Monday, October 17, 2011

பச்சை மரம் (தொடர்ச்சி 1 )

கூட்டிக் கொடுத்தவனும்
காட்டிக் கொடுத்தவனும்
வேட்டியின்றி
அம்மணமாய் போகட்டும்
இப் பச்சை மரக் கன்னியின்
பின்னால்
பச்சையாக
ஒளிந்து போகட்டும்
ஒழிந்து போகட்டும்..

தாய்க்குப் பிறந்து - அத்
தாயை மறந்தவர்கள் - இப்
பச்சை மரக் கன்னியின்
கருணைக் கரங்களில்
பேயாகத் தொங்கட்டும்
தூக்கில்
பேயாகத் தொங்கட்டும்
விழுதுகளைத்
தொழுது வணங்கட்டும்
என்னோற்றாள்
கொல்!
தொழுது வணங்கட்டும்!
...
முன்பொரு நாள்
பச்சைக் கன்னியின்
உச்சித் தலையில்
நடந்தேறிய
காதல் காவியம்
துள்ளிக் குதித்து
கேட்டது ஆண் அணில்
"எப்போது காண்போம்
இன்னோர் ராமனை?"
சிரித்தது பெண் அணில்
"பொறுத்திரு !
இன்னோர் சீதை பிறக்கட்டும் ,
பொறுத்திரு!"
மூன்று அடிகளால்
உலகை அளந்தவனும்
பதில் சொல்ல முடியாமல்
பாற்கடலில்
ஒளிந்து கொண்டிருக்கிறான்!
மூன்று வரிகளை
முதுகில் சுமந்து
காத்திருக்கின்றன
அணில் முனிகள் !
..
முன்பொரு நாள்
பச்சைக் கன்னிக்கு
ஓர் இச்சை !
கொஞ்சம்
நடந்து பார்க்கலாமா என்று
முயன்று பார்த்தது
முடியவில்லை!
தென்றல் தங்கையை
தூது விட்டு
சூறாவளிச் சகோதரனை
வரச் சொல்வோமா ?
பெயர்த்துக் கொண்டு போகட்டும்
பறந்து பார்க்கலாம் !
முயன்று பார்த்தது
முடியவில்லை !
சாமி குத்தம்
ஆயிடும்
கம்பீரமாய் கர்ஜித்தது
இவள்
காலடியில்
காப்பாய் நின்ற
கருப்பசாமி வீச்சருவா !
...
...
மழை முத்தத்தில்
நனைந்து போனது
பச்சைக்கன்னியின்
கச்சைத் துணி !
பிழிந்து காயப் போட
பக்கத்து வயல் வெளியில்
படர விட்டாள் ..
இருட்டும் முன்
காய்ந்து விடு
இல்லையெனில்
சூரியக் காவலனை
உளவு பார்க்கும்
நிலவு மகன்
உன் கற்பைக்
களவு செய்வான் !
இருட்டும் முன்
காய்ந்து விடு !
உன்
ஆபாச மேனியின் அழகு
நிலமகன்களுக்கு தெரியாது
நிலவு மகனுக்குத் தெரியும்
அதோ
உன் கச்சைத் துணி
நுனியில்
ஒளிந்திருக்கும்
வயற்காவலனைப் பார்
பெயர்
சோளக்கொல்லை பொம்மை
வயது
வயதுக்கு வராத வயது!
அவன்
கைகளை நீட்டி
அழுவது ஏன் தெரியுமா ?
ஒரு முறையேனும்
உன் கச்சைத்துணியை
உன் கொசுவத்தில்
சொருகிப் பார்க்க
வேண்டுமாம்!
பார்த்துப் பத்திரமாக இரு!
பஞ்சும் நெருப்பும்
பத்திக் கொள்ளப் போகிறது !
நாற்று நடுதல் முதல்
அறுவடை வரை
நெற்கதிர் போலவே
வளைந்திருக்கும்
கருப்புத் தமிழச்சிகளின்
இறுகிய இடுப்புகளுக்கு
காவல்
இவன்தான் !

No comments:

Post a Comment