Tuesday, January 15, 2013

நாய்க்குட்டிப் பார்வை (முடிவு)


அடுத்த நாளு காலையில
கவர்ன்மெண்டு ஆபிசரு
கடையெல்லாம் காலி பண்ண
கண்டிப்பா கத்திப் போனார் ..
புல்டோசர் கொண்டு வந்து
பழசெல்லாம் புடுங்கிப் போட்டு
பாதையத்தான் விரிக்கப் போறான்
மனுசப்பய
மனசு மட்டும்
சுருங்கிக் கெடக்கு
வோட்டு கேட்டு வரும்போது
நோட்டுக் கட்ட மாத்திக்கிட்டு
ரோட்டு மேல சத்தியமா
“அத செய்வோம்
இத செய்வோம்”னு
ஆளாளுக்கு வாயடிச்சான்..
இப்போ
ஒரு பயலும்
துணைக்கு வரல !
மழையிலயும் வெயிலிலயும்
மறைவு தந்து
காத்து நின்ன
மகராசி வேப்ப மரம் !
முகராசி இழந்து
வாடி நின்னா!
மறைஞ்சு போன
அப்பா அம்மா
போட்டோவ மாட்டி வச்ச  
ஆணியத்தான் தாங்கி நின்னா !
சிவப்புத்துணி கட்டிவச்சு
மஞ்சள் குங்குமம்
பூசி வச்சு
‘மாரியாத்தா’ என்று சொல்லி
ஒரு
மாலையத்தான் கட்டி வச்சான்
இப்போ
அடியோடு புடுங்கப் போறான்
இக்குடும்பத்த
வேரோட
சாய்க்கப் போறான்
ஒத்த ரூவா நாணயத்த
உன் நெத்தியில ஒட்டிவைக்க
பாவிப்பய மனசுக்கு
யாரும்
பக்குவமா சொல்லித்தரல!
கட்டிவச்ச ஊஞ்சலையே
கெட்டியாப் புடுச்சிக்கிட்டு
பாசக்கார அண்ணங்காரன்
பரபரன்னு
முழிச்சு நின்னான்!
...
வேப்ப முத்த உடச்செடுத்து
மொழியில தான்
வச்சொடச்சு
இரத்தம் பார்த்து
ஆடிநின்னா
மூத்தக்கா தன லக்ஷ்மி
தலைமேல மண் விழுந்த
சோகத்த அறியாம
குழிதோண்டி வீடு கட்டி
தங்கச்சிங்க விளையாட
நான் மட்டும்
நா வலிக்க
நாள் பூரா
குரைச்சுக் கிடந்தேன் !
ரேசன் கார்ட பாக்காத
இவுக மேல மண்ண போட்டு
பளபளன்னு ரோடு போட்டு
பயணம் போகப் போறாக
அடுத்த ராத்திரி
என்ன செய்ய?
வாடகைக்கு
வீடு வேண்டாம்
வாடையில்லா
கூடு போதும் !
இல்ல
பாடையொண்ணு
செஞ்சுத்தாங்க
இவுக
பரலோகம் போகட்டும்!
..
ஒவ்வொண்ணா அள்ளிப்போட்டு
ஒட்டுமொத்த குடும்பமும்
ஒரு கோணியில
அடங்கிப் போச்சு !
“ஐ ! ஐ! “ன்னு
ஆடிக்கிட்டு
டூரு போறதா நெனச்சுக்கிட்டு
லக்ஷ்மிங்க படையெடுக்க
மனசுலயும் தோளுலயும்
பாரத்த தாங்கிக்கிட்டு
பைய நடந்தான் அப்பாக்காரன்
மரநிழலில் மட்டுமே
மறைஞ்சு குளிச்சத
மறக்க முடியாம
மனசின்றி மண்பார்த்து
பின் தொடர்ந்தா அம்மாக்காரி!
..
“வா மணி, போலாம்”னு
என்னையும் கூப்பிட்டான்
பாசக்கார அண்ணங்காரன்
இப்பவும் வாலாட்டி
அவன்
பின்னாடி நானும் போனேன்!
..
மூணு நாள் ராப்பகலா
ஊர் முழுசும்
சுத்திப் பார்த்தோம் ..
காலாற களைப்பாற
தெருவோரம் உக்காந்தா
‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ன்னு
காவல் துறை
நீதி பேச
‘புள்ளக்குட்டிக் காரன்’னு
பொழச்சுக்க இடங்கேட்டான் !
இந்தமுறை
இரக்கமின்றி
முட்டியில லத்தி பேச
பொழ பொழன்னு
அழுதுபுட்டான் !
எத்தனையோ வருசமா
அடக்கி வச்ச அத்தனையும்
கண்ணீரா வடிச்சுப்புட்டான்..
இருந்த கொஞ்சம் சில்லரையும்
இன்னிக்கே தீர்ந்து போகும் !
..
அடுத்த வேளை
அரை வயிறு
நமக்குன்னு இல்லாட்டியும்
நாக்கு செத்துப்
போன புள்ளங்க
மூச்சுவிட என்னசெய்ய?
..
முந்தானையில் முகந்தொடச்சி
மயங்கி விழுந்தா
அம்மாக்காரி!
..
சீவனத்த அப்பாக்காரன்
மூக்குபக்கம் கைய வச்சி
பாசமுள்ள பொண்டாட்டி
இருக்காளா போய்ட்டாளான்னு
பதபதச்சி சிதறிப்போனான்!
..
“அரசாங்க ஆஸ்பத்திரி
தூக்கிப் போக
ஆட்டோக்காரன்
ஓசியில வருவானா?
இல்ல
எனக்கிருந்த
ஒரே சொத்த
எருமையில தூக்கிப்போக
எமராசா வருவாரா?
என்னப் பெத்த மகராசி
வுட்டுப் புட்டு போய்ட்டான்னா  
எங்க போயி நானும் நிற்பேன்?
கொள்ளி போடா காசு இல்ல
கொழந்தகள என்ன செய்வேன்?
புண்ணியஞ் செஞ்சவ நீ!
சுமங்கலியா பொறியடீ!
மண்ணுல உன்னவிட்டா
மனுசியினு யாரிருக்கா?
பல வருஷம் முன்னாடி
படுத்துக்க கூப்புட்டான்னு
ஒருத்தன் தலையறுத்து
வந்து நின்னா !
உடம்ப வித்து
பொழப்பவங்க
உந்தன்
கால் கழுவி
குடிக்கணுன்டீ!
என்ன விட்டுப் போறீன்னா
எந்தன் உசிருந்தாரேன்
எடுத்துப் போடீ!
அழுது முடிச்சு
நெஞ்சப் புடிச்சு
சரிந்து விழுந்தான்
அப்பாக்காரன்!
..
இரு உடம்பும்
ஈ மொய்க்க
இறுதிச்சடங்கு
யாரு செய்வா?
புள்ளக்குட்டி இருந்துங்கூட
அனாதப் பொணமா
போயிட்டீங்களே!
..
சுத்தி சுத்தி
நானும் வந்தேன்
கண்ணோரம் ஈரமாக
இப்போதும் வாலாட்டி!
..
செஞ்சுவச்ச அப்பாக்காரன்
கொஞ்சி வளர்த்த அம்மாக்காரி
இனிமே இல்லையினு
புரிஞ்சுபோன பிஞ்சுகளும்
நெஞ்சுல ஏதுமின்றி
மிஞ்சியிருந்த
கொஞ்சம் கண்ணீரையும்
அஞ்சலியாய்
கொட்டித் தீர்த்தன..
அரசாங்க வண்டி வந்து
அலுத்துக்கிட்டு அள்ளிப்போய்
மின்சார சுடுகாட்டுல
சொகுசாக கொள்ளிவைக்க
அஞ்சே நிமிஷத்துல
சட்டியில சாம்பலாக
அண்ணங்காரன் கையில!
..
அத
கரைக்கணுமா ஒடைக்கணுமா
என்னனு தெரியாம
சாக்குப் பையில்
எடுத்துக்கிட்டு
ஊரவிட்டு
வெளிய வந்தோம்!
உச்சி வெயில் கானல் நீர்
கைதட்டி வரவேற்க,
சாக்குப்பையில் கால்வேக
தார் காய்ச்சி
ரோடு போடும்
அன்றாடங்காய்ச்சிகளை
அசதியுடன் கடந்து போனோம்..
..
வெட்டிவச்ச குழியினிலே
புதைக்காம விட்டுவச்ச
இம்மாம்பெரிய வட்டக் குழாய்..
ரோட்டோரம்
தாகத்தோடு தனிமையில்
தவம் இருந்தது!
“இருக்க இடம்
கிடச்சிப்புட்டா
நான்தான்
இங்கிலாந்து இளவரசன்”னு
தெளிச்சலோடு அண்ணங்காரன்
குழாய் வீட்டத்
திறந்து வச்சான் ..
..
வயிறெல்லாம் வத்திப்போய்
வறண்ட நாக்க சப்பிக்கிட்டு
பாசமுள்ள ரோசாங்க
வாசமின்றி வந்துச்சுங்க!
குழாயடித் தண்ணீர
கொஞ்சங்கொஞ்சமா
மொண்டு வந்து
தங்கச்சிங்க தாகத்த
அண்ணங்காரன் தீத்து வச்சான்!
எம்பொழப்பு நாய் பொழப்பு..
இதையெல்லாம் பாத்துப்புட்டு
நானும் ஓர் அண்ணந்தான்னு
உள்மனசு குத்திச்சு!
...
தங்கமான தங்கைகள
தவிக்கவிட்டு வந்துட்டனே!
எங்கபோயி நானுந்தேட?
எங்கம்மா இருக்காளோ?
காக்கி டவுசர் போட்ட மாமா
கார்ப்பரேசன் வண்டியில
கண்ணிவச்சு வந்திறங்கி
ஊசி போட்டு கொன்னுட்டானோ?
மந்திரிவீட்டு மரத்துக்கு
உரமாக்கிப் போட்டுட்டானோ?
எம் மருமகனப் பெத்துப்போடும்
வயசிருக்கும் தங்கச்சிக்கு..
பணக்காரப் பண்ணையாரு
செல்ல நாயா ஆயிட்டியோ?
இல்ல
பாவிப்பய என்னப்போல
பரிதவிச்சு பொலம்புறியோ?
..
வாசம் புடிச்சு
வந்துருவேன்
கொஞ்ச நாளு பொறு தாயி !
எங்கூட இருக்குதுங்க
நம்மப் போல
நாலும் ஒண்ணும்!
..
கரை சேத்து விட்டுப்புட்டு
வந்துருவேன் பொறு தாயி!
அதுக்குள்ள செத்துப்புட்டா
சாமிகிட்ட
போயி சொல்லு..
‘மறு சென்மம் வேணாஞ்சாமி!
படைச்சதுக்கு சோத்தப்போடு!’
..
இத்தனையும் பொலம்பிக்கிட்டு
கண் திறந்து பாத்தமுன்னா
ஒத்தயடிப் பாதையில
ஒரு கூட்டம் ஊர்ந்து போச்சு !
தெருக்கூத்து கூட்டம் போல
இசையோட சேர்ந்து போச்சு !
பின்னாடியே பசைபோட்டு
நாங்களுந்தான் ஒட்டிக்கிட்டோம்..
..
அன்னிக்கி ராத்திரி
அரிசிக்கஞ்சியும் அப்பளமும்!
ரொம்ப நாள் ஆச்சுதேன்னு
ஒரு புடி புடிச்சிட்டோம்
..
ரெண்டு பேரு மத்தளமும்
ரெண்டு பேரு தப்பட்டையும்
தட்டித் தட்டி
தாளம் போட
நாலு கம்பு நாட்டி வச்சு
கயிறு ஒண்ண கட்டி வச்சான்..
எங்கிருந்தோ பறந்து வந்தா
இடுப்பில்லா சிங்காரி!
சரசரன்னு மேல ஏறி
ராணியாட்டம்
ஒய்யாரமா
கயித்துமேல நடந்துபோனா..
..
வளையத்துல துணிய சுத்தி
கிஸ்னாயில கொஞ்சம் ஊத்தி
நெருப்ப வச்சான் குள்ள ராசா!
அத
கழுத்துலயும் இடுப்புலயும்
மாறிமாறி மாட்டிக்கிட்டு
பம்பரமா சுத்தி வந்தான்
மீசைக்கார பெரிய ராசா!
கத்தி ஒண்ண உருவிக்கிட்டு
அத
தீப்பறக்க தீட்டிக்கிட்டு
வாய்வழியா வயிறு வர
சொருகிக்கிட்டு உருவி எடுத்தான்..
எல்லாத்துக்கும் எசப்பாட்டு
ஏத்திக்கட்டி பாடினாரு
வெள்ளைமுடி கொள்ளுத்தாத்தா..
மயில் போல வளைஞ்சாடி
வட்டம்போட்டு நின்னாங்க
அக்காங்க மூணு பேரு
அத்தைங்க ரெண்டு பேரு!
..
 “புதுசா வந்திருக்கோம்
எங்களையும் சேத்துக்குங்க!”
ஆறு பேரும் போயி நின்னோம்
அழுகையெல்லாம் மறந்து நின்னோம்..
..
மூத்த அக்கா
பக்கம் வந்து
“அச்சச்சோ”ன்னு அள்ளிக்கிட்டா..
..
வித்தையத்தான் கத்துத்தந்து
விதியத்தான் மாத்திவிட்டா..
..
“வாழ்க்கையின்னா இதுதான்”னு
வாலக் கொஞ்சம் ஆட்டிக்கிட்டு
கயிறு மேல நான் நடந்து
கம்பீரமா கத்திச் சொன்னேன்
கடவுளுக்கும்
நன்றி சொன்னேன்..
....
...
..
(22-03-2009-ல் எழுதியது)

