Sunday, November 10, 2013

மாயா - தொடர்ச்சி 3


காடும் காடு சார்ந்த இடமும்
எங்கள் பிழைத்தலுக்கான ஆதாரம்...
கொல்லுதலும்
வெல்ல முடியாததை வெல்லுதலும்
வீரத்தை நிலைநாட்டுதலும்
எம் குலப்பெருமை...
பாற்கடல் அமுதத்திற்காக
மல்லுக்கட்டி நின்றவர்கள்
எம்மூதாதையர்கள்..
பாலை பல கடந்து
நாடு பல வென்று
பளிங்குக்கல் சிங்கச்சிலை செதுக்கி
சென்றவிடமெல்லாம் நிறுவி
நின்று திமிர் செய்தவர்
எம்குலச் சிங்கம்
என் தந்தை...
...
தினம் பூக்கும் குறிஞ்சி,
தாய்மையின் தூயபிரதி,
இருள்சூழ்ந்த எம் கானகத்தின்
தனிப்பெரும் சோதி,
எம் ஒட்டுமொத்த வெற்றிகளையும்
விதைத்து தினந்தோறும்
பயிர்செய்த பக்குவக்காரி,
வேட்டுவ தலைவனை
வாள்முனையில் வளைத்து
‘பிழைத்துப்போ’ எனச்சொல்லி
பின் அவனே
பரிசம்போட்டு பழிவாங்க,
பாசம் கூட்டி
பாடம் பல சொல்லி
நடமாடும்
எம் குலச் சாமி
ஆகிப் போனவள் என் தாய்
...
வீரம் விளைத்து
காடும் வீடும் காக்க
காளைகள் நாலு பெற்றும்
களையற்றுப் போனாள் ..
விட்டுப் பிரிந்த தாய்
மீண்டும் பிறப்பதாய்
செய்து போன சத்தியம்
சாத்தியம் ஆகாது நீடிக்க
நொந்து நூலாகி
உடைந்துபோய் உருகி,
கடைசியாய் காவி தரித்து
கோவில் கோவிலாய்
சுற்றித் திரிந்து,
சூட்சுமமாய் சொல்லிப்போன
ஏதோ ஒரு
ஏழைக்கிழத்தியின் வழிபற்றி
நிலவைக் குறித்து
தீர்க்கமாய் தவமேற்று
நள்ளிரவு நிச்சலனத்தில்
நிலவின் ஒற்றைக்கீற்று
உள்வாங்கி தரித்து
எனைச் சூல் கொண்டாள்
என் சாமி, என் தாய்...
...
எனைத் தாங்கியிருந்த
மாதம் பத்தும்
என் தாய் பேசியதெல்லாம்
இசையாகிப் போக,
அவள் நடை
தனியொரு நடனமாகி,
தனைச் சுற்றி
தன்னியல்பு மீறி,
ஏதோவொன்று
எப்போதும் பிரகாசிக்க,
பகலுறங்கி,
இரவு விழித்து
நிலவோடு நித்திரை காத்து
நடமாடித் திரிந்திருக்கிறாள்
....
நான் வெளிவந்த நொடி,
எம் கானகம் முழுதும்
