Monday, October 17, 2011

பச்சை மரம் (தொடக்கம் )

வருடங்களாய்
வராத வருணன்
வந்து விட்டான்!
வாடிப்போய்
வற்றிப்போய்
வதங்கிப் போன
வயதுக்கு வந்த கன்னி!
பச்சை மரக் கன்னி !
அடக்கி வைத்த
அத்தனைக் காதலையும்
மொத்தமாய்
முத்தமாய்
பச்சைக்கன்னியின்
சிவப்பு இதயம் நோக்கி
தூது விட்டிருக்கிறான்
வருடங்களாய்
வராத வருணன்!

முதற்காற்றும்
முதல் சொட்டு பாலும்
முதல் அழுகையின்
முதல் மருந்து!
முதல் சொட்டு மழையுந்தான்!
பட்டவுடன்
சட்டென
உயிர்பெற்றாள்
பச்சை மரக்கன்னி!

தலைமுறைகளைக் கடந்தும்
தலை குனிந்து நிற்கும்
இவளின் மௌனம் !
எத்தனை தலைகள்
தருதலைகளாயின
எத்தனை தலைகள்
இருதலைக் கொல்லிகளாயின
இவளைக் கடந்து சென்ற
அத்தனை தலைகளும்
தங்கள் தலைவிதிகளை
இவள் காலடியில்
சமர்ப்பித்தே சென்றிருக்கும் !

எத்தனையோ சேலைகள்
கைநீட்டி வரவேற்று
தொட்டிலாக்கி
தாலாட்டு பாடுவாள்
பக்குவமாய்
பழுத்த இலைகளை
தன்
அழுத்த இதழ்களாய்
அனுப்பி
முத்தமிட்டு தூங்க வைப்பாள் ..
காய்த்துப் போன
எத்தனையோ
கைவளை கரங்களுக்கு
இவள்
ஓய்வு கொடுப்பாள் ..

காணாமல் போனவனும்
கடன் வாங்கிப் போனவனும்
கற்பை விற்றவளும்
கஞ்சிக்கு வழியற்றவளும்
மரத்துப்போய்
மரித்துப் போவது
இவள்
வேர்க் கொலுசுகளில்தான் ...
சமயத்தில்
கயிற்றுத்தாலியில் தொங்கும்
மணப்பெண்
பிணப்பெண்!

வாழ்கை வெறுத்தவர்களும்
வேரறுக்கப்பட்டவர்களும்
வேறு வழியின்றி
மாறு வழியாக
தம்மையே கொல்ல
தனியாக வரும்போது
உதவிக்கரமாக
தன் கிளை நீட்டி
தற்கொலைக்கு உதவுவாள் ..
இக்கொலைகளின் பாவம்தான்
பட்டுப் போய் கிடக்கிறாள்
ஊருக்கு வெளியே
வந்துவிட்டான் வருணன் ...

முன்பொரு நாள்
மூவேட்டும்
ஈரெட்டும்
கும்மிருட்டில்
சீர்கெட்டுப் போனதும்
ஊர்விட்டுப் போனதும்
இவள் காட்டிய
பச்சைக் கொடியில்தான்..
வண்ணமாய்ப் பிறந்துவிட்டு
வருந்துகிறாள் இப்போது ...

பிள்ளை யாருக்கும்
இல்லையெனில்
நூற்றி எட்டு
சுற்று சுற்றி
தொட்டில்கட்டி
புழு பூச்சி பிறக்கும்!
என்ன ஆச்சு
பிள்ளையாருக்கு
இவள்
காலடியிலேயே
காத்திருக்கிறார் ..

மறைந்திருந்து பார்க்கும்
மர்மங்கள் எல்லாம்
இவள்
முதுகுப் புறத்தில்தான் !
நீராடும்
கோபியர்களின்
கண்ணன்கள்
இவள்
முதுகுப் புறத்தில்தான் ...

இவளில்
தேடிக் கொணர்ந்து
பாரதி வைத்த
அக்கினிக் குஞ்சு
இவளால்
கண்மூடி உணர்ந்து
போதி வந்த
புத்தனைப் போய்ச்
சேர்ந்தது..

இவள்
சுவாசம் உணர்ந்த
விஞ்ஞானியும்
இவளுடன்
சேர்ந்தே சுவாசித்தான் ..
இவள்
கால்களைத் தன்னோடு
அணைத்துக் கொள்ளும்
புவியீர்ப்பின்
வாசம் உணர்ந்த
விஞ்ஞானியும்
இவளுடன்
சேர்ந்தே வாசித்தான் ..
பச்சைப் புடவை
அறிவியல் ஆசிரியை
இவள் ..

நடை வண்டியாக
இவள்
இன்னோர் தாய் !
விரல் பிடித்து
ஓட்டி விட்டாள்
உரல் இடித்து
ஊட்டி விட்டாள்
ஏணியாக
ஏற்றி விட்டாள்
தோணியாக - கரை
ஏற்றி விட்டாள்
திராணியற்று
விழும்போதும்
கட்டிலாக
தட்டிக் கொடுத்தாள்
கட்டில்களில் விளைந்த
தொட்டில்களையும்
ஆட்டிவிட்டாள்..
இறந்துபடுகின்ற
பிறந்த உயிர்கள்
நன்றி மறந்து போயினும்
இறுதி வரை
கூட வரும்
ஒரே பெண் இவள்
இன்னோர் தாய்..

கருப்பு காக்கை
கூட்டில்
கருப்பும் இன்றி
மறுப்பும் இன்றி
மற்றோர் பிறப்பு !
பறவை பிடிக்கும்
மனிதனுக்கு
பறவை படிக்கத்
தெரியாது
விருந்தோம்பலில்
தமிழனுக்குத் தாத்தா - இந்தக்
கறுப்புக் காக்கா ..
கருப்பு முடி வெட்டும்
கந்தசாமியும்
வெள்ளை நுரையில்
கண்ணாடி பார்க்கும்
வெற்றிலைப் பண்ணையாரும்
வைத்து வணங்கட்டும்
இக் கறுப்புக் காக்கா
நிழற்படத்தை !
நிழலைப் போல
நிழற்படமும்
கருப்பு தான் ..

No comments:

Post a Comment