Monday, January 14, 2013

நாய்க்குட்டிப் பார்வை (தொடர்ச்சி 1 )


எனைப் போலவே
அவனுக்கும்
நான்கு சகோதரிகள்
வருடந்தோறும்
அறுவடை முடித்து – பின்
பருவ மழை பொய்த்ததால்
வறண்டு போன வயலாக
வாடிப் போயிருந்தாள்
அவன் தாய் !
இன்னும்
பத்து வருடங்களில்
ஆடை கிடைக்க வேண்டும்
இவன் சகோதரிகளுக்கு !
கவரிமான் இனம்
அழிந்து கொண்டிருக்கும்
இந்தப் பூமியில்
பிறந்த மேனியுடன்
கவலையின்றி
ஆடிக் கொண்டிருந்தனர்..
மகா லக்ஷ்மி ,
தன லக்ஷ்மி ,
பாக்ய லக்ஷ்மி,
விஜய லக்ஷ்மி !
..
விரல் விட்டு
எண்ணி விடும்
எலும்புகள்
வியர்வையில்
மட்டுமே நனைந்த
தேகம்!
...
‘கார் கூந்தல்’ என்று
வருணித்த கவிஞர்களும்
‘இயற்கையிலேயே
மணம் உண்டு ‘ என்றவர்களும்
இவர்களின்
சடைபிடித்த
தலைமுடியைக்
காணக் கடவர்..
சமையலுக்கு
எண்ணெய் இல்லை
அழகாய்
சமைதலுக்கு ஏது?
வறுமையின் நிறத்திற்கு
இவர்கள் பற்கள் தான்
வரையறை!
ஆனாலும்
அவை உதிர்க்கின்ற
புன்னகை – என்
ஒட்டுமொத்த சோகத்திற்கும்
ஒத்தடம் கொடுத்தது!
...
தினசரி இரவு
சோற்றுப் பருக்கைகளை
நீரில் நீந்தவிட்டு
ஓடிப்பிடித்து
விளையாடும்
இவர்கள் விரல்கள்!
இடது கையில்
25 பைசா
ஊறுகாய் பாக்கெட் ..
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு ஊறுகாய்!
பற்றாக்குறைக்கு
பச்சைமிளகாயும்
இவர்களுடைய நரம்புகளில்
சூடு சுரணை
ஏற்றிக் கொண்டிருக்கும்!
.....
பக்கத்து பங்களாவில்
பரபரப்பு
“கல்யாணத்துக்கு
ஏழு கறியா ?
ஒன்பது கறியா ?”
...
இவர்களும் ஒரு நாள்
இன்பத்துப் பாலில்
திளைத்திருக்க நேரும்!
அப்போது
இவர்கள்
மார்பின் மத்தியில்
மயங்கிக் கிடப்பது
மஞ்சள் கயிறு தானோ?
தங்கத்தை
தாலிக்கயிற்றில்
தாலாட்டும் பாக்கியம்
இவர்களுக்கேது?
அதுசரி!
இது போன்ற
வீடற்ற சராசரிகள்
முதலிரவு கொண்டாடுவது
நிலா வெளிச்சத்தில்
கூவத்துக் கரைகளில்தானோ?
பாலின்றி பழமின்றி
பகுத்தறிவை மட்டுமே
பஞ்சணையாகக் கொண்டு
நடந்தேறும்
பக்குவப் பரிமாற்றம்..
..
அடுத்த சந்ததிக்கு
உணவூட்ட
இவர்களது மார்புகள்
பால் சுரக்குமா?
இல்லை
வியர்வை மட்டுமே
சுரக்குமா?
உடைகளில்
இடைவெளி விட்டு
இடையையும்
தொடையையும் காட்டும்
போலிச் சடைப்
பெண்கள் மத்தியில்
கிழிந்தவற்றைத் தைத்து
மானங்காக்கும்
இவர்களும்
இருக்கத்தான் செய்கிறார்கள்..
இவர்கள்
வயதுக்கு வந்தால்
கூரைப் புடவையுடன்
சீர் செய்ய
மாமனும் வரப் போவதில்லை
கூட்டத்தோடு
வாழ்த்திப் பேச
மந்திரியும் வரப்போவதில்லை..
வயதையே மறந்துபோகும்
வர்க்கம் இது!
..
இவர்கள்
முகம் பார்க்கும்
கண்ணாடி
துண்டு துண்டாகத்தான்
இருக்கும்..
கம்மலும் ஜிமிக்கியும்
தொங்க வேண்டிய
காதுமடல் துளைகளைக்
காற்று
துளைத்து வெளியேற
எத்தனிக்கும்..
அதைத் தடுத்து நின்று
அழகு சேர்க்கும்
ஒரு சிறு துண்டு
ஈக்கிள்!
...
விளையாடும் போதெல்லாம்
உடைந்துபோய்
இவர்களின்
இரத்த நிறத்தை
சோதிக்கும்
கண்ணாடி வளையல்கள்
சோடி சேராமல்..
எப்போதோ கண்டெடுத்த
விவாகரத்தான
மெட்டி ஒன்றைத்
தன்
மோதிர விரலில்
மாட்டியிருப்பாள்
இவர்களில் ஒருத்தி..
கண்களைச் சுற்றி
கருப்பு வளையம் இருப்பதால்
இவர்கள்
மையிட்டுக் கொள்வதில்லை..
ஏழு வாரத்தில்
நிறம் மாறும் வித்தையும்
இவர்களுக்குத்
தெரிவதில்லை..
..
பக்கத்து வீதி
அம்மன் கோவிலில் திருவிழா!
இரவைப் பகலாக்கும்
கடைத்தெரு
ஈச்சி மொய்க்கும்
தேன் குழல்
மிட்டாய்க்கடை!
ஆவி பறக்கும்
மொளகா பஜ்ஜிக்கடை
எச்சில் ஊற
கையில்
வாட்ச் கட்டிக் கொடுக்கும்
சவ்வு மிட்டாய்க் காரன்
“எத எடுத்தாலும் பத்து ,
பத்து ரூவாய்க்கு மூணு “
என ஏகப்பட்ட
ஏற்ற இறக்கங்கள்!
எல்லாரையும்
இடித்துப் போகும்
ஏட்டு மாமா தொப்பை
கலர் கலராய் தாவணியும்
ஜதி சொல்லும் கொலுசொலியும்
அலம்பாத குஞ்சலமுமாய்
ஐயராத்து அக்காங்க!
இவை எல்லாவற்றையும்
வாய் பொளந்து பார்த்து
இவர்கள் செல்ல
பின்னால் நானும்
நாக்கைத் தொங்கவிட்டுத்
தொடர்ந்தேன்!
..
“ஐ! ராட்டு!” என
தனலக்ஷ்மி ஓட
அரைஞாண் கயிற்றின்
அறுக்க முடியா பந்தத்தில்
எங்கள் இரயில் வண்டி
கொஞ்சம்
தடுமாறி ஓடியது!
..
ஆகாய விமானத்தை
‘ஆ’ வென பார்த்து
துள்ளிக்குதிக்கும்
இவர்களுக்கு
வானத்தைச் சுற்றிக்காட்டும்
வாடகை விஞ்ஞானி
இந்த ‘இராட்டினம்’
எனப்படும்
‘ராட்டு’!
...
ராட்டு மாமா பக்கத்துல
பாவம் போல
நின்றிருந்தோம்..
இடம் பொருள் ஏவல்
அறிந்து
எதையும் பார்த்து
குரைக்கவில்லை நான் !
கூட்டமெல்லாம்
கலைஞ்ச நேரம்
வாடிப்போன ராட்டுமாமா
எங்களையும் ஏத்திக்கிட்டார்..
‘விண்வெளிக்குப் போகும்
இரண்டாவது நாய்
நான் தானோ?’
என்
அடிவயிறு கலங்க
உச்சியை அடைந்தபோது
இவர்கள்
நிலவையும் நட்சத்திரங்களையும்
பங்கு வைத்துக் கொண்டிருந்தனர்..
..
வானை அளப்போம்
கடல் மீனை அளப்போம்
வயிற்றுப்பசியுடன்
பாரதி படிப்போம் !
காக்கையும் குருவியும்
சேர்த்துக் கொண்டவன்
உயிரோடு இருந்திருந்தால்
என்னையும் சேர்த்திருப்பான்!
நானும் நன்றியோடு
வாலாட்டியிருப்பேன்..
...
பூக்காரப் பேச்சியக்கா
புருஷன் போனபின்னும்
பொழச்சிருக்கா !
பூவோடக் காத்திருக்கா
போற வரப் பொண்ணுக்கெல்லாம்
பூச்சூடிப் பாத்திருக்கா!
பேரமெல்லாம் பேசமாட்டா
பேராசைப் படமாட்டா
ஆசை மட்டும்
ஒண்ணே ஒண்ணு!
‘ரஜினிகாந்தப்’ பாக்கணுமாம்
‘என் ராசான்னு’ கொஞ்சணுமாம்!
..
தம் பொண்ணாத்தான் நெனச்சி
தனலக்ஷ்மி கையப் புடிச்சி
இத்துனூண்டு சரத்தைப் பிச்சி
தலையிலதான் சொருகி விட்டா..
வாடியிருந்த மல்லிகையும்
வாடாமல்லி ஆகிப்போச்சு!
..
அம்மன் கோயில் வாசலுக்கு
ஒருவழியா வந்து சேர்ந்தோம்
பூமிதிக்கப் போறாங்கன்னு
படபடன்னு
வேட்டுச் சத்தம் !
பயந்துபோன நானும்
பதறியடிச்சு ஓடிப்புட்டேன்!
பின்னாலயே ஓடிவந்தான் – என்
பாசக்கார அண்ணங்காரன்..
அன்னிக்கி ராத்திரி
எனக்கு மட்டும்
தூக்கமில்ல
ஏன்னுதான் தெரியவில்லை..
என் தங்கச்சிங்க ஞாபகம்
எங்க இருக்காங்களோ ?
திரும்பிப் போலாமான்னு
யோசிச்சுக் கிடந்தப்போ
“மணி..மணி”..ன்னு
தூக்கத்துல அண்ணங்காரன்
எம்பேரப் பொலம்புனான்!
அவன் கைல
என் கயிறு
வெறுங்கயிறாத் தெரியல!
பாசக்கயிறாத் தான்
தெரிஞ்சுது!
..
தன்னந்தனியா
நன்றியோட வாலாட்டி
கண்ணுல
உப்புத்தண்ணி
வடியவிட்டேன்!
என் சோகத்த
மடிய விட்டேன்!
பூர்வ சென்ம பந்தம்போல
புடிச்சுக்கிட்டே அலையிறான்
பாசமுள்ள அண்ணங்காரன்..
...

