Monday, May 1, 2017

புழுதி வாசம்

காவியத்தலைவன் ஒருவன்
நீண்ட என் பயணத்தில் குறுக்கிட்டான்
ஏதேனும் பேசு என்றான்
அவன் கண்கள்
நிலைகொள்ளாமல்
சுற்றுமுற்றும் அலைந்தன
கைகள் நடுங்க
தண்ணீர் தண்ணீர் என்றான்
எதோ சொல்ல வாயெடுத்தவன்
மயங்கி என்
மடியில் வீழ்ந்தான்
பரபரத்து ஓடி
ஈரத்துணி கொண்டு
விரைகையில்
நூற்றாண்டுகள் பழைய
அவன் ஆடையின் புழுதி
என் கண்முன்
சுழன்று வீசியது
அந்த கணம் தான்
என் கடைசி நினைவு
ஏதோ ஓர் ஓலைச்சுவடியின்
இரு வரிகளுக்குள் சிக்கி
வெளியேறத் தவித்திருக்கிறேன் இப்போது
புழுதி வாசம்
இப்போதும் எனைச்சுற்றி


மறந்துபோன கணம்

ஒவ்வொரு முறை
எட்டிப்போகும்போதும்
மெல்ல அழைத்து
நீடிக்கச் செய்கிறது
எனக்காக இடப்பட்ட
என் பெயர்
குரல்தேடி திகைத்து நிற்கையில்
பின்னிருந்து தோள்தட்டி
சிரித்துப் போகிறது
நீண்டநாள்
மறந்திருந்த
அந்த சின்னஞ்சிறிய நான்.


பெருங்கவியுடன் ஒரு நடை

சில்லிடும் பனிமூட்டத்தினிடையே
பெருங்கவி ஒருவரோடு நடந்தேன்
அவரது அமைதி ஏனென்றேன்
அது மட்டும்தானே என்றார்
அமைதியிலிருந்து கவி எப்படி என்றேன்
அதிலிருந்துதானே என்றார்
அது சரி, ஆனால் எப்படி
என விழித்தேன்
தொலைதூரத்து மரக்கூட்டத்தை
சுட்டிக்காட்டி
அந்த ஒற்றை மரம் தெரிகிறதா என்றார்
அதன் தவம் புரிகிறதா என்றார்
இப்படித்தானே எப்போதும் என்றார்
இந்தப் பெருவெளிதானே
என் கவிதை என்றார்
சற்று யோசித்து
என் கவிதையா என்ன? என்றார்
வாழ்நாள் முழுதும்
பறவைகளைப் படிப்பவனுக்கு
ஏன் பறவைகளைப் பற்றி
எதுவுமே தெரியவில்லை என்றார்
அவர் விரல்களைப் பிடித்து
முத்தமிட எத்தனித்தபோது
சிறகடித்த ஓசை
என்னருகில்...

Tuesday, January 6, 2015

நீயற்ற நம் கனவு

 அந்த வறண்ட நிலத்தின்
நிழல்களற்ற வெளியில்
குளிர் காற்று தேடி
தொலை தூரம்
பறந்திருந்தேன் நான்..
...
நீண்ட நாட்கள்
காத்திருந்த மௌனமும்
வேண்டுமென்றே தனித்திருந்து
எனை நானே
வதைத்துக் கொண்ட வலியும்
நீ விட்டுச் சென்ற
ஒரு பிடி மண்ணும்
அது சார்ந்த பாரமும்
கடக்க வேண்டிய தூரமும்
இமைகளை அழுத்தி
எனை பூமிநோக்கி இழுத்த
உறக்கமும் – எல்லாமும்
ஒன்றாய்ச் சேர்ந்து – எனை
வீழ்த்தி – அந்தப்
பாலைப் புழுதியில் – என்
மொத்தத் திமிரையும்
மண்ணோடு மண்ணாக்கின...
...
அதுவே என்
கடைசி நாளாய்
இருந்திருக்கக் கூடும்..
அவ்வளவு சீக்கிரம்
எனை நீ
சொர்க்கத்துக்கு
அனுப்பி விடுவாயா என்ன?
...
மீண்டு விழிக்கையில்
தொலை தூர மேகத்தினூடே
முகம் காட்டாது
எனை விலகிச்
சென்றிருந்தாய் நீ...
...
கூவி அழைக்கத் துடித்த
என் நாவும் – கூடப்
பறந்துவரத் தவித்த
என் உயிரும்
செய்வதறியாது
தரையில் தத்தளிக்க
எதையும் கண்டுகொள்ளாமல்
உன் விலகியிருத்தலைத்
தொடர்ந்தாய் நீ...
இரக்கமற்றவளாய் நீ
தோன்றிய
ஒரே தருணம் அது...
...
நீ எதைச் செய்தாலும்
அது எனக்காகத்தான்
இருக்கும்...
இதுவரையிலும் – நீ
எனை செதுக்கிய
ஒவ்வொரு தருணத்திலும்
இதை நினைத்துதானே
உனை நம்பியிருந்தேன்..
இப்போது
முகம் கூட
காட்டாது – எனை
முடித்துவிட
முடிவெடுத்தாயோ?..
...
நான் மௌனத்தில்
புகுந்து கொண்டது
உனக்காக மட்டுமே
என்பதை மறந்துவிட்டாயோ?
தெரிந்தும் ஏன்
இந்தப் புறக்கணிப்பு?
...
நீ காணாமல் போன
புள்ளியைப் பார்த்திருந்து
உன் நினைவுகளிலேயே
நான் புதைந்து போவதுதான்
எனக்காக நீ
தேடிக் கொணர்ந்த
சாதல் தாண்டிய
காதலின் பரிசா கண்ணம்மா?
...
அழகின் உச்சத்தில்
நமக்காக நாம் கட்டிய
மர வீடும்
விழுதுகளின் ஊடாக
உன் புடவைகளின்
பின்னலில் உருவான
ஒய்யார ஊஞ்சலும்
எப்போதும் கனன்று கொண்டிருந்த
சருகுகளின் கதகதப்பும்
தெரிந்தும் தெரியாமலும்
நாம் இசைத்திருந்த
பெயரற்ற ராகங்களும்
சின்னச் சிரிப்புகளும்
சீண்டுதலும் – அதன் பிந்தைய
உன் ரகசியக் கண்ணீரும்
அதற்கான என்
வெகுளித்தனமான
சமாதானச் சமிக்கையும்
நினைவில் வந்து போகின்றன...
...
மீண்டெழுந்து
ஆரத் தழுவி
அழுது நீ முடித்ததும்
நான் கேட்பேன்,
“ஏன்டீ, உனக்கு
சூடு, சொரனையே கெடையாதா?”
நீ உன்
உள்ளங்கையக் காட்டி
கண்ணால பேசுவ பாரு,
அந்த நொடி,
நான்
இன்னமும் என்
கண்ணுக்குள்ள
கட்டி வச்சிருக்கேன்...
...
இழக்க முடியாத,
இழக்கக் கூடாத - என்
இரண்டாம் குரல் தானே நீ ...
இப்போ மட்டும்
ஏன் இந்த
அபஸ்வரம் பாடத்
துணிந்தாய் கண்ணம்மா?
...
நீயாக வந்து – உன்
சுவாசம் சேர்த்து
கை தந்து – உன்
மாரோடு அணைத்து
ஒரு துளி கண்ணீர் விட்டு
தூக்கி எழுப்பாவிடில்
இந்த உயிர்
இப்படியேதான்
உறைந்து கிடக்கும்...
எத்தனை யுகங்களாயினும்,
இருக்கின்ற எல்லாமும்
இல்லாமற் போயினும்,
தளிர்க்கக் காத்திருக்கும்
என்
காதலும் – நீ
நாவில் தொட்டுப்
பேச வைத்த – என்
கவிதையும்...
...
இந்தத் தணல் மணலின் தகிப்பும்
உனைத் தேடும் தவிப்பும்
வெறும் கனவாய்
இருந்துவிடக் கூடாதா என்றுதான்
இப்போதும் எண்ணியிருக்கிறேன்...
என்ன செய்ய?
உயிரோடிருத்தலையும்
உணர்வின் உச்சத்தில் இருத்தலையும்
ஏன்
உயிரற்றிருந்த ஒருசில கணங்களையும்
உனைத்தவிர
யாரெனக்குத்
தந்துவிட முடியும் கண்ணம்மா?
..
நான் பிறந்ததும்,
வாழ்ந்ததாய் நம்பியிருந்ததும்
இப்போது சகித்துக்கிடக்கும்
நீயற்ற வலியும்
என்னாலன்றி உன்னால்தானே
சாத்தியம் கண்ணம்மா?
..
ஒருவேளை
உன் நீண்ட துயிலின்
அழகிய கனவின்
ஒரு வேண்டா இடைச்செருகல்
கதாபாத்திரம்தானோ நான்?
இல்லை,
நான் நம்பியிருப்பதுபோல்
நீயற்ற நொடிகளனைத்தும்
நான் – வெறும்
கனவில்தான் வாழ்கிறேனா?
இல்லை,
நீயே என் கனவு மட்டும்தானோ?
...
பதில் சொல்லவாவது
என் கனவில் – இல்லை
என் கனவாய்
வந்து போ கண்ணம்மா..
...


