நிலவை
கருமேகம் மறைத்தால்
பொறுத்துக் கொள்வேன்
மழை வருமென்று!
அமாவாசையை கூட
புது நிலவின்
பிறவிக்காக
பொறுத்துக் கொள்வேன் !
வெறும்
தேய்பிறையாகவே
நிலவு நீடித்தால்
என்ன செய்வது?
நிலவுக் காவலனோ
உலகையே
விலைக்கு வாங்க
கிளம்பிவிட்டான் ..
..
தங்கத்தையே
உரசிப்பார்ப்பவர்கள்
நிலவை
விட்டு வைப்பார்களா என்ன ?
போட்டு வைத்த
பாதையில் தானே
நிலவு சுற்றியாக வேண்டும் ..
அப்போதுதானே
சூரியக் குடும்பத்தில் இடம்...
..
என் நிலவும்
சங்கிலியால் கட்டப்பட்டது ...
வேக வைத்து
வெந்து போவதும்
ஒப்புரவு செய்து
ஒடுங்கிப் போவதும்
ஊருக்காக சிரிப்பதும்
உள்ளுக்குள் சிணுங்குவதும்தான்
திருமண வாழ்வா ?
..
என் நினைவு
அவளை வாட்டுமா
என்றெல்லாம் யோசனை ..
ஆமாமா ..
அவளைப் பற்றி
நினைக்கவே
நேரமில்லையாம் ..
அங்கே
அடைகாக்கும்
இயந்திரமாகத்தான்
இதுவரை இருக்கிறாள்..
....
மறுமுறை பார்த்தேன்!
மாற்றான் மனைவி
என்றெல்லாம் தோணவில்லை ..
நிலா
ஒளியிழந்து
உலர்ந்துபோயிருந்தாள்!
தேவதையாகப் பார்த்தவள்
தேய்ந்து போகக் காண்பது
கொடுமை!
மறைவாகச் சிரித்தாள் ..
அப்போதும்
கண்களில் கேள்வி!
என்ன பதில் ?
எங்கே போய்
நானும் கூற ?
...
..
தொலைபேசி ..
தாழ்வான குரல்..
இனிப்புச் செய்தி !
நிலவு
சூல்கொண்டது ..
என்னிடம்தான்
முதலில் சொன்னாளாம்!
"வாழ்க்கை எப்படி?" என்றேன்,
"வியாபாரக் காந்தத்திற்கு
வாழ்க்கைப்பட்ட
விலைமகள் நான் !" - என
சொல்லாமல் சொல்லிப்போனாள் ..
சந்தோசம் கண் நிறைக்க
துக்கம் தொண்டை அடைத்தது ...
அவள்
குரலை மட்டும்
அணைத்துக் கொண்டேன்!
..
அவள்
வயிறு வளர - என்
வாழ்த்துக்களைத்
தூது அனுப்பியிருந்தேன்
சில காலம்!
நிறை மாத நிலவு
அதன் அழகு
அற்புதம்!
வார்த்தைகளில் அடங்காத
வசன கவிதை!
..
..
"என் குழந்தை
உங்களை
எப்பிடிக் கூப்பிடணும்?"
அழகாய் கேட்டாள்..
"மாமா வேண்டாம் ,
பேர் சொல்லிக்
கூப்பிடச் சொல்லு !"
"ஆமா,
உன் குழந்தைக்கு
என் பேரு வைக்கப் போறியா? "
"இல்லப்பா !
தினசரி கூப்பிட
யாரால முடியும்!"
"சீக்கிரமா
பெத்துப்போடு
கொஞ்சிட்டுத் திரியுறேன் !"
"ஒரு வாரம்
பொறுத்துக்கோங்க
ரெண்டு நிலா
புடிச்சுத் தாரேன் "
ஆமா!
நிலாவுக்கு
ரெட்டைப்புள்ளைங்க..
அவள்
இரண்டு கண்களிலும்
தவமிருந்தன போலும்!
ஆண் ஒன்றும்
பெண் ஒன்றும்
என் கையில்!
நீண்ட நாள் கழித்து
நீர் சொரிந்தன
என் கண்கள்!
சொல்வதெல்லாம்
சொல்லிவிட்டு
என் பெயரில்
எழுத்துக்களை
குலுக்கிப்போட்டு
குட்டி நிலவிற்கு ,
பெண் நிலவிற்கு
பெயர் வைத்திருக்கிறாள் ...
இந்த ரகசியம்
எங்களுக்கு மட்டுமே தெரியும்!
...
இன்று
தாயுடன்
அதிகம் பேசுகிறாளாம் ..
தொலை பேசித் தடை..
அவளுக்கான ஆறுதல்
என் தினசரி " குட் மார்னிங் "
இப்போது
அதுவும் இல்லை..
ஒரு குழந்தை தொட்டிலில் ..
ஒரு குழந்தை கட்டிலில் ..
இவள் மட்டும் சமையல்கட்டில் !
இதெல்லாம் காணும்போது
"எங்கள் காதல்
காமத்துடனே இருந்திருக்கலாமோ ,
நிலவு நிலவாகவே இருந்திருக்குமோ ?"
என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது!
...
..
இன்னும்
"இவள் இன்புற்றிருப்பது
சாத்தியமோ ?,
உலகம்
நிஜமான பௌர்ணமியை
காண முடியுமோ ?
நிலவுக் காவலன்
உயிர் பெற்று வருவானோ?"
கேள்விகளுடன் முடிக்கிறேன்..
...
..
ஒன்று மட்டும் நிச்சயம் ..
இதுமட்டும் படித்திருந்து
எம் காதல் குறித்து
கேள்விக் கணைகளுடன்
காத்திருப்போரே!
கேளீர் !
எத்தனை குற்றச்சாட்டுகளோ
எத்தனை வசைகளோ
அத்தனையும்
எனக்கே அனுப்புங்கள் ..
துணிந்து ஏற்றுக்கொள்கிறேன் ..
ஏற்கெனவே
உடைந்துபோன
என்னுடைய நிலாவை
உங்கள்
குற்றப்பார்வை
குத்தாமல் இருக்கட்டும்!
அவள்
வெள்ளை முகம்!
கறை படாமல்
ஜொலிக்கட்டும்
.....
காதலை
காதலாக மட்டுமே
காத்தவர்கள் நாங்கள் ..
எங்கள் அகராதி
ஒரு சிலருக்கு
மட்டுமே விளங்கும்!
காற்றின்
ஒவ்வொரு இழையையும்
காதலாக மாற்றுபவர்களுக்கே
புரியும்!
சரி! சரி!
இன்று
மூன்றாம் பிறை !!
நானும் என் நிலவும்
நடுநிசி நோக்கி!!!
--சுஷில் குமார் பாரதி
(10-04-2010)
No comments:
Post a Comment