Thursday, October 13, 2011

தேவதைக்கு தந்த முத்தம் ..(தொடர்ச்சி 5)

ஒரு கவிதை அவள்!
சுற்றி வளைத்து
உருவகம் வைத்து
எதுகை மோனை போட்டு
யாப்புப் பொருத்தி
மெனக்கெட்டு
எழுதப்பட்ட
கவிதை அன்று..
அவள்
பார்த்ததும் புரிந்துவிடும்
நேரடிக் கவிதை !
நிலவை எழுதாத
கவிகள் இல்லை..
நிலவிருக்க எனக்கு
கவிதை தேவையில்லை!

அவள் சில சமயம்
சோகமாகிப் போவாள்
தமிழின்
அத்தனை பதங்களையும்
புரட்டிப் புரண்டாலும்
அவளைத் தேற்ற
ஒரு வார்த்தை கூட
கிடைப்பதில்லை...

என் நிலை கண்டு
பரிதாபப்பட்டு
அவளே சிரிக்க நினைப்பாள்..
அவள் முன்
மண்டு போல
நின்றிருப்பேன் ...

பின்னாளில்
கவிஞனாகி - நான்
கிறுக்கிய
எந்தவொரு கவிதையும்
அவளை மிஞ்சிவிடவில்லை ..
அவளிடம் என் கவிதை
தோற்றுப் போவது பெருமை!
....
சில நாட்கள்
நிலவை விட்டு தூரமாக
பூமியை சுற்றப் போனேன் ..
பிரிவு ...
எனக்கு
எப்போதுமே புரிந்ததில்லை
இல்லாத ஒன்றை
எப்படிப் புரிவதாம் ?
எண்ணம் செயல்
எல்லாவற்றிலும் அவள்..

சிந்தனையில் உதடு கடித்தல்,
சுறுசுறுப்பில் நகம் கடித்தல்,
நான்கு விரல்களால் சாப்பிடுதல்,
நொடிக்கு நொடி கண்ணிமைத்தல்,
இவை தவிர
எத்தனையோ வியாதிகள்
அவளிடமிருந்து
எனக்கு
தொற்றிக் கொண்டன ..

நானில்லாத நேரங்களில்
கட்டுக்கடங்காமல்
பொங்கி வரும் காதலை
பாசமாகத் திரித்து
பக்கத்து வீட்டுக்
குழந்தைகளை
கொஞ்சித் தீர்ப்பாளாம்...

எனக்காக - அவள்
எழுதிய
ஒரே கடிதம் !
அவளது
வெள்ளை கைக்குட்டை ..
இன்று
எனது ரகசியப்பெட்டியில்
ஓரங்களில் அழுக்கேறி
தனிமையில் தவமிருக்கிறது ...
அறுபதுகளைத் தாண்டி
அக்கைக்குட்டையை
அவளுக்கே
அன்பளிக்க வேண்டும்..
....

நிலா மோதிரம் ,
நிலா டாலர் - என்று
நானும் கொடுத்திருக்கிறேன் !
அதெல்லாம்
அவளை விட
அழகா என்ன?

ஒரு வாழ்த்து
சொல்லவில்லை என்று
அடுத்த
பிறந்த நாள் வரை
பேசாமல் இருந்தாள்..
....
கோவில் கோபுரம் தாண்டி
தொலை தூர வானில்
நான் கண்புதைத்து
நின்ற போது
விரலிடுக்கில் ஆசையாய்
"ஆசை" மிட்டாய்
செருகிப் போனாள்..

அன்று
மூன்றாம்பிறை !
நீண்ட நாள்
பேசிக் கொள்ளாத
எங்கள் கண்கள்
பேசிக்கொள்ள விரும்பின!
தேவைப்படும் போதெல்லாம்
தனிமை எங்களுக்கு
இயல்பாகவே அமைந்தது !
தலைகுனிந்து காத்திருந்தாள்...
விரல் கோலம் ,
நகம் கடித்தல் ,
உதடு கடித்தல் - என
எல்லாமும் ...
தலைவனைப் பிரிந்த
தலைவியின் சோகமும் ,
குழந்தையைப் பிரிந்த
தாயின் சோகமும்
அவளிடத்தில்...
அவளறியாமல் அருகே போய்
தழுவித் தலைகோத
தன்னியல்பு மீறி
கன்னத்தில் முத்தமிட்டாள் ...
உடல்
பொருள்
இன்பம்
துன்பம்
கல்வி அறிவு ஞானம்
கடவுள்
காமம்
காதல்
குடும்பம்
உலகம் - ஏன்
சுயம் -என
எல்லாம் மறந்து
நானும் முத்தமிட்டேன் ....
கடுகளவும் காமமில்லை!
எங்கள்
கண்கள் மட்டுமே
அப்போது உயிரோடிருந்தன ...
அது
தேவதைக்கு தந்த முத்தம்...

1 comment: