Tuesday, March 20, 2012

நான் உன்னுடன் கண்ணம்மா


உன் எல்லா கேள்விகளிலும் 
உனக்கான என் பதில் ....
என் எல்லா கேள்விகளிலும் 
உன் தொலைதூர மௌனம் மட்டும் ..
உனக்கான என் அனைத்து சிந்தனையிலும்
உன் ஒரு துளி கண்ணீர் குறுக்கிட 
தொலைந்து போகிறேன் கண்ணம்மா...
எனைக் காத்துக் கொண்டு செல்ல 
உன் ஒரு நொடி புன்னகையை மட்டும் அனுப்பு...
உன் எந்த கேள்வியின் முன்னும் 
என் பதில்கள் 
எடுபடப் போவதில்லை..
பின் எதற்காக 
கேட்டுக் களைக்கிறாய் கண்ணம்மா...
நான் கொடுத்த முத்தத்துடன் 
அசைவற்ற என் அமைதியையும் 
எடுத்துச் செல்...
பதில் வாராத வேளைகளில்
உன் கேள்விகளுக்கு ஆறுதல் துணையாக....
அசைவற்ற என் அமைதியையும் 
எடுத்துச் செல்...
கலைந்த உன் கூந்தல் நினைவுகளுடன்
என்னால் சிதைந்த 
உன் கனவுகளும் வந்து 
எனைக் கொல்லுதடி கண்ணம்மா..
எனக்காக தீர்ந்து போவது 
உன் மிக விருப்பமான செயல் தானே...
பின் ஏன் சோர்ந்து போகிறாய் கண்ணம்மா?
என் மௌனம் 
பதிலற்ற நிலை அன்று..
பதில் தாண்டிய நிலை கண்ணம்மா..
இந்த நிலை 
உனக்கு வாய்க்கப்பெறும் நாள் 
எனக்குப் பிடித்த உன் புன்னகை 
உன்னை அறியாமல் 
உன் உதடுகளிலிருந்து 
உதிர்ந்து விழும்...
என் ஸ்பரிசம் 
அதைத் தாங்கிப் பிடிக்கும்...
கொண்டாடும்...
வாராத பொழுதுகளை எண்ணி 
வாய்த்த பொழுதுகளை 
வீண் செய்யாதே கண்ணம்மா..
காலமும் கடல் அலையும் 
காதலுக்கு மட்டும் 
காத்திருக்குமா என்ன?
உனக்கான என் 
தினசரி பரிசு 
வந்து சேர்கிறது தானே?
அதை உன் கன்னங்களுடன் 
இறுக்கி அணைத்து இரு கண்ணம்மா..
நான் உன்னுடன்...






No comments:

Post a Comment