Tuesday, February 12, 2013

விரைந்து வா கிருஷ்ணாவை மீட்டெடு...

என்றோ எழுதிய
ஈரப் பூங்காற்றின்
அழகியல் ரசித்து
என்பால் வலிய விழுந்து
என்னுள் ஆழ்ந்து
என் கவி ஊடுருவி
சுவை சேர்ப்பதாய்
வலி சேர்த்து
நீயே கவியாகவும்
மாறிப்போனாய் ..
மீண்டு வாரா
இந்த வாழ்தலில்
உனக்கேன் இத்தனை பிடித்தம்?
உனைக் கரைத்து
ஒவ்வொரு நொடியும்
எனக்கான வார்த்தைகளை
வெளித்தள்ளுகிறாய்
உள்ளூர படிந்து கிடக்கும்
உன் சார்ந்த
உணர்ச்சிப் படிமங்களை
பொறுக்கியெடுத்து
பதமாய் பதம் சமைத்து
எங்கோ எனக்காக
ஏங்கித் தவித்திருக்கும்
ஏகாந்தத்தை நோக்கி நான்
கவி புனைய..
கண் அசைவிலா
கவிதையொன்றை
கணப்பொழுதில் என் முன்
வீசியெறிந்து
விடை கேட்பாய் நீ...
விட்ட கவி
தொட்டும் தொடாமல்
கருத்து சொல்ல
உன் தாக்குதல் கண்டு
தன்னிலை மறந்து
வீழ்ந்து படுவேன் நான்..
வென்றதாய் மெல்லச் சிரித்து
என் கவியின் மீது
கடைசி பூச்சு
உன் பூவிதழால்
செய்வாய் நீ....
அவ்வப்போது
அமைதியாகத் தோன்றினாலும்
உன் வேறுபல
உருவங்கள்
நான் அறிந்ததே...
சமீபத்திய
கவிஞனின் சோகம்
உன் சார்ந்ததா?
இல்லையா?
இதை நீ ஆராய்ந்து முடிக்கையில்
கவிஞன் முடிந்து போயிருப்பான்..
கண்ணம்மா சார்ந்த எதுவும்
இப்போது அவனை
தட்டி எழுப்பத் தவறவில்லை தான்..
ஆயினும்
ஆழ்ந்து ருசித்த
சோகத்தின் சுகத்திலேயே
சுருண்டு கிடக்கிறான்
உன் கிருஷ்ணா..
இந்த ருசி
இவன் இதுவரை
பார்த்திரா ஒன்றாகிப் போனதால்
எதையும் முழுமையாய்
வாழ்வதாய் கொண்ட
நோக்கம் தழுவி
இன்னும் இறுக்கமாய்
இதனுள்ளே மூழ்கிப் போகிறான்..
எதுவும் யாரும்
நீயும் - இல்லை
இவன் பால்
கவி கொடுத்த
கடைசி மேய்ப்பனும்
அவன் சந்ததி வந்த
எந்தக் கொம்பனும்
இவன் இந்நிலை
மாற்றல் சாத்தியமன்று..
ஒருவேளை
இவன் என்றோ
எழுதி வெறுத்து
உள்வாழ்ந்து
ஒதுக்கி வைத்த
ஒன்றும் விளங்கா
கவிதையின் உறுத்தல்
இவனைத் தட்டி
எழுப்பக்கூடும் ..
ஆனால்
அதைக் கொணர்ந்து
இவன் முன்
வீசியெறிய
இன்றைய உன் நிலை
போதாது கண்ணம்மா..
உன் முதல் பார்வையையும்
முதல் வார்த்தையையும்
மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்து
விரைந்து வா?
மூர்ச்சையடையும் முன்
இந்த
மூர்க்கக் கவிஞனை
மீட்டெடுக்க
முயன்று பார்ப்போம்..
..


எதை நோக்கி கிருஷ்ணா?

உன் விழியசைவின்
வழிகாட்டுதலில்
விடியலை நோக்கிச்
செல்வதாய்
சென்ற என் நாட்கள் ...
மந்தையோடிருந்ததை
மறந்து நான்
நொடிதோறும்
வாழ்ந்து வாழவைத்து
சிறந்த மேய்ப்பனாக
உயர்ந்து
களமிறங்கி
வேட்டையாடி
வீரம் காட்டி
விமர்சனம் பல தாங்கி
வீழாது
வியப்பு மேம்படச் செய்து
வெற்றி நிலை நாட்டி
வேறுபல ஈர்ப்பு நோக்கி
வசதிக்காக சாய்ந்து
அசைந்து கொடுத்து
விளைவு வேண்டி
வளைந்து கொடுத்து
வசியம் செய்து
வன்மை ஆழப் பதித்து
பின் இயல்பாய்
எவர்நோக்கினும்
மேலவன் கண்டதாய்
வணங்கி
வணங்கச்செய்து
சிறந்த நடிப்புச் செய்து
சிந்தை பல
மனம் பலவற்றில்
ஊடுருவவிட்டு
உள்ளூரப் பதிந்து
உயிராகிப் போய்
பின்
சாதித்து சதித்து
ஏதுமற்ற நிலையில்
இருப்பதாய் சொல்லி
நகர்ந்து போய்
நிலைகுத்திய விண்ணில்
கவிதை புனைந்து
கடும் சோகத்தில் ஆழ்ந்து
அதிலேயே நீடித்திருந்து
சார்ந்தவர் சிந்திக்க
சூழ்நிலை அமைத்து
அசைவின்றி திமிராய்
அனாயாச திறன்களை
உளவியலில் இறக்கி
விளையாட்டு நடத்தி
சூழ்ச்சி செய்து
சூதாடி
நாடு பெண்
நல்லவை கெட்டவை
நித்தியம் நிதர்சனம்
எல்லாம் கவர்ந்து
கணம் கூட்டி
நிமிர்ந்து நீட்டி
நடை வீசிப்
புறம் பேசிப்
பொழுதில் ஒன்றாத
விழுதுகளைப் பழுது செய்து
பெருமரத்தின்
வீழ்ச்சிக்காக காத்திருந்து
மீண்டும் முரண்கூட்டி
கவிதை செய்து
காலட்சேபம் கரைந்து
கரைந்து போனதாய் காட்டி
கூடி இருந்து
முந்தைய
மேய்ப்பனை நினைந்து
பூஜை செய்து
பலபல படைத்து
பரிகாசம் அடக்கி
பணிந்து போனதாய் பிதற்றி
பிணம் நாடும்
இடம் தேடி
வேண்டாதன எவை
என அறிந்து
அவையும் சுவைத்தறிந்து
எக்காளமாய்
எத்தடையும் இன்றி
எதை நோக்கி
இந்தப் பாவப் பிழைப்பு ?






