ஏதோ ஒரு
கார்த்திகை மாதத்தில்
தெருவோரத்தில்
பகிரங்கமாய்
நடந்தேறிய அந்தரங்கம்!
அதற்குப்
பிறந்தவன் தான் நான் ..
விலாசமற்ற பிறப்பு
விலாசம் தேடும் இருப்பு
இதுதான்
என்னுடைய
வாழ்வின் சிறப்பு!
..
உள்ளே உணர்ந்த
இதயத் துடிப்பும்
வெளியே உணர்ந்த –என்
சகோதரிகளின்
வதைவதைப்பும் தான்
நான் உயிரோடிருப்பதை
உணர்த்திற்று..
முளைத்தும் முளைக்காத
பற்கள் –அந்த
முலைக்காம்புகளில்
முட்டி மோதி
பசியாறியது
இன்னமும் நினைவிருக்கிறது..
அந்த உஷ்ணம்
இன்றும் –என்
அடிவயிற்றில்
அக்னிக்குஞ்சாக
அடங்கிக் கிடக்கிறது!
..
கருவுற்ற காலம் முதல் – நான்
கண் திறந்த காலம் வரை
என் தாய் பட்ட பாடு
எனக்கு மட்டுமே வெளிச்சம்!
..
ஓடிப்போய்விட்ட
ஒற்றைத் தகப்பனை
நினைந்து
வருந்துவதை விட
கூடிக் கிடக்கின்ற
குட்டிச் சகோதரிகளுடன்
ஓடி விளையாடவே
விரும்பியது என் இளமை!
..
எச்சிக்கையில்
காக்கா விரட்டாதவர்கள்
மிச்சம் மீதி போடுகின்ற
எச்சில் இலைகளைக்
கச்சிதமாகக் கொணர்ந்து
என் குட்டிச் சகோதரிகள்
சொச்சம் கிடைப்பதை
ருசித்துச் சுவைப்பதை
ரசித்துப் பார்த்திருப்பேன் ..
..
குழாயடித் தண்ணிக்கு
அடிச்சுக் கொள்ளும்
சேரிப் பெண்டிர் போல
சில சமயம் விழுகின்ற
அசைவ இலைகளுக்காக
அடித்துக் கொள்ளும்
என் உடன்பிறப்புகள்!
எலும்புக்கும் சதைக்கும்
நான் உணர்ந்திருந்த
வித்தியாசத்தை
அவர்களுக்குச்
சொல்லத் தெரியாமல்
விக்கித்து நிற்பேன் நான்!
ஏழைக்குக் கிடைத்த
நெல்லிக்கனி..
ஊறுகாய் போட்டால் என்ன?
ஒரே வாயில் போட்டால் என்ன?
அவர்கள்
ஏப்பம் விட்டபின்
எச்சிலில் பிறந்த மாணிக்கமாக
எனக்குக் கிடைக்கும்
ஒரு துண்டு எலும்பையும்
எழும்பும் கூடுமாய்
இருந்த என் தாய்க்கு
விட்டுவைத்து
சைவமாய் மாறியிருப்பேன் நான்!
அதையும்
கொண்டு போகக்
காத்திருக்கும்
சனி பிடித்த சனிபகவான்!
காவிரிக்குக் காத்திருக்கும்
கருப்புத் தமிழன் போல
பேசும் வரம் பெற்றால்
ஒன்றுகூடி தலைநகர் சென்று
கரைந்து கரைந்து
காவிரியைக்
கரைத்து வந்திருக்கும்
இந்தக் கருப்புக்கூட்டம்
காக்கா கூட்டம்!
..
நான்
முதன்முறை வாலாட்டியது
என்
சுய நினைவில் இல்லை
ஆனால்
வாலாட்டுவதே – என்
வயிற்றுப்பிழைப்பு
ஆகிப் போனது!
..
டீக்கடை பெஞ்சுகளில்
உழைத்துக் களைத்து
இளைப்பாறிக் கொண்டிருக்கும்
பெரிய ஐயா முதல்
வெட்டிக்கதை பேசி
வயிற்றை நிரப்பிக் கொள்ளும்
சோம்பேறிகள் வரை
அனைவருக்கும்
என் வணக்கம்
வாலாட்டுதல் தான்!