Sunday, January 13, 2013

நாய்க்குட்டிப் பார்வை (தொடக்கம்)



ஏதோ ஒரு
கார்த்திகை மாதத்தில்
தெருவோரத்தில்
பகிரங்கமாய்
நடந்தேறிய அந்தரங்கம்!
அதற்குப்
பிறந்தவன் தான் நான் ..
விலாசமற்ற பிறப்பு
விலாசம் தேடும் இருப்பு
இதுதான்
என்னுடைய
வாழ்வின் சிறப்பு!
..
உள்ளே உணர்ந்த
இதயத் துடிப்பும்
வெளியே உணர்ந்த –என்
சகோதரிகளின்
வதைவதைப்பும் தான்
நான் உயிரோடிருப்பதை
உணர்த்திற்று..
முளைத்தும் முளைக்காத
பற்கள் –அந்த
முலைக்காம்புகளில்
முட்டி மோதி
பசியாறியது
இன்னமும் நினைவிருக்கிறது..
அந்த உஷ்ணம்
இன்றும் –என்
அடிவயிற்றில்
அக்னிக்குஞ்சாக
அடங்கிக் கிடக்கிறது!
..
கருவுற்ற காலம் முதல் – நான்
கண் திறந்த காலம் வரை
என் தாய் பட்ட பாடு
எனக்கு மட்டுமே வெளிச்சம்!
..
ஓடிப்போய்விட்ட
ஒற்றைத் தகப்பனை
நினைந்து
வருந்துவதை விட
கூடிக் கிடக்கின்ற
குட்டிச் சகோதரிகளுடன்
ஓடி விளையாடவே
விரும்பியது என் இளமை!
..
எச்சிக்கையில்
காக்கா விரட்டாதவர்கள்
மிச்சம் மீதி போடுகின்ற
எச்சில் இலைகளைக்
கச்சிதமாகக் கொணர்ந்து
என் குட்டிச் சகோதரிகள்
சொச்சம் கிடைப்பதை
ருசித்துச் சுவைப்பதை
ரசித்துப் பார்த்திருப்பேன் ..
..
குழாயடித் தண்ணிக்கு
அடிச்சுக் கொள்ளும்
சேரிப் பெண்டிர் போல
சில சமயம் விழுகின்ற
அசைவ இலைகளுக்காக
அடித்துக் கொள்ளும்
என் உடன்பிறப்புகள்!
எலும்புக்கும் சதைக்கும்
நான் உணர்ந்திருந்த
வித்தியாசத்தை
அவர்களுக்குச்
சொல்லத் தெரியாமல்
விக்கித்து நிற்பேன் நான்!
ஏழைக்குக் கிடைத்த
நெல்லிக்கனி..
ஊறுகாய் போட்டால் என்ன?
ஒரே வாயில் போட்டால் என்ன?
அவர்கள்
ஏப்பம் விட்டபின்
எச்சிலில் பிறந்த மாணிக்கமாக
எனக்குக் கிடைக்கும்
ஒரு துண்டு எலும்பையும்
எழும்பும் கூடுமாய்
இருந்த என் தாய்க்கு
விட்டுவைத்து
சைவமாய் மாறியிருப்பேன் நான்!
அதையும்
கொண்டு போகக்
காத்திருக்கும்
சனி பிடித்த சனிபகவான்!
காவிரிக்குக் காத்திருக்கும்
கருப்புத் தமிழன் போல
பேசும் வரம் பெற்றால்
ஒன்றுகூடி தலைநகர் சென்று
கரைந்து கரைந்து
காவிரியைக்
கரைத்து வந்திருக்கும்
இந்தக் கருப்புக்கூட்டம்
காக்கா கூட்டம்!
..
நான்
முதன்முறை வாலாட்டியது
என்
சுய நினைவில் இல்லை
ஆனால்
வாலாட்டுவதே – என்
வயிற்றுப்பிழைப்பு
ஆகிப் போனது!
..
டீக்கடை பெஞ்சுகளில்
உழைத்துக் களைத்து
இளைப்பாறிக் கொண்டிருக்கும்
பெரிய ஐயா முதல்
வெட்டிக்கதை பேசி
வயிற்றை நிரப்பிக் கொள்ளும்
சோம்பேறிகள் வரை
அனைவருக்கும்
என் வணக்கம்
வாலாட்டுதல் தான்!
..
இரக்கமான பொறைக்கும்
எரிச்சலான வெந்நீருக்கும்
எட்டி உதைக்கும்
தோல் செருப்புகளுக்கும்
என் பதில்
வாலாட்டுதல் தான்..
சில சமயம்
அடிக்கும்போது
அடக்கி வைத்த
அக்னிக்குஞ்சு
உச்சஸ்தாயில் வெளிவரும்!
அதைக்கேட்டு
சிரித்தவர்கள் ஏராளம்
பயந்தவர்கள் ஏராளம்
உண்மையை உணர்ந்தவர்கள்
சொற்பம்!
..
ஓர் நாள்
அப்படி ஓர் நிகழ்வு
என் வாழ்வை திருப்பிப்போட்டது
எட்டி உதைத்த
ஒரு
மாட்டுச் செருப்பின்
வலி தாங்காது – நான்
அலறியடித்து விரைந்த நேரம்
இரு பிஞ்சுக்கைகள் – எனைப்
பிடித்துத் தூக்கின!
எனக்குக் கிடைத்த
முதல் முத்தம்
மானுட முத்தம்
அத்தனை வலியும்
பறந்து போனது!
..
என் கண்களில் தெரிந்த
அதே ஏக்கம்
அதே சோகம்
அந்தப் பிஞ்சுக்கைகளின்
சொந்தக்காரக் கண்களிலும் !
அவன் பரட்டைத் தலையும்
ஒழுகும் மூக்கும்
அம்மண அழகும்
கழுத்தில் தொங்கும்
மாரியம்மன் கயிறும்
உணர்த்தின எங்கள்
கலப்பின ஒற்றுமை அடையாளம்!
ஆனாலும்
முறையாகப் பிறந்திருக்கிறான்
அவன்!
...
“எம்மா ,
நைனா “ என்று அவன்
கத்தியபோது – அவன்
முகவரி
நடைபாதை – என
தெரிந்தது !
எனை
அடுத்தமுறை
தரையில் விடும் வரை
என் தலையை
தடவிக்  கொண்டேயிருந்தான் ..
நான் உணர்ந்த
முதல் தாலாட்டு அது!
அவன் உறைவிடத்தைப்
பார்த்துக் கொஞ்சம்
உறைந்து போனேன் நான்!
..
“மறுபடியும் மாட்டுத்தோலா?” என்று
ஆங்காங்கே அழகாயும்
அரைகுறையாயும்
கால்களற்ற செருப்புகள் ..
இன்னுமொரு
ஆப்ரகாம் லிங்கனோ – என
மனதிற்குள்
சிரித்துக் கொண்டேன் ..
சமூகத்தை நடக்க வைக்க
முடமாகிப் போன குடும்பம் – என
புரட்சிக் கவிதையும் தோன்றியது..
..
ஷூ கட்டும்
லேஸ் எடுத்து
எனக்கொரு
நெக்லேஸ் போட்டான் ..
அது நீண்டு கொண்டே போய்
சாலைக் கருப்பையும்
கூவத்துக் கருப்பையும்
பிரிக்கும்
வெள்ளைப் பாலத்தின்
சுண்ணாம்புத் தூணில் போய்
மூன்று முடிச்சு போட்டது!
பிறவிக்குணம்
காட்ட எண்ணி
அங்குமிங்கும்
அசைத்துப்பார்த்தேன் ..
இழுத்துப்பார்த்தேன் ..
மனிதர்களின் கால்கட்டு
இன்னமும் உறுதியாகவே இருந்தது
அறுத்தெறிய முடியவில்லை
கழுத்து நரம்பு தெறிக்க
கத்திப் பார்த்தேன் – பின்
சோர்ந்து போய்
எனக்கே உரிய
இரண்டு கால் பாணியில்
அமர்ந்து விட்டேன் ..
நெடு நாள் உபயோகித்த
Use and throw  டம்ளரில்
கடைசியாய் இருந்த
ஒரு மடக்கை
எனக்காக ஊற்றிப்போனான்..
அந்தத் தேநீர் சிநேகிதம்
எனக்குப் பிடித்துப் போனது..