Sunday, January 4, 2015

நீயற்ற நம் ஊர்

நேற்றைய தூக்கமற்ற இரவில்
இடையிடையே – வந்துபோன
ஏதேதோ முகங்களுக்கிடையே
தொலைவில்
ஒரு கூட்டத்திலிருந்து
நீ
என்னை அழைத்தாய்...
...
பிரமையாகத்தான் இருக்குமென்று
கண்டுகொள்ளாது
இசையில் மூழ்கி
இளைப்பாறப் பார்த்தேன் ...
பாடல்கள் தொலைவில் போய்
உன்குரலில்
ஒலிப்பதாய்த் தோன்ற
எனக்கு நானே முணகி
உன் குரலை
விலக்கியிருக்க முயன்றேன்..
...
வேண்டுமென்றே
விளக்கனைத்தும் அணைத்து
இருளில் மூழ்கிப்போய்
உன் நினைவில்
சிறிது நேரம்
நிலைத்திருந்தேன்..
உண்மையில் – அது
நீண்ட நேரம்
நீடித்திருக்க வேண்டும் ..
....
உறங்கி விழுந்து
திடுக்கிட்டு – உன்
மடியில் – உன்
மூச்சுக்காற்றில் – உன்
சுருள் கூந்தலின் ஊடே
நீ
‘கண்ணா’ என அழைக்க,
சூரியனின் முதல் கற்றை
எனை
சுய நினைவிற்குள் இழுத்தது..
....
தினசரி
உனக்குப் போட்டியாக
முன்னெழ முயற்சித்து
தோற்றுப்போகும்
சூரியன் – இப்போதெல்லாம்
மேக தேவதையின்
உள்ளங்கைச் சூட்டில்
உற்சாகமற்று
உறங்கிக் கிடக்கிறான்...
...
எனக்காக வந்து போன
நிலவும் – நீ
சுட்டிக்காட்டி கதைசொன்ன
சோடி நட்சத்திரங்களும்
நெடிதுயர்ந்த
மரங்களின் பின்
ஒளிந்துகிடக்கின்றன
...
அவைகள் ஒன்றுகூடி
இதுவரை யாரும் கேட்டிராத
ராகமொன்றை இசைக்கின்றன
சுகமா சோகமா – என
சொல்லவொண்ணா அது
எனக்கு மட்டும்
இமை மூடும் போதெல்லாம்
கேட்கிறது..
அவ்விசை எனக்கு
ஏதோ சொல்ல நினைப்பதாய்
நான் நினைத்துத் தவிக்கிறேன்...
...
எனக்கு மிகவும் பிடித்த - நம்
இரு சக்கர வாகன சவாரி
இப்போது
இயந்திரத்தனமாகி
திசையற்று அலைந்து திரிகிறேன்...
வழியே,
வழக்கமாக வணங்கிப் போகும்
ஐயப்பன் கோவிலையும் மறந்து,
ஊடே நான் முணங்கும்
“பூவாசம்” பாடலற்று,
வார்த்தையற்ற,
காற்றற்ற,
வண்ணமற்ற – ஏதோ
ஒரு தொலைதூர உலகில்
நான்
பயணித்திருக்கிறேன்...
...
கடந்து போகும்
கிராமங்களெல்லாம் – நான்
இதுவரை காணாதன...
கூடவே வருகின்ற
நீண்ட மலைத்தொடரும்
இப்போது
ஆழமான பள்ளத்தாக்காய்
மாறிவிட்டது..
...
யானைப் பாதையாய்
உனை பயமுறுத்திய – அந்த
ஆளற்ற நெடுநிலம்
எங்கே போயிற்று?
...
உன் புன்னகைக்காகவே
ஒருமுழம்
அதிகம் தரும்
பூக்காரப் பாட்டியும்
அவள் பெட்டிக்கடையும்
எங்கே?
...
நாம் இருவரும்
சோடியாய் முகம்பார்த்து
லேசாகச் சிரித்துப் போகும்
சாலையோர கண்ணாடிக் கடையும்
காணாமல் போனது ஏன்?
...
ஒரு நாள் விடாமல்
உனைக் கேட்டுப் போகும்
பக்கத்து வீட்டு ராஜி
எனைப் பார்த்து முறைப்பதாய்த்
தோன்றுவது ஏன்?
...
எப்போதும் கவிதையில்
அழகைக் கூட்டும்
என் வார்த்தைகள் – இன்று
தறிகெட்டுப் போவதேன்?
...
இன்று நீ அனுப்பிய
நீல வண்ணப் புடவை
நிழற்படத்தைப் பார்த்து
தங்கச்சி கேக்குறா
“அக்காக்கு வயிறு வந்துருச்சுலா?”ன்னு
எனக்கென்னவோ
என் வயிறு பெருசான மாதிரி
வெட்கம் வேறு...
எனக்கு நானே
சிரிச்சுக்குறேன்..
...
இன்னும் கொஞ்ச நாள்தான்னு
உன் மனச தேத்திவிட்டுட்டு
இப்படி நான்
பொலம்பறேன் பாரு கண்ணம்மா!
...
சரி சரி
மறக்காம மாத்திரய  சாப்பிட்டு
நல்லாத் தூங்கு
நானிருக்கேன் உங்கூட ...
...
நீயும் எங்கூட
.....






Friday, January 2, 2015

நீயற்ற நம் வீடு


நீயற்ற நம் வீடு
எனை தினந்தோறும்
வெறித்துப் பார்க்கிறது..
...
தூங்கும்போதும்
கனவுகளின் இடையிலும் – பின்
விழித்தெழுந்து
உள்ளங்கை சேர்த்து
நமக்கு மட்டுமே வருகின்ற – காதல்
ரேகைப் படகைக் கண்டு – நான்
உன்னை நினைத்துச் சிரிக்கையிலும்,
உன் வாசம் ஈர்த்து
கோவிலாகிப் போன – நம்
படுக்கையறைச் சுவர்கள்
எனைப் பார்த்து
ஏதோ கேட்கத் துடிக்கின்றன..
...
நன்றாக வந்துகொண்டிருந்த
சமையலறைச் சில்லுக் குழாய்த் தண்ணீரும்
எனைப் பார்த்து
ஏதோ சொல்லிச் சிணுங்குகிறது...
..
உனக்காக நான் வரைந்த
உனக்குப் பிடித்த யானை முகமும்
எனக்குப் பிடித்த சிவரூபமும்
சேர்ந்த தியானச்சாமி
எனைப் பார்த்து
முகத்தைத் திருப்பிக்கொள்கிறது
...
“தினசரி தண்ணீர் விடு!!”
என நீ சொல்லிப் போக
இல்லாத பழக்கத்தை
இஷ்டப்பட்டு பழகி
அது வாடாமல் பார்த்து,
உனைத் தேடியிருக்கும்
பொழுதுகளில் – என்
பால்கனித் தோழியாகியிருந்த
துளசிச் செடியும்
எனைத் தவிர்த்து
நேற்று முளைத்த
அருகம்புல்லோடு
ஆசை வார்த்தை பேசி
எனைப் பாடாய்ப் படுத்துகிறது
...
சரி! அதுதான் போகட்டும்...
நீ மட்டுமே உலகை ரசிக்கும்
குளியலறைச் சன்னலில்
சமீபத்தில் ஒரு சிட்டுக்குருவி...
நான் பார்க்காத நேரத்தில்
நேர்த்தியாக கூடுகட்டி
குடிவந்து சேர்ந்தது...
என்ன தைரியம்!
...
இது தெரியாமல்
உனக்குப் பிடித்த ஜிங்கிலமணி
பாடலை நான்
கொலை செய்து
கர்நாடகத்தில் கத்தித் தொலைக்க
அந்தச் சின்னஞ்சிறு குருவி,
சொல்லாமல் கொள்ளாமல்
காணாமல் போனது..
...
அது தாய்வீட்டிற்கு
போக முடியாமல்
அடைகாக்க – நம் வீடு
தேடி வந்திருக்கும்...
...
நான் இப்போது
உன் குளியலறைப் பக்கம்
போவதேயில்லை,
அது விட்டுச் சென்ற கூட்டை
இன்னும் அதே இடத்தில்
விட்டு வைத்திருக்கிறேன்
நீ வந்து – எனக்குப்
பாவ விமோசனம் கொடு
கண்ணம்மா...
....
சமீபத்திய – என்
கவியுணர்ந்த அக்கா ஒருத்தியும்
கண்ணீர் விட்டு
“கண்ணம்மா குடுத்து வச்சவ” ன்னு
இன்னும் கொஞ்சம்
உம்முகத்த – என்
நெஞ்சுக்குள்ள
பச்சக்குத்தி விட்டுட்டா...
...
நான் என்னதான் செய்ய?
நீயே சொல்லு கண்ணம்மா!
...
நீ
நிறைமாதம் ஆறதுவர
என்
சிறைவாசம்
கொடுமை கண்ணம்மா!
...
நீயில்லாத
நம் வீட்டை – இனி
நீங்கியிருக்கவே நினைக்கிறேன்..
ஆனாலும் - நீ
கிழிக்காமல் விட்டுச் சென்ற
போன வருஷ நாள்காட்டியும்
இன்னும் அணையாத
காமாட்சி விளக்கும்
சுவரொட்டிய – சோடி
மயிலிறகும்
இடைச்சொருகி
எனைப்பார்த்து
ஏளனமாய்ச் சிரிக்கும் – உன்
நிழற்படமும்
எனை எங்கு போயினும்
ஈர்த்துவந்து
உன் வாசத்தில்
உருக வைக்கின்றன...
..
இப்போதைக்கு ஆறுதலாய்
உன் துப்பட்டாவைச்
சுற்றிக்கொண்டு
வான் பார்த்து நானும்
எனைப் பார்த்து நிலவும்...
...







Saturday, August 23, 2014

காதல்...மொழி...புன்னகை...மௌனம்..

