Wednesday, October 5, 2011

தேவதைக்கு தந்த முத்தம் ..(தொடர்ச்சி)

என் தேவதைக்கு

நான் தந்த முத்தம்!

உலகியல் மறந்தது

உணர்ச்சிகள் அற்றது

உருவம் கூட இல்லாதது

ஆனால்

உற்றுப் பார்க்கின்

உயிர் இருக்கும்

உயிர் மட்டுமே இருக்கும்..

எனக்குத் தெரிந்து

உலகில்

வேறெந்த உயிர்களும்

இந்தளவு

உன்னதப் பிணைப்பில்

இருந்திருக்க முடியாது !

காமம் கடந்த காதல்

சாத்தியம் !

உதாரணம்

என் தேவதைக்கு

நான் தந்த முத்தம்!

யாருமற்ற கடற்கரையில்

தன்னந்தனியே பார்க்கும்

சூரிய உதயம்

எங்கள் முதற் சந்திப்பு..

அவள் கண்கள்

கண்ணுக்கு தெரியாத

கோடானு கோடி

உயிர்களின் பிறப்பிடம் !

அவற்றின்

ஒரு நொடி இமைத்தல்

ஒட்டு மொத்த உலகத்தையே

இருட்டாக்கி விடும் !

அப்பாவையின் பாவைகள்

சிறிதளவு

சமச்சீர் அற்றதாய் தோன்றின !

அவற்றின் புலத்தில்

என் கிரங்கிய கண்கள்

கலந்த நொடி

முதன்முறை

என் இதயத்துடிப்பு

உணரச் செய்தது ..

இதயத்தின்

காதல் கோட்டைக்கு

காவலர்கள் கண்கள்!

அவள் நாவிலிருந்து

தெத்திப் பற்களைத்

தாண்டிச் சிதறிய

முதல் வார்த்தை

'ஹாய்..'

இருந்தும் இல்லாத

என்

அத்தனை நரம்புகளையும்

மீட்டிப் போனது !

இன்றும்

கண் மூடினால்

அந்த இசையை

உணர முடிகிறது..

முதல் முறை

பார்த்தது

அவள் பள்ளிச் சீருடையில் !

அதன் நிறம்

என்

அபிமான நிறமாகிப் போனது

எனக்கே தெரியாமல்...

முதற் சந்திப்பில் - அவள்

முழு நீள முடியை

தரிசிக்கத் தவறி விட்டேன் !

என்

கற்பனைக் காதலியின்

கரிய கூந்தலை

எத்தனையோ முறை

கண்களில் ஒத்தியிருக்கிறேன் ..

பின்னிப் பூவும் வைத்திருக்கிறேன் ..

பின்னாளில் கண்ட

அவள் கூந்தல் - என்

கற்பனைக் காதலுக்கு

மலர் வளையம்

வைத்துப் போனது..

ஜன்னலுக்குப் பின்புறம்

அவளுக்கே தெரியாமல்

நான் உருவிய

ஒற்றை முடி

இன்றும் - என்

மதிப்பு மிக்க காகிதங்களை

ஆசீர்வதிக்கிறது..

இல்லை..

என்

வெற்றுக் காகிதங்களை

மதிப்பு மிக்கதாக

மாற்றுகிறது ..

No comments:

Post a Comment