..
இரக்கமான பொறைக்கும்
எரிச்சலான வெந்நீருக்கும்
எட்டி உதைக்கும்
தோல் செருப்புகளுக்கும்
என் பதில்
வாலாட்டுதல் தான்..
சில சமயம்
அடிக்கும்போது
அடக்கி வைத்த
அக்னிக்குஞ்சு
உச்சஸ்தாயில் வெளிவரும்!
அதைக்கேட்டு
சிரித்தவர்கள் ஏராளம்
பயந்தவர்கள் ஏராளம்
உண்மையை உணர்ந்தவர்கள்
சொற்பம்!
..
ஓர் நாள்
அப்படி ஓர் நிகழ்வு
என் வாழ்வை திருப்பிப்போட்டது
எட்டி உதைத்த
ஒரு
மாட்டுச் செருப்பின்
வலி தாங்காது – நான்
அலறியடித்து விரைந்த நேரம்
இரு பிஞ்சுக்கைகள் – எனைப்
பிடித்துத் தூக்கின!
எனக்குக் கிடைத்த
முதல் முத்தம்
மானுட முத்தம்
அத்தனை வலியும்
பறந்து போனது!
..
என் கண்களில் தெரிந்த
அதே ஏக்கம்
அதே சோகம்
அந்தப் பிஞ்சுக்கைகளின்
சொந்தக்காரக் கண்களிலும் !
அவன் பரட்டைத் தலையும்
ஒழுகும் மூக்கும்
அம்மண அழகும்
கழுத்தில் தொங்கும்
மாரியம்மன் கயிறும்
உணர்த்தின எங்கள்
கலப்பின ஒற்றுமை அடையாளம்!
ஆனாலும்
முறையாகப் பிறந்திருக்கிறான்
அவன்!
...
“எம்மா ,
நைனா “ என்று அவன்
கத்தியபோது – அவன்
முகவரி
நடைபாதை – என
தெரிந்தது !
எனை
அடுத்தமுறை
தரையில் விடும் வரை
என் தலையை
தடவிக் கொண்டேயிருந்தான் ..
நான் உணர்ந்த
முதல் தாலாட்டு அது!
அவன் உறைவிடத்தைப்
பார்த்துக் கொஞ்சம்
உறைந்து போனேன் நான்!
..
“மறுபடியும் மாட்டுத்தோலா?” என்று
ஆங்காங்கே அழகாயும்
அரைகுறையாயும்
கால்களற்ற செருப்புகள் ..
இன்னுமொரு
ஆப்ரகாம் லிங்கனோ – என
மனதிற்குள்
சிரித்துக் கொண்டேன் ..
சமூகத்தை நடக்க வைக்க
முடமாகிப் போன குடும்பம் – என
புரட்சிக் கவிதையும் தோன்றியது..
..
ஷூ கட்டும்
லேஸ் எடுத்து
எனக்கொரு
நெக்லேஸ் போட்டான் ..
அது நீண்டு கொண்டே போய்
சாலைக் கருப்பையும்
கூவத்துக் கருப்பையும்
பிரிக்கும்
வெள்ளைப் பாலத்தின்
சுண்ணாம்புத் தூணில் போய்
மூன்று முடிச்சு போட்டது!
பிறவிக்குணம்
காட்ட எண்ணி
அங்குமிங்கும்
அசைத்துப்பார்த்தேன் ..
இழுத்துப்பார்த்தேன் ..
மனிதர்களின் கால்கட்டு
இன்னமும் உறுதியாகவே இருந்தது
அறுத்தெறிய முடியவில்லை
கழுத்து நரம்பு தெறிக்க
கத்திப் பார்த்தேன் – பின்
சோர்ந்து போய்
எனக்கே உரிய
இரண்டு கால் பாணியில்
அமர்ந்து விட்டேன் ..
நெடு நாள் உபயோகித்த
Use and throw டம்ளரில்
கடைசியாய் இருந்த
ஒரு மடக்கை
எனக்காக ஊற்றிப்போனான்..
அந்தத் தேநீர் சிநேகிதம்
எனக்குப் பிடித்துப் போனது..
No comments:
Post a Comment