Thursday, January 10, 2013

கவிஞனின் பிறந்தநாளும் கண்ணம்மாவின் கைக்குட்டையும் ..

உன் ஆசைகள்
ஒவ்வொன்றும்
நீ பிறப்பிக்கும் அற்புதம் !
அவை நிறைவேற்றுதல்
என் ஜென்ம பாக்கியம் ..
என் நள்ளிரவு
புத்தக வாசிப்பின் ஊடே
நீ என் தோளில்
சுகமாய் சாய்ந்திருக்க
உனையும் சேர்த்து
வாசித்தலும் ...
மாலை மயங்கி
நமக்கேயான இரவு
என் புதிய கவிதைக்கான
வார்த்தைகளை
வான வெளியில்
வீசித் தெளிக்க
சாரலின் ஊடே
சன்னலோரம் நானும்
பின்னிருந்து
தொட்டும் தொடாமல் நீயும்
கவிதைக்கான நேரம்
காக்க வேண்டி விரைந்து
உன்னை இழுத்து
உச்சியில்
முத்தம்  வைக்க
"அவ்ளோதானா?" என்று
வழக்கமான உன்
வசீகரிப்பை வீசுவாய்..
நானும் வீழ்ந்ததாய்
நடித்து - என்
மடியில் உனக்கொரு
வாய்ப்பு தருவேன்
ஏதும் பேசாமல்
எனைப் பார்த்து
இருந்து கொல்வாய் ..
காமத்தில் கவிதையை
கலவி செய்து
நான் விழித்திருக்க
வேண்டுமென்றே வேண்டாத
சீண்டுதலை
என் மீது
ஏவித் தொலைப்பாய்...
தோழிகளிடம் பேசுதலையும்
வேலை நேரத்தின்
தொலை பேசி தவிர்த்தலையும்
இன்னும் சில
இத்யாதிகளையும்
"என் கிட்ட மட்டுந்தான்
இப்படி இருக்க!"
என்றும் - பின்
"உனக்கு உன்
பிரண்ட்ஸ் தான் முக்கியம்
நான் இருந்தா என்ன?
இல்லாட்டி என்ன?
நான்தான் பைத்தியமா
பொலம்பிட்டு இருக்கேன்"
சொல்லி முடித்து
உன் செல்லச் சிணுங்கலை
சிந்தித் தொலைப்பாய் ..
என் பொறுமை
உனக்கே தெரியும்
முடிஞ்ச வரை
சொல்லிப்பார்த்து
முடியாமப் போகும்போது
"பளார்"ன்னு ஒண்ணு
போட்டு வைப்பேன்..
"இத வாங்க
நான் என்ன பாடு
பட வேண்டியிருக்கு " ன்னு
தலை தூக்காம
கிசுகிசுப்ப ...
உன்ன என்ன சொல்ல ?
நாடி நிமிர்த்தி
நேரா உன்ன பார்த்தா
என் கண்
நிலை குத்திப் போகும்
நேரம் தெரியாம
உள்ளூர உறைஞ்சு நிப்பேன்...
"என்ன அடிச்சுட்டேல்லா
இப்ப என்ன
செய்யப்போற?" என்பாய்
ஏதும் பேசாம
கைகோர்த்து
உனை இழுத்து
நம் வெள்ளை வண்டில
வெளியே கூட்டிப் போவேன்
"எங்கடா போற?"ன்னு
விடாம நச்சரிப்ப..
நச்சரிப்பா அது ?
இல்லாட்டி
உலகின் மொத்த இசையின்
உச்சரிப்பா?
"உனக்கே தெரியும்
எங்க போறோமுன்னு
என் ஜென்ம சனி
எனைப் பிடிச்ச
இடத்துக்கு " என்பேன்
இறுக்கமா கட்டிக்குவ..
..
கடற்கரை..
உன்னில் நான் கரைந்த
உலகின் அதி உன்னத இடம்..
...
உன் தலை
மட்டும் என்னில் சாய
நினைவலையில்
நீந்தியிருப்போம் ...
உனக்குப் பிடித்த
அத்தனைப் பாடலையும்
பாடி முடித்து
"போலாமா?" என்பேன்
நீ
கடலை கை காட்டுவ
நான்
தலையில் அடித்து
"வந்து தொலை !" என்பேன்
...
கடல் நடுவே
நடு இரவில்
நீயும் நானும்
என் தோழன் தயவில்
தனி கட்டுமரத்தில்
...
நிலாவற்ற வானத்தில்
உன்னோடு நான்
நிசப்தத்தில்
நிறைந்திருக்க
"என் பேரை சொல்லுடா!" என்பாய்
"கண்ணம்மா" எனும்போதே
கரகரத்துப் போவேன்
கழுத்தைச் சுற்றி
அரவணைத்து
அநியாய அழகோட
கண்ணப் பார்த்து
"எனக்காகப்
பிறந்த நாள்
வாழ்த்துக்கள் கண்ணா!" என்பாய்
...
என்னை ஏதும்
பேச விடாம
மூச்சுமுட்ட
முத்தத்தில மூழ்கடிப்ப...
...
முடிச்சுக்கலாம்
கண்ணம்மா
இந்தக் கவிதை
இதுக்கு மேல வேணாம்...
இன்றைய பிறந்த நாள்
உன்
கைக்குட்டையோடு...
...


