Friday, October 14, 2011

தேவதைக்கு தந்த முத்தம் (தொடர்ச்சி 6)

பின்
சில வருடங்கள்
முழு நிலவில் மட்டும்
முகங்களைப் பார்த்து
தொலைந்திருந்தோம் ..
வாழ்க்கை தரும்
வரங்களையும்
சாபங்களையும்
சப்தமின்றி சுவைத்திருந்தோம் ..

ஆணின் நாட்கள்
அசைவின்றி போகும் !
பெண்ணின் நாட்களோ
இசைவின்றி போகும்!
ஆணின் வருடங்கள்
அனுபவம் கூட்டும்
பெண்ணின் வருடங்களோ
வயது கூட்டும் ..
சரியோ தவறோ
விருப்போ வெறுப்போ
விழ வேண்டும்
கழுத்தில் தாலி !
அறுதியிட்டுச் சொல்வேன்
பெரும்பாலான திருமணங்கள்
பொம்மலாட்டம் தான் ..

நிலவை
விலைபேசும் கூட்டம்
போட்டி போட்டுக்கொண்டு
வியாபாரிகள் ..
நான்கு லட்சம்
நாற்பது பவுன்
விற்பவர் வாங்குபவர்க்கு
கொடுக்க வேண்டுமாம் !
நிச்சயதார்த்தமும்
நிகழ்ந்தது ..
தொலைபேசியில்
தொலைந்துபோன
அவள் குரல்
கேட்டபோது ..
அவள் அழக்கூடாது -என்றே
வேண்டியிருந்தேன் !
அளவாய் பேசி
அதிகம் அழுதாள்..
அவள் குரலை மட்டும்
அணைத்துக்கொண்டேன் ..

எனக்குத் தெரிந்து
இன்றுவரை -அந்த
நான்கு லட்சம்
கடனாகத்தான் இருக்கிறது..
அழகைப் பெற்றதற்கு
அனுபவிக்கிறாள்
அவள் அம்மா!

..

'எனக்கான இடம்
எனக்கேதானாம்' !
திருமணத்திற்கு
சில நாட்கள் முன்பு
சந்தித்த போது
வரப்போறவனைப் பற்றியும்
வாழப்போவதைப் பற்றியும்
ஹைக்கூ சொல்லிப்போனாள் ..
எங்கள்
இறுதி கைகுலுக்கல்
அப்போதுதான் நிகழ்ந்தது !
இனி
அவள்முகம்
நிலவில் மட்டுமே!
..
கோவிலில் நான்
வேண்டுவதில்லை பொதுவாக
சிலகாலம்
வேண்டியிருந்தேன் -அவளுக்காக
'நிலவை இரசிப்பவனாக
பகலும் இரவும்
பாதுகாப்பவனாக
பத்தரை மாத்துத் தங்கமாக
ஒருவன்
வர வேண்டுமே..
...
திருமண நாள் !
அவசர அவசரமாய்
அன்றுதான்
வந்து சேர்ந்தேன்
கையில் - ஒரு
நாய்க்குட்டி பொம்மை !
காதல் பரிசு !
கல்யாணப் பரிசு !
சமச்சீரற்ற
அந்தக் கண்கள்
என்னைச்
சரியாகக் கண்டுகொண்டன!
எனக்குப் பிடித்த
நீலத்தில் புடவை!
மணவறையில் மாலையுடன்
அழகாய் இருந்தாள்
நீல நிலா !
பக்கத்தில் ஆண்மகன்
அம்சமாகவே இருந்தான் !
அப்போதும் - அவள்
வியர்வை போக்க -மின்
விசிறி இல்லையா -என
சுற்றும் முற்றும் பார்த்தேன்!
முகூர்த்த நேரம் !
தாலி கட்ட
தலை குனியுமுன்பு
தலை நிமிர்ந்து
விழி விரித்து முழுதாய்
எனைப் பார்த்தாள்...
ஆயிரம் வார்த்தைகள்
அவளுக்கும் எனக்குமிடையில்
அலைந்து ஓய்ந்தன ...
தாலி ஏறும்போது
அவள்மேல் விழுந்த
அதிகபட்ச பூக்கள்
என்னவைதான் ..
பார்வையிலேயே ஆசிர்வாதம் ..
..
நிலவுக்கும்
நிலாக் காவலனுக்கும்
பந்தியில் விளம்பியது
நிறைவு!
நலுங்கு
உருட்டும்போதும்
பூப்பந்து எறியும்போதும்
பப்படம் உடைக்கும்போதும்
பால் பழம் உண்ணும்போதும்
பார்வையில் ரசித்திருந்தேன் ...
காமம் கடந்த காதல்
சாத்தியம் !
உதாரணம்
என்
தேவதைக்கு தந்த முத்தம்..
...
...
...
போன பக்கத்துடன்
நிறுத்தியிருந்தால்
கவிதைக்கு நியாயம் செய்திருப்பேன் ..
நிலவிற்கு நியாயம்
செய்யவேண்டி தொடர்கிறேன்...
....

