காடும் காடு சார்ந்த இடமும்
எங்கள் பிழைத்தலுக்கான ஆதாரம்...
கொல்லுதலும்
வெல்ல முடியாததை வெல்லுதலும்
வீரத்தை நிலைநாட்டுதலும்
எம் குலப்பெருமை...
பாற்கடல் அமுதத்திற்காக
மல்லுக்கட்டி நின்றவர்கள்
எம்மூதாதையர்கள்..
பாலை பல கடந்து
நாடு பல வென்று
பளிங்குக்கல் சிங்கச்சிலை செதுக்கி
சென்றவிடமெல்லாம் நிறுவி
நின்று திமிர் செய்தவர்
எம்குலச் சிங்கம்
என் தந்தை...
...
தினம் பூக்கும் குறிஞ்சி,
தாய்மையின் தூயபிரதி,
இருள்சூழ்ந்த எம் கானகத்தின்
தனிப்பெரும் சோதி,
எம் ஒட்டுமொத்த வெற்றிகளையும்
விதைத்து தினந்தோறும்
பயிர்செய்த பக்குவக்காரி,
வேட்டுவ தலைவனை
வாள்முனையில் வளைத்து
‘பிழைத்துப்போ’ எனச்சொல்லி
பின் அவனே
பரிசம்போட்டு பழிவாங்க,
பாசம் கூட்டி
பாடம் பல சொல்லி
நடமாடும்
எம் குலச் சாமி
ஆகிப் போனவள் என் தாய்
...
வீரம் விளைத்து
காடும் வீடும் காக்க
காளைகள் நாலு பெற்றும்
களையற்றுப் போனாள் ..
விட்டுப் பிரிந்த தாய்
மீண்டும் பிறப்பதாய்
செய்து போன சத்தியம்
சாத்தியம் ஆகாது நீடிக்க
நொந்து நூலாகி
உடைந்துபோய் உருகி,
கடைசியாய் காவி தரித்து
கோவில் கோவிலாய்
சுற்றித் திரிந்து,
சூட்சுமமாய் சொல்லிப்போன
ஏதோ ஒரு
ஏழைக்கிழத்தியின் வழிபற்றி
நிலவைக் குறித்து
தீர்க்கமாய் தவமேற்று
நள்ளிரவு நிச்சலனத்தில்
நிலவின் ஒற்றைக்கீற்று
உள்வாங்கி தரித்து
எனைச் சூல் கொண்டாள்
என் சாமி, என் தாய்...
...
எனைத் தாங்கியிருந்த
மாதம் பத்தும்
என் தாய் பேசியதெல்லாம்
இசையாகிப் போக,
அவள் நடை
தனியொரு நடனமாகி,
தனைச் சுற்றி
தன்னியல்பு மீறி,
ஏதோவொன்று
எப்போதும் பிரகாசிக்க,
பகலுறங்கி,
இரவு விழித்து
நிலவோடு நித்திரை காத்து
நடமாடித் திரிந்திருக்கிறாள்
....
நான் வெளிவந்த நொடி,
எம் கானகம் முழுதும்
மஞ்சள் ஒளியும்
மந்தாரப்பூ மணமும்
மாரியெனச் சொரிந்ததாம்..
முதல் மூணு மாசமும்
பசியின்றி , வேட்டையின்றி
தன்னிலை மறந்து
தியானத்தில் மூழ்கித்
திளைத்ததாம்
எம் தீரர் கூட்டம்
...
வால்முனைச் சிணுங்கலும்
யானைப் பிளிறலும்தான்
நான் கேட்ட தாலாட்டு..
குறுங்கத்தி பிடித்து
குளக்கரையில்
அகரம் எழுதி,
காற்றில் வால்நுனியில்
கவிதை எழுதச் செய்தான்
எம் தாய் தந்த மாமன்
...
பல்லாங்குழி வயதில் தொடங்கி
யாருக்கும் முன் எழுந்து
முந்தைய இரவின்
கனவுக் கோலத்தை
கதிரவனுக்குச் சமர்ப்பித்து
எம் குலச் சாமிக்கு
விளக்கு வைத்து முற்றத்தை
வெளிச்சத்தில் மொழுகி வைத்து,
வீரன் என் மூத்த அண்ணனின்
கருப்பழகி குதிரைக்கு
கண் கட்டி பயிற்சி கொடுத்து,
களரி புரிந்து – பின்,
காத்திருக்கும் பலநிற
தோட்டத்து மலர்களுக்கு
தாகம் தீர்த்து,
விரும்பி அடுக்களை புகுந்து,
அமிர்தமாய் சுவைகூட்டி,
அரிசில் படைத்து,
அக்கம் பக்கத்து,
அன்றாடங்காய்ச்சிகளைத் தேடி,
அவர்தம் சிறாருடன்
ஆடி விளையாடி ,
நீராட்டி,
மையிட்டு
வீரமீசை வரைந்து
அழகு சேர்த்து,
காடு சுற்றக் கிளம்பி
மாலை வரை
எமக்கேயான எல்லா
தந்திர விளையாட்டும்
ஆடிக் களைத்து,
நிலாப் பள்ளியெழுச்சி பாடி,
வீடு சேர்ந்தது – என்
மலரக் காத்திருந்த
மொட்டுப் பருவம்...
...
எம் குல
வீரத்தின் சின்னமான
வலம்புரி சங்கைக்
களவு செய்ய வந்து
கடைசி நொடியில் மாட்டி,
கட்டி வைத்து அடித்து
சிரச் சேதம் செய்யப்போன
இறுதி கணப்பொழுதில்,
வானகம் அதிர
இடியாக முழங்கி ,
கண்ணில் மின்னல் தெறித்து
கட்டவிழ்த்து,
தலை கொய்யக்
காத்திருந்த தலையாளியின்
தலைத் திருகி,
திமிறி இவன் சிதறிய
மூர்க்கத்துளி ரத்தம் - என்
முகம் சேர்ந்து
என்னில்
ஏதோ புரியாத
ஏக்கமொன்றை
விதைத்துப் போக,
மறுநாள் காலை
மூலை சேர்ந்தது - என்
திமிறித் திரிந்த பெண்மை
...
No comments:
Post a Comment