நீண்ட நாட்களாய் வராது
விலகி நின்ற
கண்ணம்மா கவிதையும்
நானே விலக்கி வைத்திருந்த
கதைசொல்லிக் கவிதையும்
அந்த ஒரு நொடியில்
நேற்றைய ரயில் பயணத்தில்
சிலிர்த்து துளிர்விட்டது...
என்னையும் மீறி,
திமிறிக்கொண்டு - இப்போது
வேண்டா வெறுப்பாய் - எனை
எழுத வைத்துப் பார்க்கிறது
ஏதுமற்ற அப்பார்வை...
...
அவள் பார்வை
என் மீது விழவில்லை..
அதென்ன எதிர்பார்ப்பு எனக்கு?
அவள் அப்பயணத்தின் முழுமைக்கும்
எனை கவனித்ததாய் தெரியவில்லை...
எதற்கு கவனிக்க வேண்டும்?
சொல்லப் போனால்,
அவள் தனித்தே இருந்தாள் ,
உலகத்தின் எந்தச் சத்தமும்
அவளோடு இல்லை ...
அவளுடைய சத்தமென்று ஒன்றும்
இந்த உலகத்தில் இல்லை...
பேசுவதற்கு அவள்
கையாண்ட மொழி
மிகவும் அழகான
புன்னகை!!!
புன்னகை மட்டும்!!!
...
பிறந்தது முதல்
ஒரு பெண் புன்னகையில் மட்டுமே
பேசித் திரிந்து எப்படி
வாழ்ந்திருக்க முடியும்?
...
சில மலைப் பிரதேசங்களைத்
தாண்டி அவ்வப்போது
அவளைத் தவிர்த்து - நான்
தனித்து ஏனோ
சோகமாகிப் போனேன்..
...
மீண்டும் அவள்புறம் - நான்
திரும்பியபோது - அவள்
புன்னகையை ஒருவன்
அரவணைத்துப் பருகியிருந்தான்..
தாய் மடி சேய் போல - அவளும்
அவன் கைகளில்
சுருண்டு சாய்ந்து
காற்றில் ஏதோ
எழுதிக் காண்பித்தாள் ...
...
அவன் - வீரன்,
நல்ல ஆண்மகன்,
அவன் கண்கள்
அவளைத் தவிர,
வேறு எதையும்
ஒரு நொடியும்
கண்டுகொள்ளவில்லை...
அவன் - உலகின்
எல்லா சத்தங்களோடும்
இணைந்து வாழ்பவன்,
தன் சத்தத்தை இணைத்து
உலகைத் தொந்தரவு
செய்ய வேண்டாமென
நிச்சயம் அவன்
முடிவெடுத்திருக்க வேண்டும்...
அவளுக்காகவே
தனித்துப் பிறந்து
எங்கிருந்தோ வந்து
அவளைப் பார்த்திருப்பான் போலும்..
...
அவள் காற்றில்
விரலெழுதிப் பேச,
இவனும் இமையசைத்து
பதில் பேசியிருந்தான்..
அவன் ஒவ்வொரு இமைத்தலும்
அவளது புன்னகையை
ஒரு படி அதிகரித்தது...
...
அவர்களை - நான்
கவனிப்பதை - அவன்
நிச்சயம் கவனித்தேயிருந்தான்...
...
ரம்மியமான இசை
காதுகளுக்குள் கேட்டு,
அவளுக்கு அதை
ஸ்பரிசத்தில் விளக்கியிருந்தான்
அவன்..
இசை புரிந்ததுபோலவே
அவளும்
கண் சொக்கி
சாய்ந்திருந்தாள் ...
..
அவர்களுக்கிடையேயான
அந்த ஒவ்வொரு நொடியும்
எனக்குள்
விடையில்லா பல கேள்விகளையும் ,
சோகம் கலந்த ஆச்சர்யத்தையும்
அழுத்தி விதைத்தது..
...
அவர்கள்
காதல் படைத்து
போகுமிடமெல்லாம்
காதலின் வாசத்தைத்
தூவிச் செல்கிறார்கள்..
...
இரவில்,
அவள் கால்
தன் மடி வைத்து
அமுக்கி கொடுத்து
தனக்கு மட்டுமே கேட்கிற தாலாட்டை
தனக்குள்ளே பாடி
அவள் தூக்கத்துக்குள்
முதல் அடி எடுத்துவைக்க,
இவன் முதல் சொட்டு
கண்ணீர் விட்டான்...
...
இரவு முழுவதும்
அவள் முகம் மட்டுமே பார்த்து
இவன் முகம் முழுவதும்
நனைந்தே இருந்தது..
நானும் ,
என் திமிரும்
தூக்கமின்றி
வடக்கு நோக்கி
தனித்து இருந்தோம்...
...
என் கவிதையை மீட்டெடுத்து
தெரியாமலேயே எனக்குப் பரிசளித்து
ஏதோ ஒரு திசை நோக்கி
எதற்காகவோ அவர்கள்
தொடர்ந்து பயணிக்கிறார்கள்..
...
உலகின் எந்தச் சலனத்திலும் சிக்காமல்
ஆழ்கடலின் நிசப்தத்தோடு
அக்கடவுள்கள் எனக்குத் தந்த
தரிசனம், வரம்
நேற்றைய பயணம்...
...




Thursday, April 3, 2014

தனித்து விடப்பட்டவர்கள்


ஒவ்வொரு முறையும்
எங்கள் கதை
இப்படித்தான் சொல்லப்படுகிறது..

எமது வாழ்க்கை
பச்சைப் பசேல் சூழ்நிலையிலும்
மழை விழும் நாட்களிலும்
மிதமான தென்றலுக்கிடையேயான
சுகமான நடைகளோடும்
இனிமையாய் இல்லைதான்...

எங்கு நோக்கினும்
எமது சொத்து
நிலம் நிலம்
நிலம் மட்டுமே..
அதென்ன நிலம் மட்டுமா..
அது எம்குலத் தாய்..
எமது கடந்த காலத்
துக்கங்களை தனக்குள் தாங்கி
விம்மியிருக்கிறாள்..

அவள் கொண்ட வறட்சி
எமது இதயங்களில்
சூல் கொண்டு
முளை விடக் காத்திருக்கும்
புரட்சி வித்துகளை
அடைகாக்கவே ..

தவித்த வாய்க்கு
தண்ணீர் கிடைக்காமல்
தேடிக் கொணரப் போய்
இங்கிருந்து இல்லாமல் போனவர்கள்
நிச்சயமாய் கோழைகள் அல்லர்..
உலகின் ஏதோ மூலையில் - அவர்கள்
முன்பின் தெரியாத மனிதர்களின்
வலிகளைக் களைபிடுங்கி
வழிகளை விதைத்திருப்பார்கள் ..

இந்நிலத்தின் கானல் நீர்
காண்பதற்குத் தோற்றப் பிழைதான்,
ஆனால் ,
அது எம்மவரின் கனல் நீர்...
தவறிய பொழுதுகளை
மீண்டும் மீண்டும்
நினைந்து மீண்டெழ
திசையெங்கும் காற்றில்
புதைத்து வைத்த
கல்லறைகள்தாம் அவை..

எமை உற்றுநோக்கி
அவ்வப்போது வந்துபோகும்
ஞானியாகத் தோன்றும்
அந்தப் பக்கிரியை – நாங்கள்
கவனிக்காமல் ஒன்றும் இல்லை ...
எம்மோடு அவரும்
ஏதோ ஒரு புள்ளியில்
ஒன்றாகத்தான் தெரிகிறார்..

நிழல் தொலைத்து நிற்கும்
எமது நிகழ்காலமும்
நிஜம் தொலைத்து தேடும்
அவரது நிகழ்காலமும்
எங்களுக்கே தெரியாமல்
அடிக்கடி கைகோர்த்து
கதறி அழுதிருக்கின்றன....
இதை அவர் அறிந்திருக்க
வாய்ப்பில்லை...

அவர் யார் என்பதையோ
எதற்காக அலைந்து திரிகிறார் என்பதையோ
எம்மில் எவரும்
கேட்க விழைந்ததாய் நினைவில்லை..
முதல் முறை – அவர்
எங்களூர் வந்தபோதே
எம்மில் ஒருவராய்
எப்படியோ ஆகிப் போனார்..
எம் குடும்பங்களில் பல
அவரை
தேவ தூதராகக் கூட நினைத்து
வேண்டத் துவங்கியிருக்கின்றன...

பலமுறை – அவர் எம்மிடம்
பேசத் துணிந்து – பின்
பேசாமலே போகிறார் ..
ஆனாலும் – அவர்
சொல்லவந்ததை – நாங்கள்
உணர்ந்தே திரும்புகிறோம்...

எமது முகங்களை
நோக்கும்போதெல்லாம் – அவர்
கதறி அழுகிறார்...
தாய் பிரிந்த குழந்தையாய் – அவர்
தவிப்பது தெரிந்தும் – நாங்கள்
அவரைத் தனித்தே விட்டுவைக்கிறோம்...

எம்மினப் பெண்கள் அழகற்றவர்கள்,
ஆண்களோ இறுகிப்போய்
கண் சிவந்து அலைபவர்கள் ,
எங்கள் இயல்பை
எத்தனையோ போர்களிலும்
கொடும் கலவரங்களிலும்
தீண்டப் படாமையின்
உச்சத்தில் போய்
இடப்பட்ட தூக்குகளிலும்
எம் உழைப்பை
உறிஞ்சிய துரோகங்களிலும்
எப்போதோ இழந்துவிட்டோம்...
இப்போது நாங்கள்
நாங்களாகவின்றி – எமது
கசப்பின் மிச்சங்களாகத்தான்
அலைந்து திரிகிறோம்..

எமது சோகமும் துரதிருஷ்டமும்
வேறு யாருக்கும்
தொற்றிக்கொள்ள வேண்டாமெனத்தான்
நாங்கள் ஒருவரையொருவர்
கண்நோக்கி பார்த்துக்கொள்வதில்லை...

எமது விம்மல்களை
வெளியேற்ற வழியின்றி
தினசரி உணர்ச்சியின் உஷ்ணத்தில்
எமக்குள் மூழ்கிக் கலந்து
விக்கித்து வெறுத்து
அடுத்த தலைமுறைகளை
விதைத்து சதித்திருக்கிறோம் ...
எங்களுக்குள் கொண்டாட
இருக்கும் ஒரே வாய்ப்பு
நடுநிசிக் கலவிதான்...
உச்சத்தின்போது கூட
நாங்கள் கண்மூடிதான்
இயங்கியிருக்கிறோம்..
மீண்டு எழுகையில்
புறமுதுகைக் காட்டி
பின்னோக்கி காரி உமிழ்ந்து
திரும்பி நோக்காது
விட்டு வெளியேறி
பின்னிரவின் பிறப்பை நோக்கி
தனித்திருக்கிறோம்...

எம் இளசுகள்
எம்மிடம் பாலோடு சேர்த்து
வாழ்வையும் உறிஞ்சி வளர்கிறார்கள்..
அவர்கள் பொறுக்கித் திரிகின்ற
சுள்ளிகளிலெல்லாம் – எம்
கடந்த காலம் ஒட்டியிருப்பதை
அவர்கள் எப்படியோ
அறிந்தேயிருக்கிறார்கள்...

எமைச் சார்ந்த
கால்நடைகளை நாங்கள்
கழுத்தோடு கால்கட்டு
போட்டு பிடித்து வைத்திருக்கிறோம்
எம் வாழ்வோடு பிணைத்து வைத்திருக்கிறோம்..
முன்னோக்கி முகம் பார்ப்பின்
பலமுறை அவை
புற மனிதர்களை
எம் எதிரிகளென எண்ணி
முட்டித் தள்ளிவிடுகின்றன..

எம்மூர் எங்கும்,
நீங்கள் நடக்கும் திசையெங்கும்
எங்கள் பெருமூச்சின்
ஒற்றைத்துளியை – நீங்கள்
தழுவிச் செல்லக் கூடும் ..
அவை வெறும் சுவாசக் குமிழிகளன்று,
காற்றின் ஒவ்வொரு இழையிலும்
எங்கள் எதிர்காலத்தின்
வெற்றி சார்ந்த ஏக்கத்தை
ஏவி விட்டிருக்கிறோம்...

அடிக்கடி நாங்கள் விரும்பி
புலால் உண்டு
எமக்குள்ளான வெக்கையை
தக்க வைத்திருக்கிறோம்
எமக்குள் தகிக்கும் இத்தீ
வெகு சுலபத்தில்
அணைந்துவிடாது,
சொல்லப்போயின்
எம் உள்ளத்து வெக்கையின்
ஒரு துளியைக் கூட
நாங்கள்
இதுவரை வெளிக்காட்டியதில்லை
காட்டவும் விரும்பவில்லை ....