 

Wednesday, January 9, 2013

கண்ணம்மாவின் கவிதை விளையாட்டு

நீ பார்த்த விழியும்
உன்னை நினைத்துப் பார்த்து
நிதமும் நனையும் விழியும்
இன்றும் தனியாக..
நமக்கேயான
நாம் மறந்த சைகை மொழியும்
அது தொடர்ந்த
மௌன மயக்கமும்
பின் ஆழ்ந்திருந்து
நாம் கொணர்ந்த
அதிசய முத்தும்
அதன் நீங்கா பிரகாசமும்
நீ விட்டுச் சென்றதில்
உயிரிழந்து - என் நெஞ்சில்
வாடிப் போய்
வெடித்துக் கிடக்கிறது..
இன்றும்
உன் நெஞ்சு நடுவே
மஞ்சம் கொண்டிருக்கும்
நான் தந்த
கடைசி முத்தமும்
தாலிக்குப் பதிலாக
நீ வேண்டிய
தங்கமில்லா டாலரும்
இல்லாத என்னை
உன்னிடத்தில் உறுதியாக
விதைக்கிறதா?
 "எதாவது கிறுக்கு
எனக்காக கிறுக்கு" என்பாய்
கிறுக்கியதை கவிதை என்பாய்..
இன்று
கிறுக்கியதும் நானும்
தீண்டப்படாமல் தனியாக..
என் கவிதைக்குச்
சுவை அதிகமாம்..
நெஞ்சை விதைத்து
அறுவடை செய்தால்
சுவை இருக்காதா என்ன?
..
நீயும் நானும்
முதல் முதலாக
விளையாடிய
கவிதை நினைவிருக்கிறதா?
"உன்னில் வீழ்ந்த என்னை
மீட்டெடு" என்றாய்
"என் அத்தனை ஏக்கத்தையும்
அனுப்புகிறேன்
முடிந்தால் மீண்டு வா,
இல்லை உன்
முடியா முத்தத்தை
முடிந்து அனுப்பு" என்றேன்
நீயும் வெட்கத்துடன்
முத்தத்தை முடித்து
"கவிதையைப்  படிக்காதே
குடி " என்றாய்
"உன்னில் ஊறி
உன் விழியின் கவியில் வீழ்ந்து
என்னில் நானாக
எதோ வளர்கிறேன்" என்றேன்
"அதெப்படி நீ
நீயாக வளர்வது ?
நானாக வளர்" என்றாய்
"ஆமாமா
தொலைவிலிருந்தே என்னை
கணப் பொழுதில்
கலைத்து விடுகிறாய்
உள்ளுக்குள் விட்டால்
ஊர் என்ன ஆகும் ?
ஊரை விடு ,
உனக்கும் என்
உள்ளூறிய கவிக்கும்
மோதலோ இல்லை
காதலோ ஆகிப்போயின்
நான் என்ன செய்வது?" என்றேன்
நீயோ பதிலின்றி
முறைத்துப் பார்த்தாய்..
பின்
மெதுவாய்
"போ போ
எத்தனை நாள் இந்த
வார்த்தை விளையாட்டு
பார்ப்போம் " என்றாய்
"உன்னில் வாசகியும்
என்னில் கவியும்
நம்மில் தமிழும்
கலந்திருக்கும் வரை" என்றேன்
லேசாகச் சிரித்தாய்
கடைசி வரை
வெட்கம் கொண்டாய் ...
அன்று பிறந்த
கவிதை விளையாட்டு
இன்று
என்னில் மட்டுமே
ஒற்றைக்கு ஒற்றையாய் ..
வீம்பு பிடித்து -விடாமல்
உன்னை விடாமல்
எழுதுகிறேன் ..
வார்த்தை வறண்டு
இது என்னில்
நின்று போகும் நாள்
நானும்
நின்று போவேன்
எனக்காக
எங்கோ காத்திருக்கும்
உன் எழுதாக் கவிதையுடன்
ஓடி வந்து
ஒட்டிக்கொள்வேன்..
கண்ணம்மா
ஓடி வந்து
ஒட்டிக் கொள்வேன் ...
..






போயி வாறேன் என் சனமே !

தொடர்ந்து பயணிக்கும்
இரு சக்கர வாகனம்
நடந்து செல்பவன்
மீதான ஏளனத்தில்
என்னை எனக்கே
தோலுரித்துக் காட்டுகிறது
...
நடந்து செல்பவர்கள்
பாதையில் படுத்திருப்பவர்களை
அறிந்தும் அலட்சியம்
செய்தே செல்கிறார்கள்
...
கிளிஞ்சலான ஜீன்சும்
கதிரவனைத் தாங்கவியலா
குளிர்க் கண்ணாடியும்
வாசனைத் திரவியமும்
தரையைப் பார்த்திரா
பளபள பாதங்களும்
புரியா வார்த்தையும்
புரிந்த நடிப்பும்
போலிச் சிரிப்பும்
எளிதில் கொடுத்து விடும்
சில்லறை லஞ்சமும்
தாராள கஞ்சத்தனமும்
குளிர் அறையில்
கூடியிருந்து
தனி உலகம் படைத்து
வெளி உலக
வேற்று கிரக வாசிகளை
வெறும் வார்த்தைக்காக
வாதாடி தீர்ப்பு கூறி
குடித்து கூத்தாடி
தூக்கத்தின் சுகமறியாது
தூங்கிப்போய் - பின்
காலைச் சூரியனும்
வேர்வை வாடையும்
வீதி நாற்றங்களும்
வெறித்த பார்வைகளும்
கோவில் கூழும்
கூட்ட நெரிசலும்
குறை கூறலும்
பேரம் பேசலும்
தன்மானம் காக்கும்
தெருவோரச் சண்டையும்
டீக்கடை பெஞ்சும்
கலங்கிய நீரில்
கழுவிய கிளாசில்
ஒரு கோப்பைத் தேநீரும்
அது தொடரும்
அடிமட்ட அரசியலும்
உள்ளூர்ப் பஞ்சாயத்தும்
ஓடிப்போன கதைகளும்
திரும்பி வாரா சோகங்களும்
தொடர்ந்து வரும் வதைப்புகளும்
இவை யாவும் அறிந்திலா,
அறிய முற்படா
வேடிக்கை மனித இனம்
அதற்கானதாகவே தோன்றும்
அகழ்வாரைத் தாங்கும் நிலம்...
...
இதில் நானும்
மத்திய வர்க்க மனிதனாய்
சொல்லிக்கொண்டு திரிய
எங்கெங்கோ பார்க்கும்
ஏதேதோ காட்சிகள்
அவ்வப்போது என்னை
அறிவு தாண்டி
அந்தஸ்து தாண்டி
தொலைத்து விட்ட - என்
தன்மானத்தின் கருவறைக்கு
தன்னிச்சையாய்
இழுத்துச் செல்ல ,
எல்லாம் தெரிந்த
ஏதும் பேசவியலா
பெருசுகளும்
"ஆமாப்பா..இப்படித்தானே!"
என்று
அனுபவத்தின் இறுமாப்பை
அள்ளித்தெளித்து
அக்கறை காட்ட,
தொலைத்தது என்னவென்றே
தெரியாது நானும்- என்னைத்
தெரிந்து வானும்
கடல் கொண்ட மீனும்
தொலை தூர காற்றும்
இறந்து பட்ட சூரியனும்
இனி வரும் செடியும்
நான் போயிராத பாலையும்
நடை சோர்ந்த ஒட்டகமும்
எனை ஈர்த்த
அரபு நாட்டு ஜிப்ரானும்
அவன் படைத்த
ஆழ்ந்த அழகின்
ஆத்மார்த்தமும்
முற்றப் பெறாது போயினும்
முற்றுப் பெற்று நிற்கும்
எத்தனையோ இலக்கியமும்
இதிகாசமும்
எனைப் பெற்ற
பத்தினியும் பெரியவரும்
என் ஆசானும்
கியூபப் புரட்சியாளனும்
அவனைப் பேசித் திரியும்
போலிகளும்
சட்டைப் பட பைத்தியங்களும்
சல்லாபங்களும்
அத்துமீறும் ஆன்மீகமும்
தலைநகர மானபங்கமும்
சட்டை செய்யாத
கவுரவ கவர்ன்மெண்டும்
இன்னும் இன்னும்
எத்தனையோ கேள்விகளும்
வித்தியாச விடைகளும்
வந்து வந்து போயினும்
மீண்டும் மீண்டும்
மனிதனாகி
மானங்கெட்டுப் போகிறேன்...
மீதி வாழ்க்கை
வாழ்ந்து போக
மாபெரும் வேஷம் போட்டு
கருத்து சொல்லும் கவிஞனாகி
கன்றாவி செய்கிறேன்...
..
போதுமடா இப்பொழப்பு
தலைய பிச்சிகிட்டு போகப்போறேன்!
பொறந்து தொலைக்க
நான் என்ன
தலைகீழா நின்னேனா?
தறுதலையாப் போறதுக்கு
தற்கொலையாப் போய்த்தொலைய
தீர்ப்பு ஒன்று எழிதிக்கிட்டேன்..
போயி வாறேன் என்சனமே...
...



Tuesday, January 8, 2013

விதியின் விபச்சாரம் ...