Thursday, October 13, 2011

தேவதைக்கு தந்த முத்தம் ..(தொடர்ச்சி 5)

ஒரு கவிதை அவள்!
சுற்றி வளைத்து
உருவகம் வைத்து
எதுகை மோனை போட்டு
யாப்புப் பொருத்தி
மெனக்கெட்டு
எழுதப்பட்ட
கவிதை அன்று..
அவள்
பார்த்ததும் புரிந்துவிடும்
நேரடிக் கவிதை !
நிலவை எழுதாத
கவிகள் இல்லை..
நிலவிருக்க எனக்கு
கவிதை தேவையில்லை!

அவள் சில சமயம்
சோகமாகிப் போவாள்
தமிழின்
அத்தனை பதங்களையும்
புரட்டிப் புரண்டாலும்
அவளைத் தேற்ற
ஒரு வார்த்தை கூட
கிடைப்பதில்லை...

என் நிலை கண்டு
பரிதாபப்பட்டு
அவளே சிரிக்க நினைப்பாள்..
அவள் முன்
மண்டு போல
நின்றிருப்பேன் ...

பின்னாளில்
கவிஞனாகி - நான்
கிறுக்கிய
எந்தவொரு கவிதையும்
அவளை மிஞ்சிவிடவில்லை ..
அவளிடம் என் கவிதை
தோற்றுப் போவது பெருமை!
....
சில நாட்கள்
நிலவை விட்டு தூரமாக
பூமியை சுற்றப் போனேன் ..
பிரிவு ...
எனக்கு
எப்போதுமே புரிந்ததில்லை
இல்லாத ஒன்றை
எப்படிப் புரிவதாம் ?
எண்ணம் செயல்
எல்லாவற்றிலும் அவள்..

சிந்தனையில் உதடு கடித்தல்,
சுறுசுறுப்பில் நகம் கடித்தல்,
நான்கு விரல்களால் சாப்பிடுதல்,
நொடிக்கு நொடி கண்ணிமைத்தல்,
இவை தவிர
எத்தனையோ வியாதிகள்
அவளிடமிருந்து
எனக்கு
தொற்றிக் கொண்டன ..

நானில்லாத நேரங்களில்
கட்டுக்கடங்காமல்
பொங்கி வரும் காதலை
பாசமாகத் திரித்து
பக்கத்து வீட்டுக்
குழந்தைகளை
கொஞ்சித் தீர்ப்பாளாம்...

எனக்காக - அவள்
எழுதிய
ஒரே கடிதம் !
அவளது
வெள்ளை கைக்குட்டை ..
இன்று
எனது ரகசியப்பெட்டியில்
ஓரங்களில் அழுக்கேறி
தனிமையில் தவமிருக்கிறது ...
அறுபதுகளைத் தாண்டி
அக்கைக்குட்டையை
அவளுக்கே
அன்பளிக்க வேண்டும்..
....

நிலா மோதிரம் ,
நிலா டாலர் - என்று
நானும் கொடுத்திருக்கிறேன் !
அதெல்லாம்
அவளை விட
அழகா என்ன?

ஒரு வாழ்த்து
சொல்லவில்லை என்று
அடுத்த
பிறந்த நாள் வரை
பேசாமல் இருந்தாள்..
....
கோவில் கோபுரம் தாண்டி
தொலை தூர வானில்
நான் கண்புதைத்து
நின்ற போது
விரலிடுக்கில் ஆசையாய்
"ஆசை" மிட்டாய்
செருகிப் போனாள்..