என்னவாயினும்
எம் வாழ்வும்
வாழ்வு சார்ந்த
வெறுமையும் வெக்கையும்
எமைத் தவிர்த்து
அலைந்து திரியும்
அவருக்கு மட்டுமே தெரியும்...
இருப்பினும் நாங்கள்
எங்களுக்குள்
தனித்து விடப்பட்டவர்களே...

Wednesday, April 2, 2014

தனித்து விடப்பட்டவன்


ஒவ்வொரு முறையும்
நான் சொல்லத்துவங்கும் கதை
இப்படித்தான் துவங்குகிறது...
....
...நான் நடந்துகொண்டிருந்தது
ஏதோ ஒரு மழை நாளில் அன்று
எனைச் சூழ்ந்திருந்தனவெல்லாம்
பச்சைப் பசேலெனவும் இல்லை
மிதமான தென்றலும் – எனக்கு
துணை வரத் துணிந்திருக்கவில்லை...
எங்கு நோக்கினும்
நிலம் நிலம்
நிலம் மட்டுமே..
அதுவும் நிழலற்ற நிலம்...
உலகின் ஒட்டுமொத்த வறட்சியையும்
தன்னகத்தே கருக்கொண்டிருந்த
முன்னாளில் தருமன் ஆண்ட நிலம்...

வெக்கை தாளாது
தண்ணீர் தேடி
தொலைதூரம் போய்
தொலைந்தே போனவர்களின் நிலம்...
காணுமிடமெல்லாம்
கானல் நீரின் கரிசனத்தில்
நாம் முன்னர் செய்த
கருமம் உரைத்து நிற்கும்
காட்சிப் பிழைகள்...

இந்த நிலமும் நானும்
ஏதோ ஒரு புள்ளியில்
மிகவும் நெருங்கியிருக்கிறோம்...
தொலைத்துவிட்ட நினைவுகளைத் தேடி
தீர்க்கமாய் நானும்
தொலைந்துபோன நிழலைத் தேடி
துக்கித்து இந்நிலமும்
ஏதோ ஒரு நொடியில்
கை கோர்த்து
கதறியழ காத்திருக்கிறோம் ...

ஈரம் படாத இந்நில மேனியில்
பகற்பொழுதின் வியர்வையும்
நித்திரையற்ற நிசியின்
கண்ணீர்த் துளியும் சிந்தி
ஈரம் சேர்த்து
வராத விடியலுக்காக
ஒரு இனமே காத்திருக்கிறது..

இவர்களிடத்தில் – நான்
என்ன சொல்லித் தேற்றுவது?
விடியலுக்கு காத்திருத்தலைத் தவிர்த்து
எப்படி விட்டுவிட்டு
ஓடிவிடச் செய்வது?

எனை அவ்வப்போது வந்துபோய்
அலைந்து திரிபவனாக மட்டுமே
அறிமுகமுள்ள இவர்கள்
இதுவரை – நான்
யார் என்பதையோ
எதற்காக அலைகிறேன் என்பதையோ
கேட்டதாய் எனக்கு நினைவில்லை..

நானும் இவர்களிடம் – பலமுறை
பேச முற்பட்டு
பேசாமலேயே மௌனித்திருந்திருக்கிறேன்...
அதுவும்,
ஒவ்வொரு முறையும்
இவர்கள் முகம் நோக்கி – நான்
பேசத் துணிகையில்
கண்ணீர் மல்கி எனக்குள்
கதறியிருக்கிறேன்...

என்ன இருக்கக்கூடும்?
எனக்கும் இவர்களுக்கும்
இடையில்?

உலகின் மிக அழகற்ற
பெண்களும்
சிரிப்பை மறந்த
கடுமை நிறைந்த
கண் சிவந்த ஆண்களும்
இவர்களுக்கிடையேயான
வேண்டா வெறுப்பான
உணர்ச்சி உக்கிரத்தின்
விளைவாய் விளைந்து – இன்று
அடுத்த வேலைக்கான – சுள்ளி
பொறுக்கித் திரியும்
சிறகை மறந்த சிட்டுகளும்,
இவர்களை நம்பி
மெலிந்து காயும்
கால்நடைகளும்,
எனை மட்டும்
உற்று நோக்குவதாய் தெரிகிறது..
ஆனால்,
இவர்கள் தங்களுக்குள்
கண் நோக்கி பார்த்துக்கொள்வதேயில்லை...

தொலைந்து விடாமல் இருக்க,
இங்குள்ள கால்நடைகளுக்கு
கழுத்தோடு சேர்த்து
கால்கட்டு போட்டிருக்கிறார்கள்..

என் கண்களுக்கு
இங்குள்ள மனிதர்களும்
அதே கட்டுடன்
திரிவதாகவே தோன்றுகிறது..

நான் அலைந்து திரிகின்ற
திசையெங்கும்
இவர்களின் பெருமூச்சு
என் காதுகளுக்குள்
இரைந்து கொல்கிறது ...

இவர்கள் இயல்பாய்
அடிக்கடி புலால் உண்பது
எனக்கொன்றும்
இயல்பாய்த் தோன்றவில்லை...
தங்களுக்குள்ளான
அசுர கணத்தை
அவ்வப்போது இவர்கள்
வெளிப்படுத்துவதாகவே தோன்றுகிறது...

என்னவாயினும்,
கடைசியாய் உண்டதும்
குளித்ததும் சுகித்ததும்
இன்னும் பலவும் மறந்து
தொடர்ந்து நடந்திருக்கிறேன் நான்...
....

Sunday, November 10, 2013

மாயா - தொடர்ச்சி 3


காடும் காடு சார்ந்த இடமும்
எங்கள் பிழைத்தலுக்கான ஆதாரம்...
கொல்லுதலும்
வெல்ல முடியாததை வெல்லுதலும்
வீரத்தை நிலைநாட்டுதலும்
எம் குலப்பெருமை...
பாற்கடல் அமுதத்திற்காக
மல்லுக்கட்டி நின்றவர்கள்
எம்மூதாதையர்கள்..
பாலை பல கடந்து
நாடு பல வென்று
பளிங்குக்கல் சிங்கச்சிலை செதுக்கி
சென்றவிடமெல்லாம் நிறுவி
நின்று திமிர் செய்தவர்
எம்குலச் சிங்கம்
என் தந்தை...
...
தினம் பூக்கும் குறிஞ்சி,
தாய்மையின் தூயபிரதி,
இருள்சூழ்ந்த எம் கானகத்தின்
தனிப்பெரும் சோதி,
எம் ஒட்டுமொத்த வெற்றிகளையும்
விதைத்து தினந்தோறும்
பயிர்செய்த பக்குவக்காரி,
வேட்டுவ தலைவனை
வாள்முனையில் வளைத்து
‘பிழைத்துப்போ’ எனச்சொல்லி
பின் அவனே
பரிசம்போட்டு பழிவாங்க,
பாசம் கூட்டி
பாடம் பல சொல்லி
நடமாடும்
எம் குலச் சாமி
ஆகிப் போனவள் என் தாய்
...
வீரம் விளைத்து
காடும் வீடும் காக்க
காளைகள் நாலு பெற்றும்
களையற்றுப் போனாள் ..
விட்டுப் பிரிந்த தாய்
மீண்டும் பிறப்பதாய்
செய்து போன சத்தியம்
சாத்தியம் ஆகாது நீடிக்க
நொந்து நூலாகி
உடைந்துபோய் உருகி,
கடைசியாய் காவி தரித்து
கோவில் கோவிலாய்
சுற்றித் திரிந்து,
சூட்சுமமாய் சொல்லிப்போன
ஏதோ ஒரு
ஏழைக்கிழத்தியின் வழிபற்றி
நிலவைக் குறித்து
தீர்க்கமாய் தவமேற்று
நள்ளிரவு நிச்சலனத்தில்
நிலவின் ஒற்றைக்கீற்று
உள்வாங்கி தரித்து
எனைச் சூல் கொண்டாள்
என் சாமி, என் தாய்...
...
எனைத் தாங்கியிருந்த
மாதம் பத்தும்
என் தாய் பேசியதெல்லாம்
இசையாகிப் போக,
அவள் நடை
தனியொரு நடனமாகி,
தனைச் சுற்றி
தன்னியல்பு மீறி,
ஏதோவொன்று
எப்போதும் பிரகாசிக்க,
பகலுறங்கி,
இரவு விழித்து
நிலவோடு நித்திரை காத்து
நடமாடித் திரிந்திருக்கிறாள்
....
நான் வெளிவந்த நொடி,
எம் கானகம் முழுதும்
மஞ்சள் ஒளியும்
மந்தாரப்பூ மணமும்
மாரியெனச் சொரிந்ததாம்..
முதல் மூணு மாசமும்
பசியின்றி , வேட்டையின்றி
தன்னிலை மறந்து
தியானத்தில் மூழ்கித்
திளைத்ததாம்
எம் தீரர் கூட்டம்
...
வால்முனைச் சிணுங்கலும்
யானைப் பிளிறலும்தான்
நான் கேட்ட தாலாட்டு..
குறுங்கத்தி பிடித்து
குளக்கரையில்
அகரம் எழுதி,
காற்றில் வால்நுனியில்
கவிதை எழுதச் செய்தான்
எம் தாய் தந்த மாமன்
...
பல்லாங்குழி வயதில் தொடங்கி
யாருக்கும் முன் எழுந்து
முந்தைய இரவின்
கனவுக் கோலத்தை
கதிரவனுக்குச் சமர்ப்பித்து
எம் குலச் சாமிக்கு
விளக்கு வைத்து முற்றத்தை
வெளிச்சத்தில் மொழுகி வைத்து,
வீரன் என் மூத்த அண்ணனின்
கருப்பழகி குதிரைக்கு
கண் கட்டி பயிற்சி கொடுத்து,
களரி புரிந்து – பின்,
காத்திருக்கும் பலநிற
தோட்டத்து மலர்களுக்கு
தாகம் தீர்த்து,
விரும்பி அடுக்களை புகுந்து,
அமிர்தமாய் சுவைகூட்டி,
அரிசில் படைத்து,
அக்கம் பக்கத்து,
அன்றாடங்காய்ச்சிகளைத் தேடி,
அவர்தம் சிறாருடன்
ஆடி விளையாடி ,
நீராட்டி,
மையிட்டு
வீரமீசை வரைந்து
அழகு சேர்த்து,
காடு சுற்றக் கிளம்பி
மாலை வரை
எமக்கேயான எல்லா
தந்திர விளையாட்டும்
ஆடிக் களைத்து,
நிலாப் பள்ளியெழுச்சி பாடி,
வீடு சேர்ந்தது – என்
மலரக் காத்திருந்த
மொட்டுப் பருவம்...
...
எம் குல
வீரத்தின் சின்னமான
வலம்புரி சங்கைக்
களவு செய்ய வந்து
கடைசி நொடியில் மாட்டி,
கட்டி வைத்து அடித்து
சிரச் சேதம் செய்யப்போன
இறுதி கணப்பொழுதில்,
வானகம் அதிர
இடியாக முழங்கி ,
கண்ணில் மின்னல் தெறித்து
கட்டவிழ்த்து,
தலை கொய்யக்
காத்திருந்த தலையாளியின்
தலைத் திருகி,
திமிறி இவன் சிதறிய
மூர்க்கத்துளி ரத்தம் - என்
முகம் சேர்ந்து
என்னில்
ஏதோ புரியாத
ஏக்கமொன்றை
விதைத்துப் போக,
மறுநாள் காலை
மூலை சேர்ந்தது - என்
திமிறித் திரிந்த பெண்மை
...



