நேற்றைய கனவில்
இவன் காற்சிலம்பு
தெறித்துச் சிதற
பதறி எழுந்து
நான் வரைந்த
இவன் ஓவியத்தின்
திமிர் பார்த்து
பெருமூச்சு விட்டு
எப்போதும் பக்கத்தில்
துணையாய் வைத்திருக்கும்
இவன் பரிசளித்த
அப்போதே உதிர்ந்த
மயிலிறகைத் தொட்டுப்பார்த்தேன்...
மீண்டும் என்னுள்
இவன் குறித்த
போய்விடுவானோ என்ற பயம்
தொற்றிக்கொள்ள,
தலைகவிழ்ந்து தரை பார்த்து
தனித்திருந்தேன்
...
அன்றொரு நாள்,
ஆற்றங்கரையில்
ஆழமாய்ச் சிந்தித்து
தென்றலைக் கீறி முடைந்து
கற்பனை கோட்டையெல்லாம் கட்டி
ஒய்யாரமாய் ஊஞ்சலாடியபோது,
எனக்காகவே
கடவுள் கொடுத்த வரமான
வழக்கமான மயக்கமென்னைத் தழுவ
தனியாய் நீந்தியிருந்த
தங்க மீனுக்குத் துணையாய்ப்போய்
ஆற்றில் விழுந்தேன்...
எப்படித்தான் வருவானோ
ஒவ்வொருமுறையும்
எனைக்காப்பாற்ற!!
...
விழித்துப் பார்க்கையில்
இவன் ஆண்மையின் அரவணைப்பில்
முகமூடிக்குள்ளான
மூர்க்கத்தின் முணுமுணுப்பில்
முறைத்துப் பார்த்த – இவன்
கூரிய விழிகள் விலக்கி
மெலிதாய்ப் புன்னகைத்தேன்..
ஏதோ தோன்றியவனாய்
திடீரென ஓடி,
அடர்ந்து சுற்றியிருந்த
ஆலமர விழுதுகளை
கட்டிப் பிணைத்து
ஏதோ செய்து ,
‘இதோ பார்,
உனக்கான அந்தரத்துக் கட்டில்’ என்றான்
என்னவோ – இவன்
எனைத் தொடும்போது மட்டும்
எனைச் சுற்றிலும்
தென்றலடிக்கிறது ...
எனையறியாமல் எனைத்தூக்கி
அந்தரத்தில் மிதக்க விட்டு,
‘இன்னிக்கு ராத்திரிக்கு
நீ தான் நிலா’ என்றான்..
அன்றைய இரவு
என் வெட்கத்தில் சிவந்தது...
...
தெரியாமலிருந்தும்
தெரிந்ததாய் நான் செய்த
தட்டையும் முறுக்கும்
தின்று விக்கி –இவன்
திணறிய நேரம்,
முடியாமல் சிரிக்க முயன்று – என்னில்
கண்ணீர் கொணர்ந்தான்,
‘பரவால்ல மாயா,
யாரோ திட்றாங்க,
தண்ணி குடு’ என்றான்..
‘கண்ணம்மா தவிர
யாரிருக்கா உன்ன நினைக்க?’
‘ஏன், நீ இல்லியா?’
‘நான்தான் உன்ன
ஜென்மசனியா புடிச்சு
என்கூடவே
வச்சிருக்கேனே’
‘ஏன், கூட இருந்தா
நெனைக்கமாட்டியா?’ என்றான் ..
சில நொடி மௌனம் காத்து,
‘உன்கூட இருந்தா
எனக்கும் சேத்து
நீ தானே யோசிக்ற!’ என்றேன்
...
வழக்கமான ‘ம்ம் ம்ம்’ போட்டு,
‘ஆமா,
கண்ணம்மாவ நேர்ல பாத்தா
என்ன செய்வ?” என்றான்
துளியும் யோசிக்காம,
‘சட்டுன்னு கால்ல விழுவேன்,
அப்புறம் கட்டிக்குவேன்’ என்றேன்..
‘ஏய், அவ என் கண்ணம்மா,
நீ எப்படி கட்டிக்கலாம்’
குழந்தையாகக் கேட்டான்..
‘கண்ணம்மா தானே
என் கண்ணா உன்ன
பாத்துக்கச் சொன்னா,
உனக்கெங்க புரியப்போகுது,
போப்பா போ!’ என்று சீண்ட,
ஏதும் புரியாமல்
அவனுக்கே உரிய
திருட்டு முழியில்
வார்த்தையற்று திக்கினான்
...
“அது சரி,
நீயும் நானும் யாரு?’ என்றேன்
“அப்படின்னா?’
‘நமக்குள்ள என்ன?’ என்றேன்
‘என்னன்னா?’
‘அது வந்து,
வந்து,
நம்ம உறவுக்கு பேர் என்ன?’
இதைக் கேட்கையில்
சத்தியமாய் என்னுயிர்
என்னில் இல்லை..
மௌனமாய் சிலநொடி
வானம் பார்த்து,
அருகே வந்து – பின்
முகம்பார்த்து,
நாடி பிடித்து,
‘நல்லா கேட்டுக்கோ,
நீ மாயா,
நான் மாயன்,
நாம் மாயை’
என்றான்...
இதை நிச்சயிப்பதாய்
எங்களுக்காக
அன்றைய இரவு
புதிதாய் ஒரு
மஞ்சள் மலர்,
ஏழு கடல் தாண்டி,
மிதக்கும் தீவின்
ஏகாந்தத்தில் மலர்ந்திருக்கும்
...
No comments:
Post a Comment