Saturday, March 3, 2012

அம்மு ( தொடர்ச்சி 2 )


கனவு காண்பதை விட 
விழித்தே கிடப்பது 
மிகவும் சுகமானது ..
...
காதலியைப் பற்றி 
கவிதை எழுதுகிறார்கள் 
நான் என்ன எழுதுவது?
உன்னை வருணிக்க 
தமிழ்த் தாயும் 
தயங்குகிறாள்...
கவிதைக்கே கவிதையா என்று...
...
உன்னைப் பார்த்த பிறகு 
பார்ப்பதெல்லாம் 
புதியதாகத் தெரிகிறது...
என் வீட்டுத் திண்ணை 
சிம்மாசனம் போலாக 
நான் மகாராஜாவாக 
பாதசாரிகள் எல்லாம் 
சொர்க்கத்தின் பணியாளர்களாக 
போக்குவரத்து நெரிசல் கூட 
புதிய பரிமாணம் காட்டியது..
பார்க்கின்ற பெண்களையெல்லாம் 
ஒரே நொடியில் 
உன்னுடன் 
ஒப்பிட்டுப் பார்த்து 
ஓரங்கட்டுகிறது – என்
இதயத்து துலாபாரம்...
...
அம்மா மாதிரி பெண் 
மனைவியாகணும்னு 
நீண்ட நாள் ஆசை...
இப்போ 
அம்மா முகமே
மறந்துபோச்சு...
அநியாய அழகியடி நீ!
....
சட்டை பட்டன் 
போடாமல் 
மகராஜா 
வீதி உலா 
புறப்பட்டார் ...
டீக்கடை பெஞ்சு 
என் வாழ்க்கையில் 
பாதி அதற்கு தெரியும்...
என்னில் மாற்றம் கண்டு
அதுகூட 
சத்தம் எழுப்பிற்று..
வணக்கம் சொன்ன நாயர் 
சிகரெட் நீட்ட
அன்று மாத்திரம்
நல்லவன் போல
‘வேணாம்’ என்றேன்...
...
அப்போதுதான் 
பகலிலே பௌர்ணமி தோன்றியது...
கால் கொலுசு தெரிய 
ஒற்றை நிற வானவில்லை 
வளைத்து சுற்றி 
பட்டுப் பாவாடை தாவணியில் 
அவள்!
ஒரு கணத்தில் 
மார்கழித் திருவிழா ...
பட்டுப் போயிருந்த 
என் மனம் 
சில்லென சிலிர்த்தது...
காதல் 
சிலசமயம் சிற்றின்பம்...
...
பூக்கள் நிரப்ப வேண்டிய பாதை...
புண்ணியம் செய்த 
ஒற்றைக்கல்..
அவள் பாதத்தில் 
முத்தம் வைக்க 
சாமி பல்லக்கு 
கொஞ்சம் குலுங்கியது..
“பார்த்து வாம்மா ஷக்தி !”
என 
அசரீரியாக அம்மா 
அழைக்க 
அவள் கண்கள் என்னைக் 
கடந்து போயின..
கவர்ந்து போயின...
‘ஷக்தி’
அவள் பெயர்
அதன் பிறகு 
அது என்
அபிமான தமிழ் வார்த்தை 
ஆயிற்று...
என் பருவப் பயிர்களை 
அவள் ஓரப்பார்வை 
அறுவடை செய்து போனது...
இந்த இதமான உணர்வு 
நானாகவே மாறிவிட்டது...
...
கண்ணாடியில் 
என் கண்களை 
நானே பார்த்து 
பேச ஆரம்பித்த 
காலம் அது!
“நான் மென்மையாகிப் போகிறேனோ?”
என்ற ஒரு 
பயமும் கூட 
நான் பேசுவது 
என் அறை 
சுவர்களுக்கு மட்டுமே கேட்டது...
அம்மா அப்பாவுடன் 
சண்டை போடாமல் 
“அப்படியா? சரி !”
என 
பணிந்து போக 
ஆரம்பித்தேன்...
இந்த இதமான உணர்வு 
எனை பக்குவப்படுத்தியது...
....
காதல் எடுத்தியம்புதல் 
என்றொரு அத்தியாயம் 
மனித வாழ்வின் 
மிக முக்கிய 
உணர்ச்சிப் பிரளயம் ...
பிடிக்குமோ பிடிக்காதோ 
என்றொரு தோல்வி பயம் ...
தாடி வளர்த்து 
சுற்றித் திரியும் மானுடர்கள் 
என் உள்மனதில் 
ஓர் அழுத்தம் 
உணரச் செய்தார்கள்...
பட்டும் வேட்டியுமாய் 
நெருங்கிப் போகும் தம்பதிகள் 
எனக்குள் ஓர் 
ஏக்கம் வளர்த்தனர்...
.....
தேன் இருக்கும் இடம் 
வண்டுக்கு இயல்பாகத் தெரியும்...
ஏதோ ஒரு ஷக்தி 
ஷக்தி இருக்கும் வீட்டிற்கு 
இல்லையில்லை ...
கோயிலுக்கு என்னை 
ஈர்த்துச் சென்றது...
...
எங்கள் ஊருக்கு  
புதிதாக குடிவந்திருக்கும்
வசந்தம் அவள்...
....
இயற்கை 
காதலுக்கு ஊட்டமளித்து 
வளர்க்கிறது...
....
அழகான ஆற்றங்கரை  
அருகே 
பெரிய ஆலமரம்...
அருகே அழகின் 
உறைவிடம்...
ஆல விழுது போல 
ஆடிக் கொண்டிருந்த 
என் மனம் 
அவளது 
ஜன்னலோர அசைவுகளை 
அற்புதமாய் படம் பிடித்தது....
ஒவ்வொன்றும் 
உலக அதிசயம்...
இவள் 
அழகைப் பார்த்து யாரும் 
கண்போட முடியாது..
பார்ப்பவர் சிந்தனை 
அவள் காலடியில் 
உடனே சரணடையும்...
அவளால் அந்த வீடு 
அரண்மனை ஆனது...
ஆலமரத்தடியில் 
என் காதலை 
அடைகாத்துக் காத்திருந்த என்னை 
அவ்வப்போது அவள் 
புத்தக விளிம்பில் 
பார்த்திருக்கக் கூடும்...
தினமும் 
முதல் மாடியில் 
மூன்றாம்பிறை...
இந்த இதமான உணர்வு 
எனை இரக்கமில்லாமல் 
இம்சித்தது....

No comments:

Post a Comment