Thursday, November 7, 2013

மாயா - தொடர்ச்சி 2


நேற்றைய கனவில்
இவன் காற்சிலம்பு
தெறித்துச் சிதற
பதறி எழுந்து
நான் வரைந்த
இவன் ஓவியத்தின்
திமிர் பார்த்து
பெருமூச்சு விட்டு
எப்போதும் பக்கத்தில்
துணையாய் வைத்திருக்கும்
இவன் பரிசளித்த
அப்போதே உதிர்ந்த
மயிலிறகைத் தொட்டுப்பார்த்தேன்...
மீண்டும் என்னுள்
இவன் குறித்த
போய்விடுவானோ என்ற பயம்
தொற்றிக்கொள்ள,
தலைகவிழ்ந்து தரை பார்த்து
தனித்திருந்தேன்
...
அன்றொரு நாள்,
ஆற்றங்கரையில்
ஆழமாய்ச் சிந்தித்து
தென்றலைக் கீறி முடைந்து
கற்பனை கோட்டையெல்லாம் கட்டி
ஒய்யாரமாய் ஊஞ்சலாடியபோது,
எனக்காகவே
கடவுள் கொடுத்த வரமான
வழக்கமான மயக்கமென்னைத் தழுவ
தனியாய் நீந்தியிருந்த
தங்க மீனுக்குத் துணையாய்ப்போய்
ஆற்றில் விழுந்தேன்...
எப்படித்தான் வருவானோ
ஒவ்வொருமுறையும்
எனைக்காப்பாற்ற!!
...
விழித்துப் பார்க்கையில்
இவன் ஆண்மையின் அரவணைப்பில்
முகமூடிக்குள்ளான
மூர்க்கத்தின் முணுமுணுப்பில்
முறைத்துப் பார்த்த – இவன்
கூரிய விழிகள் விலக்கி
மெலிதாய்ப் புன்னகைத்தேன்..
ஏதோ தோன்றியவனாய்
திடீரென ஓடி,
அடர்ந்து சுற்றியிருந்த
ஆலமர விழுதுகளை
கட்டிப் பிணைத்து
ஏதோ செய்து ,
‘இதோ பார்,
உனக்கான அந்தரத்துக் கட்டில்’ என்றான்
என்னவோ – இவன்
எனைத் தொடும்போது மட்டும்
எனைச் சுற்றிலும்
தென்றலடிக்கிறது ...
எனையறியாமல் எனைத்தூக்கி
அந்தரத்தில் மிதக்க விட்டு,
‘இன்னிக்கு ராத்திரிக்கு
நீ தான் நிலா’ என்றான்..
அன்றைய இரவு
என் வெட்கத்தில் சிவந்தது...
...
தெரியாமலிருந்தும்
தெரிந்ததாய் நான் செய்த
தட்டையும் முறுக்கும்
தின்று விக்கி –இவன்
திணறிய நேரம்,
முடியாமல் சிரிக்க முயன்று – என்னில்
கண்ணீர் கொணர்ந்தான்,
‘பரவால்ல மாயா,
யாரோ திட்றாங்க,
தண்ணி குடு’ என்றான்..
‘கண்ணம்மா தவிர
யாரிருக்கா உன்ன நினைக்க?’
‘ஏன், நீ இல்லியா?’
‘நான்தான் உன்ன
ஜென்மசனியா புடிச்சு
என்கூடவே
வச்சிருக்கேனே’
‘ஏன், கூட இருந்தா
நெனைக்கமாட்டியா?’ என்றான் ..
சில நொடி மௌனம் காத்து,
‘உன்கூட இருந்தா
எனக்கும் சேத்து
நீ தானே யோசிக்ற!’ என்றேன்
...
வழக்கமான ‘ம்ம் ம்ம்’ போட்டு,
‘ஆமா,
கண்ணம்மாவ நேர்ல பாத்தா
என்ன செய்வ?” என்றான்
துளியும் யோசிக்காம,
‘சட்டுன்னு கால்ல விழுவேன்,
அப்புறம் கட்டிக்குவேன்’ என்றேன்..
‘ஏய், அவ என் கண்ணம்மா,
நீ எப்படி கட்டிக்கலாம்’
குழந்தையாகக் கேட்டான்..
‘கண்ணம்மா தானே
என் கண்ணா உன்ன
பாத்துக்கச் சொன்னா,
உனக்கெங்க புரியப்போகுது,
போப்பா போ!’ என்று சீண்ட,
ஏதும் புரியாமல்
அவனுக்கே உரிய
திருட்டு முழியில்
வார்த்தையற்று திக்கினான்
...
“அது சரி,
நீயும் நானும் யாரு?’ என்றேன்
“அப்படின்னா?’
‘நமக்குள்ள என்ன?’ என்றேன்
‘என்னன்னா?’
‘அது வந்து,
வந்து,
நம்ம உறவுக்கு பேர் என்ன?’
இதைக் கேட்கையில்
சத்தியமாய் என்னுயிர்
என்னில் இல்லை..
மௌனமாய் சிலநொடி
வானம் பார்த்து,
அருகே வந்து – பின்
முகம்பார்த்து,
நாடி பிடித்து,
‘நல்லா கேட்டுக்கோ,
நீ மாயா,
நான் மாயன்,
நாம் மாயை’
என்றான்...
இதை நிச்சயிப்பதாய்
எங்களுக்காக
அன்றைய இரவு
புதிதாய் ஒரு
மஞ்சள் மலர்,
ஏழு கடல் தாண்டி,
மிதக்கும் தீவின்
ஏகாந்தத்தில் மலர்ந்திருக்கும்
...


Monday, November 4, 2013

மாயா - தொடர்ச்சி 1


இந்த நொடி – இவன்
எனக்கான மஞ்சள் மலரின்
வாசத்தை நெருங்கியிருப்பான்
...
என் சுண்டு விரல் ஈரம் பட்டு
ஏதோ ஒரு மழைநாளில் – இவன்
சிணுங்கி எழுந்திருக்க
எனையறியாது உந்திப் போய்
இவனுள்ளே விழுந்து விட்டேன் ..
மீண்டு வர முடியாத
அவ்வீழ்ச்சியின் தாக்கத்தில்
என் மனம் சூல்கொள்ள
எந்தப் பூவிலும் இல்லாத
வாசமொன்று எனைப் பிடித்துக்கொண்டது
...
எனக்கும் இவனுக்கும்
மட்டுமே சுவாசிக்க முடிந்த
அவ்வாசத்தின் பிறப்பிடம் தேடி
ஏதுமற்ற ஏழை முதல்
எல்லாம் தெரிந்த வள்ளல் வரை
வானுயர இமயம் முதல்
முக்குளிக்கும் பாடகபுரம் வரை
இருத்தலின் அடித்தளம் முதல்
இல்லாமையின் உச்சம் வரை
இன்னும்
எல்லையுள்ளவை முதல்
எல்லையற்ற ஏதுமற்றது வரை
அலைந்து திரிந்து
களைத்துப் போன பின்னிரவில்
நிலவும் இவனும் தனித்திருக்க
குளிரோடு சேர்ந்து தானும்
ஊளையிட்டு பறந்து வந்த
செஞ்சிவப்புப் பறவையொன்று
இவன் மீது மோதி
மஞ்சள் மலராகி – இவன்
மடியில் விழுந்தது
...
வார்த்தையற்று – என்
வாசம் கிடைத்த மகிழ்ச்சியில்
திளைத்து தூங்கிப் போனான்..
அலைகடலின் மிதத்தலையொத்த
நித்திரை அது..
விழித்தெழுகையில்
மிதக்கும் தீவின்
மஞ்சள் மலரை
எனக்குப் பரிசளிப்பதாய்
இவனுக்குள் பித்துப்பிடித்துப் போனது..
...
இவன் என் கைப்பிடித்து
நின்ற நொடி நினைவிருக்கிறதா?
அந்த நொடி
யாருக்கும் கேளாமல்
என்னருகே வந்து
“மன்னிச்சுக்கோ மாயா”
என்று சொல்லியிருக்கிறான்..
எனக்கே தெரியாமல் – அது
என் மனவெளியில் – ஒரு
புரியாத புதிராக – இன்னும்
சுற்றித் திரிகிறது
...
இவன் கை பற்ற
ஏங்கியிருப்போர் எத்தனை,
அப்படியிருக்க
இவனே வந்து பற்றியதில்
சிலையாகிப் போன நான்
இவனாகியும் போனேன் போலும்..
எதற்கு மன்னிப்பு?
இவன் காலடியில் கிடந்து
காதல் செய்து கிடத்தல்
எனக்கான வரமல்லவா?
இல்லை,
இவனை மன்னிக்கத்தான்
யாரால் முடியும்?
வணங்கா மகுடங்களும்
இவன் வாள்வீச்சும்
சொல்வீச்சும் கண்டு
வாடியிருக்க,
இவனை மன்னிக்க
இவனைப் போலவே
யுகம் பல முன்னர்
வாழ்ந்து போன
வெண்ணைக் கள்ளனாலும்
இயலாதுதானே போகும்..
அப்படியிருக்க,
என்னுள் ஏன் – இப்படி
ஒரு குழப்பத்தை
விதைத்து நின்றான்?
...
ஒரு நாள்
யாருமறியாமல் – இவன்
விட்டு விட எத்தனித்த
கண்ணீர்த்துளியை
கடைசி நொடியில்
கையேந்தி காப்பாற்றி
கண்ணில் ஒற்றி
கண்ணீர் விட்டேன்..
கல்லுக்குள் ஈரம் கண்டு – என்
பேதை மனம் பதைபதைக்க
நடிக்கத் தெரியாமல் நடித்து
ஏதுமற்றதாய்
ஏதோவொன்றை சொல்லிப்போனான்..
அவன் கண்களின்
அப்போதைய வலி
பால் வற்றிய தாயின்
பரிதவிப்பு
...
அமைதியாக நானும்
பின் தொடர,
நிலவு நோக்கி நடந்தவனாய்
தன் நிலவைப் பற்றி
கதை சொன்னான்,
இல்லையில்லை
கவிதை சொன்னான்
கண்ணம்மாவின்
காவியம் சொன்னான்
...
இந்த வரி எழுதி முடிக்கையில்
சராசரி பெண்ணின்
அத்தனை வன்மமும்
பிடிப்பும் பிடிவாதமும்
என்னுள் உச்சநிலை தாண்டி
உயிர் வலி கொடுக்கிறது..
இருந்தாலும் – இவன்
என்னுள் விதைத்துப் போன
ஒவ்வொரு நொடி வாழ்தலும்
இவன் கரம்பிடித்து
என் வாழ்தலை
நீட்டித்துச் செல்கிறது...
...