இஷ்டமில்லா இரவில்
இணைந்து போன
நிமிடங்களில்
என்னுள் இறங்கிப் போன
விஷம் தாங்கி
அன்று தொலைத்த
விடியலைத் தேடி
இன்று வரை
நானும் - என்
வியர்வை காயா
பச்சைப் புடவையும்
...
மார்புக் காம்பை
வருடும் ஒவ்வொரு முறையும்
ஏமாந்து கதறும்
என்னவளின்
எதிர்காலம் எங்கே?
முதலில் நிகழ்காலம் எங்கே?
...
சார்ந்திருக்க நினைத்து
சாதாரணமாய்
சாய்ந்து கொடுத்து - பின்
சாவதே மேல்
என்பதாக முடிகிறது
பெரும்பாலான பிறப்புகள்....
..
வீம்பு பிடித்து
ஒற்றைக்கால் காதல்
வென்று வாழத்துணிந்து
வாலிபம் வீழும் வரை
வார்த்தைகளிலும்
வசியங்களிலும்
மயங்கியிருந்து
பின்
ஏன் எப்படி எதற்காக
என்ற கேள்விகளில்
வேள்வி வளர்த்து
வரங்களை சாபங்களாக
சமைத்து
ருசி நீக்கி
ரசனை நீங்கி
வாழ்வதற்கான ஆசை
வற்றிப் போய்
ஒன்றுமற்றுப் போகும்
ஓர் நொடி விபரீதங்கள்
...
வசதியும் வாய்ப்பும் இனிக்க
பின் வசதியான வாய்ப்புகளும்
வரிசையாய் விலை பேச
வாடிக்கையாய் தொடங்கி
விற்றுச் சலித்து
இன்று
வெற்றுச் சூழலில்
வசை பேசித் திரியும்
வேடிக்கையும்  வேதனையும்
தொட்டுத் தொடரும்
துர்மரணக் கனவும்
தீண்டா தூரமும்
திகட்டும் அண்மையும்
சொல்லவொண்ணா சிந்தனைகளும்
சிரிக்க வெறுக்கும்
முரண்பாட்டு மூர்க்கமும்
முடிவை நோக்கிய
பரிதவிப்பு பயணங்களும்
..
கடைசி சொட்டு பாலும்
பாசாங்கும்
பேச்சுக்கு பாசமும்
கொஞ்சமாய் கொள்ளியும்
கூடி நின்று ஒப்பாரியும்
எப்போதுமே ஏங்கி நின்ற
ஒற்றை ரூபாய் நாணயமும்
கடைசியாய் முகம் பார்க்க
யாருமற்ற எவனோ
இல்லை எவளோவும்
இதுகூட இல்லாது
பொணமாப் போகும்போதும்
அனாதையாப் போறதுக்கு
எதுக்குதான் பொறந்தேனோ?
என்னதான் வாழ்க்கையோ?
...
எனக்காக சாமி
அனுப்பி வச்ச சாமி
குப்பையில பொறந்தாலும்
குப்பையாப் பொறக்கல ..
எம்மக மகராசி ..
நான் செஞ்ச பாவமே
நாலு சென்மம்
நல்லாத்தாங்கும்..
எம்மக எனப்பாத்து
நீ தாம்மா பாவமுன்னா..
நாம்படிச்சு பெரியாளா
நல்லா வந்து பாத்துக்கிடுறேன்
நீ எதுக்கும் கலங்காத
 எஞ்சாமி நீதாமுன்னா..
இப்போ
நாடியத்து நான் கெடக்கேன் -மகராசி
நாதியத்துப் போவாளே...
..
வீதியிலே போகும்போது
வேண்டியத வாங்கிக்கோன்னா
"வேணாம்மா வீடு போலாம்
வேற ஒண்ணும் வேணாம்மா
வந்தவனும் போறவனும்
வாடின்னு கூப்பிட்டா
வெட்டிப்போட நான் துடிக்க
வெட்கப்பட்டு நீயும் போற
மானங்கெட்டுப் போறதுக்கு
மாறிப் போலாமுன்னு சொன்னா "
...
அப்போவே போயிருந்தா
எம் மக
அன்றாடம் காய்ச்சியிருப்பா
என்ன சுகம் நானும் கண்டேன்?
எதுக்காக இங்க கிடந்தேன் ?
உடம்புலதான் உயிரே இல்ல
பின்ன என்ன சுகம் கிடக்கு?
விட்டுப்புட்டு போறதுக்கு
உனக்குன்னு ஏதுமில்ல
வேடிக்கை வசமாப்பாத்து
வேசிமக வாடியின்னு
வார்த்தையில உன்னக் கொல்ல
வாய்ப்பு  ஏதும் வைக்க மாட்டேன் ..
வாடி என்கூட
விசத்தோட விசமாக
வேற என்ன நானும் செய்ய
விதியின்னு நொந்துக்கிடுறேன்..









பரதேசியின் ஒரு நாள்

கிழிஞ்ச செருப்பின் ஊடே
குத்திக் கிழித்த முள்
உறுத்தலாய்
எனைப்பார்த்து
கேள்வி கேட்பதாய்த் தோன்ற
அதன் நோக்கம்
புரியாது - நான்
விழி பிதுங்க
வலி தாங்கி நடந்திருக்க
கடைசியாய் உட்கொண்ட
உணவின் நினைவு
தோன்றி மறைய
அது நேற்றைக்கா?
இல்லை அதற்கு
முன் தினமா?
இல்லை எனக்கே
தெரியாத என்றைக்கோவா ? - என்று
பசி மயக்கத்தில்
பல்வேறு திசைகளில் - நான்
போய்த் திரும்ப
ஊசிப்போன காட்சிகளும்
உள்ளூர உறைந்து கிடக்கும்
உணர்வுகளும் - அவை தாங்கிய
உரையாடல் எதிரொலிகளும்
எங்கெங்கோ வாங்கிய
எதிர்பாரா அடிகளும்
எச்சில் துப்பல்களும்
எட்டி உதைத்த கால்கள்
எனக்குள் உருவாக்கிய
வாழ்க்கை குறித்த ஏளனமும்
இவை தாண்டி
அவ்வப்போது அதிசயிக்க வைத்த
ஞானப் பிதற்றல்களும்
வந்து வந்து போகும்
வாழ்ந்து முடித்த
வசந்த கால வாசனையும்
காலைச் சுற்றி
மோந்து பார்த்து
பின்
அறிந்து கடித்து
தெறித்து ஓடும்
அசிங்கமான, அழகான
தெரு நாயும்
எங்களுக்கேயான ஒற்றுமையும்
உடுக்கத் துணி இல்லாதவனுக்கு
இரத்தம் துடைக்க
துணி ஏது?
உயிர் காக்க
மருந்துப் பிச்சை
எடுக்கவா முடியும் ?
ஆமாமா ..
மானமே போயாச்சு
மருந்தென்ன மருந்து?
இருந்தும் இல்லா
உயிர் மேய்க்கும்
இடையன் நான்..
இல்லாதவர்க்கும்
இருந்தும் இல்லாதவர்க்கும்
இல்லாமலே போனவர்க்கும்
எல்லாமாய்
இருந்தும் இல்லாதிருக்கிறேன்..
என் முகமும்
முகமூடியும்
பிரியா பிணைப்புகள்..
அகம் பார்த்து
தெறித்தவரும்
புறம் பார்த்து
முறைக்க வேண்டி முறைத்தவரும்
பார்க்காமலே பயந்தவரும்
இப்படிப் பலவாறு
எனைச் சுற்றி
மனித உயிர்கள்..
இன்னும் என்
நினைவில் - எனக்கான
இரவு நேர
ஒரே சுகம்..
எங்கோ தினசரி
நடைபாதை வானொலியின்
"ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு..."
அதில் - உன்
நினைவைக்  கனவு கண்டு
மயங்கி
உறங்கிப் போவதில்
முடிகிறது - என்  இன்றைய
ஒரு நாள்...

Thursday, January 3, 2013

உனக்கான கடைசிக் கடிதம் ...

