Wednesday, October 5, 2011

தேவதைக்கு தந்த முத்தம் (தொடர்ச்சி 3 )

குடும்பத்துடன் கோவில் சுற்றுலா

கூடவே நானும்..

நிலா

பூமியை விட்டு

கோவிலை சுற்றியது...

இரவுப் பயணம்

இருக்கைகள் அனைத்தும்

இமை மூட

இவள் மட்டும்

கண்களால்

கவிதை எழுதினாள்!

எதிரே நானும் ..

முழு இரவும்

கண் திறந்தே தூங்கினாள்..

இன்றைய பயணங்களில் - என்

இமைமூட - அவள்

இமை திறக்கிறது .

இறுதியற்ற பயணம்

இந்தக் காதல்..

அவள் வீடு

செடிகளற்ற நந்தவனம் !

ஓர் நாள்

யாருமற்று இருந்தது .

என்னுடைய கட்டளைப்படி

தேக்கு மரக்கட்டில் - அவளை

தாலாட்டிக் கொண்டிருந்தது

நமக்குப் பிடித்தவர்கள்

இமை மூடி தூங்குவதை

கண் கொட்டாமல் பார்ப்பது

சுகம்!

வியர்வை - அவள்

அழகைக் கரைக்க முயற்ச்சிக்க

நிலா நடுக்கம் கண்டது!

நிலைகுலைந்து நானும்

நிலவின் நெற்றியில்

நாலு விரல் வைத்து

முதன்முறை தொட்டேன் !

சிலிர்த்தெழுந்து - உடல்

சுருக்கிக் கொண்டாள்!

கை பிடித்து

"காய்ச்சல் சரியாகி விடும்" என்றேன் ..

கண் கலங்கி

அவள் விட்ட

ஒரு சொட்டு கண்ணீர்

இன்றும் - என்

உள்ளங்கையில்

உஷ்ணம் கூட்டுகிறது!

"வசியக்காரா வசியக்காரா" - என

வளைந்து நெளிந்து

தன்னிலை மறந்து

தேவதை ஆடினாள்..

தற்செயலாய்

நான் நுழைய

தொட்டால் சிணுங்கியாக

தாவணிக்குள்

காணாமல் போனாள்..

பச்சைத் தாவணி

வெட்கத்தில்

சிவந்து தான் போனது..

..

அதிகாலை நாலறை

வேதியியற் புத்தகத்திலும்

நண்பகல் சமையலறைச் சுவரிலும்

சாயுங்காலம்

குத்து விளக்குத் திரியிலும்

நடுநிசி

மொட்டை மாடி நிலவிலும்

என் முகம் தெரிந்ததாம் !

லேசாகச் சொல்லிப் போனாள்

இருபத்து நான்கு

மணி நேரமும் - என்னோடு

இருப்பதாகவும்

என் பெயரை மட்டுமே

சுவாசிப்பதாகவும்

கவிதை பேசிப் போனாள் ...

பொய்யாகத் தெரியவில்லை - சிறிது

பயமாகத்தான் இருந்தது.

பாசத்தில் பைத்தியமாகி விடுவாளோ ?

என்று!

பாட்டியுடன் பேசினாலும்

பேத்தியைக் கொஞ்சினாலும்

ஓரப்பார்வை முழுவதும்

எனைச் சுற்றியே இருக்கும் ..

தேவதைக்கு தந்த முத்தம்..(தொடர்ச்சி 2 )

என் பெயரை

வேறு எவரும்

இப்படி உச்சரித்ததில்லை !

என் பெயர்

எனக்கே பிடித்துப் போனது..

அவள் கண்கள் பற்றிய

நினைவுகளில்

அவள் பெயரைக் கூட

மறந்திருக்கிறேன் !

யோசித்து பின்

வான் பார்க்கையில்

நினைவில் வரும்

அவள் பெயர்...

நிலா...

நிலா

தேய்ந்து தேய்ந்து

வளர்ந்து கொண்டிருந்தது

...

தொலைதூர தனிமையில்

தொலைபேசியில்

மீண்டும்

அவள் குரல்..

நீண்ட கால

தவத்தில் பெற்ற தீட்சை !

நான் பேச வேண்டியதை

அவள் பேசிக்கொண்டிருந்தாள்..

" என்ன சொக்குப் போடி

போட்டிங்க?" என்றாள்

எங்கோ

நட்சத்திரங்களுக்கிடையில் நான்!

அவள் கண்கள்

எனக்கு உணர்த்தியவற்றை

என் கண்கள்

அவளுக்கு உணர்த்தின போலும்..

நானாக மாறிப் போயிருந்தாள்

நிலா..

அமாவாசை இரவுகளில் கூட

என்னோடு நிலா!

...

ஆஞ்சநேயர் சந்நிதி

ஆழமாய் நான்

ஆர்வமாய்

என் பெயர்

என்னை அழைத்தது..

கையில்

கணக்குப் புத்தகத்துடன்

காலில் விழத் தயாராய்

நிலா ..

பொது இடத்தில்

பயமும் பதற்றமுமாய்

" போய் வா " என்றேன் !

புன்னகை

என் கண்முன்

நடந்து போனது

பரீட்சை எழுத ..

....

பல நாட்கள்

பேருந்து நிலையத்தில்

காத்து நின்றேன்!

