Saturday, March 3, 2012

அம்மு ( முடிவு )


தேன்நிலவு 
ஒரு நிலவுடன் 
குளிர் பிரதேசம் 
பனி படர்ந்த ஏரி 
நானும் அவளும் 
கால் மிதி படகில் 
திடீரென கேட்டாள்
“என்னை எவ்ளோ பிடிக்கும்?”
“ஏதோ கொஞ்சம் “ என்று 
பொய்த்தேன் 
வாடிப்போய் கேட்டாள் 
“இப்ப தண்ணில நான் 
விழுந்துட்டா என்ன செய்வீங்க?”
“அப்பாடா !
தொந்தரவு விட்டுச்சு-னு
போய்டுவேன்!”
கொஞ்சம் கோபத்தில் 
சிவந்தாள்...
“இதுக்குதான் 
காதலிச்சு கட்டிக்கிட்டியோ ?” என 
முதன்முதலாக 
எனை
ஒருமையில் அழைத்தாள்...
“எல்லாம் ஒரு 
போழுதுபோக்குதான் “ என்றேன் 
இந்தப்புறமாக சிரித்து ...
“ரொம்ப புடிச்சது 
யாரு உனக்கு?”
குரல் தழதழத்து கேட்டாள்....
“எனக்கு உஷாம்மா பிடிக்கும் !”
என என் தோழி பெயர் சொல்ல
அவ்வளவுதான்!
அழ ஆரம்பித்து விட்டாள்...
திமிராக 
கண்டுக்காத மாதிரி இருந்தேன்...
“டாய்ங்க!”
இது அவள் 
கண்டுபிடித்த வார்த்தை...
“எனக்கு 
நீங்க மட்டுந்தாங்க...” என 
சிணுங்கினாள் என் செல்லம்...
இதுக்குமேல வேணாம்னு 
அப்படியே இழுத்து 
மார்போடு அணைத்துக்கொண்டேன்...
என் இதயத்தை 
நனைத்திருந்தாள் அவள்...
.....
எனைப் பார்க்கும் பெண்களை 
பார்வையிலேயே எரித்து விடுவாள்...
சீண்டிப் பார்க்க நானும் 
“அந்தப் பொண்ணு 
அழகா இருக்குல்ல!” என்பேன் 
அந்த நேரத்தில் அவள் முகம் 
ஓர் உணர்வுச் சிற்பம்...
....
எனக்கே எனக்கு 
எனும் 
எண்ணம் மட்டும் 
இல்லையென்றால் 
காதல் 
கசந்துதான் போயிருக்கும்...
...
இந்த பூமியில் 
சுவர்க்கம் தோன்றிய நாள்
அவள் பிறந்த நாள்...
“எனக்காக என்ன 
வாங்கிட்டு வருவீங்க?”
அவ்ளோ அழகாகக்
கேட்டாள் ...
“பாக்கலாம் பாக்கலாம் “ என 
பாசாங்கு செய்தேன் ..
வெறும் கையோடு
வீடு திரும்பிய 
எனைப்பார்த்து 
முகத்தை வெட்டிக்கொண்டு 
ஓடிப்போனாள்...
என்னுடைய தலையணை 
அவள் ஈரப்பதத்தை 
ருசித்துக் கொண்டிருந்தது....
“அம்மு” என்றேன் 
திரும்பவில்லை..
விளையாட்டாக “அன்பே” என்றேன் 
அணக்கமில்லை ...
“ஏடி பொண்டாட்டி “ என்றேன்
நெற்றிக் குங்குமம் 
கண்ணீரில் கரைந்து 
கவர்ச்சியாக இருந்தாள்...
திரும்பிய அவளை 
என் மார் நோக்கி 
இழுத்தேன்...
சிவப்பு நிறத்தில் 
என் பாசத்தை 
பச்சை குத்தியிருந்தேன்...
“ஷக்தி” என 
“ஓ” வென அழுது 
சாய்ந்து கொண்டாள் 
அன்று இரவு முழுதும்
அவள் உதடுகள் 
என் மார்பில் 
ஒத்தடம் கொடுத்தன....
....
அதிகாலை சோம்பலில் 
மழலை பேசியது ...
ஐஸ்வர்யமாக 
பூஜையறையில் 
மந்திரம் சொன்னது...
ஈரத் தலைமுடியுடன் 
பாசம் கரைத்து 
சமையல் செய்தது..
அவளுக்குப் பிடித்த பாடலை 
மூழ்கி ரசித்து முணகியது
என் புகைப்படத்தை 
மார்போடு அணைத்து
மத்தியானம் தூங்கியது...
யாருக்கும் தெரியாமல்
லேசாக ஆடியது...
என் அழுக்குச்சட்டையை 
போட்டு அழகு பார்த்தது ..
துவைக்கும்போது 
சோப்புக்குமிழியுடன்
சிணுங்கி விளையாடியது..
அவளுக்காக 
நான் எழுதி முடிக்காத 
கவிதைகளை 
படித்து சிரித்தது 
எனக்காக 
ஆங்கிலம் பயின்று 
உளறிப்பார்த்தது ...
