனக்கான எதிர்காலத்தின் 
எதிர்பார்ப்புகளை 
கலங்கடித்து 
இந்த இப்போதைய 
சோகம் 
இப்போதைக்கு 
வென்றதாகவே இருக்கட்டும்..
..
ஒவ்வொரு நொடி வாழ்தலின் 
ருசியறிய நானும் 
தோல்வியின் படியில் 
விழுந்துபட்ட இறகின் 
முதல் ஓவியத்தை 
தீட்டியிருக்கிறேன்
முடிவு நோக்கி..
...










No comments:

Post a Comment