உனக்காக என்
கடைசிக் கடிதம் கண்ணம்மா!
...
"எப்படி இருக்க?
நினைவிருக்கிறதா?
எதையும் லேசாக
வெளிக்காட்டா எனை
வேண்டுமென்றே
சீண்டிப் பார்ப்பாய் !
பிடித்தவரில் முதலிடம்
உனக்கே என்பதில்
உனக்கென்ன இவ்வளவு
பிடிவாதம்?
எங்கெங்கோ ஆரம்பித்து
என்னவெல்லாமோ கேட்டு
எனை
எரிச்சலூட்டுவாய் ..
யாரிடம் பேசினாய்
என்ன பேசினாய்
என்பதோடு நில்லாமல்
"ஏன் பேசினாய்?" என்பாய்..
இதை சமாளித்து
"அப்பாடா!" எனும்போது
உன் தினசரி ஏவுகணை
"இன்னிக்கு என்ன
மிஸ் பண்ணியா?"
என் மீது பாயும்...
எனக்கிருக்கும்
ஒரே கவசம்
"ஆமா கண்ணம்மா!"
பின் - நீ
"எப்போல்லாம்?" என்பாய்
இத்தனை கேள்விகள்
கேட்டுத்தான் காதலிக்க
வேண்டுமா என்ன?
நீ என்ன
தமிழுக்குப் பிறந்தவளா?
உன் தந்தை
பாவமோ பாவம்
தாயும் தான்!
நீ மட்டும்
எப்படி இப்படி?
..
என் பதில்
பாதுகாப்பாக
"எப்பவுமே மிஸ் பண்றேன் !" என வரும் ..
நிறுத்தி முறைத்துக் கேட்பாய்
"வேற எதாவது சொல்லு!" என்று..
நான் என்ன சொல்ல ?
ஒவ்வொரு நாளும்
உன்னைப்  பிரிந்திருக்கையில்
உன் கேள்விகளும்
முக பாவங்களும்
எனைச் சுற்றி வருவது
உனக்கெப்படி புரியும்?
எனது இசை
எனது வேலை
எனது பொழுதுபோக்கு
எனது தியானம்
எனது சுவாசம்
எனது தூக்கம்
எங்கும் - உனது
கேள்விக்குறிகள் தான் ...
உன் கண்களே
கேள்விக்குறிகள் தானே!
..
எப்போதாவது
நான் கேட்கும்
கேள்விகளை
அனாயாசமாக
என் மீதே
திருப்பி விடுகிறாய்..
அதற்குப் பதில் இல்லையேல்
மௌனத்தில் தண்டிக்கிறாய்..
..
உன்னோடு நான்
எப்படித்தான் பேசியிருப்பது?
பேசாமல் பாடலாம் என்றால்
"கையில் மிதக்கும் கனவா நீ " கேட்பாய்
பாடலாக நானே
மாறிப்போய் - உன்
மடியில் வீழ்வேன்...
"எப்படி இவ்ளோ
உணர்ச்சியோட பாடற?
யார நெனச்சு பாடற" என்று
வேணுமென்றே கேட்பாய் ..
கடுப்பா இருக்குமா
இருக்காதா?
நீயே சொல்லு!
..
நேற்று ஒரு கேள்வி !
"கண்ணம்மா முக்கியமா
கவிதை முக்கியமா ?" என்று
நான் "கவிதை" என்றேன்
நிஜமும் கூட அது தான்..
இது தெரிந்தே
அடுத்த கேள்வி
"அப்போ நான் வேணாம்லா ?"
கவிதையென்ன
மல்லுக்கு வரவா போகிறது,
போனால் போகட்டும் என்று
"நீ இல்லாட்டி
கவிதை ஏது கண்ணம்மா!" என்றேன்
"என் இரத்தம் கவிதை
இதயம் கண்ணம்மா ,
என் உடல் கவிதை
உயிர் கண்ணம்மா"
இன்னும் பல
உவமை உருவகம் போட்டு
இடையிடையே
மானே தேனே
கண்மணி பொன்மணியும் போட்டு
வஞ்சமில்லாமல் ஒரு
புகழ்ச்சி செய்தேன்!
வசமாக
வீழ்ந்து போனாய்...
...
என் மடியில் சாயும்
தங்கச்சியை
முறைப்பாய் பார்...
ஒரு நொடி
குருக்ஷேத்ரம் அது..
..
வேன்றுமென்றே
"உங்க அக்கா
சாமி மாதிரி
எனக்கு ரொம்ப பிடிக்கும்!" என்பேன்
உனக்கு அவள்
உயிராகிப் போனாலும்
காதலின் விதிமுறை
கட்டுப்பாடு எல்லாம்
காப்பாற்ற வேண்டி
கடிந்து கொள்வதாய்
நடிப்பாய் ...
நானும் ரசிப்பேன்!
...
கடிதம் இப்போது
முடிவு நோக்கி
நகரப் போகிறது கண்ணம்மா..
முடிந்தால்
முடிவில்
கண்ணீரை எனை நினைத்து
சேமித்து வை...
...
நள்ளிரவில்
தொலைபேசியில்
நீ
வேற்று உருவம்
கொள்கிறாயா என்ன?
பெரும்பாலும்
மௌனத்தில் ஆரம்பித்து
கண்ணீரில் முடிக்கிறாய் ..
முடியாத முடிவுகளை
முடிச்சவிழ்க்க நினைக்கிறாய்..
மூன்று முடிச்சும்
முகூர்த்தப் புடவையும்
மஞ்சள் குங்குமமும்
மாலை மேளமும்
மயங்கிய மோகமும்
நமக்கு நாளையோ ?
இல்லை , இல்லையோ ?
இல்லவே இல்லையோ?
இது தான்
உன்
நெடுநாள் கேள்வி
விடையிலாக்  கேள்வி ..
...
கண்ணம்மா!
போர்க்களத்தில்
புரட்சி படைத்து
புனிதமாய் மனிதம் சமைத்து
கவி எழுதி
காதல் நிறைத்து
கடைசிவரை
கால்நடையாய்
காணாமல் திரிவதே
எனக்கு விதிக்கப் பட்டது..
இதில்
எனக்கான ஒரே சுகம்
எனக்கான ஒரே துக்கம்
நீ!
உன்னோடான
இந்தக் கவிதைக்காதல்!
..
வெளிச்சம் பரப்பி
வீறுகொண்ட உள்ளங்களை
உயரவைத்து
பாரதி கண்ட
வீதி சமைத்து
விடியலை நோக்கி
விரைந்து செல்கிறேன் ..
அவ்வப்போது
இவ்வாறாக
வாழ்க்கை வழங்கிய
வார்த்தைகளை
விதைத்துப் போகிறேன்!
முளைக்கின்ற
மரமெல்லாம்
என்னைத் தண்டாகவும்
உன்னைப் பூவாகவும்
நம் காதலைக் கனியாகவும்
வாரி வழங்கட்டும் ..
..
நம் வேடிக்கை
விளையாட்டுகளையும்
செல்லச் சண்டைகளையும்
திமிர் பிடித்த தர்க்கத்தையும்
சொல்லவொணா சோகத்தையும்
சுவை கூட்டிய சுகங்களையும்
கேட்கமறந்த  கேள்விகளையும்
சொல்ல விரும்பா பதில்களையும்
சொல்லி மறந்த 'சும்மா'க்களையும்
நம் நீடித்திருத்தலின்
நமக்கேயான ரகசியத்தையும்
நீயாக இருந்த நானையும்
நானாகத்  திரிந்த நீயையும்
நாமாகி நிலைத்த
தமிழையும் - அது
உயிர்ப்பித்த கவியையும்
இனி
வருகின்ற வர்க்கம்
தத்தெடுத்துக் கொள்ளட்டும்...
...
இன்னும் என்ன?
புறப்படு!
நீண்ட நாளைய
உன் நீங்கா ஆசை !
நமக்கான
இறுதிப் பயணம்
எல்லையில்லா
வெட்டவெளி தாண்டி
இருக்கின்ற எல்லாமும் தாண்டி
இல்லாத இடம் நோக்கி...
புறப்படு!
..
இப்போதும் கூட
உனக்கான
பாடல் வரி
உள்ளுக்குள் ஊறுகிறது
"உன்னை மட்டும்
சுமந்து நடந்தால்,
உயரம் தூரம்
தெரியாது...."
..
புறப்படு!






Wednesday, January 2, 2013

உலகின் கடைசி இசை

நான்
மெனக்கெட்டு எழுதும்
ஒவ்வொரு கவிதையையும்
எளிதாக
லேசான கண்ணசைவில்
முடித்து வைக்கிறாய்..
முற்றுப்புள்ளியில்
தொடர்கிறது - நம்
அடுத்த கவிதை..
...
முடியவே கூடாதென
உன்னுடன் இருக்கும்
ஒவ்வொரு நொடியும்
நினைத்தும் ,
முடிந்து போகிறேன்!
முடிந்தே தீருவது
என்கிற நொடிகளில் - நீ
மெனக்கெட்டு
மீட்டு வாட்டுகிறாய்..
...
இல்லாததாய் தோன்றும்
இடங்களில் எல்லாம்
இயல்பாய் இருக்கிறாய்..
இருப்பாய் என
எதிர்பார்த்தால்
இல்லாதிருந்து இம்சிக்கிறாய்..
...
வருகின்ற பூங்காற்றை
வரவேற்று
உதிரப் போன
மெல்லிய பூக்களை
மெலிதாகப் பரப்பி
உனக்கான
சிவப்புக் கம்பளம்
நான் விரிக்க
நீயாக வந்து
நொடிப்பொழுதில்
நானாகத்
திரும்பிச் செல்கிறாய்..
...
"கண்ணம்மா நில் " என்றால்
கண்ணிமைத்து
என் கடைசி ஆசையை
நினைவுறுத்துகிறாய் ..
....
நீயில்லாது
நானிருந்த பொழுதுகளில்
நஞ்சை உண்ட
நெஞ்சனாகிப் போய்
நீண்ட தவங்களில்
திளைத்திருப்பேன்  ..
லேசான உன்
கூந்தல் அசைவில்
யுகங்களைத் தாண்டிய
உச்சகட்ட உண்மையுரைப்பாய்
உண்மையுரைத்துப் பின்
உற்று நோக்கிப் போவாய்
நான் உருக்குலைந்து போவேன் !
இது உன்
வாடிக்கையாகிப் போனாலும்
எனக்குள்
ஒளிந்திருக்கும்
உன்னை
அவ்வப்போது
தொட்டுப் பார்த்துக் கொள்வதிலேயே
நான்
நமக்கான காதலின்
உச்சகட்ட உணர்ச்சியில்
ஊறித் திளைக்கிறேன்..
எப்போதும் இல்லாத நானும்
எப்போதுமே இல்லாதிருக்கும் நீயும்
ஒன்றாகிப் போகும் நேரம்
உலகின் ஓசை
ஓய்ந்து போகும் ..
நீர் வற்றி
நிலம் நடுங்கி
புலம் பெயர்ந்து
பூமி
புதியதாகிப் போகும்..
அப்போது -என்
இதயத் துளையில்
உன் மூச்சுக்காற்று
நமக்கான
ஓர் புல்லாங்குழல் இசையை
வார்த்துக் கொண்டிருக்கும்
உலகின் கடைசி சொட்டு
இசை அது...
...