பல வருடம் கழித்து 
இரட்டை ஜடை போட்டது
தலையணை 
வயிற்றில் கட்டி 
கர்ப்பிணி ஆனது 
பட்டுப்புடவையை 
தலையில் மூடி 
பாசமாகப் பார்த்தது...
ஊடல் பொழுதில் 
ஊமையாக நடித்தது – பின்
கூடல் பொழுதில் 
குமுறி அழுதது....
கனா கண்டு 
பயந்து 
கட்டிக்கொண்டு தூங்கியது..
மோகத்தோடு பலமுறை 
காமத்தோடு சிலமுறை 
அவள் கண்கள் ஊஞ்சலாடியது...
எல்லாரும் இருக்க 
யாருக்கும் தெரியாமல் 
எனைப்பார்த்து 
கண்ணடித்தது...
கண்ணா! கண்ணா! என
அரிதாக அழைத்தது..
வேலைக்குப் போகும்போது 
வேண்டாம் என
வீம்பு பிடித்தது...
கதவை மறித்துக்கொண்டு
காத்துக் கிடந்தது...
குழந்தைக்குப் பெயர் வைக்க 
எப்பவோ குலுக்கல் போட்டது...
இதெல்லாம் போக 
எனக்கு அவள் 
தாலி கட்டிப்பார்த்தது...
என் நீள தலைமுடியில் 
குடுமி போட்டு 
பொட்டு வைத்துப் பார்த்தது 
ஒரு ஞாயிறு முழுதும் 
நான் அவளாக 
அவள் நானாக 
நடித்துப் பார்த்தது...
எத்தனை எத்தனை!!!
அத்தனையும் பத்திரமாக 
பதிவு செய்து வைத்திருக்கிறேன்...
பின்னாளில் 
பிரிந்திருக்கும் நேரம் 
புனிதமாகப் பார்த்து ரசிப்பேன்....
இந்த இதமான உணர்வு 
எனக்கு 
வாழக் கற்றுக்கொடுத்தது...
....
எதற்கோ ஓர் நாள் 
எரிந்து விழுந்து 
உன்னை அடித்துவிட்டேன் ...
அழுவாய் என நினைத்தேன்...
அசையாமல் கேட்டாய்
“அடிச்சிட்டீங்கல்லா என்ன!”
அதுவே 
முதலும் கடைசியுமாய் 
ஆகிப்போனது..
என் முன்கோவத்திற்கு 
முற்றுப்புள்ளி 
உன் முகம்...
...
குழப்பத்திலோ 
கோவத்திலோ – நான் 
இறுகி இருக்கும்போது 
இதமாக 
என்முன் வந்து 
உள்ளங்கை இரண்டும் என் 
துடிக்கும் நரம்புகளில் வைத்து 
கண்கள் இரண்டால் 
எனக்கு 
காந்தச்சிகிச்சை செய்வாள் 
பக்குவப்பிறவி அவள்....
....
ஓர் அதிகாலை ..
அவசரமாக எழுப்பினாள்...
அநியாய அழகியடி நீ! 
அதுவரை 
நான் பார்க்காத 
பரவசம் அவள் முகத்தில் 
“அப்பா ஆகப்போறடா!” என்றாள்...
அப்படியே அணைத்து 
அடிவயிற்றில் முத்தம் வைத்து 
“தேன்க் யூ அம்மு !” என்றேன்
அம்மு முகத்தில் 
ஓர் அம்மா பார்த்தது 
அழகாய் இருந்தது...
ஆண்கள் அடையும் 
அதி சந்தோசம் 
அப்பா ஆகும்போதுதான் ..
இந்த இதமான உணர்வு 
எனக்குள் ஓர் 
தாய்மை உணர்த்தியது...
....
என் சாமிக்கு 
நானே 
மஞ்சள் நீராட்டி 
அர்ச்சனை செய்தேன்...
அக்கணம் எனக்கு 
ஆயிரம் உண்மை உணர்த்தியது...
என் சுயத்தை 
சுகமாக 
சுமந்து கொண்டாள்
என் ஷக்தி!
என் சரிபாதி!
....
ஏழாவது மாசம்
தாய்வீடு...
என்னுயிரை எனக்காக 
பரிசாகப் பெற்றுவர போயிருக்கிறாள்...
பத்துமாதச் சுமையை 
நித்தமும் உணர்ந்து 
பதிவு செய்த நினைவுகளுடன் 
ஏங்கிக் காத்திருக்கிறோம் 
நானும் என் காதலும்....
...
காதல்!
என் சாமி 
கொடுத்த வரம்...
காதல்!
ஒரு நீண்ட பயணத்தின் 
சிறிய தொடக்கம்!
இந்த இதமான உணர்வு 
இப்போது வலிக்கிறது...
இந்த இதமான உணர்வு 
இப்போது எனை 
வார்த்தையின்றிச் செய்கிறது...
ஏங்கிக் காத்திருக்கிறோம் 
நானும்...என் காதலும்.....

No comments:

Post a Comment