என் பெயரை
வேறு எவரும்
இப்படி உச்சரித்ததில்லை !
என் பெயர்
எனக்கே பிடித்துப் போனது..
அவள் கண்கள் பற்றிய
நினைவுகளில்
அவள் பெயரைக் கூட
மறந்திருக்கிறேன் !
யோசித்து பின்
வான் பார்க்கையில்
நினைவில் வரும்
அவள் பெயர்...
நிலா...
நிலா
தேய்ந்து தேய்ந்து
வளர்ந்து கொண்டிருந்தது
...
தொலைதூர தனிமையில்
தொலைபேசியில்
மீண்டும்
அவள் குரல்..
நீண்ட கால
தவத்தில் பெற்ற தீட்சை !
நான் பேச வேண்டியதை
அவள் பேசிக்கொண்டிருந்தாள்..
" என்ன சொக்குப் போடி
போட்டிங்க?" என்றாள்
எங்கோ
நட்சத்திரங்களுக்கிடையில் நான்!
அவள் கண்கள்
எனக்கு உணர்த்தியவற்றை
என் கண்கள்
அவளுக்கு உணர்த்தின போலும்..
நானாக மாறிப் போயிருந்தாள்
நிலா..
அமாவாசை இரவுகளில் கூட
என்னோடு நிலா!
...
ஆஞ்சநேயர் சந்நிதி
ஆழமாய் நான்
ஆர்வமாய்
என் பெயர்
என்னை அழைத்தது..
கையில்
கணக்குப் புத்தகத்துடன்
காலில் விழத் தயாராய்
நிலா ..
பொது இடத்தில்
பயமும் பதற்றமுமாய்
" போய் வா " என்றேன் !
புன்னகை
என் கண்முன்
நடந்து போனது
பரீட்சை எழுத ..
....
பல நாட்கள்
பேருந்து நிலையத்தில்
காத்து நின்றேன்!
பேருந்திற்காக அல்ல
ஐந்தாறு இருக்கைகள் முன்னால்
கூட்ட நெரிசலில்
அவள் கூந்தல்
எனைப் பார்க்கும் ..
இறங்கிப் போகும்போது
அவள்
உடல் மொழி
எத்தனையோ
இலக்கணக் கேள்விகளை
என்னிடம் கேட்கும் !
நாங்கள்
BYE சொல்வதில்
நம்பிக்கை வைத்திருக்கவில்லை ...
No comments:
Post a Comment