மஞ்சள் ஒளியும்
மந்தாரப்பூ மணமும்
மாரியெனச் சொரிந்ததாம்..
முதல் மூணு மாசமும்
பசியின்றி , வேட்டையின்றி
தன்னிலை மறந்து
தியானத்தில் மூழ்கித்
திளைத்ததாம்
எம் தீரர் கூட்டம்
...
வால்முனைச் சிணுங்கலும்
யானைப் பிளிறலும்தான்
நான் கேட்ட தாலாட்டு..
குறுங்கத்தி பிடித்து
குளக்கரையில்
அகரம் எழுதி,
காற்றில் வால்நுனியில்
கவிதை எழுதச் செய்தான்
எம் தாய் தந்த மாமன்
...
பல்லாங்குழி வயதில் தொடங்கி
யாருக்கும் முன் எழுந்து
முந்தைய இரவின்
கனவுக் கோலத்தை
கதிரவனுக்குச் சமர்ப்பித்து
எம் குலச் சாமிக்கு
விளக்கு வைத்து முற்றத்தை
வெளிச்சத்தில் மொழுகி வைத்து,
வீரன் என் மூத்த அண்ணனின்
கருப்பழகி குதிரைக்கு
கண் கட்டி பயிற்சி கொடுத்து,
களரி புரிந்து – பின்,
காத்திருக்கும் பலநிற
தோட்டத்து மலர்களுக்கு
தாகம் தீர்த்து,
விரும்பி அடுக்களை புகுந்து,
அமிர்தமாய் சுவைகூட்டி,
அரிசில் படைத்து,
அக்கம் பக்கத்து,
அன்றாடங்காய்ச்சிகளைத் தேடி,
அவர்தம் சிறாருடன்
ஆடி விளையாடி ,
நீராட்டி,
மையிட்டு
வீரமீசை வரைந்து
அழகு சேர்த்து,
காடு சுற்றக் கிளம்பி
மாலை வரை
எமக்கேயான எல்லா
தந்திர விளையாட்டும்
ஆடிக் களைத்து,
நிலாப் பள்ளியெழுச்சி பாடி,
வீடு சேர்ந்தது – என்
மலரக் காத்திருந்த
மொட்டுப் பருவம்...
...
எம் குல
வீரத்தின் சின்னமான
வலம்புரி சங்கைக்
களவு செய்ய வந்து
கடைசி நொடியில் மாட்டி,
கட்டி வைத்து அடித்து
சிரச் சேதம் செய்யப்போன
இறுதி கணப்பொழுதில்,
வானகம் அதிர
இடியாக முழங்கி ,
கண்ணில் மின்னல் தெறித்து
கட்டவிழ்த்து,
தலை கொய்யக்
காத்திருந்த தலையாளியின்
தலைத் திருகி,
திமிறி இவன் சிதறிய
மூர்க்கத்துளி ரத்தம் - என்
முகம் சேர்ந்து
என்னில்
ஏதோ புரியாத
ஏக்கமொன்றை
விதைத்துப் போக,
மறுநாள் காலை
மூலை சேர்ந்தது - என்
திமிறித் திரிந்த பெண்மை
...



