கால் தவறி
மிதித்துவிட்ட
கோயில் வாசல்
பிச்சைக்காரன் பாதத்தை
குனிந்து
முதல்முறை
வெயில் பார்க்கும்
பூப்போன்ற
அவள் கைகள்
தொட்டு வணங்கியபோது
இந்த இதமான உணர்வு
என் விலாசம்
விசாரித்துக் கொண்டிருந்தது...
...
அரச மரத்துப் பிள்ளையாரும்
‘ஐயோ!’ என சொல்ல
மாலை வெயில்
அவள்
நிழல் அழகை
எனக்கு
அறிமுகம் செய்து வைக்க
யாரையும் சட்டை செய்யாமல்
அவள் போட்ட
தோப்புக்கரணம்!
....
இந்த இதமான உணர்வு
என் வாயிற்கதவைத்
தட்டிக் கேட்டது
“இப்ப என்ன சொல்ற?”
...
அதுவரை
கோயில் படி
ஏறாத என்னை
அழைத்து வந்த
அன்புத் தோழன்
எனக்குக்
கடவுளாகிப் போனான்..
...
கதைகளில் படித்த
தேவதை!
நேரில்!
என் கண் முன்
பார்த்த ஓர் உணர்வு!
...
சாமி சிலைக்கு
செய்த அர்ச்சனைகள்
இவளுக்காக
ஒலித்தன – என்
காதுகளில் மட்டும்...
....
தலை வகிடு தெரிய
உள்ளங்கை வரிகளும்
இதழ் வரிகளும்
பின்னல் போட
பணிந்து வணங்கி
“ஆசிர்வாதம் பண்ணுங்க!” என
தேவதை சிலையாகிப் போக
ஐயரும் கூட கண்
கலங்கி போனார்!..
...
இந்த இதமான உணர்வு
எனக்குக் காதல் பிரசாதம்
வழங்கிக் கொண்டிருந்தது...
...
என்னை மீறி
என் கண்கள்
செயல்பட்டன ....
தொடர்ந்து கால்களும்...
...
பெண்கள்
வெட்கப்படும் வேளை
கால் விரல்கள்
தரையில்
ஓவியம் தீட்டும்!
ஆண்கள் கூட
வெட்கப்படுவதுண்டு....
நிமிட நேரம் கூட
நேராக அவளை
பார்க்க முடியாமல்
நின்றபோது
என் வாழ்வின்
முதல் வெட்கம்
பிறந்தது...
...
அவள் தலைமுடி
காற்றில்
காதல் தந்தியடிக்க
என் கைகள்
காற்றில்
சுருதி பிடித்து
வீணை மீட்டின...
எனக்குத் தெரிந்து – நான்
என் தலைமுடி
கோதியது அன்றுதான்!
....
கோயில் பிரசாதம்
சர்க்கரைப் பொங்கல்
பெருசுகளும் சிறுசுகளும்
வரிசை வரிசையாய்
கடைசியாய் அவளும்...
கேவலம் பார்க்காமல்
ஓடிப்போய்
நின்றுகொண்டேன்...
...
என் சர்க்கரைப் பொங்கல்
என் முன்னாலேயே ..
சத்தியமாக சொல்கிறேன்
கோயில் பிரசாதம் – அன்று
இனிக்கவேயில்லை...
கைக்கெட்டியது
வாய்க்கு எட்டாத
பழமொழி
என் மூளையை
துவம்சம் செய்தது...
....
அழகான ‘பைக்’
வைத்திருக்கும்
நண்பனைப் பார்த்து
பொறாமைப் பட்டிருக்கிறேன் ...
அன்று
அழகையே
பெண்ணாகப் பெற்ற
அவள்
அப்பா அம்மாவைப் பார்த்து
பொறாமைப்பட்டேன் ...
உடனடியாக
உறவுமுறை யோசித்தது
என் மனது...
‘மாமா, அத்தை ‘ என
அசைந்தது
என் இதழ்
இலேசான புன்னகையுடன் ...
...
வானத்தில்
சூரியன் மறைந்துகொண்டிருந்தான்...
நிஜமாகவே
கோயில்
இருண்டுபோனது...
அவள்
கிளம்பிவிட்டிருந்தாள்...
மங்கிய வெளிச்சத்தில்
கோயில் சிற்பங்கள்
எனக்கு ஏதேதோ
கற்றுத் தந்தன..
...
முதல் முயற்சியிலேயே
சாமியைப் பார்த்துவிட்ட
பக்தனாக
பித்துப்பிடித்து
திரும்பி வந்தேன்...
....
காதல்
பாதிப்பது
முதலில்
உறக்க செல்களைத்தான்...
அந்த இரவு
விடியும் வரை
விழித்திருந்தது....
அதுவும் உறங்காமல்
எனையும் உறங்கவிடாமல் ...
நிலவைப் பிரிந்து இரவும்
அவளைப் பிரிந்து நானும்..
இணையும் முன்னே
பிரிந்து போன வலி
ஒரு சுகம்தான்...
எனக்கு
மிகவும் பிடித்த
என் போர்வை
அன்று உறுத்தியது...
..
இந்த இதமான உணர்வு
எண்ணிலா முறை முயன்று
என்னில்
ஒரு பிறவி
எடுத்திருந்தது...
காதல்!
ஒரு
பிடிவாதக் குழந்தை ...
No comments:
Post a Comment