Monday, February 11, 2013

சிறியதாகிப் போகிறேன்...

நீண்டு கொண்டே சென்ற
கனவு திடீரென
நின்று போக
அடுத்த நொடி அசைவின்
வலி உணர்ந்து
நான் சுருங்கிக் கொள்ள
எழுந்தும் எழாமல்
எனது உயிர்
மேலும் கீழும்
பரிதவிக்க
மூர்ச்சையடைந்து
வார்த்தையற்றுப் போய்
வீழ்ந்து போகும்போதும்
ஏமாற்றத்தை அறிந்தே
என் கண்கள்
உன் கைகளைத் தேட
ஏதும் நடக்காதது போல
எளிதாகப் 'போய் விடு'
என்கிறாய்..
கண்ணம்மா
உனைப் புதைத்து வைத்து
என் காதல் செடி
வளர்ந்து
பூப்பூத்துக் கிடந்தது..
இனி
இலையுதிர்த்து
ஏதுமற்றுப் போகும்..
எந்த ஜென்மத்திலோ
தொட்டும் தொடாமல்
விட்டுப் போனதாய்
நீ
சொல்லிப்போனதை
எங்கே போய்
நானும் புலம்ப?
என்னுடன் இருக்கையில்
ஏதுமற்று எல்லாமாய்
இருப்பதாக
உன் கண்கள்
காதலைக் கண்ணீராய்
காற்றில் கலந்து சென்றதை
என்
எந்தக் கடந்த காலக்
கவிதையில் நான்
தேடிப் பிடிக்க?
என் கடந்த காலக் காதலை
கடிந்து
நிஜமாகவே அறைந்து போனாய்..
'என்ன அவசரம் உனக்கு?
நான் வருவேன்னு தெரியாதா ?'
என்றெல்லாம்
எக்கச்சக்கமாய் உன்
உணர்ச்சிப் பரிதவிப்பை
என்னில் கடத்திப் போனாய்..
அதுவரை இல்லாத
ஏக்கத்தில்
நானும் மூழ்கிப் போனேன் ..
..
இந்த நொடி
எழுத வேண்டி
எனை வருத்தி
உன் நினைவைத்
தவிர்க்க வேண்டி
எனை வருத்தி
நான் கோர்க்கும்
எந்தவொரு வார்த்தையும்
எனக்கு அழகாய்த்
தோன்றவில்லை கண்ணம்மா..
நீ கேட்டதால்
எழுதித் தொலைக்கிறேன்
எழுதித் தொலைகிறேன்..
இஷ்டமின்றி
நான் எழுதும்
என் வாழ்வின்
முதல் கவிதை இது..
எனக்கே பிடிக்காமல்
என் வருத்தத்தின்
வடிவமாய் வடிந்து வருகிறது..
எனை உள்ளிருந்து
ஏளனம் செய்யும்
எல்லா வார்த்தைகளும்
இதோ உனக்காக..
எடுத்துப் போ..
'போ போ ' என்பது தானே
உன் அதிகபட்ச
உபயோகம்..
முதல் முறை
சிறியதாகிப் போனதாய்
உணர்கிறேன்..
என் முகம்
எனக்குப் பிடிக்காமல் இருந்து
மெதுவாய்க் கொல்கிறது ...
நம் கடைசிப் பயணம்
நினைவிருக்கிறதா?
இன்னும் அதில் நான்
பயணித்துக் கொண்டுதானிருக்கிறேன் ..
என் அறை
இருளில் மூழ்கிக் கிடக்கிறது
எனக்குப் பிடித்த மாதிரி ..
ஆனால்
இதுவரை இல்லாத
ஏதோவொன்று
எனை எங்கோ
இந்தக் கணத்தில்
இழுத்துச் செல்கிறது...
மீண்டு வர விரும்பாமல்
என் மனம்
விரும்பித் தொடர்கிறது..
மௌனத்தின்
முடிவையோ இல்லை
தொடக்கத்தையோ தேடி
விரும்பித் தொடர்கிறது..
முடிவோ தொடக்கமோ
அதில்
முடிந்து போக
எனக்கு வரம் கொடு ..
இல்லை
சாபம் கொடு..
....