Monday, February 11, 2013

சிறியதாகிப் போகிறேன்...

நீண்டு கொண்டே சென்ற
கனவு திடீரென
நின்று போக
அடுத்த நொடி அசைவின்
வலி உணர்ந்து
நான் சுருங்கிக் கொள்ள
எழுந்தும் எழாமல்
எனது உயிர்
மேலும் கீழும்
பரிதவிக்க
மூர்ச்சையடைந்து
வார்த்தையற்றுப் போய்
வீழ்ந்து போகும்போதும்
ஏமாற்றத்தை அறிந்தே
என் கண்கள்
உன் கைகளைத் தேட
ஏதும் நடக்காதது போல
எளிதாகப் 'போய் விடு'
என்கிறாய்..
கண்ணம்மா
உனைப் புதைத்து வைத்து
என் காதல் செடி
வளர்ந்து
பூப்பூத்துக் கிடந்தது..
இனி
இலையுதிர்த்து
ஏதுமற்றுப் போகும்..
எந்த ஜென்மத்திலோ
தொட்டும் தொடாமல்
விட்டுப் போனதாய்
நீ
சொல்லிப்போனதை
எங்கே போய்
நானும் புலம்ப?
என்னுடன் இருக்கையில்
ஏதுமற்று எல்லாமாய்
இருப்பதாக
உன் கண்கள்
காதலைக் கண்ணீராய்
காற்றில் கலந்து சென்றதை
என்
எந்தக் கடந்த காலக்
கவிதையில் நான்
தேடிப் பிடிக்க?
என் கடந்த காலக் காதலை
கடிந்து
நிஜமாகவே அறைந்து போனாய்..
'என்ன அவசரம் உனக்கு?
நான் வருவேன்னு தெரியாதா ?'
என்றெல்லாம்
எக்கச்சக்கமாய் உன்
உணர்ச்சிப் பரிதவிப்பை
என்னில் கடத்திப் போனாய்..
அதுவரை இல்லாத
ஏக்கத்தில்
நானும் மூழ்கிப் போனேன் ..
..
இந்த நொடி
எழுத வேண்டி
எனை வருத்தி
உன் நினைவைத்
தவிர்க்க வேண்டி
எனை வருத்தி
நான் கோர்க்கும்
எந்தவொரு வார்த்தையும்
எனக்கு அழகாய்த்
தோன்றவில்லை கண்ணம்மா..
நீ கேட்டதால்
எழுதித் தொலைக்கிறேன்
எழுதித் தொலைகிறேன்..
இஷ்டமின்றி
நான் எழுதும்
என் வாழ்வின்
முதல் கவிதை இது..
எனக்கே பிடிக்காமல்
என் வருத்தத்தின்
வடிவமாய் வடிந்து வருகிறது..
எனை உள்ளிருந்து
ஏளனம் செய்யும்
எல்லா வார்த்தைகளும்
இதோ உனக்காக..
எடுத்துப் போ..
'போ போ ' என்பது தானே
உன் அதிகபட்ச
உபயோகம்..
முதல் முறை
சிறியதாகிப் போனதாய்
உணர்கிறேன்..
என் முகம்
எனக்குப் பிடிக்காமல் இருந்து
மெதுவாய்க் கொல்கிறது ...
நம் கடைசிப் பயணம்
நினைவிருக்கிறதா?
இன்னும் அதில் நான்
பயணித்துக் கொண்டுதானிருக்கிறேன் ..
என் அறை
இருளில் மூழ்கிக் கிடக்கிறது
எனக்குப் பிடித்த மாதிரி ..
ஆனால்
இதுவரை இல்லாத
ஏதோவொன்று
எனை எங்கோ
இந்தக் கணத்தில்
இழுத்துச் செல்கிறது...
மீண்டு வர விரும்பாமல்
என் மனம்
விரும்பித் தொடர்கிறது..
மௌனத்தின்
முடிவையோ இல்லை
தொடக்கத்தையோ தேடி
விரும்பித் தொடர்கிறது..
முடிவோ தொடக்கமோ
அதில்
முடிந்து போக
எனக்கு வரம் கொடு ..
இல்லை
சாபம் கொடு..
....



No comments:

Post a Comment