உதிர்ந்து போகாத
பூக்களை
நினைத்துத் தேற்றிக்கொள்ளும்
வேர்...
எழுத முடியாத
கவிதையை
நினைத்துத் தோற்றுப்போகும்
பேனா...
நின்றுபோன மழையை
நன்றியோடு பார்க்கும்
நனைந்த கதிர்...
நெற்றி வேர்வை
ஒற்றி எடுத்த
ஒற்றைச்சேலை
வாசம் பார்க்கும்
கயிற்றுக்கட்டில்...
தொட்டுக்கொள்ள
ஏங்கும்
பட்டுக்கன்னமும்
ஒட்டுமாங்காய் ஊறுகாயும்..
விட்டுப்பிரியத் துடிக்கும்
விடை தெரியா
வினா...
வசந்தத்தை மறந்துபோன
வறண்ட வருடங்கள்...
விட்டுவிட்டு வந்துபோகும்
விடுமுறை விருந்துகள்...
வேறுபாடுகள்..
விசித்திரங்கள்...
வர்ணனைகள்..
வாக்குவாதங்கள்...
வசை...
இவையடக்கிய வம்சங்கள்...
நளினங்கள்
குறும்புகள்
வெட்கம்
மோகம்
இவையடக்கிய இத்யாதிகள்...
அக்கரைப் பச்சைகள்
இக்கரைக் கொச்சைகள்...
இவை எல்லாவற்றிற்கும் இடையில்
விட்டத்தை நோக்கி
நான்...
No comments:
Post a Comment