Thursday, November 7, 2013

மாயா - தொடர்ச்சி 2


நேற்றைய கனவில்
இவன் காற்சிலம்பு
தெறித்துச் சிதற
பதறி எழுந்து
நான் வரைந்த
இவன் ஓவியத்தின்
திமிர் பார்த்து
பெருமூச்சு விட்டு
எப்போதும் பக்கத்தில்
துணையாய் வைத்திருக்கும்
இவன் பரிசளித்த
அப்போதே உதிர்ந்த
மயிலிறகைத் தொட்டுப்பார்த்தேன்...
மீண்டும் என்னுள்
இவன் குறித்த
போய்விடுவானோ என்ற பயம்
தொற்றிக்கொள்ள,
தலைகவிழ்ந்து தரை பார்த்து
தனித்திருந்தேன்
...
அன்றொரு நாள்,
ஆற்றங்கரையில்
ஆழமாய்ச் சிந்தித்து
தென்றலைக் கீறி முடைந்து
கற்பனை கோட்டையெல்லாம் கட்டி
ஒய்யாரமாய் ஊஞ்சலாடியபோது,
எனக்காகவே
கடவுள் கொடுத்த வரமான
வழக்கமான மயக்கமென்னைத் தழுவ
தனியாய் நீந்தியிருந்த
தங்க மீனுக்குத் துணையாய்ப்போய்
ஆற்றில் விழுந்தேன்...
எப்படித்தான் வருவானோ
ஒவ்வொருமுறையும்
எனைக்காப்பாற்ற!!
...
விழித்துப் பார்க்கையில்
இவன் ஆண்மையின் அரவணைப்பில்
முகமூடிக்குள்ளான
மூர்க்கத்தின் முணுமுணுப்பில்
முறைத்துப் பார்த்த – இவன்
கூரிய விழிகள் விலக்கி
மெலிதாய்ப் புன்னகைத்தேன்..
ஏதோ தோன்றியவனாய்
திடீரென ஓடி,
அடர்ந்து சுற்றியிருந்த
ஆலமர விழுதுகளை
கட்டிப் பிணைத்து
ஏதோ செய்து ,
‘இதோ பார்,
உனக்கான அந்தரத்துக் கட்டில்’ என்றான்
என்னவோ – இவன்
எனைத் தொடும்போது மட்டும்
எனைச் சுற்றிலும்
தென்றலடிக்கிறது ...
எனையறியாமல் எனைத்தூக்கி
அந்தரத்தில் மிதக்க விட்டு,
‘இன்னிக்கு ராத்திரிக்கு
நீ தான் நிலா’ என்றான்..
அன்றைய இரவு
என் வெட்கத்தில் சிவந்தது...
...
தெரியாமலிருந்தும்
தெரிந்ததாய் நான் செய்த
தட்டையும் முறுக்கும்
தின்று விக்கி –இவன்
திணறிய நேரம்,
முடியாமல் சிரிக்க முயன்று – என்னில்
கண்ணீர் கொணர்ந்தான்,
‘பரவால்ல மாயா,
யாரோ திட்றாங்க,
தண்ணி குடு’ என்றான்..
‘கண்ணம்மா தவிர
யாரிருக்கா உன்ன நினைக்க?’
‘ஏன், நீ இல்லியா?’
‘நான்தான் உன்ன
ஜென்மசனியா புடிச்சு
என்கூடவே
வச்சிருக்கேனே’
‘ஏன், கூட இருந்தா
நெனைக்கமாட்டியா?’ என்றான் ..
சில நொடி மௌனம் காத்து,
‘உன்கூட இருந்தா
எனக்கும் சேத்து
நீ தானே யோசிக்ற!’ என்றேன்
...
வழக்கமான ‘ம்ம் ம்ம்’ போட்டு,
‘ஆமா,
கண்ணம்மாவ நேர்ல பாத்தா
என்ன செய்வ?” என்றான்
துளியும் யோசிக்காம,
‘சட்டுன்னு கால்ல விழுவேன்,
அப்புறம் கட்டிக்குவேன்’ என்றேன்..
‘ஏய், அவ என் கண்ணம்மா,
நீ எப்படி கட்டிக்கலாம்’
குழந்தையாகக் கேட்டான்..
‘கண்ணம்மா தானே
என் கண்ணா உன்ன
பாத்துக்கச் சொன்னா,
உனக்கெங்க புரியப்போகுது,
போப்பா போ!’ என்று சீண்ட,
ஏதும் புரியாமல்
அவனுக்கே உரிய
திருட்டு முழியில்
வார்த்தையற்று திக்கினான்
...
“அது சரி,
நீயும் நானும் யாரு?’ என்றேன்
“அப்படின்னா?’
‘நமக்குள்ள என்ன?’ என்றேன்
‘என்னன்னா?’
‘அது வந்து,
வந்து,
நம்ம உறவுக்கு பேர் என்ன?’
இதைக் கேட்கையில்
சத்தியமாய் என்னுயிர்
என்னில் இல்லை..
மௌனமாய் சிலநொடி
வானம் பார்த்து,
அருகே வந்து – பின்
முகம்பார்த்து,
நாடி பிடித்து,
‘நல்லா கேட்டுக்கோ,
நீ மாயா,
நான் மாயன்,
நாம் மாயை’
என்றான்...
இதை நிச்சயிப்பதாய்
எங்களுக்காக
அன்றைய இரவு
புதிதாய் ஒரு
மஞ்சள் மலர்,
ஏழு கடல் தாண்டி,
மிதக்கும் தீவின்
ஏகாந்தத்தில் மலர்ந்திருக்கும்
...