Tuesday, October 29, 2013

மாயா

என் பெயர் மாயா
ஓர் காட்டுக் கொள்ளையனின்
காதலி நான்...
இதைச் சொல்லிச் சிரிக்கையில்
உலகின் அனைத்துப் பெண்களையும்
வென்றுவிட்ட திமிர்
என்னுள் தலை தூக்கத்தான் செய்கிறது..
எவர்க்கும் அடங்காத இவன் – என்
கடைக் கண் பார்வைக்கும்
அதனோடு சேர்ந்த
மெல்லிய மௌனத்திற்கும்
எப்படி அடங்கியிருக்கிறான் என்பது
எனக்கும் அவனுக்கும் கூட
தெரியாத, தெரிந்துகொள்ள விரும்பாத
உன்னத ரகசியம்...
..
இன்று, இந்த நொடி
உயிர் மீண்டு வருவானா
இல்லையா என்ற
பரிதவிப்போடு
அவன் சார்ந்த கடந்த கால
நிகழ்வுகளும் – அவற்றோடு
பின்னிப்பிணைந்த
என் வெட்கமும் சேர்ந்து
எனைப் பாடாய்ப் படுத்த
ஒரு நொடி புன்னகைத்தும்
மறு நொடி கண் கலங்கியும்
எங்கள் முதற் சந்திப்பை
பரிசளித்த இதோ
இந்த ஆலமரத்தடியில்
கன்னி காத்து காத்திருக்கிறேன்...
...
நான் தலை தூக்கிப் பார்த்த
உலகின் முதல் ஆண்மகன் இவன்..
அந்த நொடி,
என்னுள் ஏதோ ஆகியிருக்க
என்னவென்று குழம்பிப் போய்
நான் உறைந்து நிற்க,
தன் பிறப்பையும் வாழ்வையும்
அதற்குக் காரணமான
அத்தனையும் வெறுத்து
உக்கிரத்தின் உச்சத்தில்
தலைகுனிந்து நின்றிருந்தான்...
...
கானக ராஜனின்
அதிசய பொக்கிஷத்தை
களவு செய்யப் போய்
கடைசி நொடியில்
திரை மறைவில் நின்று
கறுப்புத் துணியில் கண் கட்டி
கண்ணாமூச்சி ஆடியிருந்த
கன்னியின் கீச்சுக் குரலில்
தடுமாறி நின்றான்..
விதி அவளைத் தடுக்கி
இவன் மேல் விழச் செய்ய,
மூவுலகைத் தாண்டிப் போய்
யாரும் பார்த்திரா பூக்களின்
வாசத்தில் விழுந்திருக்கிறான்..
விழித்தெழுந்தபோது
வதைக்கப் படுதலின்
உச்சகட்ட வலியில் இருந்தபோதும்
இவன் கண்கள்
அக்கன்னியின் கடைசி ஸ்பரிசத்தை
தேடித் தவிக்க,
ஒய்யாரப் பல்லக்கில் வந்து
இவனைச் சிரச் சேதம்
செய்யச் சொல்லி
சூழ்ச்சிச் சிரிப்பில்
சேதி சொல்லிப் போனாள் அவள் ..
ஏதும் புரியாமல்
பிணைக்கப்பட்ட சங்கிலிகளின்
ஏளனத்தோடு எடை கூட்டி
கடைசி ஆசைக்கு
தரை பார்த்து
துணிந்திருந்தான் இவன்...
...
தூக்கிலிடுவதற்குத்  துணையாக
வசை பொழிந்து
மண் வாரி இறைத்திருந்தனர்
இவனது களவில்
உடல், பொருள் , உள்ளம்
இழந்தவர்கள்...
கறுப்புத் துணி மூட
கடைசித் துளி இரக்கத்தோடு
வீரன் ஒருவன் முன்னேற,
மெதுவாக தலைதூக்கி
‘மாயா’ என்றான்..
அந்தச் சொல்
என் காதுகளை மட்டுமே எட்டியது..
அடுத்த நொடி
என் கண்களும்
அவன் கண்களும்
எங்களின் புரியாத
முந்தைய உறவின்
முடிச்சுகளை அவிழ்த்தெறிந்து
மூர்க்கமாக சங்கமித்தன...
திடீரென,
அசைவற்ற ஆலமரம்
புயலென ஆர்ப்பரிக்க,
புதைந்து கிடந்த வீரமனைத்தும்
புழுதியாய் சுழற்றியடிக்க,
ஆழிப் பேரலையாய்
காட்டாறு பொங்கியெழ ,
கட்டவிழ்த்து கம்பீரமாய்,
என் கை பிடித்து நின்றிருந்தான்
இவன்..
...
நேற்றைய நள்ளிரவில்
எனக்குத் தெரியாதென எண்ணி
என் பிறந்தநாளுக்குப் பரிசளிக்க
எவரும் கண்டிராத
மிதக்கும் தீவின்
மஞ்சள் மலர் தேடிப்
போயிருக்கிறான்...
..
இவன் உயிர்மீண்டு
வருவானா இல்லையா – என்ற
பரிதவிப்போடு
பாதை பார்த்திருத்தல்
எனக்கு மட்டுமே
கிடைத்த சுகம்...
...
இவன் வந்து சேரும் வரை,
இனி வரும் சில நாட்கள்
இவனுக்கும் எனக்குமான
இயல்பான இரகசியங்களை
இவ்வுலகிற்குப் பகிர்ந்திருக்கும்..
...





Wednesday, July 24, 2013

பாவிமகன் நல்லாருக்கட்டும்

எப்படா என்ன
எல்லாத்துக்கும் காட்டுவ?
எப்படா உன் கைபிடிச்சு
ஊரெல்லாம் நடப்பேன்?
...
நமக்குன்னு மாத்தின மோதிரமும்
ஆத்தா கோயில் தாலியும்
எப்படா வெளிய காட்ட?
...
யோசிச்சு பேரு வச்சு
இன்னும் பொறக்காமையே
இருக்காளே உம்பொண்ணு!
...
சாதி சனம் சுத்திநின்னு
சடங்கெல்லாம் செஞ்சுவச்சு
உத்தரவா உரிமையோட
கூட்டிக்கிட்டு போவியா?
இல்ல
எப்பவுமே இப்படியே
என்ன கவிதைக்குள்ள
முடக்கிடுவியா?
...
முத நாள் தொட்டு
நேத்தைய நிலா வரைக்கும்
உன்னையும் என்னையும்
சேத்து வச்சுப் பாத்தது
ஊருக்கு வெளிய
ஒத்தயடிப் பாதையில
சாமியா நிக்குற – அந்த
ஒத்தப் பனமரந்தான்
இன்னிக்குப் போனாலும்
எங்க ஆத்தா போலப்
பாசமாப் பாக்குது
கூட்டிக்கிட்டுப் போனவன்
நல்லாப் பாத்துக்குறானான்னு
கேக்காமக் கேக்குது..
என்னத்த நானுஞ்சொல்ல?
அவனப் பாக்கவே முடியல,
அவன் எங்க என்னப்பாக்கன்னு!
..
அப்பப்போ வானத்தையும்
சும்மாப்போற மேகத்தையும்
பேருக்காச்சும் தூதுவிட்டு
காதலக் காட்டுறானாம்..
கள்ளப்பய அவன்,
கையில சிக்குனா
வசமா தூக்கியாந்து
சிறவச்சு சொகமா
சித்ரவத பண்ணியாச்சும்
குடும்பம் நடத்தப்போறேன் ..
..
மரியாத ரொம்ப உண்டு
பாசத்த சொல்ல வேணா
என்ன கொஞ்சம் கோவக்காரன்
பொசுக்குன்னு அடிச்சுட்டு
பேசாமப் போயிடுவான்
பின்ன கொஞ்சம் நேரம்போயி
அவனாவே வந்துநின்னு
ஆகாசத்தப் பாத்துக்கிட்டே
என் ஆத்தா நீ தாண்டி
தங்கக்கொடமே வாடீன்னு
தெரியாம செல்லங்கொஞ்ச
மானங்கெட்டு நானும்போயி
மாரோட சாஞ்சுக்குவேன்
...
இப்போதைக்கு என்ன செய்ய
ராத்திரிக்கு அவன் நெனப்பும்
காலையில எம்பொழப்பும்
போகிறவர போகட்டும்
பாவிமகன் ,
எங்கிருந்தாலும்
நல்லா இருக்கட்டும்...
...