அன்று
மூன்றாம்பிறை !
நீண்ட நாள்
பேசிக் கொள்ளாத
எங்கள் கண்கள்
பேசிக்கொள்ள விரும்பின!
தேவைப்படும் போதெல்லாம்
தனிமை எங்களுக்கு
இயல்பாகவே அமைந்தது !
தலைகுனிந்து காத்திருந்தாள்...
விரல் கோலம் ,
நகம் கடித்தல் ,
உதடு கடித்தல் - என
எல்லாமும் ...
தலைவனைப் பிரிந்த
தலைவியின் சோகமும் ,
குழந்தையைப் பிரிந்த
தாயின் சோகமும்
அவளிடத்தில்...
அவளறியாமல் அருகே போய்
தழுவித் தலைகோத
தன்னியல்பு மீறி
கன்னத்தில் முத்தமிட்டாள் ...
உடல்
பொருள்
இன்பம்
துன்பம்
கல்வி அறிவு ஞானம்
கடவுள்
காமம்
காதல்
குடும்பம்
உலகம் - ஏன்
சுயம் -என
எல்லாம் மறந்து
நானும் முத்தமிட்டேன் ....
கடுகளவும் காமமில்லை!
எங்கள்
கண்கள் மட்டுமே
அப்போது உயிரோடிருந்தன ...
அது
தேவதைக்கு தந்த முத்தம்...

தேவதைக்கு தந்த முத்தம் (தொடர்ச்சி 4 )

ஓர் திருமண விழா
தடபுடலான ஏற்பாடுகள்
தளர்ந்து போய் நானிருக்க
யாருக்கும் தெரியாமல்
தண்ணீர் தந்து போனாள்!
உப்புத் தண்ணீர் !
நிஜமாகவே
உப்பு போட்ட தண்ணீர் !
இது
எங்களுக்கான விளையாட்டு ..

ஏழெட்டு பந்தி
விளம்பினாலும்
அவளிருக்கும் பந்தி
சுவையானது..
அத்தனை கறிகளும்
அமுதமாகிப் போகும் ..

தேர்வு முடிவு..
தாய் தந்தையை விட
என்னிடம் தான்
அதிகமாக அழுதாள்..
நான் நினைத்தது
வரவில்லையாம் ...

தேவதை
நான் படித்த கல்லூரியில்
காலடி வைத்தது!
சுவாரஸ்யம் கூடிப்போனது ..
தினசரி தேரோட்டம் !
உடுத்துவதிலும்
உண்பதிலும்
நடப்பதிலும் - செல்லமாய்
நடிப்பதிலும்
அவளுக்கே உரிய
அத்தனை அழகும்..

விடுமுறை நாட்களில்
காக்கிச் சட்டை
கல்லூரி காவலாளிக்குத்
தெரியாமல்
கள்ளத்தனமாய்
கைபிடித்து
நடந்திருக்கிறோம் ..

சித்திரைப் பௌர்ணமி
நடு இரவு..
'நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன் '
பாடி முடித்ததும்
நிலா நனைந்தது!
கண்ணீரில் காதல் சொன்னாள்..
"காமம் வேண்டாம் - திருக்
கல்யாணம் வேண்டாம்
காதல் போதும் " - என்று
காவியம் பேசினாள்..
அதுவரை நானும்
அவள்
கண்கள் தாண்டிப்
போனதில்லை!
என்னில் அவளும்
அவளில் நானும் - என்றும்
எப்போதும் நிரந்தரம்!

அணில்

இன்றைய வண்டிச் சக்கரத்தின்
இடையே மாட்டிய அணில்
என்
கல் நெஞ்சை கசக்கிப் போனது ..
எடுத்துக் கொணர்ந்து
எண்ணெய் தேய்க்கையில்
ஏனோ என் கண் நனைந்தது ..
சுவாசத்திற்கு எங்கும்
அணிலோடு
தீர்ப்பிற்காக ஏங்கும்
என் மனம் ..
இக்கணம் ,
இம்மை மறுமை
எல்லாம் கடந்து
எங்கோ கால வெளி கடந்து
முப்பரிமாணத்தில்
என் முகம் தொலைந்து கொண்டிருக்கிறது..

