Tuesday, March 26, 2013

இப்பேதைமை முற்றுப்பெருமோ?

இரு வேறு துருவங்களில்
ஒரே நொடியில்
தரை தொடும்
மழைத்துளிகள்
இயல்பாகவோ
இல்லை இயல்பு மீறியோ
ஏதோ ஒரு புள்ளியில்
சந்திக்க நேருமோ ?
...
இது
இதனால் ஆகப்பெரும்
என்ற தீர்க்கமான
வரையறையில்
இயல்பாய் இணைந்திருக்கும்
ஏதும் தொடர்பற்ற
பேதை உயிர்கள்
புரிந்தோ புரியாமலோ
பிரிந்து போதலும் சாத்தியமோ?
...
வல்லமை படைத்ததாய்
பிதற்றிக் கொள்ளும்,
சொற்களைப் பின்தொடர்ந்து
சுவாசித்து வெறுமனே
வாழ்ந்திருக்கும்
வெற்று ஊடக உடல்கள்
உலகில் உணர்ச்சியோடு
ஒரு முறையேனும்
கால் பதித்தல் நிகழுமோ?
...
ஊருக்காக உடையுடுத்தி
பேருக்காக பெரும் தானம் செய்து
பின் அவ்வப்போது புலம்பி
அரைகுறை அறிவில்
அநியாயத்துக்கு
அறிவுரை சொல்லித் திரியும்
ஆண்டவர்களுக்கு
எந்தக் கருப்பசாமி வந்து
நிஜ பூஜை செய்ய?
...
உண்மையும் - அதை
இறுக்கிப் பிடித்து
மானம் வளர்த்து
பின்
காணாப் பிணமாய்
கரைந்து போகும்
மிச்சமிருக்கும்
கொஞ்சம் சனமும்
காடு தேடி
மாமிச வாசம் விலக்கி
புகையாகப் போய்த் தொலையும்
வேதனை மிகு நாளும்
வெகு தொலைவில் இலையோ?
...
இவை கண்ணுற்று
வெறுத்து - கண்ட
காட்சி தொலைக்க
எண்ணங்களில் ஆழ்ந்து போய்
விரும்பி பித்துப் பிடித்து
வேடிக்கைப் பொருளாய்ச்
சுற்றித் திரியும்
பைத்தியக்கார ஞானிகள்
முழுதாய் உறங்கிப் போகும்
முழுநிலா இரவும் வருமோ?
...
புதிது புதிதாய்
புதுமை படைக்க
அழகுத் தமிழ் தொட்ட
இந்தக் கவிஞன்
தினந்தோறும்
புலம்பித் தீர்க்கும்
இப்பேதைமை
இயல்பாய் என்றுதான்
முற்றுப்பெருமோ?
..

No comments:

Post a Comment