உனை விட்டுக் கவியாயிருத்தல்

நீ நினைப்பதையெல்லாம்
எழுதி நான்
கவியாகியிருத்தல்
என்ன பெரிய விஷயம்?
நீ நினைக்கப் போவதையும்
நெடுநாள் முன்பே
எழுதி முடித்து
உன் வாழ்வையும்
அது சார்ந்த வனப்பையும்
நமக்குத் தெரிந்த,
நமக்கு மட்டுமே தெரிந்த
ஓர் தனி இடத்தில்
ஒளித்து வைத்திருக்கிறேன்!
..
அதை நீ
தேடிக் கண்டு
மகிழ்ச்சி மிகுதியில்
எனை முத்தமிடத் துடிப்பாய்!
மூவுலகத் தொலைவில் நான்
உனக்கான
எதிர்காலக் கவிதைகளுக்கான
வார்த்தைகளை
நட்சத்திரங்களுக்கிடையே
விதைத்துக் கொண்டிருப்பேன்
...
எனைக் காணாது
நீ தேடித் தவித்து
துக்கித்துப் போய்
விடுகின்ற பெருமூச்சில்
கடலலையும்
இளந்தென்றலும்
ஒரு கணம்
நின்று, யோசித்து
எனக்குச் சேதி அனுப்பும்
...
வேண்டுமென்றே கண்டு கொள்ளாது
காதலைக் கட்டுப்படுத்தி
தொலைவு பல
இன்னும் கடந்திருப்பேன் நான்..
..
நான் கொடுத்த
முக்குளித்த முத்தையும்
மழை நேரத்து
மயிலிறகையும்
மார்பில் அணைத்து
வான் பார்த்து
ஏதேதோ புலம்பி
உறவு தவிர்த்து
அங்குமிங்கும்
புரண்டிருப்பாய் நீ..
..
பசி ஏது ?
தாகம் ஏது?
பகல் ஏது?
இரவேது?
நேற்று ஏது?
இன்று ஏது?
நாளைதான் ஏது?
ஏதுமற்ற ஏதோ ஒன்றில்
கண் பதித்து
நிலை குத்தி
தானாகக் காலாட்டி
விரல் பிசைந்து
சீரற்ற உடை விலக்கி
உள்ளும் புறமுமற்று
உனக்கான என்
முதல் கவிதையின்
முதல் வார்த்தையை
முணகிக் காத்திருப்பாய் நீ!..
...
உன் வலி
என்னில் உணர்ந்து
ஏகாந்தம் வெறுத்துப் போய்
ஏதும் ஓடாமல்
எனையறியாமல்
ஏதோ ஒன்று
உந்தித்தள்ள
விருப்பு வெறுப்பு தாண்டிய
ஓர் உன்னத ஏக்கத்தில்
எனது உயிர்
உனது உயிர் நோக்கி
என் உடல் விட்டுப் புறப்பட்டு
பறந்து போக
பின் தொடர்கிறேன் நான்...
...
எப்போது நம்
அடுத்த சந்திப்பு என்பதை
நமைப் பற்றி
ஏதும் புரியாத
எவனோ ஒருவனோ
இல்லை
எவளோ ஒருத்தியோ
கனாக் காணட்டும்...
...

கண்ணம்மாவின் காகித முத்தம்

தொலைதூரப் பூக்களின் வாசத்தையும்
வரப் போகும் வானவில்லின் வனப்பையும்
வசதியாய் கவியிருத்தி,
உறக்கமற்ற வேளைகளின்
அலைக்களிப்பையும் - இன்னும்
இடையறாது துரத்தும்
இயல்பான சிரிப்புகளையும்
ஏற்ற இறக்கங்களையும்
இம்சித்திருக்கும்
இஷ்ட தெய்வங்களையும்
மறந்திருந்து ,
இருத்தலை மெய்ப்பிக்க வேண்டி
கண்ணம்மாவின்
கடிதம் தேடி
காத்திருக்கும் கவி!
..
இடையிடையே வந்து போகும்
உன் லேசான புன்னகையும்
குறும்புப் பார்வையும்
அன்றைய இரவின்
அயில மீன் கொழம்பும்
நிலா வெளிச்சக் கண் சிமிட்டலும்
கை கோர்த்த கண நேரமும்
நமக்குப் பின்னால்
ஒளிந்துகொண்ட வெட்கமும்
ஏதோ நான் உளறப் போய்
வருத்தி நீ
வெளிப்படுத்திய
வேண்டாக் கோபமும்
தொடர்ந்த விவாதமும்
முடிவாய் வந்து நின்ற
மௌனமும் - அதைச் சார்ந்த
இஷ்டமில்லா இடைவெளியும் ,
இப்போதைய
கண்ணம்மாவின் இல்லாதிருத்தலும்
கவியின் காத்திருத்தலை
கடினமாக்கி நிற்க,
கலங்கியிருத்தலை
கடந்திருக்க வேண்டி
கண் மூடி நொடிதோறும்
வடக்கிருந்தான் கவி!
...
கடிதம் வராது
கனவு வந்தது
...
நேற்றைய பொழுதின்
நிறைவேறா ஆசையாய்
ஆதங்கமாய்
கண்ணம்மா மனதில்
ஏதோ ஒன்று..
அவள் இமையில்
ஒளிந்திருந்த சோகத்தை
சுலபமாய் உணர்ந்து
சுண்டு விரல் பிடித்திழுத்து
"என்ன ஆச்சு?" என்றான் கவி.
...
வழக்கமான "ஒண்ணுமில்ல"
தவிர்த்து தந்திரமாய்
தலை குனிந்து கண்ணம்மா!
...
கவியும் நமுட்டுச் சிரிப்புடன்
"என்னன்னு சொன்னா,
இன்னொன்னு தாரேன்"
என்று வழிய,
"போ! உனக்கென்ன
என்னப்பத்தி !" என்றாள் ..
"சரி போறேன், விடு!" என்று
கடைசி யுத்தியை
கச்சிதமாய் வீச,
"நேத்து பூவாகிப் போனியாமே?
யாரோ சொன்னாங்க " என்றாள்

"ஏன் உனக்குத் தெரியாமலா?"

"யாருக்கோ தான எழுதின,
எனக்கென்ன?" என்று
கண்ணால் கண் ஊடுருவி
கேள்வியாய் மாறி நின்றாள் ..
..
மூக்கு நுனி கோவத்தில்
"என் கவிதைய
கேவலப் படுத்துறியா ?"
சிவந்து நின்றான்
கவி,
காதலில்!
..
"எனக்கு எழுதுனா
கவிதைல எங்க என் பேரு ?"
என்று தாவணி நுனியால்
விழுவதற்கு முன்
கண்ணீர் தாங்கி
கச்சிதமாய்
கனம் கூட்டினாள்
...
பதிலற்ற நேரங்களில்
பாவம்!
என்ன செய்வான் கவி!
இடைவெளி குறைத்து
உயரம் தாழ்த்தி
அவள் தலை நிமிர்த்தி
கண் ஈரம் உலர
லேசாய் ஊதி
பின்
இறுக்க அணைத்து
"அட பைத்தியமே!
நீ வேற, என் கவிதை வேறயா?
நீ என் கூட இரு,
நான் எதுக்கு
கவிதை எழுதப்போறேன்?
நீ அப்பப்போ விட்டுப் போற,
நான் உன்ன எழுதி
என்னுள் இருத்திப் பாக்கிறேன்!
அவ்ளோதான் என் கவிதையெல்லாம்..."
என்று
அவனுக்கே தெரியாத
உன்னத உண்மையெல்லாம் சொல்லி
இன்றைய பொழுதின்
இதமான உறக்கத்திற்கு
கண்ணம்மாவை
அழைத்துச் சென்றான்
அசட்டுக் கவி!
...
கனாக் கலைந்து
கடிதத்தின் வாசம் பிடித்து
பிரித்துப் பார்க்க
"என்னடா?
மறுபடியும் ஏமாத்துறியா ?"
என்று இரண்டே வரி!
..
கீழே
காகித முத்தத்துடன்
கண்ணம்மா!
....



Tuesday, July 23, 2013

நான் பூவாகிப் போகிறேன்

நீ கொடுத்து நானும்
நான் கொடுத்து நீயுமாய்
வாழ்வதால் இந்த வாழ்வு
நமைத் தாண்டி
எங்கோ நிகழ்கிறது...
விரல் பிடித்து சாவதாய் நீயும்
மடி சாய்ந்து முழுதாய்
உறங்கிப் போவதாய் நானும்
கண்ட காட்சிகள்
இன்னும் இந்த
வாழ்தலை புனிதமாக்க ,
தொலைத்த மூச்சை மீட்டெடுக்க
உன் கானத்தில் கரைகிறேன் நான்
நெடுநாளாய் ..
..
நீ கேட்கும் கேள்விகளில் ஒளிந்திருக்கும்
எனக்கான காதலில் – நான்
பதிலற்றுப் போகிறேன்
நீயோ
காதல் முத்தி
கோவித்துப் போகிறாய் ..
..
ஒரு வழியாய்
நினைவு திரும்பி நான்
உனக்கான பதிலை – என்
காதலில் பொதிந்து அனுப்ப
பாவம் உன்
பாசாங்கு கோவத்தில்
அது பொசுங்கி
புகையாய் மாறி – உன்
கூந்தலிடையே மறைகிறது..
உன் வாசம் கூடிப்போன கதை
இது தானோ?
..
வியந்து கேட்கும்போது
வெட்கப்படுகிறாய்
அதில் விழுந்து – நான்
என் வார்த்தைகளை இழந்து
இப்போது உனை
வரைய இயலாது தவிக்கிறேன்..
வாயோரம் எனை
லேசாக வசை பாடேன்
என் வரிகள் உயிர்பெற்று
வெட்கம் கொண்டு – பின்
சுரனை உணர்த்தட்டும் ..
..
வசை பாடச் சொன்னால்
காதல் சொல்கிறாய்..
இப்படி என் உயிரை
அவ்வப்போது
ருசித்துப் பார்க்கிறாயோ?
உன் வார்த்தைகள்
இப்படித்தான் என் இதயத்தின்
கல்வெட்டுகளாகிப் போகின்றனவோ?
..
காதல் கூறி பின்
தலை மேல் கை
வைக்கக் கேட்பாய்
தலை கோதி – உன்
விதி படித்து
நான் மீள்கையில்
மீண்டும் கை பிடித்து
கண் ஒற்றி – எனை
கலங்கச் செய்வாய்..
உன் உச்சி முகர்ந்து
என் உள்ளங்கை ரேகை
உன்னில் பதிக்கின்ற
ஒவ்வொரு நொடியும்
முடியாது தொடர்கின்றது..
..
சிற்சில கோவங்களின் போது
முறைத்து முனகி – பின்
சிரிக்கும் நொடி ஒவ்வொன்றிலும்
என் இதயம் நின்று
பின் துடிக்கின்றது...
நீயோ
இதை அறியாது
அதையே தொடர்கிறாய்..
இப்படி என்னால்
இந்த இதயத்தை
நீண்டநாள்
பொத்தி வைக்க முடியாது
வா, வந்து எடுத்துப் போ ..
..
உனை நான்
உனக்கு உணர்த்த
என் கண்களும்
கவிதையும் இருக்க
என் கைகளுக்குள்
இருந்தால் மட்டுமே
போதும் என்கிறாய்
கை பிடித்து நீ விடாவிடின்
நான் என்ன
இதழிலா கவியெழுத ?
..
“எனை விட கவிதை முக்கியமா?”
எனக்கேட்டு
சிணுங்குகிறாய் !!!
..
ஒவ்வொரு நொடியும்
நமக்குப் பிறக்கும்
குழந்தைதானே
என் கவிதை...
ஆயினும்,
நீ எனக்கு
உயிரும் தமிழுமாய் இருப்பதால்
நம் குழந்தை
உன் காதலின்முன்
தோற்றே போகிறது..
..
எனை
வெளியிலும் உள்ளும் சுமந்து
தள்ளாடி நீ நடக்கையில்
உன் நிழலுக்கு விடுமுறை
..
கவிதையின் உச்சம்தொட்டால்
நீ அழுது அழகு சேர்க்கிறாய்..
உன் ஒவ்வொரு துளி கண்ணீரும்
என் பிரசவ வலி
பாத்து அழு..
..
உன் கண்ணீர் தேற்ற
உன்னருகில் வந்தாலே
என் உடல் முழுதும்
இதழ்களாய் மாறி – உன்
வாசத்தை உறிஞ்சி
நான் பூவாகிறேன்..
நீ எனை முகர்ந்து முத்தமிட்டு
உன் காதல் மொட்டினை
மலரச் செய்துகொள்..
..





