நானும் இல்லாமல் போகிறேன் ...
நானில்லாமல் போயினும் - என்
நினைவுகள் உனக்காக
சுவாசித்துக் காத்திருக்கின்றன ...
உடல் உயிர் தாண்டி
உறைந்து போன - என்
கடைசி நினைவுகளையும்
தட்டி எழுப்பி செல்கிறது
உன்
கால் கொலுசின்
மெல்லிய சிணுங்கல்...
பின்னொரு நாள் - உன்
ஒவ்வொரு நினைவும்
மங்கிப் போக நேரும்
அப்போது
யாருமற்ற வெட்டவெளியில்
உனக்காக நான் இசைத்த
உலகின் மிகச் சிறந்த இசை
இறந்துபடும்...
அதையறியாமல்
எத்தனையோ பறவைகள்
தங்கள் தூக்கத்தை தொலைத்து
காத்திருக்கும்...
வனங்களின் நடுவே
ஏகாந்தத்தில் தியானிக்கும்
எவனோ ஒருவன்
நமக்கான ரகசியத்தை அறிந்து
கண்ணீர் சொரிவான்...
முடிந்து போன மூச்சுக்கு
ஏது சுகமும் துக்கமும் ?
உடைந்து போன குழலுக்கு
ஏது சுருதியும் ஸ்வரமும் ?
No comments:
Post a Comment