Friday, October 7, 2011

வாகை சூட வா

சமீபத்திய திரைப் படங்களில் முக்கியமான ஒரு பதிவாக வாகை சூட வா , சற்குணம் என்ற இயக்குனரின் படைப்பை குறிப்பிடலாம் ..சூளையின் செங்கல்லில் 'அகரம்' எழுதப் படுவது கண்களில் ஒரு துளி உணர்ச்சியை கொணர்ந்தது....கிராமப் புற வாழ்வின் அழகான அம்சங்களை பட்டியலிடும் ஒளிப் பதிவு பாராட்டத் தக்கது...பின்னணி இசை கதையின் ஆழத்தை நமக்கு உள்ளே விதைப்பதில் உதவுகிறது...எத்தனையோ கிராமங்களில் சமூகப் பணியாற்றி வரும் பல்வேறு ஆசிரியர்களுக்கு இத் திரைப்படம் ஒரு நிஜமான சமர்ப்பணம்..ஈஷா வித்யா வில் நானும் இதை செய்வதில் பெருமை கொள்கிறேன் ....

Wednesday, October 5, 2011

பயணம் சிறிது இடைவெளிக்குப் பின்..

dear friends..
pls wait for the remaining....

தேவதைக்கு தந்த முத்தம் (தொடர்ச்சி 3 )

குடும்பத்துடன் கோவில் சுற்றுலா

கூடவே நானும்..

நிலா

பூமியை விட்டு

கோவிலை சுற்றியது...

இரவுப் பயணம்

இருக்கைகள் அனைத்தும்

இமை மூட

இவள் மட்டும்

கண்களால்

கவிதை எழுதினாள்!

எதிரே நானும் ..

முழு இரவும்

கண் திறந்தே தூங்கினாள்..

இன்றைய பயணங்களில் - என்

இமைமூட - அவள்

இமை திறக்கிறது .

இறுதியற்ற பயணம்

இந்தக் காதல்..

அவள் வீடு

செடிகளற்ற நந்தவனம் !

ஓர் நாள்

யாருமற்று இருந்தது .

என்னுடைய கட்டளைப்படி

தேக்கு மரக்கட்டில் - அவளை

தாலாட்டிக் கொண்டிருந்தது

நமக்குப் பிடித்தவர்கள்

இமை மூடி தூங்குவதை

கண் கொட்டாமல் பார்ப்பது

சுகம்!

வியர்வை - அவள்

அழகைக் கரைக்க முயற்ச்சிக்க

நிலா நடுக்கம் கண்டது!

நிலைகுலைந்து நானும்

நிலவின் நெற்றியில்

நாலு விரல் வைத்து

முதன்முறை தொட்டேன் !

சிலிர்த்தெழுந்து - உடல்

சுருக்கிக் கொண்டாள்!

கை பிடித்து

"காய்ச்சல் சரியாகி விடும்" என்றேன் ..

கண் கலங்கி

அவள் விட்ட

ஒரு சொட்டு கண்ணீர்

இன்றும் - என்

உள்ளங்கையில்

உஷ்ணம் கூட்டுகிறது!

"வசியக்காரா வசியக்காரா" - என

வளைந்து நெளிந்து

தன்னிலை மறந்து

தேவதை ஆடினாள்..

தற்செயலாய்

நான் நுழைய

தொட்டால் சிணுங்கியாக

தாவணிக்குள்

காணாமல் போனாள்..

பச்சைத் தாவணி

வெட்கத்தில்

சிவந்து தான் போனது..

..

அதிகாலை நாலறை

வேதியியற் புத்தகத்திலும்

நண்பகல் சமையலறைச் சுவரிலும்

சாயுங்காலம்

குத்து விளக்குத் திரியிலும்

நடுநிசி

மொட்டை மாடி நிலவிலும்

என் முகம் தெரிந்ததாம் !

லேசாகச் சொல்லிப் போனாள்

இருபத்து நான்கு

மணி நேரமும் - என்னோடு

இருப்பதாகவும்

என் பெயரை மட்டுமே

சுவாசிப்பதாகவும்

கவிதை பேசிப் போனாள் ...

பொய்யாகத் தெரியவில்லை - சிறிது

பயமாகத்தான் இருந்தது.

பாசத்தில் பைத்தியமாகி விடுவாளோ ?

என்று!

பாட்டியுடன் பேசினாலும்

பேத்தியைக் கொஞ்சினாலும்

ஓரப்பார்வை முழுவதும்

எனைச் சுற்றியே இருக்கும் ..