பேருந்திற்காக அல்ல

ஐந்தாறு இருக்கைகள் முன்னால்

கூட்ட நெரிசலில்

அவள் கூந்தல்

எனைப் பார்க்கும் ..

இறங்கிப் போகும்போது

அவள்

உடல் மொழி

எத்தனையோ

இலக்கணக் கேள்விகளை

என்னிடம் கேட்கும் !

நாங்கள்

BYE சொல்வதில்

நம்பிக்கை வைத்திருக்கவில்லை ...

தேவதைக்கு தந்த முத்தம் ..(தொடர்ச்சி)

என் தேவதைக்கு

நான் தந்த முத்தம்!

உலகியல் மறந்தது

உணர்ச்சிகள் அற்றது

உருவம் கூட இல்லாதது

ஆனால்

உற்றுப் பார்க்கின்

உயிர் இருக்கும்

உயிர் மட்டுமே இருக்கும்..

எனக்குத் தெரிந்து

உலகில்

வேறெந்த உயிர்களும்

இந்தளவு

உன்னதப் பிணைப்பில்

இருந்திருக்க முடியாது !

காமம் கடந்த காதல்

சாத்தியம் !

உதாரணம்

என் தேவதைக்கு

நான் தந்த முத்தம்!

யாருமற்ற கடற்கரையில்

தன்னந்தனியே பார்க்கும்

சூரிய உதயம்

எங்கள் முதற் சந்திப்பு..

அவள் கண்கள்

கண்ணுக்கு தெரியாத

கோடானு கோடி

உயிர்களின் பிறப்பிடம் !

அவற்றின்

ஒரு நொடி இமைத்தல்

ஒட்டு மொத்த உலகத்தையே

இருட்டாக்கி விடும் !

அப்பாவையின் பாவைகள்

சிறிதளவு

சமச்சீர் அற்றதாய் தோன்றின !

அவற்றின் புலத்தில்

என் கிரங்கிய கண்கள்

கலந்த நொடி

முதன்முறை

என் இதயத்துடிப்பு

உணரச் செய்தது ..

இதயத்தின்

காதல் கோட்டைக்கு

காவலர்கள் கண்கள்!

அவள் நாவிலிருந்து

தெத்திப் பற்களைத்

தாண்டிச் சிதறிய

முதல் வார்த்தை

'ஹாய்..'

இருந்தும் இல்லாத

என்

அத்தனை நரம்புகளையும்

மீட்டிப் போனது !

இன்றும்

கண் மூடினால்

அந்த இசையை

உணர முடிகிறது..

முதல் முறை

பார்த்தது

அவள் பள்ளிச் சீருடையில் !

அதன் நிறம்

என்

அபிமான நிறமாகிப் போனது

எனக்கே தெரியாமல்...

முதற் சந்திப்பில் - அவள்

முழு நீள முடியை

தரிசிக்கத் தவறி விட்டேன் !

என்

கற்பனைக் காதலியின்

கரிய கூந்தலை

எத்தனையோ முறை

கண்களில் ஒத்தியிருக்கிறேன் ..

பின்னிப் பூவும் வைத்திருக்கிறேன் ..

பின்னாளில் கண்ட

அவள் கூந்தல் - என்

கற்பனைக் காதலுக்கு

மலர் வளையம்

வைத்துப் போனது..

ஜன்னலுக்குப் பின்புறம்

அவளுக்கே தெரியாமல்

நான் உருவிய

ஒற்றை முடி

இன்றும் - என்

மதிப்பு மிக்க காகிதங்களை

ஆசீர்வதிக்கிறது..

இல்லை..

என்

வெற்றுக் காகிதங்களை

மதிப்பு மிக்கதாக

மாற்றுகிறது ..

தேவதைக்கு தந்த முத்தம்..(தொடக்கம்)

முத்தம்
பெறுதலை விட
கொடுத்தல் சுகம்..
நினைவில் இல்லாத
தாயின் முதல் முத்தம்
கனவில் கிடைத்த
கற்பனை காதலியின் முத்தம்
வெற்றியில் பெற்ற
நெற்றி முத்தம்
தோல்வியில் கிடைத்த
ஆறுதல் முத்தம்
தண்ணியடிச்ச நண்பனின்
காமெடி முத்தம்..
பேருந்து நெரிசலில்
எதிர்பாராத முத்தம்
இறுக்கம் தளர்ந்து
எதற்கும் தயாராய்
வருடங்களை கடந்த
வாலிப விரதத்தை
ஒரே நொடியில்
முடித்து வைத்த - என்
மனைவியின் முதல் முத்தம்...
இவை
எல்லாவற்றையும் விட
ஒரு படி மேல் !!!
என்
தேவதைக்கு தந்த முத்தம்...

Tuesday, October 4, 2011

verses follow..

dear all,
u might have seen few lines of verses ....my full verses will be updated soon...need to type a lot...

வறுமை

ஈரம் பார்க்காத தலை,
ஈரம் மட்டுமே பார்த்த கண்கள்
தூரம் பார்த்திருந்த வாழ்க்கை
வற்றிப் போன கிணறு
வற்றாத உணர்வு..
பல்கிப் பெருகும் எச்சில் ,
மல்கி உருகும் மார்பு
தொடை இழந்த நடை
இடை இழந்த பிள்ளை
இன்னும் இருக்கிறது உலகம்
நாங்கள் யாரும் இல்லாமல்...