Thursday, June 20, 2013

பனித்துளியின் கருணையில்..

நீண்ட நாள் வாட்டிய
தனிமையிலிருந்து தப்பித்து
எண்ணமற்று
சோகத்தின் அடி ஆழத்தில்
அசையாது நிலைத்திருக்க
எங்கோ சென்று
ஒளிந்து கொண்டான் கவி!
விடாது விரட்டிய
எண்ணங்களுக்கும் அவனுக்கும்
இடையே - பெரும்
போராட்டம்..
'பணயமாக மானத்தைக் கொடு' என
எதேச்சையாக கேட்டு
தீர்க்கமாகப் பார்த்தன எண்ணங்கள்..
இல்லை,
'உறக்கமற்று கொடுங்கனவில்
தொலைந்து போ' என
ஏளனம் வேறு..
கனவின் சாட்சியாக
சில எண்ணங்கள் பல்லிளித்தன..
மறைத்த குரல்கள்
முன்பு எப்பொழுதையும் விட
துல்லியமாக
காதருகே ஒலித்தன..
மறந்த சில முகங்களும்
சமயம் பார்த்து
வெடுக்கிட்டு திரும்புவதாய்த்
தோன்றின..
சுகம் கொடுத்த
வருடிய நகங்களும்
முகம் மறைத்து
மோகத்தில் மூழ்கடித்த
கருங்கூந்தலும் கூட
தொலைதூரத்தில்
தப்பித்து ஓட,
விட்டுச் சென்ற வாசம் மட்டும்
விடாமல் வதைக்கிறது..
 காலடியில் ஈரம் சேர்க்கும்
பனித்துளியின் கருணையில்
நிறுத்தி வைத்திருந்த கவிதையை
எழுத எத்தனிக்கிறான் - கவி!


Saturday, May 11, 2013

ஒரு பாக்கட் நேர்மை பார்சல்!!!

                          "அவருக்கு மட்டும் சீட் குடுக்கறீங்க, எனக்கு ஏன் தர முடியாது ? என்ன பாத்தா எப்படி இருக்கு?"
                           "உன்னலாம் பாக்க முடியாது..உன் மூஞ்சி பாக்குற மாதிரி இல்ல..போ போ !"
                              டிக்கட் பரிசோதகருக்கும் ஒரு பயணிக்குமான இன்றைய பயணத்தின் உரையாடல் இது. ஒரு நேர்மையான அதிகாரியாக முதல் பார்வையிலேயே என்னுள் பதிந்து போயிருந்தார் அவர். மூன்றாம் வகுப்பு டிக்கட் எடுத்து கூடுதல் கட்டணம் கட்டி நான் இரண்டாம் வகுப்பு இருக்கை வாங்கி முடிக்கும்போது தான் இந்த சண்டை ஆரம்பித்தது.
                                பார்க்க முடியாத மூஞ்சிக் காரர் ஒரு காவல்துறை ஆய்வாளராம். அவர் தன் பதவி பற்றி கூறியும் டிக்கட் பரிசோதகர் அசரவில்லை. "நீ போலீஸ்-னா நான் சீட் தரணுமா? , போய் எங்க உக்காரணுமோ அங்க உக்காரு..."
                                ஆய்வாளர் செல் போன எடுத்து வீடியோ பிடிக்கிற மாதிரி நடிச்சார்.."நல்லா வீடியோ எடுத்து தினசரி பாரு, புத்தி வரும்..வேணும்னா என் போட்டோவ உன் வீட்டுல மாட்டி வச்சுக்கோ.."
                                ஆய்வாளர் வாய பொளந்துட்டார். "நான் இங்க தான் இருப்பேன் ..நீ என்ன பண்ணுற பாக்குறேன்.."
                                 எதுக்காக அந்த பரிசோதகருக்கு அவ்வளவு கோபம்? தன்னுடைய நேர்மைக்கு அங்கீகாரம் தேடுகிறாரா? இல்லை வளைந்து கொடுப்பதின் கேவலத்தை மற்றவருக்கு உணர்த்த முயல்கிறாரா? நான் கொடுக்க வேண்டிய பதினைந்து ரூபாய்க்கு சில்லறை இல்லாததால் இருபதாய்க் கொடுத்தேன்.."அஞ்சு ரூபா சில்லறை இல்ல, சில்லறை கொடு" என்றார்..கொடுங்க என்று மரியாதையாய் பேசுகிற ஆளும் இல்லை அவர்.."இருபது வாங்கிக்கோங்க சார், அப்பறமா நானே வந்து மீதி வாங்கிக்கிறேன்" என்றதற்கு, "நீ வாங்காமப் போய்டுவ, சில்லறை கொண்டு வந்து டிக்கட் வாங்கிக்கோ.."என்றார்...எனக்கு புன்முறுவலும் ஆச்சரியமும் முந்திக்கொண்டு வர, சில்லறைக்காக துணை தேடி இருந்தேன்..
                              மூன்று மணி நேர பயணத்தில் என் மனம் முழுதும் அவர் நடத்தை சார்ந்த சிந்தனை தான் ஓடியது..இத்தனை நிகழ்ந்தாலும் அவர் என்னைப் பார்த்த போதெல்லாம் ஒரு புன்னகை விடுத்தார்.
                               இருவேறு உச்சகட்ட நடத்தைகளைப் பார்த்து, ஆராய்ந்து, சுலப விடை கிடைக்காமல் இரயில் நிலையத்திலிருந்து வெளியேறி ஓர் பேருந்தில் ஏறி அமரவும் ஒரு ஆண் குரல். "ஒரு பொங்கல் இருபத்தஞ்சு ரூபாவா? அநியாயம்..பெங்களூர்ல இருபது ரூபாதான்..அதுவும் நெறைய கொடுப்பான்..சரியில்ல..சரியில்ல..பொங்கல் விலை ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு சொல்றான்..அப்பப்பா, சரியில்ல..சரியில்ல..இனி இங்க வந்தா டீயும் பன்னுந்தான் சாப்பிடணும் போல.."
                              அப்பா பேசுவதை ஆவென பார்த்து எனைப் பார்த்து லேசாய்ச் சிரித்தாள் அந்தக் குட்டிப் பெண்..இன்னும் சில வருடங்களில் அவள் சிரிப்பு பர்தாவிற்குள் ஒளிந்துவிடும்...

Friday, March 29, 2013

காத்தா இருக்கேன்..

மூச்சுமுட்ட
நீருக்கடியில்
முங்கியிருக்கும்போது
மயங்கிய ஒளியில்
தெளிவின்றி கண்ட
உன் கால் கொலுசின்
பிரகாசத்தில்
முத்தெடுத்து - நான்
வெளிவருகையில்
மீண்டும் எனக்குள்
ஒரு புதிய கவிதை
பிறந்து வெளி விழுந்தது
...
கரையில் காலாட்டி
உட்கார்ந்து எளிதாய்
என் கவியை
விமர்சனம் செய்வதாய்
மேலும் கீழும் பார்த்தாய்..
...
எடுத்த முத்தையே
உனக்குப் பரிசளிக்க
துணைக்கு மலர் தேடி
சுற்றுமுற்றும் பார்க்கையில்
எருக்கம்பூ தவிர
ஏதுமில்லை, என்ன செய்ய?
...
பால் வடிய
பக்குவமா - உன்
பளிங்குப் பல் பார்த்து
தரை மறந்து நடந்து
தடுக்கி விழுந்து
உன் ஒட்டு மொத்த சிரிப்பையும்
ஒரு நொடியில்
உதிர வைக்க
சுத்தி நின்ன மரமெல்லாம்
சில்லுனு சிலிர்த்துப் போச்சு..
...
அன்னிக்குப் பார்த்த
அதே முகம் தான்
இப்ப வரை நெஞ்சுக்குள்ள
கூடு கட்டிக் குடியிருக்கு..
...
ஏதேதோ கோவத்துல
பேசாம இருக்கியே?
என்ன கொஞ்சம்
நெனச்சுப் பாரு..
...
குங்குமம் தொட்டு வச்சு
என்னோட ஆக்கினப்ப
எதுக்காக ஒரு துளி
தண்ணி விட்டு ஒட்டிகிட்ட?
...
சாமி டாலர் போட்டு
'இது தான் டி தாலி'ன்னு
பாசமா சொன்னப்ப
பட்டுன்னு கால் புடிச்சு
நெஜமா பொஞ்சாதி ஆயிட்ட..
...
இப்ப
கொஞ்ச தூரம் போனதுக்கு
கோவிச்சு மூஞ்ச தூக்கி
மௌனத்தில நீ இருந்தா
நான் எங்க போக?
என்ன செய்ய?
..
விதி வசந்தான்
நா இங்க, நீ அங்க..
காத்தா இருக்கேன்
மூச்சா இருக்கேன்
முழுசா இருக்கேன் -நான் இங்க
ஏங்கி இருக்கேன் - நீ அங்க
என் உசிர தாங்கி இருக்க..
பத்திரமா பாத்துக்க
முத்தெடுத்த காதலுக்குப்
பரிசா சாமி தந்த சொத்த..
..
சீக்கிரமா வந்துருவேன்
பேசாம மட்டும் இருக்காத
அன்னந்தண்ணி எறங்கல
அனாதையா நான் இங்க
...