தூரத்து வெளிச்சம்

நீ இல்லாத பொழுதுகளின்
ஏதுமற்ற வெட்டவெளியும்
எல்லையில்லா
காட்சிகளும்
காட்சிப் பிழைகளும்
ஏனோ தோன்றி மறையும்
ஏதேதோ கேள்விகளும்
எனக்குள்ளேயான
எக்கச்சக்க பதில்களும்
எதிர்பார்ப்புகளை மிஞ்சிய
எளக்காரங்களும்
எதிர்வந்து போகும்
உணர்ச்சியற்ற முகங்களும்
ஏமாற்றம் தாங்கிய
உறைந்துபோன உள்ளங்களும்
அவைதாங்கிய
அன்றாடச் சலிப்புகளும்
அக்கறை கொண்டதாய்
அலட்டிக் கொள்ளும்
அங்கலாய்ப்புகளும்
இன்னும் வராமல்
வாட்டி வதைக்கும்
உனக்கான என்
கவிதையின்
கடைசி வார்த்தையும்..
இவை யாவும்
கடந்து சோர்ந்து
வீதியை வெறித்துப்
பார்த்த - என்
வீண் நடையும்
வெளிப்படுத்த விரும்பா
விசும்பலும்
வதைத்தலைத் தேடும்
வன்மமும்
குணம் தாண்டிய
கோவமும் மூர்க்கமும்
அவ்வப்போதைய பசியும்
அது தாண்டிய விரதமும்
இஷ்டமில்லா வேண்டுதலும்
வானம் பார்த்த
வெற்று விமர்சனமும்
மூச்சுமுட்டும்
முடிச்சுகளும்
அவை தாங்கிய
உன்னத புதிர்களும்
உறக்கமற்ற
உரக்க சிந்தனைகளும்
கர்மம் தொடரும்
கடின வார்த்தைகளும்
காதல் இருந்ததை
இன்னும் இருப்பதை
நினைவுறுத்தும்
நீங்கா நினைவுகளும்
நீண்ட நாள் முன்பு
நாம் சேர்ந்து பார்த்த
நடுநிசி நிலவும்
நாணமற்ற உன்
நளினமும்
நீங்கா நெருடலும்
நீண்டு கொண்டே போன
நீ, நான், நாமான தருணங்களும்
நமக்கிடையே
உருவான
என் "நானும்"
உன் "நானும்"
இவை தொடர்ந்த
"ஏன்"
"எதற்கு"
"எப்படி" யும்
தர்க்கத்தில் விளைந்த
"சரி விடு" வும்
நொடிப் பொழுதில்
நீங்கிப் போன
நீயும்
உன் நேர் பார்வையும்
தொடர்ந்து வந்த
மௌனத்தில் விளைந்த
என் முடியா
மூர்க்கமும்
முணுமுணுத்தலும்
எனை நானே
அசிங்கப்படுத்த
நினைத்து வைத்த
அழகான தாடியும்
வருத்தி வரவழைத்த
தத்துவப் புத்தகத்
தலையணைகளும்
நடை உடை மாற்றமும்
நடு உச்சி
தலை வகிடும்
நீண்ட முடியும்
நித்தம் தொடரும்
இந்த
வலைப் பின்னல்
வார்த்தை விளையாட்டும்...
இடையிடையே
வந்துபோகும்
வாசகர் வேண்டுதலும்
வருத்தமும் மற்றும்
விமர்சனமும்..
எல்லா நொடியிலும்
என்னுள் நிகழும்
மேற்கண்ட
அத்தனை சிந்தனையும்
எதற்காக கண்ணம்மா?
..
தேம்பி முடித்து -உன்
கண்ணீர் துடைத்து
திரும்பிப் பார்...
எனக்கான
தூரத்து வெளிச்சம்
தொலைந்து போகட்டும்
...
வா என் கண்ணம்மா
நமக்கான இருளில்
உன்னுள் எனை
இழுத்துப் போ
உன் முடிவில்லா
மனச் சுருளில் -நான்
மீண்டு வராமல்
தொலைந்து போகிறேன் ..
...


















Tuesday, January 1, 2013

என் கவி நின்று போகட்டும்

முதல் வாசகியின்
முன்னுரைக்கே
மூக்கின் மேல் கோவம்
உனக்கு..
உன்னையும்
உனக்கான என்னையும்
நம்மிடையேயான
இந்தப்
பேதை வாசகியையும்
என் கவியையும்
காப்பாற்றிச் செல்வது
பெரும்பாடாகிப் போகிறது..
பேசாமல்
ஞானப்பாடல் எழுதப்
போகட்டுமா?
இல்லாவிட்டால்
இசைக்கு இசைந்து
இலவச
கலாச்சார இழிவு
செய்யப் போகட்டுமா?
என்
அதிக பட்சப்
பிழை என்ன கண்ணம்மா?
உனக்கான
என் வாழ்க்கையை
கவிதையிலேயே
வாழ்ந்து கழிப்பது தானே?
நீ மீண்டு வா
நானும்
என் கவிதையும்
உன்னுள்
நின்று போகிறோம் ..
நமக்கான
கவிதைகளின்
கல்லறை
காதலர்களால்
கோவிலாக்கப்படும் ..
...
நானும்
என் நடுநிசியும்
சோர்ந்து போய்
சுருண்டு விழட்டும் ...
நிலவும்
நீல வானும்
மழையும்
நீள் மலையும்
ஏன்
எதுவும்
என்னுள்
கவிஎழச்
செய்யாது போகட்டும்..
என் நா
வறண்டு
உனக்கான
வார்த்தையற்ற
ஒலிக்கவிதையை
ஓயாமல்
ஒப்பாரி வைக்கட்டும் ..
..
இதைப்பார்த்து
என் முதல் வாசகி
மூர்ச்சை அடையட்டும்...
....
நீ மீண்டு வா
கண்ணம்மா
..

நானும்
என் கவிதையும்
உன்னுள்
நின்று போகிறோம்
.......


முதல் வாசகியின் முடிவு...

என் முதல் வாசகி
உனைப் பார்த்து
பொறாமை கொள்கிறாள்
கண்ணம்மா!
உனக்காக
நான் எழுதி
கிழித்துப் போட்ட
காகிதத்துடன்
காலங்காலமாய்
கவிதை பேசித்
தவிக்கிறாளாம்...
ஒன்று விடாமல்
ஒப்புவிக்கிறாள்...
உன்னை ஒரு முறையேனும்
பார்த்தால் போதுமாம் ...
பின்...
உன் கால் பாதத்தின்
மெல்லிய தடத்தில்
ஒரு முறை
நடந்து பார்க்க வேண்டுமாம்...
நீ வீசிஎறிந்த
வாடிய பூக்களுக்கும்
எதோ வசீகர
வாசம் இருக்கிறதாமே?
இன்னும் ஏதேதோ
உளறிக் கொட்டுகிறாள்..
இவள் வாயடைக்க
வசமாக ஏதும்
சொல்லிப்போ கண்ணம்மா
இல்லை,
இவள் முன்
என் கரம்கோர்த்து
ஓர் கவிதை செய் ..
கண்ணாரக் கண்டு களிக்கட்டும்..
சில நேரங்களில்
உனைப் போல
உடுத்திக்கொள்கிறாள் இவள் ..
ஒய்யாரமாய்
ஒவ்வாத ஒப்பனையுடன்
அன்ன நடையும்
பயில்கிறாள்..
இல்லாது இருக்கும்
உன் இடையின் இளமை
இவளுக்கும் வேண்டுமாம்...
இதழில் இமைக்கிறாயாமே ..
இதென்ன
எனக்குத் தெரியாமல் ?
இவள் ஏதேதோ
உனைப்பற்றி
என்னிடமே
வருணிப்பதாய்
வசமாய் நடிக்கிறாள்..
நீயும் நானும்
இவளின்றி இல்லையாம்...
உனக்கான என் கவியும்
இவளது
முதல் சுவைப்பில்தான்
முற்றுப்பெறுகிறதாம்...
போதும் ..
இனியும் இவள்
இதுபோலப் பேசி
உனக்கான என்
கன்னிக் காதலை
கொச்சை செய்ய வேண்டாம்..
பிழைத்துப் போகச் சொல்..
இல்லை
என் கவி சொல்லும் பேனா
இவள்
இதயத்தின் மீது
கண்ணீர் அஞ்சலி
எழுதிச் செல்லும்...
...



எனையும் கூட்டிச் செல் கண்ணம்மா

உன்னை மீட்டெடுக்க
ஒவ்வொரு முறையும்
நான்
பிரசவ வலி
கொள்கிறேன் கண்ணம்மா ...
உனைச்சார்ந்த
ஒவ்வொரு கவியும்
உன்னை நிகழ் காலத்தில்
நீடிக்கச் செய்வதற்காகத்தான் ...
என் கவி கண்டு
நீ சுவாசம் பெறுதலே
எனக்கான
சுவாசத்தை
விட்டு வைக்கிறது..
சோகத்தின் அடியாழத்தில்
அசைவின்றி உறங்கிப்போகிறாய்
உனக்கான என் தாலாட்டும்
தவிப்பும்
பிரார்த்தனையும்
உன்னை
ஒருபோதும் எட்டவில்லையா?
உன் கனவின்
உச்சகட்டத்தில் கூட
என் ஈரம் தோய்ந்த கண்கள்
உனக்குப் பரிட்சயமாகவில்லையா?
உன் இமையின்
ஒவ்வொரு திறப்பிலும்
நான் என்
இறப்பிலிருந்து
தட்டுத் தடுமாறி
பிழைத்து வருவது
உனக்குப் புரிகிறதா?
உன்னுடனான
தற்காலிக பிரிவுகளுக்கே
நான்
தயங்கித் தயங்கி
விடை கொடுக்க
எப்படி நினைக்கிறாய்
எனை விட்டுப் போவதை?
என் இதயத்துடிப்பையும்
சேர்த்து எடுத்துச் செல்வாயா என்ன?
இல்லை
எனக்கான
பாசக் கயிற்றை
உன் இதழ் வழியாக
என் உயிரில்
விதைக்கப் போகிறாயா?
எதுவாக இருந்தாலும்
இப்போதே சொல்!
ஏதுமற்ற வெட்டவெளியில்
உன் ஒற்றைச்சொல்லில்
உலகையே ருசித்தவன் நான் !
உனக்காக
உனக்குமுன்
இந்த
உயிர்நீத்துப் போவது
என் வரம் தானே ?
அதுவும் வேண்டாம் என்கிறாய்...
....
நீ இரு ..
என் இருத்தலை மெய்ப்பிக்க
நீ இரு...
மீறிப் போயின்
எடுத்துச்செல் ..
இல்லாமல் இருக்கும்
இந்தப்
பாவி உயிரை
வேரிலிருந்தே எடுத்துச்செல் ..
இனி வருகின்ற கவி
என் ஆவியின்
அரைகுறை
புலம்பலாக இருக்கட்டும் ..
என்னுடன்
உலகின் ஒட்டுமொத்த
காதலும்
கவியும்
கரைந்து போகட்டும்.....
....