ஓர் திருமண விழா
தடபுடலான ஏற்பாடுகள்
தளர்ந்து போய் நானிருக்க
யாருக்கும் தெரியாமல்
தண்ணீர் தந்து போனாள்!
உப்புத் தண்ணீர் !
நிஜமாகவே
உப்பு போட்ட தண்ணீர் !
இது
எங்களுக்கான விளையாட்டு ..
ஏழெட்டு பந்தி
விளம்பினாலும்
அவளிருக்கும் பந்தி
சுவையானது..
அத்தனை கறிகளும்
அமுதமாகிப் போகும் ..
தேர்வு முடிவு..
தாய் தந்தையை விட
என்னிடம் தான்
அதிகமாக அழுதாள்..
நான் நினைத்தது
வரவில்லையாம் ...
தேவதை
நான் படித்த கல்லூரியில்
காலடி வைத்தது!
சுவாரஸ்யம் கூடிப்போனது ..
தினசரி தேரோட்டம் !
உடுத்துவதிலும்
உண்பதிலும்
நடப்பதிலும் - செல்லமாய்
நடிப்பதிலும்
அவளுக்கே உரிய
அத்தனை அழகும்..
விடுமுறை நாட்களில்
காக்கிச் சட்டை
கல்லூரி காவலாளிக்குத்
தெரியாமல்
கள்ளத்தனமாய்
கைபிடித்து
நடந்திருக்கிறோம் ..
சித்திரைப் பௌர்ணமி
நடு இரவு..
'நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன் '
பாடி முடித்ததும்
நிலா நனைந்தது!
கண்ணீரில் காதல் சொன்னாள்..
"காமம் வேண்டாம் - திருக்
கல்யாணம் வேண்டாம்
காதல் போதும் " - என்று
காவியம் பேசினாள்..
அதுவரை நானும்
அவள்
கண்கள் தாண்டிப்
போனதில்லை!
என்னில் அவளும்
அவளில் நானும் - என்றும்
எப்போதும் நிரந்தரம்!
No comments:
Post a Comment