Monday, November 4, 2013

மாயா - தொடர்ச்சி 1


இந்த நொடி – இவன்
எனக்கான மஞ்சள் மலரின்
வாசத்தை நெருங்கியிருப்பான்
...
என் சுண்டு விரல் ஈரம் பட்டு
ஏதோ ஒரு மழைநாளில் – இவன்
சிணுங்கி எழுந்திருக்க
எனையறியாது உந்திப் போய்
இவனுள்ளே விழுந்து விட்டேன் ..
மீண்டு வர முடியாத
அவ்வீழ்ச்சியின் தாக்கத்தில்
என் மனம் சூல்கொள்ள
எந்தப் பூவிலும் இல்லாத
வாசமொன்று எனைப் பிடித்துக்கொண்டது
...
எனக்கும் இவனுக்கும்
மட்டுமே சுவாசிக்க முடிந்த
அவ்வாசத்தின் பிறப்பிடம் தேடி
ஏதுமற்ற ஏழை முதல்
எல்லாம் தெரிந்த வள்ளல் வரை
வானுயர இமயம் முதல்
முக்குளிக்கும் பாடகபுரம் வரை
இருத்தலின் அடித்தளம் முதல்
இல்லாமையின் உச்சம் வரை
இன்னும்
எல்லையுள்ளவை முதல்
எல்லையற்ற ஏதுமற்றது வரை
அலைந்து திரிந்து
களைத்துப் போன பின்னிரவில்
நிலவும் இவனும் தனித்திருக்க
குளிரோடு சேர்ந்து தானும்
ஊளையிட்டு பறந்து வந்த
செஞ்சிவப்புப் பறவையொன்று
இவன் மீது மோதி
மஞ்சள் மலராகி – இவன்
மடியில் விழுந்தது
...
வார்த்தையற்று – என்
வாசம் கிடைத்த மகிழ்ச்சியில்
திளைத்து தூங்கிப் போனான்..
அலைகடலின் மிதத்தலையொத்த
நித்திரை அது..
விழித்தெழுகையில்
மிதக்கும் தீவின்
மஞ்சள் மலரை
எனக்குப் பரிசளிப்பதாய்
இவனுக்குள் பித்துப்பிடித்துப் போனது..
...
இவன் என் கைப்பிடித்து
நின்ற நொடி நினைவிருக்கிறதா?
அந்த நொடி
யாருக்கும் கேளாமல்
என்னருகே வந்து
“மன்னிச்சுக்கோ மாயா”
என்று சொல்லியிருக்கிறான்..
எனக்கே தெரியாமல் – அது
என் மனவெளியில் – ஒரு
புரியாத புதிராக – இன்னும்
சுற்றித் திரிகிறது
...
இவன் கை பற்ற
ஏங்கியிருப்போர் எத்தனை,
அப்படியிருக்க
இவனே வந்து பற்றியதில்
சிலையாகிப் போன நான்
இவனாகியும் போனேன் போலும்..
எதற்கு மன்னிப்பு?
இவன் காலடியில் கிடந்து
காதல் செய்து கிடத்தல்
எனக்கான வரமல்லவா?
இல்லை,
இவனை மன்னிக்கத்தான்
யாரால் முடியும்?
வணங்கா மகுடங்களும்
இவன் வாள்வீச்சும்
சொல்வீச்சும் கண்டு
வாடியிருக்க,
இவனை மன்னிக்க
இவனைப் போலவே
யுகம் பல முன்னர்
வாழ்ந்து போன
வெண்ணைக் கள்ளனாலும்
இயலாதுதானே போகும்..
அப்படியிருக்க,
என்னுள் ஏன் – இப்படி
ஒரு குழப்பத்தை
விதைத்து நின்றான்?
...
ஒரு நாள்
யாருமறியாமல் – இவன்
விட்டு விட எத்தனித்த
கண்ணீர்த்துளியை
கடைசி நொடியில்
கையேந்தி காப்பாற்றி
கண்ணில் ஒற்றி
கண்ணீர் விட்டேன்..
கல்லுக்குள் ஈரம் கண்டு – என்
பேதை மனம் பதைபதைக்க
நடிக்கத் தெரியாமல் நடித்து
ஏதுமற்றதாய்
ஏதோவொன்றை சொல்லிப்போனான்..
அவன் கண்களின்
அப்போதைய வலி
பால் வற்றிய தாயின்
பரிதவிப்பு
...
அமைதியாக நானும்
பின் தொடர,
நிலவு நோக்கி நடந்தவனாய்
தன் நிலவைப் பற்றி
கதை சொன்னான்,
இல்லையில்லை
கவிதை சொன்னான்
கண்ணம்மாவின்
காவியம் சொன்னான்
...
இந்த வரி எழுதி முடிக்கையில்
சராசரி பெண்ணின்
அத்தனை வன்மமும்
பிடிப்பும் பிடிவாதமும்
என்னுள் உச்சநிலை தாண்டி
உயிர் வலி கொடுக்கிறது..
இருந்தாலும் – இவன்
என்னுள் விதைத்துப் போன
ஒவ்வொரு நொடி வாழ்தலும்
இவன் கரம்பிடித்து
என் வாழ்தலை
நீட்டித்துச் செல்கிறது...
...